திங்கள், 17 செப்டம்பர், 2007

1936 ஜூலை 30

1936 ஜூலை 30

முனைவர் நா.இளங்கோ,
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8.

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு தனிப்பட்ட சிறப்பிடம் பெறுகின்றது. வியாபாரிகளாய் வந்து ஆளுநர்களாய் மாறி இந்நாட்டின் வளத்தைச் சூறையாடத் தொடங்கிய அன்னிய ஏகாதிபத்திய நாட்டினரின் இராணுவ பலத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நாம் வெற்றி கண்டது வரலாறு.இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமையில் கற்றவர்கள், வசதிபடைத்தவர்கள், வணிகர்கள் போன்றவர்கள் முன்னிருந்து செயல்பட்டார்கள். காலப் போக்கில் தொழிலாள வர்க்கம் தேசிய இயக்கத்தில் கலந்து ஒன்றுபட்டது. ஆயின் புதுவை மாநிலத்தில் தொழிலாளி வர்க்கத் தலைமையை ஏற்றுக் கொண்டு உயர்மட்டத்தினர் விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள். இதுதான் புதுவை மாநில விடுதலை இயக்க வரலாற்றின் தனிப்பட்ட சிறப்புத்தன்மையாகும். புதுவையில் வரலாற்றுக் காலத்திலிருந்தே பிறநாட்டினர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஒரு சுமுகமான நிலையிலேயே அந்த வணிகத் தொடர்பு நடந்திருக்கின்றது. கி.பி. 60-இல் புதுச்சேரியில் அரிக்கன்மேடு என்னும் பகுதியில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்திருக்கிறது. அந்த அரிக்கன்மேடு துறைமுகப் பகுதியை ரோமானியர்கள் 'பொதுக்கே" என்று வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் ரோமானியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் மிகப் பழங்காலம் தொட்டே ரோமனியர்களுக்கும் நமக்கும் இருந்த தொடர்பை அறிய முடிகிறது.

பிரெஞ்சிந்தியா:
பல நூற்றாண்டுகளாக மிக அமைதியான முறையில் பிற நாடுகளுடன் உறவு வைத்திருந்த புதுவையின் அமைதித்தன்மைக்குப் பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவலம் நேரிடத் தொடங்கியது. கி.பி. 1666-இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுவையில் டழ சுழலயடந உழஅpயபnநை னந குசயnஉந நn ட'ஐனெந ழசநைவெயடந என்னும் வியாபார நிறுவனத்தை நிலை நாட்டினார்கள். இந்த நிறுவனம் 1666 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் முதல் தேதி பதினான்காம் லூயி அவர்களால் நிறுவப்பட்டது. பிரெஞ்சு சட்டதிட்டங்கள் ஃபிரான்சுவா மர்ர்தேன் என்பவரால் உருவாக்கப்பட்டன. இவர்தான் நவீன புதுச்சேரி நகரத்தை நிர்மானித்தார்.

பிரான்சின் இரட்டை முகம்:
பிரெஞ்சுக் குடியரசின் மூன்று முக்கியக் கொள்கைகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன ஆகும். ஆனால் பிரெஞ்சிந்தியாவாகிய புதுவையில் மட்டும் அவை மறுக்கப்பட்டன. புதுவை மக்கள் இரண்டாந்தர குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூடப் புதுவை மக்களுக்கு மறுக்கப்பட்டன. தொழிலாளர் நிலை மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது.புதுவையில் பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.சவானா மில்- இன்றைய சுதேசி மில்ரோடியர் மில்- இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை(யுகுவு)கப்ளே மில்- இன்றைய பாரதி மில்

பிரெஞ்சிந்தியாவில் தொழிலாளர்:
தொழிலாளர்கள் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. விபத்துக்கு உரிய நிவாரணம் இல்லை, பெண்கள் மிக இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தொழிலாளர்களுக்கு ஒருவேளை உணவிற்கும் எட்டாத ஊதியம் தரப்பட்டது. ஓய்வுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லை. தொழிலாளர்தம் குழந்தைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. ஆறுவயதுக் குழந்தையும் மில்களில், கல் உடைக்கும் களங்களில், சுமை தூக்குவதில், கட்டிடக் கட்டமைப்புப் பணிகளில் ஒரு சில காசுகளுக்காகப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய மோசமான நிலைமை இருந்தது.இந்த மூன்று ஆலைகளிலும் சுமார் 20,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.புதுவையின் முகத்தை மாற்றி அமைத்ததில் இந்த மூன்று ஆலையின் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. இவர்கள் நிகழ்த்திக் காட்டியதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க 1936 ஜூலை30 போராட்டம்.

