புதன், 12 செப்டம்பர், 2007

பிஜி தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும்

பிஜி தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும்
உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்களும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழர்களின் புலப்பெயர்வு கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது. தொடக்கக் காலங்களில் தமிழர்களின் புலப்பெயர்வுகள் பெரிதும் தற்காலிகப் பெயர்வுகளாகவே இருந்தன. பண்டமாற்று, வணிகம் மற்றும் பொருளீட்டல் தொடர்பாக உலகின் பல பகுதிகளுக்கும் நிலவழி மற்றும் நீர்வழியாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்லும் வழக்கம் தொன்றுதொட்டு நிலவிவந்தது. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்ற தொல்காப்பிய நூற்பா தமிழர்களின் கடல்பயணம் பற்றிய அரிய குறிப்பு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் வாய்மொழி. கடல்பயணம் செய்யும் கலையில் தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கு மொழிவழிச் சான்றுகள் பலஉள. ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரிதி, வாரணம், பவ்வம், பரவை, புணரி, கடல் என்று கடலைக் குறிப்பதற்குப் பல சொற்களும் கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை என்று நீரில் செல்லும் ஊர்திகளைப் பற்றிய பல சொற்களும் தமிழில் உள்ளன. காலந்தோறும் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை இருவகையாகப் பிரிக்கலாம். பதினெட்டு அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் முதல் பிரிவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் புலம் பெயர்ந்தவர்கள் இரண்டாம் பிரிவினர். முதல் பிரிவினர் பெரும்பான்மை வியாபாரத்தின் பொருட்டும் சிறுபான்மை தமிழ் மன்னர்களின் படையெடுப்பு காரணமாகவும் இடம்பெயர்ந்தனர். இரண்டாம் பிரிவினர் சிறுபான்மை வியாபாரத்தின் பொருட்டும் பெரும்பான்மை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகவும் இடம் பெயர்ந்தனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தேயிலை, ரப்பர், கரும்புத் தோட்டங்களில் கூலிவேலை செய்வதற்காகப் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களே புலம்பெயர் தமிழர்களில் மிகுதி. மலையக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜித் தீவு, மொரீசியஸ், ரீயூனியன் முதலான நாடுகளில் தற்போது வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவழியினரே. புலம்பெயர்ந்த தமிழர்கள் வசிக்கும் நாடுகள் பலவற்றில் தமிழும் தமிழ்ப்பண்பாடும் பெருமளவில் மங்கிமறைந்து வருகின்றன. இத்தகு இக்கட்டில் தமிழும் தமிழ்ப் பண்பாடும் சிக்கித் தவிக்கும் நாடுகளில் பிஜித் தீவு முதன்மையானது.

பிஜித் தீவு:
தென்மத்திய பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பிஜிநாடு. விதி லெவு, வனுவா லெவு எனும் இரு முக்கியத் தீவுகள் உட்பட 840 தீவுகள் அடங்கியது இந்நாடு. பிஜித் தீவு 1874 இல் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. கிட்டத்தட்ட நூறாண்டுகாலம் பிரிட்டி~; காலனியாய் இருந்த பிஜி 1970 இல் சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதய மக்கள் தொகை சுமார் 9 இலட்சம். இதில் பிஜிக்கள் 51 சதவீதமும் இந்தியர்கள் 44 சதவீதமும் மற்றையோர் 5 சதவீதமும் உள்ளனர். இந்நாட்டின் தலைநகர் சுவா. பிஜித் தீவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் என்பார் மறவன் புலவு க.சச்சிதானந்தன். ஆனால்; சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் தாய்மொழி தமிழ் என்று பதிவு செய்திருப்பதாக வுயஅடையெவழைn.ழசப இணையதளம் தெரிவிக்கின்றது. பிஜியின் அதிகாரபூர்வ அரசாங்க இணைய தளத்தில் வுயஅடை என்ற சொல்லே இடம்பெறவில்லை. 1874 இல் ஆங்கிலக் காலணி நாடாகியது பிஜி. இத்தீவுக் கூட்டங்களின் கரும்புத் தோட்டங்களில் பணியாற்றவே 1879 முதல் இந்தியக் கூலித் தொழிலாளர்கள் தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் ( ஐனெநவெரசந ளலளவநஅ ழச வாந ளழ உயடடநன புசைஅவை ளலளவநஅ) மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆள் பிடித்துக் கொணரும் ஷஅர்காதிஸி என்ற கங்காணிகள் மூலம் 1879 – 1916 ஆம் ஆண்டுகளுக்கிடையே 87 கப்பல்களில் 65 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் பிஜித் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். 5 ஆண்களுக்கு 1 பெண் வீதம் கூலியாட்களில் ஆண், பெண் எண்ணிக்கை இருந்தது. இந்தியத் தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேரில் 13 ஆயிரம் பெண்கள் அடைந்த கொடுமைகளைத்தான் பாரதி ஷகரும்புத் தோட்டத்திலே என்ற பாடலின் வழி எடுத்துரைத்தான். 1879 க்கும் 1916க்கும் இடையில் பிஜியில் இந்தியர்களும் தமிழர்களும் பட்ட கொடுமைகளுக்கு அளவேயில்லை. மகாத்மா காந்தியின் நண்பர் சி.எப்.ஆண்டுரூஸ் முயற்சியின் பேரில் 1917 ஆம் ஆண்டில் பிஜியில் கொத்தடிமைச் சட்டம் ஒழிக்கப்பட்டது.

