ஞாயிறு, 13 மே, 2012

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு - பகுதி-4

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? 

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8


முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா?

நப்பூதனார் இம்முல்லைப்பாட்டை 103 அடிகளில் பாடியிருப்பினும் முல்லைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள் ஒன்றும் குறைவு படாது முழுமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. ஆயினும் கார்காலத்து மாலைப்பொழுதில் பெருமழை கண்டு வருந்தும் தலைவியது நிலைவிளக்கும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு’ (முல்லை.1) என்பது முதல் ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’ (முல்லை. 23) எனமுடியும் 23 ஆம் வரியோடு நிறுத்திக் கொண்டு, அவ்வாறு வருந்திக் கிடப்பவள் மகிழ, தலைவன் மீண்டு வந்து சேர்ந்ததை விளக்கும் ‘இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து’ (முல்லை. 80) எனத்தொடங்கும் வரி முதலாக ‘வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே’ (முல்லை. 103) என்ற இறுதி வரையிலான 24 அடிகளை இணைத்து 47 அடியளவினதான முல்லைத் திணைப் பாடலாக மட்டும் அமைக்காமல் ‘கான்யாறு தழீஇய அகன்நெடுப் புறவு’ (முல்லை. 24) தொடங்கி ‘அரசு இருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசறை’ (முல்லை. 79) முடிய 56 அடிகள் முல்லைக்குப் புறனாய வஞ்சித் திணையும் விரவி வரும்படி இம்முல்லைப் பாட்டை அமைத்திருப்பது புலவரின் படைப்பாற்றலுக்குத் தக்கதோர் சான்றாகும்.

103 அடிகள் கொண்ட ஓர் அகப்பாடலில் 47 அடியளவில் முல்லைத் திணையாம் அகப்பொருளைக் கூறி 56 அடிகளில் வங்சித் திணையாம் புறப்பொருளை விரித்துரைப்பது இப்பாடல் முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? என்ற மயக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஆயினும் நப்பூதனாரின் இவ்வுத்தி ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்ற தொல்காப்பியப் பொருளிலக்கணத்திற்கு மாறுபடாமல் அமைந்திருப்பதோடு முல்லையாகிய இருத்தல் உரிப்பொருளுக்கு மேலும் அழுத்தமும் அழகும் தருவதாய் பின்னப்பட்டிருப்பது இலக்கிய இன்பத்தை மிகுவிப்பதாய் உள்ளது.

முல்லைப்பாட்டின் உரிப்பொருள் இருத்தலா? இரங்கலா?

முல்லைப்பாட்டின் துறை:
கார்காலத் தொடக்கத்தே மீள்வேன் என உறுதி கூறிப் பிரிந்து சென்ற தலைவன், கார்காலம் வந்த பின்னரும் வாராமை கண்டு ஆற்றாமை மிக்குக் கலங்கி நிற்பதும் அக்கலக்கம் தீரத் தலைவன் வினைமுடிந்து மீண்டுவரும் ஓசை கேட்டு மகிழ்தலுமே இப்பாட்டின் துறையாகும்.

ஆனால் நச்சினார்க்கினியர் இப்பாடலுக்குக் கூறும் துறை, “தலைவன் வினைவயின் பிரியக் கருதியதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு, அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுது பெண்டிர் அவன் வினைமுடித்து வருதல் வாய்வது நீ வருத்தம் நீங்குவதெனக் கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது” என்பதாகும்.

நச்சினார்க்கினியர் சொல்லும் துறைக் குறிப்பு பாடலில் பல முரண்களைத் தோற்றுவிக்கின்றது.
  • 1. பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது தலைவன் பிரிந்த காலத்தில் என்றாகிறது. 
  • 2. விரிச்சி கேட்டது கார்கால மாலைப் பொழுதில் என்று பாடல் குறிப்பிடுகின்றது அவ்வாறாயின் தலைவன் பிரிந்தது கார் காலத்தில் எனக் கொள்ள நேரிடும். கார்காலம் தலைவன் திரும்பிவரும் காலமே அல்லாது பிரியும் காலம் அன்று. 
  • 3. விரிச்சி கேட்டல் என்பது ஒரு சிக்கலுக்குத் தீர்வை எதிர்நோக்கி நிகழ்த்தப்படுமே அல்லாது தலைவன் பிரிவின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கொள்வது பொருந்தாது. 
மேலும் தலைவி அறியாதவாறு தலைவன் பிரிந்தான் என்றும் படுக்கையில் உடன் துயின்றவனைக் காணாமல் தலைவி தேடினாள் என்றும் நச்சர் உரை கூறுவது அகப்பொருள் மரபுக்கு மாறாய் உள்ளது. தலைவன் பிரிந்தகாலம் குறித்து முல்லைப்பாட்டு பேசவேயில்லை.

