வியாழன், 6 பிப்ரவரி, 2014

என்கவுண்டர்களில் மடியும் மனித உரிமைகள்



ஊடக அரசியலை முன்வைத்து..
முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், நாம் அழைக்கின்றோம்.
மனித உரிமைகள் என்பன யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டனவுமல்ல. எனவேதான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
ஐ.நா. பொதுச்சபை 10-12-1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல், ‘எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதருக்கும் பொதுவான மனித உரிமையின் எட்டப்பட வேண்டிய இலக்கினைக் குறிப்பிடுகின்றது. இப்பிரகடனத்தின் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாகவே அவ்வறிக்கை வெளியிடப்பட்ட டிசம்பர் 10 ஆம் நாளை நாம் உலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனம் வழங்கும் மனித உரிமைகள் அனைத்துமே சமமான முக்கியத்துவம் உடையவை. அவ்வுரிமைகளில் எவ்வகைப்பட்ட ஏறு வரிசைகளோ இறங்கு வரிசைகளோ கிடையா. மேலும் ஐ.நா. பிரகடனம் மனித உரிமைகளை எவ்வகையிலும் வகைப்படுத்திக் கூறவில்லை. ஆயினும் மனித உரிமைகளை நாம் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம்.
1. குடியியல் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள்
என்கின்ற இந்த வகைப்பாடுகளுக்குள் இடம்பெறும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமைகள் அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய பிறப்புரிமை ஆகும்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனத்தின்படி ஒவ்வொரு தனிமனிதர்க்கும் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில உரிமைகள் பின்வருமாறு:
1. உயிர் வாழ்வதற்கான உரிமை
2. சமத்துவ உரிமை,
3. சுதந்திரமாக வாழும் உரிமை,
4. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
5. கருத்துகளை வெளியிட உரிமை
6. வாக்களிப்பதற்கான உரிமை
7. அரசியல் பங்கேற்புக்கான உரிமை
8. வேலைக்கான உரிமை
9. கல்வி பெறுவதற்கான உரிமை
10. சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
11. சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை
12. பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
மனித உரிமைகள் என்பன தனி மனிதர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று அம்சங்களையும் பேணிப் பாதுகாப்பதைத் தம் அடிப்படை இலக்காகக் கொண்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து அடிப்படை மனித உரிமை அம்சங்களையும் உள்வாங்கியே உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான கொள்கைத் திட்டத்தை 1993-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்தான் நிறைவேற்றித் தந்துள்ளது. இந்த மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையிலேதான் நம் நாட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission) அமைக்கப்பட்டது. அரசு அல்லது அரசின் கீழுள்ள அமைப்புகள் மனித உரிமைகளைப் பறிக்க முயலும்போதும் மீறுகிற போதும் ஆணையம் அந்த விவகாரத்தில் தலையிடும். அது தானாகவோ, பாதிக்கப்பட்டவரின் புகார் அடிப்படையிலோ விசாரணை மேற்கொள்ளும். மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்டங்கள் சரிவர நிறைவேற்றப் படுகின்றனவா என்பதனை ஆராயவும் உரிய தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
இந்தியா தன் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே மனித உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கியிருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி யிருந்தாலும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களை முறைப்படி அமைத்திருந்தாலும் இந்தியாவில் இன்றைக்கும் மனித உரிமை என்பது ஓர் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. குறிப்பாகக் கொலை, கொள்ளை, பயங்கரவாதம் முதலான குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகப் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ஆம் ஆண்டு பிப்ரவரி 15– ஆந்தேதி வரை பாதுகாப்புப் படைவீரர்கள், துணைப் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான போலி என்கவுண்டர்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்திலாகும். அங்கு 138 போலி என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளன. தமிழ்நாட்டில் 23 என்கவுண்டர்கள் மற்றும் மணிப்பூர் 62, அஸ்ஸாம் 52, மேற்கு வங்காளம் 35, ஜார்கண்ட் 30, சட்டீஷ்கர் 29, ஒடிஸா 27, ஜம்மு-கஷ்மீர் 26, மத்தியபிரதேசம் 20 என மாநில வாரியான என்கவுண்டர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. போலி என்கவுண்டர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலையீட்டின் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார். (தகவல்: http://www.newindia.tv/tn/india/141-crime/)
கடந்த பதினைந்து ஆண்டுகளில் (1998- 2012) தமிழகத்தில் நடந்தேறிய காவல்துறை என்கவுண்டர்களின் பட்டியல் பின்வருமாறு,
· 1998: சென்னையில் நடந்த மோதலில், ரவுடி ஆசைத்தம்பி, அவரது கூட்டாளி .
· 2002: பெங்களூருவில் பதுங்கியிருந்த இமாம் அலி கூட்டாளிகள் ஐந்து பேர்.
· 2003: சென்னையில் வெங்கடேசப் பண்ணையார். அதே ஆண்டு சென்னையில் ரவுடி வீரமணி.
· 2004 அக். 18: சந்தனமரக் கடத்தல் வீரப்பன்.
· 2007 ஆக. 1: ஓசூர் அருகே வெள்ளை ரவி, கூட்டாளி குணா .
· 2008 ஏப். 11: தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஜெயக்குமார் அவரது கூட்டாளி. அதே ஆண்டு ஜூலை 11இல் ரவுடி பாபா. நவ.16 ஆம் தேதி, ஆறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாக இருந்த "கொர' கோபி என்ற கோபி.
· 2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகளைக் கொலை செய்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன்.
· 2010 நீலாங்கரைப் பகுதியில் திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட இருவர்.
· 2012 பிப்., 23: சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர்.
· 2012 நவ., 30: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு, பாரதி சுட்டுக்கொலை.
(தகவல்: http://newsalai.blogspot.in/2012/12/blog-post_1704.html)
மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனத்தின் கீழ்க்காணும் விதிகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இவ்விதிகள் என்கவுண்டர்களோடு தொடர்புடையன.
விதி எண்-3:
ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம், தமக்கான பாதுகாப்பு ஆகிய உரிமைகள் உண்டு.
விதி எண்-5:
யாரையும் சித்திரவதைக்கோ, கொடுமையான மனித நேயமற்ற முறையில் அவமானபடுத்தவோ தண்டனைக்கு ஆட்படுத்தவோ கூடாது
விதி எண்-6:
சட்டத்தின்முன் ஒரு மனிதனாக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உண்டு.
விதி எண்-11:
குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் விசாரணைப்படி குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமை உண்டு.
சர்வதேசியப் பிரகடனத்தின் மேற்சொன்ன விதிமுறைகள் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கான மனித உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கின்றன. மேலும் “சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை மீறி வேறு எந்த வகையிலும் ஒரு நபரின் உயிரைப் பறித்தல் கூடாது” (விதி எண்: 21) என்று இந்திய அரசியலமைப்புச் சாசனமும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் விதியினை வரையறுத்துள்ளது. மனித உரிமையின் அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று என்பதோடு அல்லாமல், இதுவே பிரதானமான உரிமையாகவும் கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இவ்வகை மனித உரிமைகள் பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதோடு வேண்டுமென்றே திட்டமிட்டு என்கவுண்டர் என்ற போர்வையில் மீறப்படுகின்றன என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகவும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவுமே இவ்வகை என்கவுண்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று அரசும் காவல்துறையும் இந்நிகழ்வுகளை நியாயப்படுத்தினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறல்களாகும். காவல்துறையின் என்கவுண்டர் மரணங்களால் பல உண்மைகள் மக்கள் சமூகத்திற்குத் தெரியாமல் போகிற ஆபத்து ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டுக் குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கின்ற போதுதான் குற்றத்தைத் தடுப்பதற்கு அல்லது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து, தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் என்கவுண்டர்கள் நடந்ததாகத் தொடர்ந்து காவல்துறையினர் பரப்புரை செய்து வருவது மனித உரிமைகளுக்கு விடப்படும் மிகப்பெரிய சவாலாகும்.