பிஜியில் தமிழ்க் கல்வி:
தமிழர்கள் பிஜி சென்ற இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குழந்தைகள் படிப்பதற்கு இத்தீவில் பள்ளிக்கூட வசதிகள் கிடையாது. சுவாமி மனோகரானந்த மகராஜ் பிஜிக்கு வந்து ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தபோது சமயப்பணியோடு கல்விப்பணியும் செய்யப்பட்டது. தொடக்கக் காலங்களில் இந்தியே இப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழர்களே தத்தம் சொந்தப் பொறுப்பில் தமிழ் சொல்லித் தந்தார்கள். பிஜித்தீவில் உள்ள பள்ளிகளில் தென்இந்திய மொழிகள் கற்றுத்தரப்பட வேண்டும் என பிஜிக் கல்விக் கமி~ன் முன் கிரு~;ணசாமி, மச்சோநாயர், கிரு~;ணாரெட்டி, எம்.என்.நாயுடு, அரங்கசாமி முதலியவர்கள் எடுத்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாகக் கமி~னிடம் எம்.என்.நாயுடு எழுத்து மூலமாய் முறையீடு செய்தார். பிறகு 1929 இல் கமி~னின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தமிழ், தெலுங்கு, குஜராத்தி முதலிய மொழிகளையும் இந்தி, ஆங்கிலம் மொழிக்கல்வியுடன் இணைத்துக் கற்பிக்க ஆவணசெய்தது.1926 ஜனவரியில் பிஜியில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் பிஜி மக்களிடம் கல்விப் பணி ஆற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. 1921 தொடங்கி பல தனிப்பட்ட தமிழர்களின் பெருமுயற்சியால் மெல்ல மெல்லப் பரவிய தமிழ்வழிக் கல்வி 1930 க்குப் பிறகு தளர்வுற்றது. 1937 ஆம் ஆண்டு இராமகிரு~;ண மடத்தைச் சேர்ந்த ஸ்வாமி அவிசாநந்தர் பிஜித் தீவிற்கு வந்தார். அவிசாநந்தரின் இடையறாத பிரச்சாரத்தால் பிஜித் தமிழர்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க வாய்ப்பேற்பட்டது.சுவாமி அவிசாநந்தர், தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினர் முயற்சியால் 1937 இல் மாத்ய+ஸ் கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி இந்திக்காரர்கள் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பள்ளிகளில் ஆங்கிலம் கல்விமொழியாக இருக்கவேண்டும். இரண்டாம் மொழிக்கல்வி எந்த இந்திய மொழியிலும் இருக்கலாம். அரசாங்கம் மாத்ய+ஸ் கல்வி அறிக்கையை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் எல்லா இந்தியக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய தாய்மொழிக் கல்வி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் எனும் சட்டத்தையும் (ழுசனiயெnஉந ழே. 48 ழக 1937) வெளியிட்டது.1946 செப்டம்பர் 8 ஆம் தேதி தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினர் நிறைவேற்றிய தீர்மானங்களும் ஓராண்டுக்குப் பிறகு அரசு அத்தீர்மானத்திற்கு அளித்த பதிலும் பிஜி தமிழ்க்கல்வி வரலாற்றில் முக்கியமானது.தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினரின் தீர்மானங்கள் (8-9-1946),
அ) தாய்பாi~களிலும் பரீட்சை நடத்த வெண்டும். அத்துடன் உபாத்தியாயர் ட்ரெய்னிங்கில் தாய்பாi~யில் பரீட்சைக்கு இடந்தர வேண்டும்.
ஆ) தென்னிந்திய உபாத்தியாயர்களுக்குச் சங்கம் நடத்தும் தாய்பாi~ பரீட்சைக்கு கிராண்ட கொடுக்க வேண்டும்.
இ) தாய்பாi~களைப் பரிசோதிக்க சர்க்கார் அதிகாரிகளை அனுப்பாவிட்டால் சங்கம் அனுப்ப சர்க்கார் அனுமதி கொடுக்க வேண்டும்.இத்தீர்மானங்களுக்கு அரசு, ஷ வாலிபர்கள் தாய்பாi~ வேண்டாம் என்கிறார்கள் ஒரு சில கிழவர்களோ வேண்டுமென்கிறார்கள் என்று பதிலளித்தது. அரசின் இந்த பதிலில் இரண்டு உண்மைகள் உள்ளன. ஒன்று, பிஜிக்குச் சென்ற முதல் தலைமுறையினர் தாய்மொழிக் கல்விஃ தமிழ்க் கல்வியை வேண்டுகிறார்கள். இரண்டாவது, அடுத்த தலைமுறையாகிய புதிய தலைமுறையினர் அதாவது வாலிபர்கள் தாய்மொழிக் கல்விஃ தமிழ்க் கல்வியை வேண்டாமென்கிறார்கள். பிஜி அரசின் கூற்றில் உண்மையிருந்தாலும் இப்பிரச்சனையைத் தீர்க்க அரசு முன்வரவில்லை.1940 தொடங்கி 1950 க்குள் பிஜித் தீவில் தமிழ்க்கல்வி பெருமளவில் நலியத் தொடங்கியது.