இவ்வாறு பாடலின் துறைக் குறிப்பினை மாற்றி அமைத்துக் கொண்டதற்கு உரிய காரணமாக அவர் கூறுவதாவது,

“இங்ஙனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது, நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து(80) புலம்பொடு(81) தேற்றியும் திருத்தியும்(82) மையல் கொண்டு உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) கிடந்தோள்(88) எனப்பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியான் என்பதூம், அவன் குறித்த காலங் கடந்தால் தலைவிக்கு வருத்தம் மிகும் என்பதும், அது பாலையாம் என்பதும், அவ்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாம் என்பதும் நூற்கருத்தாதல் உணர்க.”

ஆக, முல்லைப்பாட்டுக்குப் பொருள் கொள்வதில் நச்சினார்க்கினியருக்கு உள்ள சிக்கல் முல்லைத் தினைத் தலைவியின் அழுகையும் ஆற்றாமையுமே. தலைவன் பிரிவுக்கு ஆற்றியிருப்பதே முல்லை உரிப்பொருள். இப்பாடலில் தலைவியின் ஆற்றாமை வெளிப்படுவதால் அது நெய்தலுக்குரிய இரங்கல் உரிப்பொருளாகி விடுமே என்ற ஆதங்கமே அவரை இத்துணை இடர்ப்படச் செய்துள்ளது.

காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப  
      (முல்லை. 22-23)

இன்துயில் வதியுநன் காணாள். துயர்உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து      
   (முல்லை. 80-84)

எனவரும் முல்லைப் பாட்டின் அடிகளைக் கூர்ந்து நோக்குவார்க்குத் தலைவியின் ஆற்றாமை வெளிப்பட்டாலும் அது எல்லை கடவாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிலேயே நிற்கிறது. நெடுநல்வாடைத் தலைவியும் இத்தகையளே. ஆற்றாமை மிக்கு, தலைவி புலம்பத் தொடங்கியிருந்தால் இது நெய்தல் உரிப்பொருளாம் இரங்கலாகியிருக்கும். அந்நிலை முல்லைப்பாட்டுத் தலைவிக்கு இல்லை. எனவே நச்சினார்க்கினியரின் தயக்கம் தேவையற்றது.

சனி, 5 மே, 2012

தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் தமிழ் எழுத்தாளர் களுக்கும் பதிப்பாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடும். இந்த எண்ணிக்கையில் மறுபதிப்பு நூல்களும் அடங்கும். சென்னை மூர் மார்க்கட் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட பிறகு பழைய தமிழ் நூல்கள் காணக் கிடைக்காத அரிய பொருள்களாக இருந்த நிலைமாறி அரிய பழைய தமிழ் நூல்கள் புதிதாய் அச்சேறி நம் கைளில் தவழும் இந்தப் புதிய மாற்றம் தமிழர்களுக்கு உவப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வோராண்டும் மாவட்டங்கள் தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் கண்காட்சிக்கு வந்து வேடிக்கை பார்த்ததோடு மட்டுமின்றி நூறு, ஆயிரங்களைச் செலவிட்டு நம் தமிழர்கள் நூல்களை வாங்கிச் செல்லும் மாற்றங்களும் இருபத்தோராம் நூற்றாண்டு நமக்குத் தந்த புத்தம் புதிய நம்பிக்கை வித்துகள். 

ஒருபக்கம் இப்படித் தமிழ் அச்சு நூல்கள் பழையனவும் புதியனவுமாகப் படையெடுக்க, மறுபக்கம் மின்னூடக வடிவில் மின் இதழ்கள், மின் படைப்புகள், மின் நூல்கள், மின் நூலகங்கள் எனத் தமிழ் எழுத்துத்தாக்கங்கள் இணையத்தில் இடம்பெயர்ந்து நிலைபெறத் தொடங்கிவிட்டன. இவை போதாதென்று சமூக வலைத்தளங்களும், வலைப்பதிவுகளும் பல்லாயிரக்கணக்கில் தத்தம் பங்குக்குத் தமிழ் எழுத்தாக்கங்களைப் பதிந்து காட்சிப்படுத்தி வைத்துள்ளன. 

ஆக தமிழில் எழுதுவதும் எழுதியதை அச்சேற்றுவதும் வாசகர்களிடம் கொண்டு செல்வதும் அத்துணை பெரிய காரியமாகத் தோன்றவில்லை. இனி நாம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். திருவள்ளுவர் சொன்னது போல் கற்க கசடற- கற்பவை கற்க- கற்றபின் அதற்குத் தக நிற்க என்பதுதான். கருத்தூன்றிப் படிப்பதும், தேர்ந்தெடுத்துப் படிப்பதும், படித்தவற்றை பயன்கொள்வதும்தான் இன்றைய தேவை. தமிழர்களிடம் இன்னும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 

II
தமிழின் இத்தகு எழுத்துலகச் சூழலில்தான் தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் வெளிவருகின்றது. இனிய நண்பர் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமாரின் ஐந்தாவது நூல் இது.