கடந்த 2012 அக்டோபர் மாதம் 30 ஆம் நாளன்று காவல்துறை, சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட மானாமதுரைப் பகுதியைச் சேர்ந்த பாரதி, பிரபு இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் .இவ்விருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிவிட்டனர் என்றும் பின்னர் அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் காவல் துறையினர் முயன்றதில் பாரதி, பாலா இருவரும் நெஞ்சில் குண்டடிபட்டு மரணமடைந்தனர் என்றும் காவல்துறை அறிவித்தது.
இந்த என்கவுண்டர் குறித்துப் பேட்டியளித்த டி.எஸ்.பி.வெள்ளைத்துரை அவர்கள், “நாங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையைச் செய்திருக்கிறது. மனிதர்களைத் துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும்” என்று கூறியிருந்தார். (தகவல்: http://tamil.oneindia.in/news/2012/12/06/)
மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம் மனிதர்களை அல்ல என்ற டி.எஸ்.பியின் கூற்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம்போலத் தோன்றினாலும், விலங்கு, வேட்டை முதலான சொற்பயன்பாடுகள், அவர்கள் வாதத்தில் உள்ள உள்முரண்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. வேட்டை தொடரும் என்ற காவல்துறையின் நிலைப்பாடு, நடைபெறும் என்கவுண்டர்கள் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல என்பதனையும் அவை ஒரு தயாரிப்பு நிகழ்நிரலின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றன என்பதனையும் சொல்லாமல் சொல்கின்றன.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி சந்துரு, ஒருமுறை காலச்சுவடு இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதி வருமாறு,
கேள்வி: என்கவுண்டர்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக உங்களது அனுபவம் என்ன?
சந்துரு: தமிழகத்தில் என்கவுண்டர்கள் மிகப் பரவலாக நடத்தப்படுகின்றன. மக்கள் மத்தியில் விரைவான தீர்ப்பு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நீதித் துறையோ மிக மெதுவாகச் செயல்படுகிறது. எனவே என்கவுண்டர்கள் நியாயமான வையாக மக்களுக்குப் படுகின்றன. என்கவுண்டர் என்பது கொலை என்னும் எண்ணம் மக்களுக்குத் தெரிவதில்லை. என்கவுண்டரில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. மனித உரிமை ஆணையம் என்கவுண்டரை ஒரு குற்ற வழக்காகப் பதிவு செய்து இதில் ஈடுபட்ட அதிகாரி தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நடைமுறையில் என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்டு இறந்தவர்களைவிட சட்டத்திற்கு உட்படாமல் இறந்தவர்களே அதிகம். அதாவது மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம். (http://www.kalachuvadu.com/issue-161/page40.asp)
மேனாள் உயர்நீதிமன்ற நீதிமதி சந்துரு அவர்களின் பேட்டியில் கவனிக்கத் தக்க தகவல்கள் பல. ஒன்று: என்கவுண்டர்கள் கொலையே. அதனைக் குற்றவழக்காகப் பதிவு செய்யவேண்டும். இரண்டு: என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்தும் பரிசும் பாராட்டும் கிடைக்கின்றன. மூன்று: இந்தியாவில் மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம்.
நீதிபதி சந்துரு அவர்கள் குறிப்பிடும் என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்து என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க தகவலாகும்.
ஒரு குறிப்பிட்ட என்கவுண்டர் நிகழ்வின்போது, அந்நிகழ்வினை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் முக்கியப் பங்காற்றுவன ஊடகங்களே. அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ மக்களுக்கு அந்தத் தகவலை ஊடகங்கள்தாம் சொல்கின்றன. என்கவுண்டர்கள் குறித்தான ஊடகங்களின் நிலைப்பாடு என்பது பொதுவில் அரசு மற்றும் அதிகாரத்தின் நிலைப்பாடாகவே இருக்கின்றது. அரசு மற்றும் அதிகாரத்தின் காவலர்களாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் காவல்துறையின் என்கவுண்டர்கள் அவர்களின் மொழியிலேயே ஊடகங்களுக்குச் சொல்லப்படுகின்றன. ஊடகங்கள் அந்தத் தகவல்களைத் தங்களுக்கான கதையாடல் மொழியில் மக்களுக்கு விவரிக்கின்றன. வெகுஜன உளவியலைக் கட்டமைக்கும் ஊடகங்களின் அரசியல் இங்கேதான் தொடங்குகிறது.
ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. நிகழ்வுகளின் அல்லது தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டுத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றன. தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமன்று உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இத்தகு கதையாடலின் வழி ஊடகங்கள் சொல்லும் என்கவுண்டர் கதைகளில் காவல்துறை அதிகாரிகளே கதாநாயகர்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான, குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளே வில்லன்கள். என்கவுண்டர்களே சுபமான முடிவு என்ற நேர்க்கோட்டில் ஊடகங்களின் கதைகள் முன்மொழியப் படுகின்றன. இந்த என்கவுண்டரை மக்கள் வரவேற்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யாரும் மகான்கள் அல்லர், பரிதாபப்பட. சட்டப்படி தண்டிக்கக் காலம் கடக்கலாம், குற்றவாளி தப்பிக்கவும் வாய்ப்புண்டு எனவே என்கவுண்டர்களே சரியான தண்டனை, இதுவே நியாயம், இதுவே தர்மம் என்று மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் பல கிளைக்கதைகளும் பின்இணைப்புகளும் ஊடகங்களால் சொல்லப்படுகின்றன.
ஊடகங்களைப் பொறுத்த மட்டில் அதிரடி ரிப்போர்ட்களும் பரபரப்புச் செய்திகளும் பகீர் தகவல்களும்தாம் அவற்றின் உயிர்நாடி. குற்றங்களும் கைதுகளும் என்கவுண்டர்களும் ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு இணையான விறுவிறுப்புடன் ஊடகங்களால் சொல்லப்பட்டதன் பின்னணியில் வெகுஜனங்களின் உளவியலைக் கட்டமைக்கும் நுண்ஊடக அரசியல் செயல்பாடும் வெகுநேர்த்தியாக நடந்தேறி விடுகிறது. குறிப்பாக, ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரங்களில் எல்லாம் ஊடகங்களின் இந்த அதிரடி ஆக்‌ஷன் கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும். விறுவிறுப்பாகப் புனையப்பட்ட ஒவ்வொரு கதையாடலையும் பின்நோக்கிப் புரட்டிப்பார்த்தால் அவை எல்லாமே கவனிப்பாரற்று வழியெங்கும் சிதறிக்கிடப்பதைக் காணலாம். மருத்துவ மாணவன் நாவரசு கொலைவழக்குத் தொடங்கி தர்மபுரி திவ்யா- இளவரசன் பிரச்சினை வரை எல்லாமே பரபரப்பாக நிகழ்த்தப்பட்ட கதையாடல்கள்தாம். இன்று அப்பிரச்சினைகளின் நிலை என்ன? எல்லாமே அப்படித்தான்.