தமிழ்க்கல்வியின் நலிவுக்குக் காரணங்கள்:
1940 ஆம் ஆண்டில் பிஜி அரசு தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக ஏற்றுக்கொண்டது. தமிழ்த் தொண்டு அரசுப் பணியான பிறகு பல்வேறு புறக் காரணங்களால் ஆசிரியர்களின் ஊக்கம் குறைந்தது. அரசின் கல்வி அமைச்சகம் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கவில்லை. வட இந்தியர்களின் மொழியான இந்தி மொழியும் இந்திமொழிக் கல்வியும் இக்காலக் கட்டங்களில் பெரிதும் செல்வாக்கு பெற்றன. வட இந்தியர்களைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொண்டனர் தமிழ் இளைஞர்கள். மொத்தத்தில் இரண்டாம் உலகப்போரின் போது தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பை இழந்ததாலும், பிரிட்டி~; அரசு தமிழ்க்கல்விக்குப் போதிய ஆதரவு அளிக்க முன்வராததாலும், தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையாலும், புதிய வாழ்க்கை நாட்டத்தாலும் வட இந்தியர்களின் இந்தி தீவிரவாத இயக்கத்தின் தாக்கத்தாலும் பிஜியில் தமிழ்க்கல்வி 1950 களுக்குப் பிறகு நலியத் தொடங்கியது.1940 ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சம் தமிழர்கள் பிஜியில் இருந்தார்கள். இன்று மூன்று மடங்காகி மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்க வேண்டிய நிலையில் கிடைக்கும் புள்ளி விபரங்கள் நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன. 7000 தமிழர்கள் மட்டுமே தங்கள் தாய்மொழி தமிழ் என்று வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற யதார்த்த நிலை உலகத் தமிழர்கள் நெஞ்சில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்கான காரணங்கள் சிக்கலானவை. இன்று பிஜியில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையோருக்குத் தமிழ் பேசக்கூடத் தெரியாது. அரிதாகத் தமிழ்பேசத் தெரிந்தவர்களுக்கும் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. தமிழின் வரிவடிவம் முழுவதும் வழக்கொழிந்து போயிற்று. தமிழர் என்று சொல்லிக்கொள்ளவும் தமிழில் பேசவும் இளந் தலைமுறையினர் வெட்கப்படுகின்றார்கள். மொழி, இனக் கலப்பு மணங்கள் பிஜி இந்தியர்களிடம் மிகுதி. ஒரே தமிழ்க் குடும்பத்தில் பல்வேறு இந்திய இனக்கலப்பு மணங்கள் நடைபெறுவதால் இத்தமிழ்க் குடும்பங்களில் தமிழ் வழக்கொழிந்து இந்தியே வீட்டுமொழியாகவும் வழக்கு மொழியாகவும் மாறிப்போவதால் தமிழ்க் குடும்பங்களைக் காண்பது அரிதாகிப் போனது. புதிய தலைமுறைத் தமிழர்களின் மொழி இந்தியாகிப் போன அவலமே பிஜியின் நடைமுறை.