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் சிறந்த கல்வியாளர். தமிழ் இலக்கியம், மொழியியல், ஊடகவியல், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் சைவ சித்தாந்தம், நாட்டுப்புறவியல் முதலான துறைகளில் பட்டயமும் தமிழ் இலக்கியத்தில் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு முதலான மொழிகளைக் கற்றவர். தமிழ்க் கல்விப் புலத்தில் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் போல் பன்மொழிப் பயிற்சியுடைய இளைஞர்களைக் காண்பது அரிது. கற்றலிலும் கற்பித்தலிலும் தொடர்ந்து முனைப்போடு செயல்பட்டுவரும் இவர் ஒரு சிறந்த மரபுப் பாவலரும் கூட. ஆசிரியர், பேச்சாளர், கவிஞர், ஆய்வாளர் முதலான பன்முக ஆளுமைகளால் சிறந்த ஒருவரின் சமூக அக்கறையோடு கூடிய படைப்பாக்கத் திறனாய்வாக வெளிவரும் இந்நூல் மானுடம் பாடிய மக்கள் கவிஞரின் மாண்புரைக்கும் ஒரு நல்ல படைப்பு.
ஐஐஐ
தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் பட்டுக் கோட்டையார் கவிதைகளை நயமுரைக்கும் பாங்கில் விரித்துரைத்துள்ளது. கவிதைகளின் உள்ளடக்க அடிப்படையில் குடும்பம், சமூகம், வாழ்க்கை நெறி, நடை, உண்மைத் தத்துவம் எனும் ஐந்து தலைப்புகளில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்க் கவிஞர் மரபில் மிகவும் வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர். 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழிலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். உண்மையில் கலையும் இலக்கியங்களும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கானதே என்பதனை வெறும் கொள்கையளவில், படித்ததோடு நின்றுவிடாமல் அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முழு வெற்றி கண்டவர். தாம் ஈடுபாடு கொண்டிருந்த விவசாயச் சங்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைகளைத் தம் படைப்புகளில் முழுவீச்சோடு பதிவுசெய்தவர் அவர். பட்டுக்கோட்டையார் கவிதைகளின் இத்தகு தனித்தன்மையை முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலில் மிகத் தெளிவாக விரித்துரைத்துள்ளார். நூலின் ஆற்றொழுக்கான எளிய இனிய மொழிநடை படிப்பவர்களுக்கு வாசிப்பு அனுபவத்தினை இனிமையாக்குகின்றது.

இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1.    பட்டுக்கோட்டையாரின் வாழ்வையும் படைப்பையும் அறிமுகம் செய்வது.
2.    அவரின் கவிதைகளை முழுதாகக் கற்ற நிறைவைத் தருவது.
3.    பாடல்களின் பின்னணியை விளக்குவது.
4.    படைப்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவது.
5.    பாடல்களைப் பொருள் நோக்கில் வகைப்படுத்திக் காண்பது.
6.    சுவையான பொருள் பொதிந்த பாடல்வரிகளை இனம் காண்பது.

மேற்கண்ட வகையில் தம் நூலை விரித்துரைக்கும் நூலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகள் குறித்தான தமது முழுமையான பார்வையையும் மதிப்பீட்டையும் பதிவுசெய்வதில் வெற்றிபெற்றுள்ளார்.

நூலாசிரியர் நூலின் நுவல்பொருளை விரித்துரைக்கும் பாணி சிக்கலற்றது. சிறு சிறு உட்தலைப்புகளில் விவரிக்கும் பொருளை இனங்காட்டி ஓர் எளிய முன்னுரையோடு செய்தியைத் தொடங்கி விவரித்து தம் கருத்துக்கு அணி சேர்க்கும் பொருத்தமான கவிதை வரிகளையும் தக்க மேற்கோள்களையும் உடன்தந்து சிறிய அளவிலான முடிப்புரையோடு அப்பகுதியை முடிக்கும்முறை அவரின் ஆய்வுநடை நலத்தை அடையாளப் படுத்துகின்றது. 

    சான்றாக, பாடல் புனையும் திறன் என்ற சிறுதலைப்பின் பொருளை அவர் விவரிக்கும் பகுதியைப் பார்ப்போம்,

கவிஞர் பாடல் புனைவதற்கான களங்களைத் தேடி ஓடாமல் தமக்கு அமைந்த வாழ்வினையே களமாக்கிக் கொண்டு பாடியவர். ஒவ்வொரு இனத்தாரும் தமக்குரிய பாடல் எனப் போற்றும் வகையில் எளிமையான நடையில் பேச்சு வழக்கில் இலக்கியத் தரத்துடன் பாடல் புனைந்தார். இதனால் கற்கும்போது கற்றாரும் கேட்கும்போது கல்லாதாரும் பாடலின் சுவையினை உணர்ந்து மகிழ்ந்தனர். காதல் பாடலாக இருந்தாலும் அதில் சமத்துவக் கருத்துக்களையும் மண் சார்ந்த மணத்தினையும் கையாளும் சிறப்பு இவருடைய தனித்தன்மையாக விளங்குவதனைக் காணலாம். 