என்கவுண்டர் நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் நிலைப்பாடு இதுதான். என்கவுண்டர்கள்தாம் நியாயமானவை என்றால் ஒரு தேசத்திற்குச் சட்டங்களும் நீதிமன்றங்களும் எதற்கு?. காவல்துறையினரின் கடமை குற்றவாளி என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர் குற்றவாளியா? நிரபராதியா? என்று முடிவெடுக்க வேண்டியது சட்டத்தின் அதாவது நீதிமன்றத்தின் கடமை. காவல்துறையினரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு என்கவுண்டர் எனும் பெயரில் மரணதண்டனை வழங்குவதும் அதனை நியாயப்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் பொதுக்கருத்தை உருவாக்குவதும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களாகும்.
என்கவுண்டர் என்ற பெயரிலான திட்டமிட்ட படுகொலைகளைக் கதாநாயகக் காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட வீரதீரச் சாகசங்களாகக் காட்டி என்கவுண்டர்களை நியாயப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் கடந்த இருபதாண்டுகளில் இந்திய – தமிழகச் சூழலில் வெகுவாக வரவேற்கப்படுகின்றன.
தர்மம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற அறமதிப்பீடுகளோடு வெளிவந்த கடந்த தலைமுறைத் திரைப்படங்களில் அறத்தின் அடையாளமாக நிற்கும் கதாநாயகனிடம் பாவத்தின் ஒட்டுமொத்த பிம்பமாகச் சித்திரிக்கப்பட்ட வில்லன்கள் தோற்பதும் திரைப்படக் கதையாடலின் உச்சத்தில் அவர்கள் திருந்தி மன்னிப்பு கேட்பதாகவோ காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைவிலங்கிடப் படுவதாகவோ திரைப்படங்களில் சித்தரிக்கப்படும். ஆனால் இந்தத் தலைமுறைத் திரைப்படங்களில் கதாநாயகன் தனக்கான அறத்தை நிலைநாட்டச் சட்டத்தைத் தானே தன் கையிலெடுத்துத் தனிமனிதனாகவே வில்லன்களைக் கொன்றுகுவிக்கிறான். கதாநாயகர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் வேலை இன்னும் எளிதாகிறது. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் என்பதற்கேற்ப அவனே குற்றவாளிக்கு மரணதண்டனை அளித்து உலகைக் காப்பாற்றுகிறான். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வெளிவந்த தெலுங்கு இறக்குமதி ராஜசேகரின் இதுதாண்டா போலீஸ் தொடங்கி நரசிம்மா, வாஞ்சிநாதன், சாமி, காக்க காக்க, போக்கிரி, வேட்டையாடு விளையாடு, அஞ்சாதே, சிங்கம், துப்பாக்கி, ஹரிதாஸ் என என்கவுண்டர் கதாநாயகர்களின் திரைப்பட வரிசை நீண்டுகொண்டே போகிறது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் காக்க காக்க திரைப்படம்தான். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படமும் இவ்வகையைச் சேர்ந்ததே.
திரைப்படங்களில் என்கவுண்டர்களைக் காவல்துறைக் கதாநாயகர்களின் பக்கம் நின்று நியாயப்படுத்தி, கைதட்டி ரசித்த அதே மனநிலையில்தான் மக்கள் நிஜவாழ்க்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொடூர என்கவுண்டர்களையும் நியாயப்படுத்தி, கைதட்டாமல் ரசிக்கப் பழகிக் கொண்டார்கள். மரணம் எங்கு இயற்கையாக நிகழாமல் செயற்கையாக நிகழ்த்தப்படுகிறதோ அங்கே மனித உரிமை மீறல் நடக்கிற‌து என்பதே உண்மை. மனிதர்களுக்கு மரணம் இயற்கையாகத் தான் நிகழ வேண்டுமேயன்றிக் கொலையாக அன்று. ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதைக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை என்ற நிலையில் அடுத்தவர் உயிரைப் பறிக்கும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி கேட்பது நியாயமானதுதானே!.
என்கவுண்டர்கள் குறித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:
1. என்கவுண்டரை கொலையாகப் பாவித்து காவல்துறையினர் மீது கொலைவழக்கு (இந்தியத் தண்டனைச் சட்டம்: 302) பதிய வேண்டும். அவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
2. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்டவருக்கு உடனடி பதவி உயர்வோ, பாராட்டோ வழங்கக் கூடாது.
3. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுச் சம்பவம் நடந்த காவல் எல்லைக்கு வெளியே உள்ள காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்.
4. என்கவுண்டர் குறித்து ஆர்.டி.ஓ. விசாரனைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரனை நடத்தப்பட வேண்டும். தன்னாட்சி கொண்ட சிபிசிஐடி மற்றும் சிபிஐ தொடர் விசாரணை தேவை.
5. என்கவுண்டரில் இறந்தவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்துபவர்கள், மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் போன்றவர்களை விசாரணை என்ற பெயரில் சோதனை செய்வதும், உடல், மனரீதியாகச் சித்ரவதை செய்வதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பலசமயங்களில் மத்திய, மாநில அரசுகளால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதோடு என்கவுண்டர்களோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டும் ஆட்சியாளர்களால் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி இப்படிப்பட்ட என்கவுண்டர்களுக்கான எதிர்ப்பைப் பதிவுசெய்யும் மனித உரிமை ஆர்வலர்களின் நடவடிக்கைகளைக் குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவான நடவடிக்கை எனக் காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஊடகங்களும் வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்துக் கூறி வருகின்றன. மேலும் மனித உரிமை ஆர்வலர்களைப் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனவும் அவர்கள் சித்தரிக்கத் தயங்குவதில்லை. திட்டமிட்ட இவ்வகைப் பொய்ப் பிரச்சாரங்களால்தாம் மனித உரிமைகள் என்ற கருத்தே பொதுமக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
என்கவுண்டர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி மனிதஉரிமையின் மாண்பினைக் காக்க நாம் பின்பற்றவேண்டிய உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் தவறான அணுகுமுறை குறித்து அவர்களோடு விவாதிக்க வேண்டும். கிரிமினல்கள்தாமே கொல்லப்படுகிறார்கள் என்று அசட்டை கொள்ளும் அவர்களிடம் என்கவுண்டர்களின் உள் அரசியலை விளக்கிக் கூறவேண்டும்.
2. திரைப்படம், பத்திரிக்கை, சமூக வலைத்தள ஊடகத்துறையினரோடு கலந்துரை யாடல்களை நிகழ்த்தி மனித உரிமையின் பக்கம் அவர்களைக் கொண்டுவர முயலவேண்டும்.
3. மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வீரியமிக்க, என்கவுண்டர் எதிர்ப்பியக்கத்தை உருவாக்கிப் பேராட வேண்டும்.
4. தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5இல் வெளியிட்ட என்கவுண்டர்கள் குறித்தான வழிகாட்டுதல்களையும் அவ் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 2007 ஆகஸ்டு 8 இல் தமிழக அரசு உருவாக்கி அளித்துள்ள நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.
துணைநின்ற நூல்கள்:
1. தமிழகத்தில் மனித உரிமைகள் மக்கள் கண்காணிப்பகம் – 1998-2000 தமிழ்நாடு மதுரை -2, 2000
2. மனித உரிமைகள் ஒரு அடிப்படை நூல் நாக.வேணுகோபால் (தமிழாக்கம்) நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி, 2011
3. மீடியா உலகம் சுரேஷ்பால், தீபிகா, சென்னை, 1999
4 .கீற்று http://www.keetru.com/
- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர்

திங்கள், 20 ஜனவரி, 2014

அறிவியல் தமிழ் அறிஞர்கள்


முனைவர் நா.இளங்கோ, 
தமிழ் இணைப் பேராசிரியர், 
புதுச்சேரி-605008
புத்தம் புதிய கலைகள் -பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே –அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை .. .. ..