முதல் போராட்டம்:
1935, பிப்ரவரி 4ம் தேதி சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நேரக் குறைப்பு முதலிய கோரிக்கைகளை மில் முதலாளிகளாக இருந்த பிரெஞ்சுக்காரர்கள் முன் வைத்தார்கள். நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் வேலை நிர்ணயம்தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணாவாக உயர்த்துதல்பெண்களுக்கு இரவுப் பொழுது வேலை கூடாது14 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாதுபெண் தொழிலாளர்களுக்குப் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருமாத விடுமுறையும், பிள்ளைப் பேற்றிற்காக அரைமாதச் சம்பளமும் வழங்கப்பட வேண்டும்இது பொன்ற கோரிக்கைகளை முன்வைத்துத்தான் சவானா பஞ்சாலைத் தொழிலாளர்கள் 1935 பிப்ரவரி மாதம் 4ம் தேதி தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். சவானா பஞ்சாலை மேலாளராக இருந்த வலோ என்பவர் ஆலையின் கதவை அடைத்துத் தொழிலாளர்ளைப் பட்டினி போட்டால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நிர்வாகத்திற்குப் பணிந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார். கிட்டத்தட்ட 84 நாள்கள் கடந்தன. ஆயினும் தொழிலாளர்களில் எவரும் வேலைக்கு வராதது அவருக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.இந்நிலைகளினால் வலோ நிலைகுன்றிப் போனார். போராட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர வேறு வழி இன்றித் திண்டாடினார். இதனால் போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி 1935 ஏப்ரல் 29இல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.

முதல் வெற்றி:
புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாகத் தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 10 மணிநேரம் என வரையறுக்கப் பட்டது. தொழிலாளர்களின் கூலி நாளொன்றுக்கு 6 அணா என்றும், பெண் தொழிலாளர்களின் பேறுகாலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருமாத விடுமுறை, பிள்ளைப் பேறு செலவிற்காக அரைமாதச் சம்பளம் வழங்குவதெனவும் உடன்பாடு எட்டப்பட்டது. ஒன்றுபட்டு இறுதிவரை உறுதியுடன் நின்று போராடினால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வை சவானா ஆலைத் தொழிலாளர் போராட்டம் நிரூபித்துக் காட்டியது. இதர ஆலைத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டுத் தெம்பும் நம்பிக்கையும் பெற்றனர்.தொழிலாளர் ஒற்றுமை, போராட்ட உணர்வு ஆகியன வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கண்ட ரோடியர்,கப்ளே ஆலை நிர்வாகங்களும் சவானா பஞ்சாலையின் நிர்வாகத்தைப் போன்றே வேலைநேர வரையறை, கூலிஉயர்வு முதலியவற்றை அமல்படுத்தின.

தோழர் வ.சுப்பையா:
சவானா ஆலையில் தொடங்கிய தொழிலாளர்களின் முதல் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னோடி தோழர் வ.சுப்பையா. பின்னாளில் இவர் மானுடம் போற்றும் மக்கள் தலைவர் என்ற நிலைமைக்கு உயர்ந்து நின்றார். மேலும் இப்போராட்டத்திற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் திரு.தெப+வா தாவீது, திரு.அமலோர், திரு.பெரியநாயக சாமி, திரு.சுப்பராயலு போன்றவர்கள் ஆவர்.

இரண்டாவது போராட்டம்:
இப்போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்த மில் முதலாளி பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் மீண்டும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிப் பழி வாங்கி ஆத்திரமூட்டினான். அதனால், 1935 ஜுலை 25 ஆம் தேதியிலிருந்து அனைத்து மில் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். பிரெஞ்சு அரசின் காவல் துறையின் துணையுடன் கருங்காலிகளைத் திரட்டி மில்லை நடத்திட முதலாளிகள் முயன்றனர். இரண்டரை மாத காலம் வேலை நிறுத்தம் நீடித்தது. இறுதியில் மில் முதலாளி தொழிலாளர்களின் தலைவர்களோடு சமரசம் பேசி மில்லை நடத்தினான். பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் மையத்தோடு புதுவைத் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு பிரெஞ்சிந்தியாவில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டிருந்த அநீதியை எடுத்துக்கூறி சட்ட உரிமைகோரி வாதாடினார்கள். அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசும், தொழிற்சங்க இயக்கத் தலைவர்களான தோழர்கள் வி.வி. கிரி, என்.எம்.ஜோஷி போன்றவர்களும் புதுவைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.தொழிலாளர்களின; இயக்கம் வலுப்பெற்றதால், புதுவை மாநில மக்களின் இதர பிரிவைச் சார்ந்தவர்களும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள்.