கவிஞரின் பாடல்கள் பாட்டாளிகளின் வாழ்வினையும் இனத்தின் பெருமையினையும் பொதுவுடைமையின் தத்துவங்களையும் தன்மானத்தின் கூறுகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்தன. உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னும் புலவர் குலத்தில் தோன்றிய கவிஞருக்குக் கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருந்ததனை..

தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை நடுவழியில் சந்தித்தேன்
நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு 
(ப.பா. ப. 308)
என்னும் பாடல் வெளிப்படுத்தும். இதன்வழி கவிஞரின் தன்னம்பிக்கை யையும் தன்மானத்தினையும் தெளிவாக அறியலாம். “நாட்டு விடுதலை இயக்கம், சமுதாய விடுதலை இயக்கம், பொருளாதார விடுதலை இயக்கம் என மூவகை இயக்கங்கள் இங்கே பரவலாக மக்கள் மன மண்ணில் வேர்ஊன்றி ஆலமரமாக வளரத் தொடங்கின. பட்டுக் கோட்டையின் பாடல்களில் இம்மூன்று இயக்கங்களின் சிந்தனை வீச்சையும் அழுத்தத்தையும் காணலாம்” (பட்.. பா. ப.17) எனச் சா.பா. கூறவது இங்கு எண்ணத்தக்கது.

மேலே சான்றுகாட்டியுள்ள பகுதியை ஒப்பவே இந்நூல் முழுவதிலும் நூலின் பொருளை விவரித்துச் சென்றுள்ளார் நூலாசிரியர்.   
    தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூலினைக் காலத்திற்கேற்ற வரவு என்று நாம் கொண்டாடலாம். ஏனெனில் இன்றைய உலகமயமச் சூழலில் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு சமூகத்தின்; அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்து வாழ வழியற்று வதங்கிக் கிடக்கும் நிலைமையில், 

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா 
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா  

என்று கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் உரத்துக் கொடுத்த உழைக்கும் மக்களுக்கான உண்மைக் கவி பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல்களை இன்றைய இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமன்றோ. பட்டுக்கோட்டையார் வலியுறுத்திய தன்மான உணர்ச்சியும் பொதுவுடைமை வேட்கையும் இருபத்தோராம் நூற்றாண்டில் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது என்ற நூலாசிரியரின் ஏக்கம் இந்நூலில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது. மக்கள் கவிஞரின் கவிதையைப் போலவே இந்த நூலும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான படைப்பாக எளிமையோடும் இனிமையோடும் எழுத்தாக்கம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

நூலாசிரியர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலின் வழியாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். மக்களுக்கான இலக்கியம் என்பது குறித்த சரியான புரிதல்களோடும் சமூக உணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் தக்க தருணத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. 

nagailango@gmail.com

செவ்வாய், 1 மே, 2012

எண்ணப் பறவை சிறகடித்து… கலக்கல் காங்கேயன் நூல் வாழ்த்துரை



முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

என் இனிய மாணவ நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். காங்கேயன் நாடறிந்த நல்ல பேச்சாளர். மேடைகளில் இனிமையாகப் பாடக் கூடியவர். அண்மைக் காலங்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் மேடைக்கலையாம் பாட்டு மன்றத்தில் புதுச்சேரியின் புகழை நாடெங்கும் பரப்பி வருபவர். அவரின் பாட்டுமன்றம் இயலும் இசையும் கலந்த ஒரு புதுவகைப் பட்டிமன்றமாய்ப் படித்தவர்கள் முதல் பாமரர்வரை அனைவரையும் ஈர்க்கும் ஓர் அற்புத மேடைக்கலையாய்த் தமிழகத்தை வலம்வருவது பாராட்டுதலுக்குரியது.

மேடைப்பேச்சு தந்த உற்சாகத்தில் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கின்றார் காங்கேயன். பேசுகிற பேச்செல்லாம் காற்றோடுப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்திருக்கும் முதல் முயற்சியே இந்நூல். இந்நூலைத் தொடர்ந்து பல நல்ல நூல்களைத் தமிழுலகிற்கு அவர் தொடர்ந்து அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவுசெய்யப்பட வேண்டிய பல பிரதிகளை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டுவரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சுமுறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவற்றுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஆனால் தமிழில் கட்டுரை என்ற இலக்கிய வடிவம் பெரிதும் படைப்பிலக்கிய மரியாதையைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரைக் கிடைக்கின்ற பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடு கொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’யே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப் பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் தன்னுணர்ச்சிக்; கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இந்நூல் இருபத்திரண்டு சிறுசிறு கட்டுரைகளைக் கொண்ட ஒரு கலம்பகக் கட்டுரைத் தொகுப்பு. பல தன்னுணர்ச்சிக் கட்டுரைகள், சில இலக்கியக் கட்டுரைகள் எனக் கலவையாக நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலக்கல் காங்கேயன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, பல செய்திகளை மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம், இலக்கியம், இயற்கை முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன.