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கனவுகண்ட நம் மகாகவியின் கனவினை நனவாக்கும் விதத்தில் தமிழ் மொழியில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் (அறிவியலை) கொண்டுவந்து சேர்ந்த அரும்பணியாளர்கள் பலரின் அயராத உழைப்பால் நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்தான் அறிவியல் தமிழ். இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழறிஞர்கள் மிகப்பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க மூவரின் அறிவியல் தமிழாக்கப் பணிகள் சுருக்கமாக.

1. சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860 -1946)
இந்தியாவின் மூத்த பொதுடைமை இயக்கத் தலைவர். பெரியார் முதலான தமிழகத்தின் முற்போக்கு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக மதிக்கப்படுபவர். எளிய தமிழில் அறிவியலை எழுத்தில் பேச்சிலும் தமிழ்மக்களுக்கு எடுத்துரைத்த தம் அரும்பணியால் அறிவியல் தமிழின் பிதாமகனாகப் போற்றப்படுபவர்.
சிங்காரவேலர் அறிவியல் சிந்தனைகளைக் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு போன்ற இதழ்களில் 1930 களில் தொடர்ந்து எழுதியதோடு மட்டுமின்றி, அறிவியல் கட்டுரைகளுக் கென்றே 1934இல் தமது 75ஆம் வயதில் புது உலகம் என்ற பெயரில் மாதம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். முதல் இதழில் அவர் கீழுள்ளவாறு எழுதி யிருந்தார்,
Pure Science சுத்த விஞ்ஞானத்தை எடுத்துரைக்க தமிழ் பாஷையில் ஒரு தனித்த பத்திரிகைகூட இல்லை; இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்ய புது உலகம் என்ற பத்திரிகை வெளிவந்ததைப் போற்றுகின்றோம். பெரும் பான்மையான மக்கள் சயன்சின் மார்க்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளாத தோசத்தால் மூட ஒழுக்கங்களாலும், ஜாதி -சமய துராசாரங்களாலும் வாடி வதங்கி வருகின்றனர். நிழலைக் கண்டு பயப்படும் குதிரை, ஆடு, மாடுகளைப் போல் நமது நாட்டு மக்கள், பூமி நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சந்திர கிரகணத்தையும், சந்திரன் நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சூரிய கிரகணத்தையும் கண்டு பயப்படும் அறியாமையை என்னவென்று கூறுவது? இந்தக் குறைகளை நீக்குவதற்கு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை வேண்டுமென்ற கோரிக்கை இந்தப் புது உலகம் தோற்றத்தால் நிறைவேறு மென்று நம்புகின்றோம். - (புதுஉலகம் - மே - 1935)
குடியரசு இதழில் வாசகர்களின் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்குத் தொடர்ந்து இதழ்கள் தோறும் விரிவான பதிலளித்துவந்தார் சிங்காரவேலர். சான்றாக, கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? என்ற வாசகர் கேள்விக்கு அவர் அளித்த விரிவான பதிலின் ஒருபகுதி வருமாறு,
பறவைகள் ஊர்வன வற்றிலிருந்தும், ஊர்வன தவளைக் கூட்டங் களிலிருந்தும், தவளைகள் மீன்களிலிருந்தும், மீன்கள் புழு-பூச்சியிலிருந்தும், புழு-பூச்சிகள் சிறு கிருமிகளிலிருந்தும் சிறுகிருமிகள் நுண்முட்டை களிலிருந்தும் உயிர் பெற்றவை என டார்வின் கூறுவதை அவர் விளக்குகிறார். இந்தச் சிறுமுட்டைகள்தான் அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கும் காரணமாகும். தாவரங்களும் அந்தச் செல்களிலிருந்தே உருவாகின்றன. விதைகளும் முட்டை போன்ற வடிவுடையனவே ஆகும். முட்டைகளும், விதைகளும் தாதுக்களால் உண்டானவை. குறிப்பாக, முட்டையானது, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்பன் ஆகியவை, தட்ப - வெப்ப இயற்கைச் சூழலால் கூட்டுச் சேர்க்கையாகி முட்டை வடிவம் பெறுகிறது. இந்த முட்டை எல்லா உயிர்களுக்கும் எப்படி மூலமுதலோ, கோழிக்கும் அந்த முட்டைதான் மூலமுதலாகும். எனவே கோழிக்கு முந்தியது முட்டையே யாகும்.
தமிழகத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க முயன்றவர்களில் சிங்காரவேலரே முதல் மனிதராவார்.
சிங்கார வேலரின் அறிவியல் படைப்புகளில் சில:
1. கடவுளும் பிரபஞ்சமும்
2. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
3. மனிதனும் பிரபஞ்சமும்
4. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
5. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
6. கல்மழை உண்டாகும் விதம்
7. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
8. பிரபஞ்சப் பிரச்சினைகள்
9. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
10. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
11. விஞ்ஞானத்தின் அவசியம்
12. பேய், பிசாசு
13. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
14. மனோ ஆலய உலகங்கள்
15. பிரகிருத ஞானம்
16. ஜோதிட ஆபாசம்
17. பகுத்தறிவென்றால் என்ன?
18. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
19. பிரபஞ்சமும் நாமும்
20. உலகம் சுழன்று கொண்டே போகிறது
21. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
நம் மக்களிடத்துப் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பேய் -பிசாசு நம்பிக்கை, சாமியாடல், மந்திரம் வைத்தல், பில்லி -சூனியம், ஆன்மா, சகுனம் பார்த்தல், குறி பார்த்தல், மை வைத்துப் பார்த்தல் ஆகியவற்றையும் மற்றும் இந்து -கிறித்துவம், இசுலாம், புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்ற மதங்களிலுள்ள மூடநம்பிக்கை களையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அரிய விளக்கங்களை சிங்கார வேலர் எடுத்துக் காட்டியுள்ளார்.
நமக்கு அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்காக, எந்தப் பொருளையும் நிகழ்வையும் ஏன், எதற்கு, எப்படியென்று உற்று நோக்கி ஆராய வேண்டும் என்கிறார். குறிப்பாக, உற்று நோக்கல், சோதித்துப் பார்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை நோக்கினால் தவறான நம்பிக்கை ஏற்படாமல் சரியான முடிவு கிடைக்கும் என்பது அவரின் கருத்து. அரசியல் களத்தில் நின்றுகொண்டு அவர் காலத்திய உலக அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் தொடர்ந்து வாசித்து அவற்றைத் தமிழில் தமிழ்மக்களுக்காக ஆக்கித் தருவதில் சிங்காரவேலர் முனைப்பு காட்டினார். பகுத்தறிவும் சுயமரியாதையும் அறிவியல் கல்வியால் கிட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அறிவியல் விழிப்புணர்வைத் தமிழில் பரப்பும் பணியில் ஈடுபட்டு அறிவியல் தமிழ் வளர்த்தார் சிங்காரவேலர்.

2. பெ. நா. அப்புசாமி
பெ. நா.அப்புசாமி (1841-1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தமது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார் 1917 ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் 5000க்கும் மேலாக இருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் 3000க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள் ஆகும். இவரது அறிவியல் கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான அப்புசுவாமியின் மொழிபெயர்ப்புகள் தரமானவை. இவரின் முதல் கட்டுரை பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா? என்ற தலைப்பிலானது. 1917ஆம் ஆண்டு தமிழ் நேசன் இதழில் இக்கட்டுரை வெளியானது.
