செவ்வாய், 19 ஜூன், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி (கலாவிசு சிறுகதைகள்) அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் மீது எனக்கு அலாதி ஈர்ப்புண்டு. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வெளியில் கவிதைகளைப் படித்து, அதில் கரைந்து போவதைவிடச் சிறுகதைகளில்தான் நான் அதிகம் கரைந்து போயிருக்கிறேன். நல்ல சிறுகதை, அதனைப் படித்து முடித்த பின்னும் நெடுநேரம் நம்மோடு உரையாடி உறவாடி நீங்காமல் நிலைத்திருக்கும். சுவையான காபி கடைசிச் சொட்டுவரை குடித்து முடித்த பின்னும் நாக்கிலும் மனதிலும் நெடுநேரம் சுகமாகக் குடியிருப்பதைப் போல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறந்த சிறுகதை, வாசகனை அடுத்த கதையைப் படிக்க விடாது.

ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி வாய்ப்பு முதலான அகப்புறச் சூழல்களே தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தமிழில் உருவான உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை என்பது கடைசி வரவு. தமிழில் நாவல்கள் தோன்றி ஐம்பதாண்டுகள் கழித்தே தமிழ்ச் சிறுகதைகள் உருவாயின. உரைநடை இலக்கிங்களில் சிறுகதைதான் கடைசிக் குழந்தை என்பதால் கடைக்குட்டியின் மீது எல்லோருக்குமே ஒரு தனி ஈர்ப்பு இருப்பது இயல்புதானே.
தமிழில் சிறுகதைகள் பிறந்து இன்னும் ஒரு நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. 1926 இல் வ.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதை யிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடங்குகிறது. முதல் ஐம்பதாண்டு களிலேயே தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டன என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாம் ஐம்பதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்தப் பழம்பெருமையைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது. முதல்பாதி நூற்றாண்டுச் சிறுகதைகளை வாசித்த அதே ஈடுபாட்டோடுதான் இன்றைக்கு வருகிற சிறுகதைகளையும் நான் வாசிக்கிறேன். படைப்பின் செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளுக்கு மட்டும் அப்படி என்னத் தனிச்சிறப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து, கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.
சிறுகதை என்பது வடிவில் சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதை சொல்வதனாலேயே அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ, இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை. கலாவிசுவின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.
II
நூலாசிரியர் கலாவிசு புதுவை அறிந்த நல்ல கவிஞர். கவிதை வானில் என்ற இலக்கிய அமைப்பையும் அதே பெயரிலான ஓர் இலக்கிய இதழையும் தொடங்கித் தொடர்ந்து நடத்திவருபவர். நண்பர்கள் தோட்டம் நடத்தி வெற்றிபெற்ற முழுநிலாப் பாட்டரங்கங்களைத் தொடர்ந்து, கவிதை வானில் பாட்டரங்குகள் புதுவையில் தனிமுத்திரைப் பதித்து வருகின்றன. புதுச்சேரியின் கவிதை வளர்ச்சிக்கும் கவிஞர்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பாட்டரங்குகளின் பங்கு நிச்சயம் உண்டு. முதன்முதலாகக் கவிதைவானில் நிகழ்ச்சியில் மேடையேறி இன்றைக்கு நல்ல கவிஞர்களாய்ப் புதுவையில் வலம் வருவோர் பலருண்டு. குறிப்பாகப்  பெண் படைப்பாளியர் பலருக்கு அவர் தக்க களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிதைகளை ஜனநாயகப் படுத்தியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். படைப்பிலக்கியத் துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எனத் தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலாவிசு, இலக்கியப் பணியோடு சமுதாயப் பணியிலும் ஆர்வமுடையவர். தன் விருப்பப் பணியாகப் புதுச்சேரிக் குடும்பநல வழக்குமன்றத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இந்நூல் இவரின் பத்தாவது நூல். சிறுகதை வரிசையில் இது மூன்றாவது நூல்.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தாறு சிறுகதைகள் உள்ளன. இன்றைக்கு வருகின்ற சிற்றதழ்களுக்கு ஏற்றவகையில் அவை அளவால் சிறுத்துக் காணப்படுகின்றன. பெரும்பாலான சிறுகதைகள், அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து, அதாவது அவர் பார்த்த, கேட்ட, அனுபவித்த வாழ்க்கையின் பகுதிகளிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. ஊடகங்களின் வழியாக இவர் வாசிக்க நேர்ந்த குறிப்பிடத்தக்க குற்றச் செய்திகளும் கூட இவரின் கதைக் கருவுக்குத் தப்பவில்லை. நூலாசிரியர் கலாவிசு சிறுகதைகளின் மையஅச்சு, குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள். இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகிற கணங்களையும் அதன் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து குடும்ப உறவுகள்; காப்பாற்றப்படுகிற கணங்களையும் கூர்ந்து கவனித்து எளிய கதைகளாக்கி இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
1.    என்னை மன்னிச்சுடு பானும்மா..
2.    ஏரோட்டம் நின்னுபோனா!
3.    இந்தக் காலத்துப் புள்ளங்க
4.    காக்கைக் குருவி எங்கள் ஜாதி
5.    மனதோடு தான்
6.    பாட்டியும் பேத்தியும்
7.    பெத்தாதான் புள்ளயா?
8.    சூப்பர் மூன்
9.    ஏழையென்ற போதும்