வேடிக்கை மனிதர்கள், சான்றோர் பண்புகள் முதலான முதல் எட்டுக் கட்டுரைகளும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. மரங்கள் மகத்தானவை என்ற ஒன்பதாம் கட்டுரையும் ஐந்து பெரிது ஆறு சிறிது என்ற பதினெட்டாம் கட்டுரையும் ஓரறிவு உயிர்களாம் மரங்கள் குறித்தும் ஐந்தறிவு உயிர்களாம் விலங்குகள் குறித்தும் பேசுகின்றன. குறுந்;தொகை காட்டும் குரங்குகள் காதல் என்ற பத்தாம் கட்டுரையும் சிவபெருமான் தொடங்கிய யுவுஆ சென்டர் என்ற பதினொன்றாம் கட்டுரையும் குறுந்தொகை மற்றும் தேவார இலக்கியங்கள் பற்றியன. பத்தொன்பது மற்றும் இருபது இருபத்தொன்றாம் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் காங்கேயனின் சிறப்புக் களங்களான திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிப் பேசுகின்றன. இந்த மூன்று கட்டுரைகளையும் நூலின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். மேலும் எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ற கட்டுரையும் தனித்துக் குறிப்பிடத்தக்கது.

நூலின் பல கட்டுரைகள் அவரின் மேடைப்பேச்சு தொனியிலேயே அமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான் வெளிப்படையாக மேடைகளில் அவர் வெளிப்படுத்தும் சமூகத்தின் மீதான சாடல்களும் நையாண்டிகளும் உள்ளது உள்ளபடி எத்தகைய புனைவுகளுமற்றுக் கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. பேசுவதென்பது காற்றில் கரைந்து போகக்கூடியது, ஆனால் எழுத்தில் எழுதிப் பதிப்பிப்பதென்பது கல்வெட்டில் வெட்டப்படுவதற்குச் சமமானது. இது காலத்தால் கரைந்து போகாதது. பேசுவதைவிட எழுதுவதில் அதிக எச்சரிக்கை உணர்ச்சி தேவை. காங்கேயன் இதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் கட்டுரைகளைச் சுதந்திரமாக அமைத்திருப்பது அவரின் கரவற்ற உள்ளத்தின் வெளிப்பாடு என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

காங்கேயனை அவரின் கல்லூரி நாட்கள் தொடங்கி நான் அறிவேன். பாடத்திற்கு வெளியேதான் கற்றுக்கொள்ளத் தக்கன மிகுதி என்பதனை அவர் நன்கு உணர்ந்தவர். வகுப்பறைகளுக்கு வெளியேதான் அவரின் தேடல் தொடங்கும். இடைவிடாத தேடலும் தேடலுக்கான முயற்சியும்தான் காங்கேயனின் தனித்தன்மை. இலக்கிய அரங்குகளில், இலக்கியங்களில், இலக்கிய ஆளுமைகளிடம் அவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. கடந்த இருபது ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து இலக்கிய அரங்குகளிலும் அவரின் கவனம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழக, புதுச்சேரி மேடைகளில் தொடந்து தம் பங்களிப்பைச் செய்துவரும் பரபரப்பான சூழலில் கூட, வாய்ப்புள்ள நாட்களில் புதுச்சேரியின் தமிழிலக்கிய அரங்குகளில் அமைதியான ஒரு பார்வையாளராக இருந்து நிகழ்ச்சிகளைக் கேட்க அவர் தவறியதில்லை. இந்தத் தேடல்தான் காங்கேயனின் வெற்றிக்கான சூத்திரம்.

எண்ணப் பறவைச் சிறகடித்து நூலின் மொழிநடை மிக மிக இலகுவானது. கதை சொல்லும் போக்கிலான அவரின் கட்டுரைகள் மெத்தப் படித்தவர்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை அனைவரையும் கவரக் கூடியன. திருவாளர் தென்கச்சி சுவாமிநாதன் எழுத்தின் சாயல் பல கட்டுரைகளில் தென்பட்டாலும் தமக்கென ஒரு தனிபாணியினைக் கொண்டது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் ஆதங்கம், கொஞ்சம் ஆலோசனை என்ற கட்டமைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இடையிடையே வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தக்க தமிழிலக்கிய மேற்கோள்களும் இனிய திரைப்படப் பாடல் வரிகளும் நகைச்சுவைகளும் குட்டிக்கதைகளும் இணைக்கப்பட்டு வாசகர்கள் அலுப்பின்றி வாசிக்கும் வண்ணம் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து.. ..” எனும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம், இலக்கியம், இயற்கை குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டி விடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com








வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு -2012

Dr.N.Ilango
Associate Professor
Dept.of Tamil
P.G. Centre,
Govt. of Puducherry
Puducherry-8

2012 பிப்ரவரி 25 ஆம் நாள் சனிக்கிழமை சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கின்( TL Seminar-2012) சிறப்பு அழைப்பாளராக  (கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக) அழைக்கப்பட்டேன்.