பெ.நா.அப்புசாமி அவர்கள் தமிழில் எழுதியுள்ள நூல்கள் இருபத்தெட்டு. அவற்றில் சிறுவர்களுக்கான நூல்கள் பன்னிரண்டு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த நூல்கள் இருபத்தைந்து.
பெ.நா.அப்புசாமி தமிழில் எழுதிய நூல்களில் சில,
1.    அற்புத உலகம்
2.    மின்சாரத்தின் விந்தை
3.    வானொலியும் ஒலிபரப்பும்
4.    அணுவின் கதை
5.    ரயிலின் கதை
6.    பூமியின் உள்ளே
7.    இந்திய விஞ்ஞானிகள்
8.    எக்ஸ்கதிர்கள்
9.    சர்வதேச விஞ்ஞானிகள்
10.    மூன்று சக்தி ஊற்றுக்கள்
11.    வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்கள்
12.    அற்புதச் சிறு பூச்சிகள்
13.    அணு முதல் ரேடார் வரை
14.    பயணம் அன்றும் இன்றும்
15.    பயணத்தின் கதை
16.    வானத்தைப் பார்ப்போம்
17.    சித்திரக் கதைப்பாட்டு 6 புத்தகங்கள்
18.    சித்திரக் கதைத்தொடர் 6 புத்தகங்கள்
அவர் மொழிபெயர்த்த நூல்களில் சில,
1.    விஞ்ஞானமும் விவேகமும் (Science & Common Science)
2.    அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)
3.    அணுயுகம் (Report on the Atom)
4.    அணு முதல்பாடம் (Atomic Primer)
5.    விஞ்ஞான மேதைகள் (Giants of Science Vol.I, II)
6.    சுதந்திரத் தியாகிகள் (Crusaders for Freedom)
7.    காலயந்திரம் (Time Machine)
8.    இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Todays Science and You)
9.    இந்தியாவில் கல்வித்துறைச் சீரமைப்பு (Educational Reconstruction in India)
10.    ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellites)
11.    ஏரோப்ளேன் (Aeroplane)
12.    டெலிபோனும் தந்தியும் (Telephone & Telegraph)
13.    விண்வெளிப் பயணம் (Space Travel)
பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் நிலவிவந்த சமூக அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தனவாக உள்ளன.
மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று அதற்கு இணங்க நடந்துவந்தால் அவர்கள் பகுத்தறியும் பண்பைப் பெறுவார்கள், நாடும் வளர்ச்சியுறும்.
என்ற இந்த நோக்கமே அவரை அறிவியல் தமிழின் பக்கம் ஆற்றுப்படுத்தியதென அறியலாம். இவருடைய அறிவியல் கட்டுரைகள் அனைத்துமே ஒரு சராசரி மனிதன் அறிவியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எளிய தமிழ் நடையில் உள்ளன. அப்புசாமியின் எளிய மொழி நடைக்கு அவரது கலைச் சொல்லாக்கமும் ஒரு காரணமாகும். முடிந்தவரை மக்களின் பேச்சு வழக்கில் இருந்த சொற்களையும் எளிய கலைச் சொற்களையுமே அவர் பயன்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வடசொற்களைக் கலந்து எழுதும் வழக்கம் இருந்தது. அப்புசாமியின் நடையிலும் தொடக்கத்தில் இப்போக்கே காணப்படுகிறது. காலப்போக்கில் நடையில் மாற்றம் ஏற்பட்டுத் தரம் வாய்ந்த அறிவியல் தமிழ்ச் சொற்களைப் பெய்து இயல்பான எளிய இனிய தமிழில் அறிவியலை ஆக்கும் முயற்சியில் அவர் பெருவெற்றி பெற்றுள்ளார்.

3. பெரியசாமி தூரன் (1908- 1987)
பெரியசாமி தூரன், தமிழின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கித் தந்த அறிவியல் அறிஞர். இவர் பெரியார் மாவட்டம் ஈரோடு வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்பன் -பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியரான இவர் 1929 முதல் 1948 வரை ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர்த் தமிழின் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். பதினைந்து ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்தார்.
திசு.அவினாசிலிங்கம் தமிழகத்தின் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. இக்கழகத்தின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டது. இந்த மாபெரும் பணிக்கு முதன்மை ஆசிரியராகத் பெரியசாமி தூரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 அக்டோபரில் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொன்றும் எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியத்தை அவர் உருவாக்கித் தந்தார். 1200 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகளாக. இக்கலைக் களஞ்சியத்தில் வரலாறு, நிலவியல், அரசியல், தத்துவம், இலக்கியம் முதலான செய்திகளோடு வேளாண்மை முதல் புதிய அறிவியல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
கலைக்களஞ்சியப் பணியில் பல்வேறு அறிஞர்கள் ஆங்கிலத்தில் தந்த கட்டுரைகளை எல்லாம் தூரனே முன்னின்று தமிழாக்கம் செய்தார். 1948 இலிருந்து ஆறாண்டுக் காலம் கடுமையான உழைப்புக்குப் பின்னர் 1954 இல் முதல்தொகுதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு தொகுதியாகக் கொண்டுவரப்பட்டு 1963 ஜனவரி 4ஆம்நாள் ஒன்பதாம் தொகுதி குடியரசுத் தலைவர் இராதாக்கிருஷ்ணன் தலைமையில் மக்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
இக்கலைக்களஞ்சியத் தொகுப்புப் பணி மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் நூல்களையும் தூரன் அவர்கள் தமிழுக்கு ஆக்கித் தந்துள்ளார்கள். அவருடைய அறிவியல் நூல்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. முதல் பிரிவு மரபணு (Genetic) தொடர்பானது. இவ்வகையில் அவர் மூன்று தமிழ் நூல்களைத் தந்துள்ளார்.
1. பாரம்பரியம் (1949),
2. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
3. கருவில் வளரும் குழந்தை 1956
நூலின் இறுதியில் கலைச்சொல் விளக்கங்களை இணைத்துத் தந்துள்ளார். பாரம்பரியம் நூலின் சுருக்கம்தான் பெற்றோர் கொடுத்த பெருங்கொடை என்ற நூல்.
இரண்டாம் பிரிவு உளவியல் தொடர்பானது. இவ்வகையில் அவர் ஏழு நூல்களைத் தந்துள்ளார்.
1.    குழந்தை உள்ளம் 1947,
2.    குமரப்பருவம் 1954,
3.    தாழ்வு மனப்பான்மை 1955,
4.    அடிமனம் 1957,
5.    மனமும் அதன் விளக்கமும் 1968
6.    குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் 1953 (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்
7.    மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)
தமிழ்க் கலைக்களஞ்சியம் தந்த அறிவியலறிஞர் பெ.தூரனின் அறிவியல் தமிழ்ப்பணி அளப்பரியது. கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கலைக்களஞ்சியப் பதிவுகளில் அறிவியல் கட்டுரைகள் பல ஆயிரங்கள். காலத்திற்கும் நின்று புகழ்சேர்க்கும் அரும்பணியால் அறிவியல் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பெரியசாமி தூரன் அவர்கள்.
- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-605008

சனி, 18 ஜனவரி, 2014

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்


முனைவர் நா.இளங்கோ,
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே டாக்டர் பிஷ் கிறீன் போன்ற ஐரோப்பியர் களாலும் வெ.பா. சுப்பிரமணிய முதலியார் போன்ற தமிழர்களாலும் சரியான இலக்கில் பயணப்பட்ட அறிவியல் தமிழ் இருபதாம் நூற்றாண்டில் மேலும் பல மைல்கற்களைத் தாண்டி இலக்கினை நெருங்கிவந்துள்ளது.
சாமுவேல் எழுதிய மானுட மர்ம சாஸ்திரம்:
மானுட மர்ம சாஸ்திரம் நூல் 1908இல் எஸ்.சாமுவேல் என்பவரால் எழுதப்பட்டு பர்மாவிலிருந்து வெளியிடப்பட்டது. இந்நூல் பர்மாவிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு, சிசு உற்பத்தி சிந்தாமணி என்ற வேறொரு பெயரும் இடப்பட்டுள்ளது. இந்நூலில் மனித உடற்கூறு பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிறப்பு உறுப்புகளைப் பற்றிய மருத்துவமும் மகப்பேறு மருத்துவமும் இந்நூலில் 12 பாகங்களில் அறுநூறு பக்கங்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் எஸ். சாமுவேல் இரங்கூன் ஜென் ஜான்ஸ் கல்லூரியின் தலைமை ஆசிரியராவார். அவர் மேலும் மானஸ மர்ம சாஸ்திரம் என்ற தலைப்பில் மனோவசிய சாஸ்திர நூலொன்றை 272 பக்க அளவில் 1910 ஆம் ஆண்டிலும் மனோ தத்துவ அறிவியலான Hypopnotism பற்றி ஷிப்னாட்டிஸம் என்ற நூலை 1913 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் மட்டுமின்றி இரஞ்சிதபோதினி என்ற அறிவியல் இதழையும் நடத்தியுள்ளார் என்று தெரிகிறது. பர்மாவைச் சேர்ந்த எஸ். சாமுவேல் என்கிற இந்நூலாசிரியரைச் சிலர் சாமுவேல் பிஷ் கிறீன் எனத் தவறாகப் புரிந்துகொண்டு இருவரும் ஒருவரே என்ற நிலையில் குறிப்பிடுகின்றனர். இந்தச் சாமுவேல் பிஷ்கிறீனின் வேறுபட்ட ஒருவர் என்பதை இரா. பாவேந்தனின் கட்டுரையொன்று ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளது. (இரா.பாவேந்தன், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழாக்கம், 1997)
எஸ்.சாமுவேல் அவர்களின் மானுட மர்ம சாஸ்திரம் நூல் பொது மக்களுக்காகவும், மானஸ மர்ம சாஸ்திரம், ஷிப்னாட்டிஸம் என்ற இரண்டு நூல்களும் மருத்துவர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளன. மேற்சொன்ன மூன்று நூல்களும் வடமொழி கலந்த தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. புராண, இதிகாச, இலக்கிய, நாட்டுப்புற வழக்காறு முதலான சான்றுகளை முதலில் தெரிவித்துப் பின்னர் அறிவியலை எளிமையாக விளக்கும் பாணியிலேயே அவரின் அனைத்து நூல்களும் அமைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் தொடங்கிவைத்த அறிவியல் மொழிபெயர்ப்பு நூலாக்கப் பணிகள் இருபதாம் நூற்றாண்டில் வேகம் பெறத் தொடங்கின. 1901இல் சேடன் பாபு இராசகோபாலாச்சாரி என்பவர் Euclid என்ற கணிதவியல் அறிஞரின் நூலை யூகிலிட்டின் சேத்திர கணிதப் பாலபோதினி என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூல் Geometry பற்றியது. தொடர்ந்து பல்வேறு ஆங்கில அறிவியல் நூல்கள் பாடநூல்களாகவும் பொதுமக்களுக்கான நூல்களாகவும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.
1924இல் பிலிப் எல்.நெல்சன், புதிய ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் என்ற நூலை வெளியிட்டார். இந்திய நர்சுகளுக்கான பாடப்புத்தகம் ஒன்றை 1926இல் சிதம்பரநாத முதலியார் வெளியிட்டார். 1937இல் தமிழில் முடியுமா? என்ற தலைப்பில் டாக்டர் கிம்பாலி எழுதிய College Text Book of Physics என்ற நூலை மொழிபெயர்த்தார் இராசாசி. 1950 தொடக்கம் பலதுறை சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புற்றுநோய் (1957), சுகப்பிரசவம் (1958) என்ற இருநூல்களை எஸ்.இராமசாமி எழுதி வெளியிட்டார். பால் பிளாக்வுட் எழுதிய நூலொன்றை ஆற்றலோ ஆற்றல் (1961) என்ற பெயரில் தி. சு.கறுப்பண்ணன் மொழிபெயர்த்தார்.
அறிவியல் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் பெ.நா.அப்புசாமி ஆவார். அவர் இருபத்தைந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சில, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Lynn pools – Todays Science and You), அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)> ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellite)
நா.வானமாமலை 1960இல் Stephen Heynn என்பார் எழுதிய The Cosmic Age என்ற நூலை விண்யுகம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து உடலும் உள்ளமும், உயிரின் தோற்றம், உடலியல் மருத்துவ வரலாறு முதலான நூல்களை மொழிபெயர்த்துத் தமிழ் அறிவியல் வளர்ச்சிக்குப் பணியாற்றினார். புதின எழுத்தாளர் தி.ஜானகிராமன் பூமி என்னும் கிரகம் என்ற தலைப்பில் George Gamow எழுதிய A Planet called Earth என்ற நூலை மொழிபெயர்த்து 1966இல் வெளியிட்டார்.
மேலும் ரஷ்யாவிலுள்ள மீர், ராதுகா பதிப்பகங்கள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வழியாகப் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழுலகிற்கு 1970, 1980 களில் தொடர்ந்து தந்தன. அவற்றுள் சில வருமாறு,
1. மூளையை நம்பலாமா? அ.கதிரேசன், 1972
2. தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? வைத்தீஸ்வரன், 1972
3. சுற்றுப்பாதையில் விண்வெளிக் கப்பல், கி.பரமேஸ்வரன், 1980
4. விளையாட்டுக் கணிதம், ரா.கிருஷ்ணய்யா, 1981
5. அனைவருக்குமான இயற்பியல் -வெப்பம், பழனியாண்டி, 1984
6. குழந்தைகள் வாழ்க, இரா.பாஸ்கரன், 1987
7. மின்பாதுகாப்பின் அடிப்படைகள், எஸ்.சீனுவாசன், 1988
மேலே குறிப்பிட்ட நூல்கள் மட்டுமின்றி நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தொடர்ந்து பல அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தும், தமிழிலேயே உருவாக்கியும் பதிப்பித்து வருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அனைத்து அறிவியல் துறை நூல்களையும் தமிழில் வெளியிடும் நிறுவனம் என்ற பெருமை இப்பதிப்பகத்திற்கு உண்டு.
பயிற்சி மொழியான அறிவியல் தமிழ்:
அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில் 1930 ஆம் ஆண்டை ஒரு திருப்பு முனையாகவே கருதலாம். அதுவரை தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முயற்சியின் காரணமாக அறிவியல் தமிழ் நூல்கள் எழுதி வெளிவந்த நிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுநிலைப் பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழித் திட்டம் பள்ளி இறுதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது இந்த 1930ஆம் ஆண்டில்தான். முதலில் கலைப் பாடங்களையும் பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாயினர். இதனால், கலைப் பாடநூல்களும் அறிவியல் பாடநூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழில் பொதுவான அறிவியல் நூல்கள் வெளிவந்ததோடு பத்திரிக்கைகளில் அறிவியல் கட்டுரைகளும் அதிகளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவாகியது.
