முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605 008
இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தான் என்னென்ன?
சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை நமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தனக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தனக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளாது. நல்லவேளையாக இன்றைக்கு கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.
நல்ல கவிதைகள் வாசித்து முடித்தபின் சுவைஞனைத் தூங்க விடுவதில்லை. பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருந்த தமிழனுக்கு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கையில் கொஞ்சம் தாளும் மையும் கிடைத்தபிறகு எழுத்து ஒரு சுகமான அனுபவமாயிற்று. இகலோக சுகம் தேடிப் பணம்படைத்த மன்னர், வள்ளல்களைப் பாடுவதோ, பரலோக சுகம் நாடிப் பரமனைப் பாடுவதோ இவைதான் கவிஞனின் வேலை என்றிருந்த இடைக்காலக் கவிஞர்களின் குண்டுசட்டிக் குதிரையோட்டம் காலனியாதிக்கச் சூழலில் புதிய எழுதுகருவி, அச்சு, புதிய பாடுபொருள், புதிய மொழிநடை எனப் புதுக்கோலம் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில். மகாகவி பாரதி இதனைத் தொடங்கிவைத்தான். அவனே தமிழின் நவீன கவிதைக் கலையின் பிதாமகன்.
பாரதி பிடித்த தேர்வடம் பின்னர் பாவேந்தன் கைக்குச் சென்றது. இன்று அந்தத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறதா? நிலைக்கு வந்துவிட்டதா? இல்லை வழியிலேயே முட்டுக்கட்டையில் முடங்கிக் கிடக்கிறதா? என்று இன்னும் தீர்;ப்பளிக்கப் படாத பட்டிமன்றம் ஒன்று தமிழுலகில் நடந்துகொண்டிருக்கிறது. பாரதி பிடித்த தேர் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அணியைச் சேர்ந்தவன் நான். இப்பொழுது என் மனக்கண்ணில் பாரதி பிடித்தத் தேர் வடத்தைப் பலரோடு சேர்ந்து கவிஞர் வேள்பாரியும் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.
கவிஞர் வேள்பாரி சிங்கப்பூர்க் கவிதைக் குடும்பத்தில் ஒருவர். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின வேங்கடேசன் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த பாரதி 126 விழாவில் முதன்முறையாகக் கவிஞர் வேள்பாரியின் கவியரங்கக் கவிதையைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கேட்டுத் திளைத்தேன். கவியரங்கங்களுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த எனக்கு அவரின் கவியரங்கக் கவிதையும் அதனை அவர் மேடையில் நிகழ்த்திய விதமும் புதுமையாயிருந்தது.
பாரதி குறித்த தன்னுடைய நீண்ட கவிதையைக் கையில் எந்த தாளோ, குறிப்போ இல்லாமல் சரளமாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இடையில் பாராட்டுதலுக்காகக் கைதட்டல்கள் பல. கைதட்டலுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்து மீண்டும் மலையருவி எனக் கவிதையை ஆர்ப்பாட்டமும் துள்ளலும் குளிர்ச்சியுமாக ஓடவிட்டார். அன்று அவருடைய கவிதை அருவியில் குளித்துச் சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. தொடர்ந்து பல மேடைகளில் அவரின் கவியரங்கப் பொழிவுகளைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது அவரின் கவியரங்கக் கவிதைகளும், சில தனிக் கவிதைகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கவிதைகளும் இணைந்து அகம் மலர்ந்த ஆம்பல்கள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. இந்நூல் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.
கவிதைத் தொகுப்புகள் பொதுவாக, தமக்கென ஒரு முழுமைபெற்ற வடிவம் அற்றவை. கவிதைகளின் கலப்பு அணிவரிசை அது. எப்பொழுதுமே கலவைகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. கதம்பங்களைப் போல். கதம்பம், பல மலர்களின் கலப்பு. மலர்கள் மட்டுமல்ல மரு, மருக்கொழுந்து என இலை, தழைகளும் கதம்பத்தில் உண்டு. வண்ணங்களோ பலவிதம், குணங்களும் பலவிதம், மலர்களில் வாசனை உள்ளதும் உண்டு, வாசனையற்றதும் உண்டு. கவிதைத் தொகுப்புகளும் அப்படித்தான். எல்லாக் கவிதைகளும் ஒரே தரத்தில், ஒரே நிறையில் இருப்பதில்லை. கவிஞர் வேள்பாரியின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. கவியரங்கங்களில் அவர் பொழியும் கவிதை நிகழ்த்தலின் பரிமாணத்தை அச்சுவடிவத்தில் வரும் அவரின் கவிதைகளில் காணமுடியவில்லை. இரண்டும் வேறுவேறு ஊடாகமாகச் செயல்படுவதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பல கவிதைகள் பல கவிதைப் போட்டிகளில் அவருக்குப் பல்வேறு பரிசுகளை ஈட்டித்தந்த கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வேள்பாரி, பொழுது போக்கக் கவிதை எழுதுகிறவர் இல்லை. அவர் ஏன் கவிதை எழுதுகிறார்? எப்பொழுது கவிதை எழுதுகிறார்? என்பதிலேயே அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவரது மனஅவஸ்தையின் வெளிப்பாடுகளாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. தனிமனித, சமூக, நாட்டு நிகழ்வுகளின் கோணல்களும் அதற்கான கொதிப்புகளுமே அவர் கவிதைகளின் மையப் பொருளாகின்றன. குறிப்பாக, ஈழத்தில் நடந்துவரும் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் தமிழன் என்பதனையும் மீறி மனிதம் சிதைக்கப்படுவதில் அவருக்குள்ள எல்லையற்ற கோபமும் கொதிப்பும் பல படைப்புகளில் வெளிப்படுகின்றன.