அழைப்பிதழ்:
 TL Seminar-2012


 Programme

கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக
முனைவர் நா.இளங்கோ
Keynote Address By Dr.N.Ilango


கருத்தரங்கில் நினைவுப் பரிசு வழங்குகிறார்
சிங்கப்பூர் கல்விஅமைச்சக இணை இயக்குநர்


Mr.Lo Chee Lin - Dr.N.Ilango

குறுந்தொகையும் இயற்கையும் - ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-5


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள், குறிப்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே படம் பிடிக்கின்றன. எந்தவொரு பாடலும் இயற்கையை விட்டு விலகி நிற்பதேயில்லை. குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெறும் நாடக பாணியிலான பாத்திரங்களின் தனிக்கூற்று இயங்குவதற்கான களமாகவும் மேடையாகவும் பின்னணியாகவும் இயற்கை படைக்கப்பட்டுள்ளது.

பாத்திரக் கூற்று அகப்பாடல்களின் மைய உட்கரு. இதுவே உரிப்பொருள். காலம், இடம் இவற்றின் பின்னணியாய் முதற்பொருள், நிலமும் பொழுதும். பின்னணியில் இடம்பெறும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகொடிகள், தொழில், இசை முதலான பொருள்கள் அனைத்தும் கருப்பொருள்கள். நாடகபாணித் தனியுரைகளின் கால, இடச் சூழ்நிலைகளை விளங்கிக் கொள்வதற்கும் பின்னணியைப் படம் பிடிப்பதற்கும் உதவும் இயற்கை அகப்பாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்விய ஆகுமதி
யார்அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
(குறுந். 18)

கபிலரின் இக்குறிஞ்சிப் பாடலில், தோழி தலைவனைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது உரிப்பொருள். சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்குவதைப் போல் தலைவியின் சிறிய உயிர் தலைவன் மீது வைத்த பெரிய காமத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பழம் பெருக்கப் பெருக்கக் கொம்புக்கு ஆபத்து எதிர்நோக்கியிருப்பதைப் போல், தலைவன் மீது வைத்த எல்லையற்ற அன்பினால் தலைவி உயிருக்கு ஆபத்து நேரலாம். தலைவன் ஊரிலுள்ள பலாமரங்களோ வேலியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது, அதேசமயம் அந்தப் பலா மரங்கள் கொம்புக்கு ஆபத்தில்லாத வேர்ப்பலாக்கள். பாதுகாப்பான வேர்ப்பலாக்கள் நிறைந்த சாரலைச் சேர்ந்த தலைவனுக்குக் கொம்புப் பலாவால் கொம்புக்கு ஆபத்து என்பது தெரியுமோ? எனவே தான் செவ்வியை ஆகுமதி என்கிறாள் தோழி.

இந்தக் குறுந்தொகைப் பாடலில் கருப்பொருளால் அமைந்த இயற்கை வருணனையானது கதையின் உட்பொருளை நமக்கு வெளிப்படுத்துவதற்குக் கவிஞன் தனது மனக்காட்சியில் கண்டதற்கு இணையான ஒரு குறியீடாக நிற்கிறது. அதுமட்டுமின்றி மறைகுறிப்பான பிறிது மொழிதலுக்கும் இடமளிக்கிறது. குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இயற்கையின் பங்கு அளப்பரியது.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் -சில குறிப்புகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு சிறுகதை

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள்.

சமூகம் குறித்த எதிர்வினையே அவரின் படைப்புகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

சோதனை முயற்சிகள்

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

திங்கள், 30 ஜனவரி, 2012

கவிஞர் வேள்பாரியின் "அகம் மலர்ந்த ஆம்பல்கள்" -அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605 008

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தான் என்னென்ன?

சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை நமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தனக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தனக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளாது. நல்லவேளையாக இன்றைக்கு கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.

நல்ல கவிதைகள் வாசித்து முடித்தபின் சுவைஞனைத் தூங்க விடுவதில்லை. பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருந்த தமிழனுக்கு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கையில் கொஞ்சம் தாளும் மையும் கிடைத்தபிறகு எழுத்து ஒரு சுகமான அனுபவமாயிற்று. இகலோக சுகம் தேடிப் பணம்படைத்த மன்னர், வள்ளல்களைப் பாடுவதோ, பரலோக சுகம் நாடிப் பரமனைப் பாடுவதோ இவைதான் கவிஞனின் வேலை என்றிருந்த இடைக்காலக் கவிஞர்களின் குண்டுசட்டிக் குதிரையோட்டம் காலனியாதிக்கச் சூழலில் புதிய எழுதுகருவி, அச்சு, புதிய பாடுபொருள், புதிய மொழிநடை எனப் புதுக்கோலம் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில். மகாகவி பாரதி இதனைத் தொடங்கிவைத்தான். அவனே தமிழின் நவீன கவிதைக் கலையின் பிதாமகன்.