முதலான கதைகளில் நூலாசிரியர் கலாவிசுவின் சிறுகதைப் படைப்பாற்றல் தனித்தன்மையோடு வெளிப்படுவதனைச் சிறப்பாகக் குறிப்பிடமுடியும்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தனப் பகட்டுகள் அற்றவர்களாகவும் பிறருக்கு உதவும் இரக்ககுணம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
ஏழையென்ற போதும் என்ற சிறுகதையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் உடல்நலமில்லாத குழந்தையை யாரிடம் விட்டுவிட்டுப் போவது என்ற சிக்கல் எழும்போது வேலைக்காரியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்று கணவன் சொல்ல மனைவி தயங்குகிறாள். அப்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்,
என்னங்க? உங்களுக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு? சேரியில வாழ்ற பொம்பளகிட்ட புள்ளைய விட்டு, வீட்டையும் தொறந்து விட்டுட்டுப் போகணுங் கறீங்களே? அவ எதையாவது தூக்கிட்டுப் போயிட்டா?
இங்கபாரு! உனக்கு ஏழைங்கன்னா இளக்காரமா போயிடுச்சு! அவங்க உண்மையா இருப்பாங்க. நம்பள மாதிரி ஒளிச்சு அவங்களுக்குப் பேசத் தெரியாது. பழகினவங்களுக்கு ஒண்ணுன்னா உயிரைக்கூடக் கொடுப்பாங்க.
என்று விளிம்புநிலை மக்களின் போலித்தனமற்ற வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மேலும் கதையின் முடிவில் வேலைக்காரியின் தன்னலமற்ற சேவையில் மனம்மகிழ்ந்த கதைத் தலைவியிடம் அவள் கணவன்,

அப்பாடா! இப்பவாவது உனக்கு புத்திவந்துச்சே.. அதுவே எனக்குப் போதும். எட்டி நின்னு என்னான்னு கேக்கற உறவுக்காரங்களை விட கூடவே இருந்து உதவுற ஏழைங்களத்தான் நம்மளோட சொந்தக்காரங்களா நினைச்சுக்கணும். அவங்ககிட்ட பணம் மட்டும்தான் இல்லை, குணத்தால அவங்கத்தான் உயர்ந்தவங்கன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என்று சொல்வது கதையின் சிறந்த முடிப்பு.

    கலாவிசு சிறுகதைகளின் தனித்தன்மைகளாகச் சிலவற்றைப் பட்டியலிடமுடியும்.
1.    எளிய இனிய மொழிநடை.
2.    அளவான உரையாடல்
3.    இயற்கை இகந்த, அதீதப் புனைவுகளைக் கையாளாமை.
4.    கதை நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்
5.    நம்பிக்கையளிக்கும் விதத்தில் வாழ்க்கையைப் பதிவுசெய்வது.
6.    விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று படைப்பை உருவாக்குவது.
7.    சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது.
8.    இயற்கை, மனிதர்கள், பறவை விலங்கினங்கள் என விரிந்த தளத்தில்
மனிதநேயத்தைப் பேசுவது.
என்பன அவை.

    சிறுகதைகளின் மொழிநடையைப் பொருத்தமட்டில் அவற்றுக்கென்று சிறப்பான தனித்தன்மை வாய்ந்த விவரித்தல் முறை ஒன்றுண்டு. கதையை, சிறுகதை யாக்குவதில் அத்தகு விவரிப்பு நடைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கதை நிகழ்ச்சிகளின் கோர்வைமட்டுமே சிறுகதை ஆவதில்லை. சொல்லப்போகும் கதையின் எடுத்துரைப்பில்தான் சிறுகதை முழுமைபெறுகிறது. நூலாசிரியர் கலாவிசு சிறுகதையின் இத்தகு எடுத்துரைப்பில் கணிசமான கவனம் செலுத்துதல் வேண்டும். இது என்அவா.
இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளில் நூலாசிரியர் கலாவிசு ஒரு பார்வையாளராக இருந்தே அக்கதைகளைப் பதிவுசெய்கிறார். எந்தக் கதையிலும் படைப்பாளி சட்டென்று மூக்கை நீட்டி போதனை செய்யத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்போடு இருக்கிறார். இந்த அம்சம் கலாவிசு கதைகளில் பாராட்டப்பட வேண்டிய அம்சம். பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி கலாவிசு சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

நூலாசிரியர் கலாவிசு தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுதி விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

         

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...