ஞாயிறு, 13 மே, 2012

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு - ஆய்வுநோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-1

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

செவ்வியல் தமிழின் பெருமைகளுக்கு ஒரு மணிமகுடமாகத் திகழ்வன இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களே. பாட்டும் தொகையும் என்று பொதுவில் அழைக்கப்படும் சங்க இலக்கியங்களின் எண்ணிக்கை பதினெட்டாகும். பத்துப்பாட்டு, பத்து நெடிய பாடல்களின் தொகுப்பாகும். இவை தனித்தனி ஆசிரியர்களால் பாடப்பட்ட தனி நூல்களே. எட்டுத்தொகை எட்டுத் தொகுப்பு நூல்களாகும். பத்துப்பாட்டு பத்தும் எட்டுத்தொகைகள் எட்டும் என சங்க இலக்கியங்கள் பதினெட்டாகும்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை வரிசைப்படுத்தும் பழம் பாடல்கள்,

முருகு, பொருநாறு, பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி -மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை


என்று சங்க இலக்கியப் பதினெட்டு நூல்களையும் அறிமுகம் செய்யும். அகமும் புறமும் இந்நூற்களின் பாடுபொருள்களாகும்.

பத்துப்பாட்டு:

சங்க இலக்கியங்களில் பாட்டு என்றாலே அது பத்துப்பாட்டு நூல்களைத்தான் குறிப்பிடும். பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை,

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கியையும் இலக்கணமில் கற்பனையே?


என்று பத்துப்பாட்டினை முன்வைத்துச் சங்க இலக்கியங்களின் இயற்கை நவிற்சித் தன்மைகளை வியந்து போற்றுகிறார். சங்கத் தொகை நூல்களில் பத்துப்பாட்டு முற்பட வைத்து எண்ணப்படுவதே அதன் பெருமையை உணர்த்தும். எட்டுத்தொகை போல் பத்துப்பாட்டும் தொகை நூலே. ஆசிரியர் எண்மர் பாடிய பத்து அகவல் பாக்கள் இதில் உள்ளன.

    பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல் எனும் பாட்டியல் நூலில் பத்துப்பாட்டு இலக்கிய வகை குறித்த இரண்டு நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:

    நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே
    ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்
    தொடுப்பது பத்துப் பாட்டு எனப்படுமே     
        (பன். பாட். 384)

அதுவே அகவலின் வருமென அறைகுவர் புலவர்        (பன். பாட். 385)

இந்நூற்பாக்கள் ‘பத்துப் பாட்டு’ என்னும் வழக்கு நிலவிய காலத்தில் இயற்றப் பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு இலக்கியத்தை வைத்தே இவ்விலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பினத் தவிர வேறு பத்துப்பாட்டு நூல்கள் எதுவும் தமிழுலகில் இல்லை.

    பத்துப்பாட்டு நூலுள் மிகச் சிறிய பாட்டு முல்லைப்பாட்டு, 103 அடிகள். மிகப்பெரிய பாட்டு மதுரைக் காஞ்சி, 782 அடிகள். பத்துப்பாட்டுள் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை என்னும் புலவர் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தர் ஆற்றுப்படை என்பன அவை. மதுரைக் காஞ்சி, நிலையாமை கூறும் காஞ்சித் திணை சார்ந்த நூல், எனவே புறப்பொருள் பாட்டு. ஆக மேற்சுட்டிய ஆறு நூல்களும் புறப்பொருள் பற்றியன. முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கு நூல்களும் அகப்பொருள் பற்றியன. நெடுநல்வாடை குறித்து அகமா? புறமா? என்ற விவாதங்கள் இருப்பினும் அது அகப்பொருள் நூலே.

முல்லைப்பாட்டு:
பத்துப்பாட்டின் அகப்பொருள் பாட்டுக்கள் நான்கனுள் அளவால் சிறியது முல்லைப்பாட்டு. மொத்தம் 103 அடிகள். முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் என்பது ஆகும். ஆர் விகுதி உயர்வு குறித்ததாகும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற்பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல்லைச் சேர்த்து வழங்குதல் பழந்தமிழர் மரபு. அவ்வகையில் பூதன் என்ற பெயர் நப்பூதனார் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். நக்கீரனார், நத்தத்தனார், நச்சள்ளையார் முதலான பெயர்களில் ந என்னும் சிறப்பு முன்னொட்டு இடம்பெறுதல் ஒப்புநோக்கத் தக்கது.

முல்லைப்பாட்டில் பாடி வீட்டின் உள் கட்டமைப்பு மற்றும் அரசர் தனியறை குறித்த வருணனைகளை மிக நுணுக்கமாகக் கையாளும் திறத்தினைக் கொண்டு இவர் வணிகர் குடியில் பிறந்தவராயினும் மன்னருடனும் மற்றும் அவர்தம் படைகளுடனும் பெரிதும் நெருங்கிப் பழகியவர் என யூகிக்க முடிகின்றது.

இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இவரின் பெயர்வழி அறிந்துகொள்ள முடிகின்றது. முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப்பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. எனவே, நெடுநல்வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராசமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணிக்கின்றார். நற்றிணையில் உள்ள 29-ஆம் பாடலை இயற்றிய பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும்  உள்ளது.

முல்லைக்குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகும். இருத்தல் என்ற இவ் உரிப்பொருளைச் சிறப்பித்தும் முல்லைக்குரிய முதல் கருப்பொருள்களை இடம்பெறச் செய்தும் பாடப்படும் அகப்பாட்டு முல்லைப் பாட்டாகும். இருத்தல் என்றால் ஆற்றியிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றதனால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன்பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்று வியந்து பாராட்டுவது உண்டு. அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் இருத்தலை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது. 

போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். பிரிவுக் காலத்து இருவரின் மனநிலைகளையும் இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...