பாரதி பிடித்த தேர்வடம் பின்னர் பாவேந்தன் கைக்குச் சென்றது. இன்று அந்தத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறதா? நிலைக்கு வந்துவிட்டதா? இல்லை வழியிலேயே முட்டுக்கட்டையில் முடங்கிக் கிடக்கிறதா? என்று இன்னும் தீர்;ப்பளிக்கப் படாத பட்டிமன்றம் ஒன்று தமிழுலகில் நடந்துகொண்டிருக்கிறது. பாரதி பிடித்த தேர் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அணியைச் சேர்ந்தவன் நான். இப்பொழுது என் மனக்கண்ணில் பாரதி பிடித்தத் தேர் வடத்தைப் பலரோடு சேர்ந்து கவிஞர் வேள்பாரியும் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

கவிஞர் வேள்பாரி சிங்கப்பூர்க் கவிதைக் குடும்பத்தில் ஒருவர். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின வேங்கடேசன் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த பாரதி 126 விழாவில் முதன்முறையாகக் கவிஞர் வேள்பாரியின் கவியரங்கக் கவிதையைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கேட்டுத் திளைத்தேன். கவியரங்கங்களுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த எனக்கு அவரின் கவியரங்கக் கவிதையும் அதனை அவர் மேடையில் நிகழ்த்திய விதமும் புதுமையாயிருந்தது.

பாரதி குறித்த தன்னுடைய நீண்ட கவிதையைக் கையில் எந்த தாளோ, குறிப்போ இல்லாமல் சரளமாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இடையில் பாராட்டுதலுக்காகக் கைதட்டல்கள் பல. கைதட்டலுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்து மீண்டும் மலையருவி எனக் கவிதையை ஆர்ப்பாட்டமும் துள்ளலும் குளிர்ச்சியுமாக ஓடவிட்டார். அன்று அவருடைய கவிதை அருவியில் குளித்துச் சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. தொடர்ந்து பல மேடைகளில் அவரின் கவியரங்கப் பொழிவுகளைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது அவரின் கவியரங்கக் கவிதைகளும், சில தனிக் கவிதைகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கவிதைகளும் இணைந்து அகம் மலர்ந்த ஆம்பல்கள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. இந்நூல் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.

கவிதைத் தொகுப்புகள் பொதுவாக, தமக்கென ஒரு முழுமைபெற்ற வடிவம் அற்றவை. கவிதைகளின் கலப்பு அணிவரிசை அது. எப்பொழுதுமே கலவைகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. கதம்பங்களைப் போல். கதம்பம், பல மலர்களின் கலப்பு. மலர்கள் மட்டுமல்ல மரு, மருக்கொழுந்து என இலை, தழைகளும் கதம்பத்தில் உண்டு. வண்ணங்களோ பலவிதம், குணங்களும் பலவிதம், மலர்களில் வாசனை உள்ளதும் உண்டு, வாசனையற்றதும் உண்டு. கவிதைத் தொகுப்புகளும் அப்படித்தான். எல்லாக் கவிதைகளும் ஒரே தரத்தில், ஒரே நிறையில் இருப்பதில்லை. கவிஞர் வேள்பாரியின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. கவியரங்கங்களில் அவர் பொழியும் கவிதை நிகழ்த்தலின் பரிமாணத்தை அச்சுவடிவத்தில் வரும் அவரின் கவிதைகளில் காணமுடியவில்லை. இரண்டும் வேறுவேறு ஊடாகமாகச் செயல்படுவதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பல கவிதைகள் பல கவிதைப் போட்டிகளில் அவருக்குப் பல்வேறு பரிசுகளை ஈட்டித்தந்த கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வேள்பாரி, பொழுது போக்கக் கவிதை எழுதுகிறவர் இல்லை. அவர் ஏன் கவிதை எழுதுகிறார்? எப்பொழுது கவிதை எழுதுகிறார்? என்பதிலேயே அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவரது மனஅவஸ்தையின் வெளிப்பாடுகளாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. தனிமனித, சமூக, நாட்டு நிகழ்வுகளின் கோணல்களும் அதற்கான கொதிப்புகளுமே அவர் கவிதைகளின் மையப் பொருளாகின்றன. குறிப்பாக, ஈழத்தில் நடந்துவரும் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் தமிழன் என்பதனையும் மீறி மனிதம் சிதைக்கப்படுவதில் அவருக்குள்ள எல்லையற்ற கோபமும் கொதிப்பும் பல படைப்புகளில் வெளிப்படுகின்றன.