முதல் தொழிலாளர் மாநாடு அரசு தடை:
1935 ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 10ஆம் நாள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முதல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார்கள். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது, அதற்குத் தலைமையேற்று நடத்தவிருந்த தோழர்கள் வி.வி.கிரி, எஸ். குருசாமி ஆகிய இருவரையும் புதுவையிலிருந்து வெளியேற்றியது. ஆனால், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்க்pல் திரண்டு அம்மாநாட்டைப் பிரெஞ்சு இந்திய எல்லையில் இருந்த பெரம்பை கிராமத்தில் நடத்தினார்கள். மாநாட்டுத் தீர்மானங்கள் பிரான்சில் இருந்த தொழிற்சங்கங்களின் தலைமைக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கம் புதுவைத் தொழிலாளர்களி;ன் கோரிக்கைகளான தொழிற்சங்க உரிமை, 8 மணி நேர வேலை போன்றவற்றை ஆதரிpத்துப் பிரான்சிலும் குரல் எழூப்பியது.

ஒன்றிணைந்த போராட்டக்குழு:
1936 ஆம் ஆண்டு 3 பஞ்சாலைகளின் தொழிராளர்கள் சங்க உரிமைக்காக ஒன்றிணைந்து போராட இணைப்புக் குழூ அமைத்தனர், ஜுன் மாதத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்தினார்கள். பிரெஞ்சிந்தியக் கவர்னர் சொலோமியாக் மில்லுக்குள் தங்கி வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். தொழிலாளர்களின் போராட்ட இணைப்புக் குழுவின் கோரிக்கைகளில் பிரதானமான தொழிற் சங்க அமைப்பு உரிமை 8மணி நேர வேலை ஆகிய சில தொழிற் சட்டம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளைப் பிரெஞ்சு அரசோடு கலந்து ஒரு மாதத் தவணையில் முடிப்;பதாகக்கூறி, உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று தொழிலாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தொழிலாளர்கள் மீண்டும் உற்பத்தியில் இறங்கினார்கள். 30 நாட்கள் கடந்தன. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி தொழிற்சங்க சட்ட உரிமைச் சட்டம் அமுலாக்கப்படவில்லை.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம்:
அதனால் 1936 ஜுலை 23 ஆம் தேதியிலிருந்து மூன்று மில்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கினார்கள். தொழிற்சங்க உரிமைக்கும் 8மணிநேர வேலைக்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் தொடக்கம் இதுதான்.

1936 ஜுலை 30:
1936 ஜுலை 30-ஆம் நாள் காலை பிரெஞ்சு ஆயுதம் தாங்கிய காவல் படை தனக்குப் பின்னே எந்திரத்துப்பாக்கிகள் ஏணிகள் ஏற்றிய இரு லாரிகள் பின் தொடர, புதுவை நகர முக்கிய வீதிகளின் வழியே நடை போட்டுக் காட்டியது. முதலில் பொது மக்களின் நெஞ்சில் பீதியைக் கிளப்பியப்பின் பஞ்சாலை நோக்கிப் போகவேண்டும் என்பது அவர்கள் திட்டம். ஆனால் தொழிலாளர்கள்; பிரெஞ்சு காவல் படையின் ஆயுதங்களையோ, மிருகபலத்தையோ கண்டு எள்ளளவும் அஞ்சவில்லை.முதல் நடவடிக்கையே ரோடியர் பஞ்சாலையின் நுழைவாயிலிலிருந்து தான் தொடங்கியது. ஆலையின் பெரியவாயில் கதவை இறுக அடைத்துத் தொழிலாளர் தொண்டர் படைவீரர்கள் எப்பொழுதும் விழிப்போடு கண்காணித்து வந்தார்கள். ஆயுதப்படை தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிச் சாலையைச் சமப்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆலையின் கதவை இடித்துத் தகர்த்து உள்ளே நுழைய முயன்றது. சிறிது நேரத்திற்குப்பின் நுழைந்தும் விட்டது.

ஆயுதப்படை ஆலையில் நுழைந்தது:
அதுவரை அடங்கி ஒடுங்கிக்கிடந்த ஆலை மேலாளர் திரு.மார்ஷ்லேண்டு எனும் வெள்ளைக்காரர் ஆயுதப்படை உள்ளே நுழைந்து விட்டதைக் கண்டு, துணிவு பெற்றுத் தன் கைத்துப்பாக்க்pயை எடுத்துத் தொழிலாளர்களை நேக்கிச் சுட ஆரம்பித்தார். குண்டடிபட்ட ஒரு தொழிலாளி அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்து இறந்தார்.
இதைக் கண்டு ஆவேசமுற்ற போராட்டத் தொழிலாளர்கள் தங்களின் கைகளுக்குக் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஆயுதப்படை மீது எதிர்த் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் ஆயுதப் படையானது சவானா பஞ்சாலைக்குச் சென்று கடலூர் சாலைக்கு எதிரில் தாக்குதலுக்கான ஆயத்த நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டது.

