செவ்வாய், 1 மே, 2012

எண்ணப் பறவை சிறகடித்து… கலக்கல் காங்கேயன் நூல் வாழ்த்துரை



முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

என் இனிய மாணவ நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். காங்கேயன் நாடறிந்த நல்ல பேச்சாளர். மேடைகளில் இனிமையாகப் பாடக் கூடியவர். அண்மைக் காலங்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் மேடைக்கலையாம் பாட்டு மன்றத்தில் புதுச்சேரியின் புகழை நாடெங்கும் பரப்பி வருபவர். அவரின் பாட்டுமன்றம் இயலும் இசையும் கலந்த ஒரு புதுவகைப் பட்டிமன்றமாய்ப் படித்தவர்கள் முதல் பாமரர்வரை அனைவரையும் ஈர்க்கும் ஓர் அற்புத மேடைக்கலையாய்த் தமிழகத்தை வலம்வருவது பாராட்டுதலுக்குரியது.

மேடைப்பேச்சு தந்த உற்சாகத்தில் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கின்றார் காங்கேயன். பேசுகிற பேச்செல்லாம் காற்றோடுப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்திருக்கும் முதல் முயற்சியே இந்நூல். இந்நூலைத் தொடர்ந்து பல நல்ல நூல்களைத் தமிழுலகிற்கு அவர் தொடர்ந்து அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவுசெய்யப்பட வேண்டிய பல பிரதிகளை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டுவரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சுமுறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவற்றுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஆனால் தமிழில் கட்டுரை என்ற இலக்கிய வடிவம் பெரிதும் படைப்பிலக்கிய மரியாதையைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரைக் கிடைக்கின்ற பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடு கொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’யே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப் பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் தன்னுணர்ச்சிக்; கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இந்நூல் இருபத்திரண்டு சிறுசிறு கட்டுரைகளைக் கொண்ட ஒரு கலம்பகக் கட்டுரைத் தொகுப்பு. பல தன்னுணர்ச்சிக் கட்டுரைகள், சில இலக்கியக் கட்டுரைகள் எனக் கலவையாக நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலக்கல் காங்கேயன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, பல செய்திகளை மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம், இலக்கியம், இயற்கை முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன.

வேடிக்கை மனிதர்கள், சான்றோர் பண்புகள் முதலான முதல் எட்டுக் கட்டுரைகளும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. மரங்கள் மகத்தானவை என்ற ஒன்பதாம் கட்டுரையும் ஐந்து பெரிது ஆறு சிறிது என்ற பதினெட்டாம் கட்டுரையும் ஓரறிவு உயிர்களாம் மரங்கள் குறித்தும் ஐந்தறிவு உயிர்களாம் விலங்குகள் குறித்தும் பேசுகின்றன. குறுந்;தொகை காட்டும் குரங்குகள் காதல் என்ற பத்தாம் கட்டுரையும் சிவபெருமான் தொடங்கிய யுவுஆ சென்டர் என்ற பதினொன்றாம் கட்டுரையும் குறுந்தொகை மற்றும் தேவார இலக்கியங்கள் பற்றியன. பத்தொன்பது மற்றும் இருபது இருபத்தொன்றாம் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் காங்கேயனின் சிறப்புக் களங்களான திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிப் பேசுகின்றன. இந்த மூன்று கட்டுரைகளையும் நூலின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். மேலும் எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ற கட்டுரையும் தனித்துக் குறிப்பிடத்தக்கது.

நூலின் பல கட்டுரைகள் அவரின் மேடைப்பேச்சு தொனியிலேயே அமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான் வெளிப்படையாக மேடைகளில் அவர் வெளிப்படுத்தும் சமூகத்தின் மீதான சாடல்களும் நையாண்டிகளும் உள்ளது உள்ளபடி எத்தகைய புனைவுகளுமற்றுக் கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. பேசுவதென்பது காற்றில் கரைந்து போகக்கூடியது, ஆனால் எழுத்தில் எழுதிப் பதிப்பிப்பதென்பது கல்வெட்டில் வெட்டப்படுவதற்குச் சமமானது. இது காலத்தால் கரைந்து போகாதது. பேசுவதைவிட எழுதுவதில் அதிக எச்சரிக்கை உணர்ச்சி தேவை. காங்கேயன் இதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் கட்டுரைகளைச் சுதந்திரமாக அமைத்திருப்பது அவரின் கரவற்ற உள்ளத்தின் வெளிப்பாடு என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

காங்கேயனை அவரின் கல்லூரி நாட்கள் தொடங்கி நான் அறிவேன். பாடத்திற்கு வெளியேதான் கற்றுக்கொள்ளத் தக்கன மிகுதி என்பதனை அவர் நன்கு உணர்ந்தவர். வகுப்பறைகளுக்கு வெளியேதான் அவரின் தேடல் தொடங்கும். இடைவிடாத தேடலும் தேடலுக்கான முயற்சியும்தான் காங்கேயனின் தனித்தன்மை. இலக்கிய அரங்குகளில், இலக்கியங்களில், இலக்கிய ஆளுமைகளிடம் அவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. கடந்த இருபது ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து இலக்கிய அரங்குகளிலும் அவரின் கவனம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழக, புதுச்சேரி மேடைகளில் தொடந்து தம் பங்களிப்பைச் செய்துவரும் பரபரப்பான சூழலில் கூட, வாய்ப்புள்ள நாட்களில் புதுச்சேரியின் தமிழிலக்கிய அரங்குகளில் அமைதியான ஒரு பார்வையாளராக இருந்து நிகழ்ச்சிகளைக் கேட்க அவர் தவறியதில்லை. இந்தத் தேடல்தான் காங்கேயனின் வெற்றிக்கான சூத்திரம்.

எண்ணப் பறவைச் சிறகடித்து நூலின் மொழிநடை மிக மிக இலகுவானது. கதை சொல்லும் போக்கிலான அவரின் கட்டுரைகள் மெத்தப் படித்தவர்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை அனைவரையும் கவரக் கூடியன. திருவாளர் தென்கச்சி சுவாமிநாதன் எழுத்தின் சாயல் பல கட்டுரைகளில் தென்பட்டாலும் தமக்கென ஒரு தனிபாணியினைக் கொண்டது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் ஆதங்கம், கொஞ்சம் ஆலோசனை என்ற கட்டமைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இடையிடையே வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தக்க தமிழிலக்கிய மேற்கோள்களும் இனிய திரைப்படப் பாடல் வரிகளும் நகைச்சுவைகளும் குட்டிக்கதைகளும் இணைக்கப்பட்டு வாசகர்கள் அலுப்பின்றி வாசிக்கும் வண்ணம் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து.. ..” எனும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம், இலக்கியம், இயற்கை குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டி விடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com








கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...