பிஜியில் தமிழர் அடையாளங்கள்:
பிஜித் தமிழர்கள் மொழி அடையாளத்தை இழந்தாலும் இன்னும் அவர்களிடம் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் ஒட்டிக்கொண்டிருப்பது நமக்கு ஒரு மெல்லிய ஆறுதலை அளிக்கின்றது. வட இந்தியர்களை விடத் தென்னிந்தியர்களுக்கே பிஜியில் அதிக கோயில்கள் இருக்கின்றன. பிள்ளையார், சுப்பிரமணியர், மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோயில்கள் பிஜியில் நிறைய உண்டு. தென்னிந்தியர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் பொதுவாக ஷகோவிந்தா! கோவிந்தா! என்றே கோ~ம் எழுப்புவார்கள். இதன் காரணமாகவே பிஜியர்கள் தென்னிந்தியர்களை ஷகோவிந்தா! கோவிந்தா! என்று விளிக்கும் பழக்கம் வந்தது. தமிழர்களின் தனிப்பெரும் தெய்வமாம் முருகன் வழிபாடு பிஜியில் புகழ்பெற்றது. பிஜி- நாடியில் உள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் புகழ்பெற்றது.இன்றும் பிஜித் தீவில் ஏறக்குறைய நாற்பது கோயில்களில் தீமிதித் திருவிழா நடைபெறுகிறது. இதுதவிர ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், கார்த்திகை, தைப்ப+சம், புரட்டாசி சனி விரதம் முதலான தமிழ்ப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.கோயில் திருவிழாக்களை ஒட்டி பிஜித் தமிழர்கள் தெருக்கூத்து, கரகமாடல், காவடியாட்டம் முதலான தமிழ் ஆட்டக் கலைகளிலும் உடுக்கு, மேளம் முதலான தமிழிசைக் கருவி இசைகளைக் கேட்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆலயங்களை ஒட்டிய நடைமுறைகளிலும் சடங்கு மற்றும் வழிபாடுகளிலும் தமிழ் மரபுகள் பெருமளவில் பேணப்பட்டு வருவது ஆறுதலான செய்தியாகும்தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களைப் போலவே பிஜித் தமிழர்களும் கடவுளர் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள். முருகன், வேலாயுதம், சுப்பையா, சண்முகம், கந்தசாமி, நாராயணன், கோவிந்தன், முனிசாமி, இராமசாமி போன்ற ஆண் பெயர்களும் வள்ளி, பார்வதி, கண்ணம்மா, ராதா, கன்னியம்மா, பாஞ்சாலி, சீதம்மா, குப்பம்மா, மீனாட்சி போன்ற பெண் பெயர்களும் தமிழர் பெயரிடும் மரபை நமக்கு நினைவ+ட்டுவன. அண்மைக் காலமாக இம்மரபு மாற்றமடைந்து வருகின்றது.பிஜியில் பல தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப்பெயரை இணைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, முத்துசாமி கவுண்டர், முனிசாமி நாயக்கர், சண்முகம் முதலியார், கோவிந்தன் ரெட்டி. சாதிப் பெயரை ஆண்கள் மட்டுமில்லாமல் பிஜித் தமிழ்ப் பெண்களும் தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, முனியம்மாள் கவுண்டர், லட்சுமி ரெட்டி, சீதா நாயுடு, பார்வதி பிள்ளை. சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களோடு இணைத்துக் கொண்டாலும் பிஜித் தமிழர்களிடத்தே சாதி வேறுபாடுகள் கிடையாது. திருமணங்கள் சாதி அடிப்படையில் நடத்தப்படுவதில்லை. பலருக்குத் தங்கள் பெயரோடு இணைந்திருப்பது சாதிப் பெயர்கள் என்பதே தெரியாது. சமீப காலங்களில் பிள்ளை என்று இணைத்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் சாதிப் படிநிலைகள் பற்றிய கவனங்கள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. மொழியை இழந்தாலும், தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை தம் வாழ்வின் அடையாளங்களாகப் பெற்றிருக்கும் பிஜித் தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதை நினைவுறுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை உள்ளது.