துப்பாக்கிச் சூடு:
பஞ்சாலை வளாகத்தில் பெரும் கட்டடங்களின் மேல்தளத்தில் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் போராட்ட ஆரவாரம் செய்து கொண்டிருக்க, வெளியில் முக்கிய சாலையில் நின்றிருந்த ஆயுதப்படை எந்திரச் சுழல் துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டது. சராமாரியாகப் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சாது, உணர்ச்சி ஆவேசமுற்றுத் தொழிலாளார்கள் எதிர்த்;தாக்குதல் நடத்தினர். ஆயினும் துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1936 ஜூலை 30-இல் இத்துப்பாக்கிச் சூட்டில் அமலோற்பவநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 வீர மறவர்கள தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இதைக் கண்டதும் தொழிலாளர்களிடையே கொதிப்பும், கொந்தளிப்பும் அதிகமாயின. துப்பாக்கிக் குண்டுகள் தம் நெஞ்சைப் பிளந்தாலும் இனி அஞ்சிடோம் எனும் வீர ஆவேசத்தோடு தொழிலாளர்கள் ஆயுதப் படையினை நோக்கி விரைந்தனர். ஆங்காங்கே தங்களின் கைகளுக்குக் கிடைத்த கல,; தடி, இரும்புத்தடி, இரும்புப் பல் சக்கரம் போன்ற ஆயுதங்களை எடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தினர். தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து எண்ணிக்கையில் குறைவான ஆயுதப்படையினரைத் தாக்கியதால் சிறிது நேரத்திற்கெல்லாம் தொழிலாளர்களின் கை ஓங்கலாயிற்று. ஆயுதப்படை மெல்;ல மெல்லப் பின் வாங்கத் தொடங்கியது.பின் வாங்கிய பிரெஞ்சு ஆயுதப்படை கடலூர்ச்; சாலையும், வில்லியனூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பு முனையில் நின்று கொண்டு தன் துப்பாக்கியின் கடைசி தோட்டாவரை பயன்படுத்தி, இராஜமாணிக்கம் எனும் போராட்ட மறவனின் உயிரைக் குடித்தது. அந்த மாவீரன் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தான்.

தியாகத் திருநாள்:
1936 ஜுலை 30-இல் நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்டு தொழிற்சங்க உரிமை கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடும், அதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடுமையும் முந்திய பிரெஞ்சு இந்திய வரலாற்றில் செந்நிற எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியும், இதில் பிரெஞ்சு மேலாண்மை கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலும், புதுவையின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆவேச உணர்ச்சியையும் தட்டி எழூப்பியது. பிரான்சின் வல்லாட்சிக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ந்து போரிடவும், நல்லதோர் அலசியல் உரிமையை வென்றெடுக்கவும் வேண்டிய உறுதிப்பாட்டைத் தந்தது.

நேருவும், சுப்பையாவும்:
இச்சம்பவம் பண்டித நேரு அவர்களின் இதயத்தை உலுக்கியது இந்த நிகழ்ச்சி குறித்து சுப்பையா அவர்கள் பிரான்சுக்குச் சென்று அங்குள்ள மக்கள் முன்னனிக் கட்சியின் அமைச்சரோடு கலந்து ஆலோசிப்பது நல்லது என்று நேரு கருத்துவைத்தார். அவ்வண்ணமே சுப்பையாவும் நேருவின் அறிமுகக் கடிதத்தோடு பிரான்சு சென்றார்.

வீரமரணம் விளைத்த தொழிலாளர் நலன்:
1937 மார்ச் 6-இல் சுப்பையா பிரான்சு சென்று, பிரெஞ்சு அரசோடு இப்பிரச்சினை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-இல் பிரஞ்சிந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டம் மற்றும் தியாகத்தின் வாயிலாகத் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்த அந்தநாள் 1936 ஜுலை 30, புதுவை பிரஞ்சிந்திய வரலாற்றில் இந்நிகழ்ச்சியை புதுவையின் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பிடலாம்.
தொழிலாளர்கள் தொடங்கி வைத்த இப்போராட்டத்தின் தொடர்விளைவே 1954இல் நாம் பெற்ற சுதந்திரம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...