திங்கள், 30 ஜனவரி, 2012

"ஊடகங்களின் ஊடாக" -நூல் முன்னுரையின் ஒரு பகுதி


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் முதலான தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாமல் இன்றைய மனித வாழ்க்கை இல்லை. தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன உலகத்தில் வாழ்கிறோம்.

ஊடகங்கள் நமக்குச் செய்தி மற்றும் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. அவை அத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன. உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பனவற்றையும் ஊடகங்களே முடிவுசெய்கின்றன.

செய்தி மற்றும் தகவல்களை ஊடக நுகர்வோருக்கு வழங்கிச் சேவை செய்வது தகவல் தொடர்புச் சாதனங்களின் பணி என்பதெல்லாம் பழங்கதை. இன்றைய உலகில் ஊடகங்கள் வழங்கும் செய்திகள் ஒரு தகவல் மட்டுமல்ல. அவை ஓர் உற்பத்திப்பொருள். முதலாளித்துவ உற்பத்திப் பண்டம். அதனை உற்பத்தி செய்யும் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படப் பணியாளர்களாகிய ஊடகவியலாளர்கள் அனைவரும் பண்ட உற்பத்தித் தொழிலாளர்கள்.

ஊடக முதலாளிகள் உற்பத்தி செய்துதரச் சொல்லும் தகவல்களைச் செய்தி என்ற பெயரில் அவர்கள் செய்து தருகிறார்கள். நுகர்வோராகிய நமக்கு எது தேவை என்று தெரிந்து ஊடகங்கள் தகவல்களை உற்பத்தி செய்வதில்லை. நமக்கு எதைத் தரவேண்டும் அல்லது நம்மிடம் எதை விற்க வேண்டும் என்பதையும் இன்றைய ஊடக முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பழகப் பழக அதுவே நமது தேவையாகவும் மாறிப்போகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தகவல்கள் உருவாக்கப் படுகின்றன என்பதுதான்.

தொடக்கக் காலங்களில் ஊடகங்களின் பணி சமூகம், சமயம், தேசம் சார்ந்த ஒரு சேவையாக, ஒருவகைப் போராட்ட ஆயுதமாகத்தான் இருந்தது. அறிவித்தலையும், அறிவுறுத்தலையும் மகிழ்வூட்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றைக்கு வணிகம் செய்தல், பொருளீட்டல் என்பதனையே முதன்மை நோக்கமாகக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆக, இன்றைய ஊடகஉலகில் செய்தி என்பது வெறும் தகவல் இல்லை, அது ஒரு உற்பத்திப் பொருள். ஊடகங்களின் தகவல் வழங்கல் வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு உலகமய வணிகம். இந்த மாற்றத்தைச் சராசரி வாசகர்களும் பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளாத வகையில் நடைமுறைப் படுத்துவதில்தான் ஊடகங்களின் நுண்அரசியல் செயல்படுகின்றது.