பிஜியில் தமிழை- தமிழர்களை மீட்டெடுப்போம்:
பிஜித் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர் அடையாளங்களை இழந்து வருவதை மீட்டெடுக்கும் வகைளில் 1985 ஆண்டு தமிழ் பாதுகாப்புக் குழுத் தலைவர் அப்பாப் பிள்ளை, அரசு ஆதரவு தமிழ் ஆலோசகர் எம்.ஆர்.பாலகணபதி, தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத் தலைவர் என்.கே.நாயுடு போன்றவர்களின் அரிய முயற்சிகளால் பிஜியில் தமிழ்க்கல்வி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.பிஜித் தமிழர்களின் தமிழ்க்கல்விக்குத் தடையாய் இருக்கும் புறக்காரணங்களில் முக்கியமானவை ஆசிரியர்கள் பற்றாக்குறையும் பிஜி சூழலுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பாடநூல்கள் இல்லாமையுமே. இன்று பிஜித் தமிழர்கள் எம்.ஆர்.பி. குருசாமி அறிமுகப்படுத்திய ரோமன் தமிழ் எழுத்து முறையிலேயே தமிழ் கற்கிறார்கள். ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழைக் கற்பிக்கும் முறையே ரோமன் தமிழ் எழுத்து முறையாகும். இத்தகு ரோமன் தமிழ்த்திட்டம் அடிப்படையில்தான் பிஜியில் தமிழ்ப்பாட நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஜியில் தமிழ்க்கல்வி மெல்ல மெல்லப் பரவி வருகின்றது.பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்கள்:புலம்பெயர் தமிழர்களில் தமிழ்மொழியைஃ தமிழ்ப்பண்பாட்டை இழந்து நிற்பவர்கள் பிஜித் தமிழர்கள் மட்டுமல்லர், தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ், ரிய+னியன் தமிழர்களின் நிலையும் இதுவேதான். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, தமிழ் பேசத் தெரியாத தமிழர்கள்தான் மேற்கூறிய நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளனர். உலகம் முழுதும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரும் கவலையோடு நினைத்துப் பார்க்க வேண்டிய செய்தி இது. பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களை உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய தருணம் இது.பிஜித் தீவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவரும் தொடக்ககாலம் முதலே இந்தியர்கள், இந்தி மொழி பேசும் மக்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டார்களே தவிர அவர்களில் தமிழர்கள் தனித்து அடையாளப் படுத்தப்படவில்லை. வடஇந்தியர் ஆதிக்கம் மிகுந்த சூழல்களிலும் இந்தி மொழி பேசாத அனைத்துத் தென்னிந்தியர்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. தென்னிந்தியர் நலம் நாடும் அமைப்புகள் தோற்றம் பெற்றன. தமிழர் நலம் நாடும் தனி அமைப்புகளோ தலைவர்களோ இல்லாதது பிஜித் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. இந்தி பேசும் வட இந்தியர்களைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளும் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மையும் இலக்கிய இலக்கண வளங்களும் தமிழ்ப்பண்பாட்டின் பெருமையும் போதிக்கப்படவேயில்லை. ஐயாயிரம் ஆண்டு காலத் தமிழிலக்கியத் தொன்மை மற்றும் வளத்திற்கு முன்னால் வடஇந்திய மொழிகள் ஈடுகொடுக்க முடியாது என்ற உண்மை உரைக்கப் படவேயில்லை. மொழியை இழப்பது உயிரை இழப்பதை விடக் கொடுமையானது என்ற மெய்ம்மை உணர்த்தப் படவேயில்லை. மணஉறவு என்பதின் பேரால் இனக்கலப்பு நேர்ந்த போதிலெல்லாம் தம்மொழியை விட்டுக் கொடுப்பவனாகத் தமிழன் மட்டுமே இருந்தான். இந்நிலை மாற்றத்தக்கது. தவிர்க்க இயலாச் சூழலில் தமிழர்கள் பிறமொழி ஃ பிறஇன மணஉறவு கொள்ளும் தருணங்களில் மிக விழிப்பாய் இருந்து தம் துணையையும் வீட்டில் தமிழே பேசுமாறு ஆற்றுப்படுத்துதல் நல்;லது. இத்தகு நுட்பமான மொழி அரசியல் இன்றைய அவசியத்தேவை என்பதைத் உலகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும். பிஜித் தமிழர்களைப் போல் இல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களும் வீட்டில், மனைவி மக்களிடத்தில், தமிழ் நண்பர்களிடத்தில் தவறாது தமிழிலேயே உரையாட வேண்டும். பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய இந்தப் பாடங்களை உலகத் தமிழர்கள் இனியாவது கற்றே தீரவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு நாம் ஆட்பட்டுள்ளோம். தமிழகத் தமிழர்களுக்கும் இந்தப் பாடங்கள் தேவைப்படும் நாள் மிக அண்மையில் உள்ளதுபோல் தெரிகிறது. விழித்தெழுவோம்! உலகை வெல்வோம்!!