தேகா போட்டியில் பதக்கம் பெற்ற புதுக்கோட்டைச் சாந்திக்காக எழுதும் வாழ்த்துக் கவிதை தொடங்கி சந்திராயன் அனுப்பப்பட்டபோதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போதும், கும்பகோணத் தீவிபத்தில் பள்ளிக் குழந்தைகளின் கோரப்பலியின் போதும், ஒரிசாவில் விவசாயிகளின் பஞ்சத்தின் போதும், டில்லி குண்டு வெடிப்பின் போதும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் அவர் எழுதியுள்ள கவிதைகளில் உள்@ர், தேச, சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அலசப்படுவதைக் கூர்ந்து நோக்கும் எவரும் இத்தொகுதியின் மேன்மையினை எளிதில் கண்டுகொள்ள முடியும்.

வேள்பாரியின் கவிதைகளின் நடை மிக மென்மையானது. எதுகை மோனைகளை விட அவர் பெரிதும் நம்புவது இயைபுத் தொடைகளைத்தான். இயைபுத் தொடைகளுக்கும் கவிதையின் ஓசையொழுங்குக்கும் மிகுந்த தொடர்புண்டு. இந்த நுட்பம் தெரிந்து வேள்பாரி தம் கவிதைகளை ஓசைநயத்தோடு படைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எளிய இனிய சொற்களால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தம் படைப்பு எளிதில் சென்று சேரும் வகையில் கவிதை படைப்பது அவரின் தனிஇலாவகம்.
கவிஞரின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பில் எல்லா உணர்ச்சிகளும் விரவிக் கிடந்தாலும், இத்தொகுதியில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி சோக உணர்ச்சியே. பெரும்பாலான கவிதைகளில் மிக மெல்லிய சோகம் இழையோடுவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். தாய்முகம் என்ற அவரின் கவிதையை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்

கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை

நெற்றியிலே நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


வேள்பாரியின் இந்தக் கவிதையைப் படிப்பவர்களுக்குப் பட்டினத்தாரின் தாயை எரியூட்டிய பாடல்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. வேள்பாரியின் தாயன்பு மீதான நீங்கா நினைவுச் சிதறல்கள் தொகுப்பின் பல இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. தாய்மையைப் போற்றும் கவிஞரின் உள்ளமும் தாயுள்ளம் போன்றதுதான். அதனால்தான் அவரின் எல்லாப் பாடுபொருள்களிலும் அன்பும் ஆழ்ந்த மனிதநேயமும் இழையோடுகின்றன.

இந்தியா அமெரிக்கா கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த வேள்பாரியின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் அணு என்ற தலைப்பிலான ஒரு கவிதை,

அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலில் நடந்த நிகழ்வு
போதுமடா நம்ம இழவு


அழிவைத் தருவது அணுஉலை
பொழிவைத் தருவது அன்புஉலை

அணுஎன்பது ஆக்க சக்தியா?
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா?


கவிதையின் ஒரு சில வரிகளிலேயே கவிஞரின் உள்ளத்தை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியும். உலக வல்லரசுகளின் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவோர் மட்டுமல்லாமல் அப்பாவியான பொதுமக்களும் கூட இந்த ஒப்பந்தம் ஏதோ இந்தியாவை ஈடேற்ற வந்த அற்புத ஒப்பந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஆபத்தையும் அதன்பின்னால் மறைந்திருக்கும் சர்வதேசக் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ள கவிதை அவரின் மனிதநேயத்தை மட்டும் படம் படிக்கவில்லை, மாறாக உலக அரசியல் குறித்த அவரின் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.

இனி, போலிச் சாமியார்கள் குறித்த கவிதை ஒன்று,

கருவறையில் காமலீலை
கடவுளர்கள் அங்குஇல்லை
சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா!


கவிஞர், இறை நம்பிக்கையாளர் என்றாலும் கடவுளின் பேரால் நடக்கும் கயமைகளையும் பக்தியின் பேரால் நடக்கும் பகட்டுகளையும் அம்பலப் படுத்துவதில் கவிஞர் தமக்குரிய சமூகக் கடமையைச் சரியாகவே செயல்படுத்துகின்றார்.

இப்படி, தொட்ட இடத்திலெல்லாம் கவிஞர் வேள்பாரியின் சமூக அக்கறையும் ஆழ்ந்த மனிதநேயமும் வெளிப்படுவது இத்தொகுதியின் தனிச் சிறப்பு. இந்தியத் தாயகத்திலிருந்து வாழ்தல் வேண்டி சிங்கப்பூர் சென்று பணியாற்றிவரும் கவிஞர் வேள்பாரி தம் அயராத உழைப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படிக் கவிதைப் பணி ஆற்றுகிறார் என்பதுதான் நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியது. அவரின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் இடையீடின்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா! தொடர்ந்து நல்ல பல நூல்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்கு அணி சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்களுடன்!

முனைவர் நா.இளங்கோ



புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...