இதேபோல் 1960 களின் தொடக்கத்தில் கல்லூரிகளில் தமிழ்வழிப் பயிற்றல் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது தமிழ் அறிவியல் பாடநூல்களின் தேவை காலத்தின் தேவையாக மாற்றம் பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல தமிழ் அறிவியல் பாடநூல்களைத் தக்கவர்களைக் கொண்டு எழுதி வெளியிடலாயிற்று. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் முதலான அறிவியல் நூல்களோடு மருத்துவப் பாட நூல்களும் பொறியியல் சார்ந்த தொழில்நுட்ப நூல்களும் வெளிவரலாயின. இந்த வரிசையில் தமிழில் உருவாகிய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்ற இரண்டு வகையான நூல்களும் இடம்பெற்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன நூல்களின் மொழிநடையில் வடமொழிச் செல்வாக்கு குறைந்தும் நல்ல தமிழ் சொல்லாக்கங்கள் மிகுந்தும் காணப்பட்டன. பிரகிருதி சாஸ்திரம் இயற்பியலாகவும், இரசாயனம் வேதியலாகவும், விஞ்ஞானம் அறிவியலாகவும் மாற்றம் பெற்றன. அன்றைய தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களின் செல்வாக்கால் இந்த மாற்றங்கள் இயல்பாக நடைபெற்றன. பாடநூல்களைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது அறிவியல் மற்றும் பாட அறிவியல் நூல்கள் மிகுந்த அளவில் உருவாகி வெளிவரத் தொடங்கின. கடந்த இருபதாம் நூற்றாண்டில் மட்டும் தமிழில் வெளியான அறிவியல் நூல்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் மேலதிகமாயிருக்கும் என்று மதிப்பிடுவார் இராம.சுந்தரம் (தமிழ்வளர்க்கும் அறிவியல், ப.37) தொடர்ச்சியாக, அறிவியலுக்கென்றே தனிஇதழ்களும், அறிவியல் பகுதிகள் அடங்கிய பொது இதழ்களும் வெளிவரலாயின. இம்மாற்றங்களின் விளைவாகத் தமிழில் பொருத்தமான நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பல உருவாகி அறிவியல் தமிழை வளப்படுத்தின.
தமிழில் கலைச்சொற்கள்
1935 வரை தமிழில் எழுதப்பட்ட நூல்களாயினும் கட்டுரைகளாயினும் அவை தரமான நல்ல தமிழிலே அமைந்தவை எனக் கூறுவதற்கில்லை. கிரந்த எழுத்துக்களோடு கூடிய சமஸ்கிருதச் சொற்களும் ஆங்கிலச் கலைச்சொற்களின் ஒலிபெயர்ப்பும் அதிகளவில் கலந்து வெளிவந்தன. 1935 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நல்ல தமிழை, தனித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் எனும் வேட்கை அழுத்தமாக எழுந்தது. புதிய கலைச்சொற்களைத் தனித் தமிழில் உருவாக்கும் முயற்சிகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. தமிழில் அறிவியலைக் கூற முற்பட்ட அதே சமயத்தில், அறிவியல் கலைச்சொற்களைப் பற்றிய சிந்தனையும், இம்முயற்சியில் ஈடுபட்டோரிடையே இருந்து வந்தது.
தமிழ்க் கலைச்சொல்லாக்க முயற்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வு 1932 இல் நடைபெற்றது. இவ்வாண்டில் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழுவொன்றை அமைத்து அக்குழுவின் சார்பில் கலைச்சொல் பட்டியல் ஒன்றனை வெளியிட்டது. உடலியல், நலவழி, வேதியியல், வாணிபவியல், நிலவியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்கை விஞ்ஞானம், இயற்பியல் பாடங்களுக்கான சுமார் 7400 சொற்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதமாகவும், ஆங்கிலமாகவும் இருந்தன. சில மிகவும் நீண்ட தொடர்வடிவிலான சொல்லாக்கமாயிருந்தன. சான்றாக: Analytical Chemistry –விபேதன ரஸாயன நூல், Census Report –குலஸ்திரீ புருஷபாலவிருத்த ஆயவ்ய பரிமாண பத்திரிக்கை. இதே கலைச்சொற்கள் 1968 இல் வெளியான மற்றொரு பட்டியலில் பகுப்பாய்வு வேதியல் என்றும் மக்கள்தொகை அறிக்கை என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திரவப் பதார்த்தம், திடப்பொருள், வாயு, ஆகர்ஷண சக்தி, பூகம்பம், அஸ்தி, வியாதி, வைத்திய சாஸ்திரம், நிவோஷம், கஷம்ணநாடி, பூகோளம், கிரகம் என்று வழங்கப்பட்ட கலைச்சொற்கள் அதே நூற்றாண்டின் பிற்பாதியில் முறையே நீர்மம், திண்மம், வளிமம், ஈர்ப்புச்சக்தி, நிலநடுக்கம், எலும்பு, நோய், மருத்துவ அறிவியல், மிகை வளர்ச்சி, தண்டுவடம், புவியியல், கோள் என வழங்கப்படலாயின. தமிழில் அறிவியல் துறை மிகவேகமான வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக இயல்பான தமிழ்க் கலைச்சொல்லாக்கங்கள் உருவாகி நிலைபெற்று வருகின்றன என்பதற்கு மேலே காட்டிய பட்டியல் ஒரு சான்றாகும்.
இருபதாம் நூற்றாண்டு அறிவியல் இதழ்கள்:
இருபதாம் நூற்றாண்டின் அறிவியில் வளர்ச்சி என்பது அறிவியல் நூல்களை மட்டும் சார்ந்தில்லாமல் அறிவியல் இதழ்களைச் சார்ந்தும் இருந்தமை கண்கூடு. இந்நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான அறிவியல் இதழ்கள் அறிவியலின் துறைகள் தோறும் தோற்றம் பெற்றன. சில தளர்நடையிட்டன, சில வீறுநடை போட்டன. வீறுநடை போட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவியல் இதழ்கள் சிலவற்றைக் காண்போம்.
கலைக்கதிர்:
புத்தம் புதிய அறிவியல் செய்திகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்னும் உயரிய நோக்கில் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் 1948 ஆம் ஆண்டில் கலைக்கதிர் என்ற திங்களிதழைத் தொடங்கினார். தொடக்கம் முதல் 1984 ஆம் ஆண்டுவரை அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் பல்சுவை இதழாகவே வெளிவந்தது இவ்வேடு. அதன்பின் மாற்றம் பல பெற்று அறிவியல் செய்திகளை மட்டும் தாங்கிவரும் முழுமையான அறிவியல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தக்க விளக்கப் படங்களுடனும் தனித் தமிழிலும் பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்வ+ட்டும் முறையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கலைக்கதிர் அறிவியல் வளர்ச்சி மலர், அணுமலர் எனச் சிறப்பு மலர்களையும் வெளியிட்டு அறிவியல் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளது.