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

நாங்கள் ஃபிஜித்தீவுகளில் 6 ஆண்டுகள் வசித்தோம். அங்கெயுள்ள வாழ்க்கைமுறைகளைப் பற்றி என் ஆரம்பகாலப் பதிவுகளில் ( தலைப்பு: கரும்புத்தோட்டத்திலே)எழுதி இருக்கின்றேன்.
நீங்கள் குறிப்பிட்ட சில நபர்கள் எங்களுக்கும் நண்பர்களே.

தென்னிந்தியர்கள் தங்களை மந்த்ராஜி( மதராசி) என்றே சொல்லிக் கொள்கின்றார்கள்.

துளசி கோபால் சொன்னது…

மன்னிக்கணும். தலைப்பைத் தவறுதலா சொல்லிட்டேன்(-:

ஃபிஜி அனுபவங்கள்

இர.கருணாகரன் சொன்னது…

அன்பு ஐயா,

அங்குள்ளவர்கள் வாழ்வுதேடி சென்று தமிழை தொலைத்தவர்கள், ஆனால் இங்கிருந்து கொண்டே தமிழை கொல்ப வர்களை, தமிழை மறந்து, தமிழை கேவலமாக்கியவர்களை என்ன செய்வது?

இங்கு நமது மொழியை காப்போம்.

அங்கு அவர்கள் வாழ்வதே பெரும்பாடு அதிலே தமிழை எங்கே வாழ வைப்பது?
தமிழன் எனும் பெருமை ஒன்றே போதும்.

ஆனால் நாம் சுகமாக வாழ்ந்துகொண்டே தமிழை ????????????

உங்கள் கட்டுரைக்கு மிகவும் நன்றி ஐயா, வாழ்த்துக்கள்.
அன்புடன்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...