தேகா போட்டியில் பதக்கம் பெற்ற புதுக்கோட்டைச் சாந்திக்காக எழுதும் வாழ்த்துக் கவிதை தொடங்கி சந்திராயன் அனுப்பப்பட்டபோதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போதும், கும்பகோணத் தீவிபத்தில் பள்ளிக் குழந்தைகளின் கோரப்பலியின் போதும், ஒரிசாவில் விவசாயிகளின் பஞ்சத்தின் போதும், டில்லி குண்டு வெடிப்பின் போதும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் அவர் எழுதியுள்ள கவிதைகளில் உள்@ர், தேச, சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அலசப்படுவதைக் கூர்ந்து நோக்கும் எவரும் இத்தொகுதியின் மேன்மையினை எளிதில் கண்டுகொள்ள முடியும்.
வேள்பாரியின் கவிதைகளின் நடை மிக மென்மையானது. எதுகை மோனைகளை விட அவர் பெரிதும் நம்புவது இயைபுத் தொடைகளைத்தான். இயைபுத் தொடைகளுக்கும் கவிதையின் ஓசையொழுங்குக்கும் மிகுந்த தொடர்புண்டு. இந்த நுட்பம் தெரிந்து வேள்பாரி தம் கவிதைகளை ஓசைநயத்தோடு படைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எளிய இனிய சொற்களால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தம் படைப்பு எளிதில் சென்று சேரும் வகையில் கவிதை படைப்பது அவரின் தனிஇலாவகம்.
கவிஞரின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பில் எல்லா உணர்ச்சிகளும் விரவிக் கிடந்தாலும், இத்தொகுதியில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி சோக உணர்ச்சியே. பெரும்பாலான கவிதைகளில் மிக மெல்லிய சோகம் இழையோடுவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். தாய்முகம் என்ற அவரின் கவிதையை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்
கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை
நெற்றியிலே நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே
வேள்பாரியின் இந்தக் கவிதையைப் படிப்பவர்களுக்குப் பட்டினத்தாரின் தாயை எரியூட்டிய பாடல்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. வேள்பாரியின் தாயன்பு மீதான நீங்கா நினைவுச் சிதறல்கள் தொகுப்பின் பல இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. தாய்மையைப் போற்றும் கவிஞரின் உள்ளமும் தாயுள்ளம் போன்றதுதான். அதனால்தான் அவரின் எல்லாப் பாடுபொருள்களிலும் அன்பும் ஆழ்ந்த மனிதநேயமும் இழையோடுகின்றன.
இந்தியா அமெரிக்கா கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த வேள்பாரியின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் அணு என்ற தலைப்பிலான ஒரு கவிதை,
அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலில் நடந்த நிகழ்வு
போதுமடா நம்ம இழவு
அழிவைத் தருவது அணுஉலை
பொழிவைத் தருவது அன்புஉலை
அணுஎன்பது ஆக்க சக்தியா?
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா?
கவிதையின் ஒரு சில வரிகளிலேயே கவிஞரின் உள்ளத்தை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியும். உலக வல்லரசுகளின் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவோர் மட்டுமல்லாமல் அப்பாவியான பொதுமக்களும் கூட இந்த ஒப்பந்தம் ஏதோ இந்தியாவை ஈடேற்ற வந்த அற்புத ஒப்பந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஆபத்தையும் அதன்பின்னால் மறைந்திருக்கும் சர்வதேசக் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ள கவிதை அவரின் மனிதநேயத்தை மட்டும் படம் படிக்கவில்லை, மாறாக உலக அரசியல் குறித்த அவரின் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.
இனி, போலிச் சாமியார்கள் குறித்த கவிதை ஒன்று,
கருவறையில் காமலீலை
கடவுளர்கள் அங்குஇல்லை
சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா!
கவிஞர், இறை நம்பிக்கையாளர் என்றாலும் கடவுளின் பேரால் நடக்கும் கயமைகளையும் பக்தியின் பேரால் நடக்கும் பகட்டுகளையும் அம்பலப் படுத்துவதில் கவிஞர் தமக்குரிய சமூகக் கடமையைச் சரியாகவே செயல்படுத்துகின்றார்.
இப்படி, தொட்ட இடத்திலெல்லாம் கவிஞர் வேள்பாரியின் சமூக அக்கறையும் ஆழ்ந்த மனிதநேயமும் வெளிப்படுவது இத்தொகுதியின் தனிச் சிறப்பு. இந்தியத் தாயகத்திலிருந்து வாழ்தல் வேண்டி சிங்கப்பூர் சென்று பணியாற்றிவரும் கவிஞர் வேள்பாரி தம் அயராத உழைப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படிக் கவிதைப் பணி ஆற்றுகிறார் என்பதுதான் நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியது. அவரின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் இடையீடின்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா! தொடர்ந்து நல்ல பல நூல்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்கு அணி சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்களுடன்!
முனைவர் நா.இளங்கோ
1 கருத்து:
மலையருவில் குளித்தால்
மனதிற்கு இதமே
கருத்துரையிடுக