அப்பாவி ஊடக நுகர்வோரைப் பொறுத்த வரையில் தகவல் தொடர்புச் சாதனங்கள் உண்மை விளம்பிகள். அவை உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசுவதில்லை. இன்றைக்கும் பலர் தகவல் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று நம்புகின்றனர். இன்னும் ஒரு சிலர் தனியார் ஊடகங்கள் வேண்டுமானால் பொய் சொல்லலாம், உண்மையைத் திரித்து வெளியிடலாம் ஆனால், அரசு ஊடகங்கள் அப்படியில்லை, அவை நூற்றுக்கு நூறு உண்மைகளைத்தான் எழுதும், பேசும், காண்பிக்கும் என்று பிடிவாதமாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அவர்கள் நம்பிக்கைக்கு நேர்மாறானது. ஊடகங்களின் அதிகார அரசியலின் வெற்றி இது. ஊடகங்களின் அதிகார அரசியலை விளங்கிக் கொள்வது இன்றைக்கு மிகமிக அவசியமானது. ஊடக நுகர்வோர் மட்டுமல்ல கல்வி, தொழில் சார்ந்து ஊடகங்களைப் பயில்வோருக்கும் ஊடகங்களின் அதிகார அரசியல் குறித்த விழிப்புணர்வு தேவை.
II
ஊடகவியலுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலானது. கடந்த எண்பதுகளில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தொடங்கிய மக்கள் தொடர்பியல் படிப்பில் சேர்ந்து கற்றது தொடங்கி, புதுவைப் பல்கலைக் கழக இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஊடகவியலைப் பயிற்றுவிக்கும் நோக்கில் பலமுறை பாடத்திட்டங்களை வடிவமைத்தது, தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்து வருவது என இருபத்தைந்து ஆண்டுகாலத் தொடர்பு. கல்விப் புலத்தில் மட்டுமல்லாமல் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் எனத் தொடர்ந்து ஊடகத் துறையோடு இயங்கியும், இயக்கியும் வரும் அனுபவமும் எனக்குண்டு. புத்தகங்களில் கற்பதினும் மேலாக வகுப்பறைச் சூழலும் மாணவர்களும் எனக்கு நிறைய போதிப்பதுண்டு. கற்பதும் கற்பிப்பதும், கற்பித்துக் கற்பதும் தானே ஆசிரியப் பணி. அந்தவகையில் நிறைய கற்றிருக்கிறேன், கற்பித்திருக்கிறேன். அந்த அனுபவங்களின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் ஊடகங்களின் ஊடாக என்ற இந்நூல்.

ஊடகவியல், இதழியல் குறித்துத் தமிழில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களை ஒட்டி, தேவைக்காக உருவாக்கப்பட்டவை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக எழுதப்பட்டவை. ஊடகங்கள் குறித்த புரிதலை மையப்படுத்தித் தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ளன. அவற்றுள் சுரேஷ்பால் அவர்களின் மீடியா உலகம் (1999), கண்ணன் அவர்களின் பிறக்கும் ஒரு புதுஅழகு (2007) இரண்டும் குறிப்பிடத்தக்க நூல்கள். இந்நூலின் ஆக்கத்தில் அவற்றுக்கும் பங்குண்டு.

ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் கட்டுரை ஊடகங்களின் கதையாடல் குறித்தது. இரண்டாவது கட்டுரை திரைப்படங்களில் இடம்பெறும் காலக்குறியீடுகள் குறித்தது. மூன்றாவது கட்டுரை தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் நாவல் மற்றும் திரைப்படம் குறித்தது. நான்காவது கட்டுரை விளம்பரங்களின் நுண்அரசியல் குறித்தது. ஐந்து மற்றும் ஆறாம் கட்டுரைகள் இணைய வலைப்பதிவுகளின் அதிகார உடைப்பு குறித்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கு இடமளிக்கக் கூடியன. ஊடகங்களுக்கு இருக்கும் வரவேற்பு, இது போன்ற ஊடகவியல் சார்ந்த ஆய்வு நூல்களுக்கும் இருக்க வேண்டும். ஊடகங்கள் நம் எதிரிகள் இல்லை. அதேசமயத்தில் அவை நண்பர்களும் இல்லை.

நான் கற்ற தமிழ்க்கல்வி என்னை ஒரு இலக்கியவாதியாக மட்டுமே வளர்த்தெடுத்தது. புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் அதன் தோழர்களும்தான் என் இலக்கியப் பயணத்திற்கான இலக்கினை அடையாளம் காட்டியவர்கள். இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களின் வழியில், ‘கலையும் இலக்கியமும் மக்களுக்கே’ என்ற தெளிவோடு சமுதாயப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆற்றுப்படுத்திய அமைப்பு அதுவே. அதற்கு நன்றி கூறும் வகையில் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு, ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலை அன்புக் காணிக்கையாகப் படைத்துள்ளேன்.

தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்,

நன்றி!
முனைவர் நா.இளங்கோ

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...