பல்லாயிரம் அறிவியல் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிய பெருமைக்குரியது கலைக்கதிர் இதழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலைக்கதிர் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உயிரியல், பயிரியல், விண்ணியல், உளவியல், வேளாண்மை, மானிடவியல் முதலான பல்வேறு அறிவியல் கட்டுரைகளை அத்துறை வல்லுநர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு வருகிறது. அது கலைச் சொல்லாக்கத்தை முன்முயற்சி செய்து வெளியிட்டுத் தமிழ்ச் சொல்வளத்தைப் பெருக்கியது. 1966-ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கலைக்கதிர் இதழில் வந்த கட்டுரைகள் சில வருமாறு: பால்பாதையும் சூரியமண்டலமும், நீரிழிவின் வரலாறு, மண்ணில்லா வேளாண்மை, நமது உடல், விஞ்ஞானப் புதுமைகள், திரைப்படத்தில் ஒலியின் பங்கு, கடல் நீரிலிருந்து யுரேனியம் போன்ற கட்டுரைகள் தெளிவாக விளக்கப்படங்களுடனும் வண்ணப் படங்களுடனும் வெளியிடப்பட்டன. கட்டுரைகள் நல்ல தமிழ்நடையில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் இருந்தன.
இவ்விதழின் மற்றொரு சிறப்பம்சம் பல்வேறு அறிவியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்களை, அறிவியல் எழுத்தாளர்களாக மாற்றிய பெருமையாகும். இதற்காக மறைந்த டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் மெற்கொண்டிருந்த இடைவிடா முயற்சியும் இத்துறையில் கொண்டிருந்த ஆர்வப் பெருக்கமும் என்றும் போற்றத்தக்கன. கலைக்கதிர் இதழ் அறிவியல் தமிழாக்கம், தழுவல், மூலமாக எழுதுதல் ஆகிய மூவகையிலும் அறிவியல் எழுத்தாளர்கட்கு ஆக்கமான பயிற்சிக் களமாகவே கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக விளங்குகிறதெனலாம்.
யுனஸ்கோ கூரியர்:
தமிழக அளவில் மட்டுமல்லாது, சர்வசே அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும், பொருட் செறிவோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தி, நிலைநாட்டிய பெருமை யுனெஸ்கோ கூரியர் எனும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். இவ்விதழ் 34 உலக மொழிகளில் வெளிவருகிறது. இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டும் வெளிவரும் இவ்விதழ் 1967 ஜுலை முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இது கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு இதழாக அமைந்திருந்தபோதிலும், மிக அதிக அளவில் இதில் இடம்பெறுவன அறிவியல் கட்டுரைகளேயாகும். இவ்விதழில் இடம்பெறும் அறிவியல் கட்டுரைகள் தற்கால அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் அவ்வத் துறை சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவைகள் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேனாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இத்தகு அரிய வாய்ப்பைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் இதுவேயாகும். இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரையின் அளவிலேயே தமிழ் மொழிப்பெயர்ப்புக் கட்டுரையும் அமைய வேண்டுவது தவிர்க்க முடியாததாயினும் மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்கட்கு ஏற்படா வண்ணம், மூலமாகத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை போன்று தர வேண்டியுள்ளதால் புதிய உத்திகளைக் கையாண்டு அறிவியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வாறு புதிய புதிய மொழிபெயர்ப்பு உத்திகளைக் கண்டறிந்து செயல்படுத்த ஏற்ற களமாகத் தமிழில் இவ்விதழ் அமைந்துள்ளதெனலாம்.
கூரியர் இதழ் வாயிலாகத் தமிழுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் ஆக்கம் புதிய புதிய கலைச்சொற்களின் தோற்றமாகும். பெரும்பாலும் ஒலிபெயர்ப்போ அன்றி சமஸ்கிருதச் சொற்களோ அல்லாது, தனித் தமிழில் கலைச்சொல்லாக்கம் இதழ்தோறும் செய்யப்படுகின்றன. இவ்வகையில் கடந்த இருபதாண்டுகளில் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் கூரியர் இதழுக்கென உருவாக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தமிழின் தனித்திறனை உலகுக்குணர்த்துவதாக உள்ளது.
துளிர் அறிவியல் சிறுவர் இதழ்:
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுவர்களுக்கென்றே சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே அறிவியல் மாத இதழ் துளிர் ஆகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று முதல் துளிர் இதழை வெளியிட்டன. சிறுவர்களின் உள்ளத்தில் அறிவியல் உணர்வை ஊட்ட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அறிவியல் செய்திகளைத் தொகுத்துத் தருவதோடு யுரேகா, அறிவியல் கேள்வி பதில் போன்ற பகுதிகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை படித்து இன்புறும் வண்ணம் வெளியிட்டு வருகின்றது.
அறிவியல் மாத இதழ் என்றால் வெறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவஇயல், வானவியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளியிடுவது என்றில்லாமல் புவியியல், சுற்றுச்சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன. பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கியப் பணி. அறிவியலுக்குப் புறம்பான வி~யங்கள், மூடநம்பிக்கைகள் இவற்றைச் சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது. பாடப்புத்தகத் தன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிகக் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலைத் தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்துப் புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. கதை, கட்டுரை, படக்கதை, துணுக்கு, கேள்வி பதில், பேட்டி, புதிர், படங்கள், பயிற்சி, விளக்கப்படம், பரிசோதனைகள் ஆகிய வடிவங்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதழ்கள் மட்டுமன்றி நூற்றுக்கான தமிழ் இதழ்கள் அறிவியல் வளர்ச்சிக்குத் தம் பங்குப் பணியை ஆற்றிவருகின்றன. அவற்றுள், அறிவியல் கட்டுரைகளை அவ்வவ்போது வெளியிடும் இதழாகத் தினமணி இதழ் விளங்குகிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகளை, மொழிபெயர்ப்பாகவும் மூலமாகவும் எழுதி வெளியிடுவதோடு, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளை அவ்வத்துறை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாகவும் அவ்விதழ் அமைந்து வருகிறது. மற்றும் குன்றக்குடி அடிகளாரின் முயற்சியினால் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக அறிவியல் இதழும் இளம் விஞ்ஞானி இதழும் அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான செந்தமிழ்ச் செல்வி, இலக்கிய இதழ்தான் ஆயினும் இவ்விதழில் அவ்வப்போது அறிவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கரின் அறிவியல் பூர்வமான ஆங்கிலக் கட்டுரைகள், க. ப.சந்தோஷம் என்பவரால் தொடர்ந்து சீராக மொழி பெயர்க்கப்பட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தன. ஆனந்தவிகடன் இதழ் பொதுமக்களுக்குரிய பொழுதுபோக்கு இதழ்தான் என்றாலும் மருத்துவம் தொடர்பான ஆறிலிருந்து அறுபது வரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை என நம் உடற்கூறு தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இளைய தலைமுறையினர் அறிவியற் கருத்துகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இன்று வாய்ப்புகள் பெருகிவிட்டன. இன்று அறிவியலின் தேவை மிகுந்துவிட்டது. அதற்கு ஏற்ப அறிவியல் செய்திகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு இதழ்களுக்கு நிறையவே உண்டு. எனவே அறிவியல் செய்திகள் அடங்கிய சில பக்கங்களையேனும் இப்போது நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் தினத்தந்தி, தினமலர், தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது அறிவியல் தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன. நம் இந்திய நாட்டின் விண்வெளிக் கூடங்கள் விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோள்கள் பற்றியும், வேளாண்மை வளர்ச்சி குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும், நீர்மேலாண்மை, எய்ட்ஸ் நோய், உடல் நலம், மகப்பேறு ஆகியன பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு அறிவியல் பார்வையை மக்களிடம் வளர்த்து வருகின்றமை போற்றத்தக்கதாகும்.
அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மின்னணுச் சாதனங்கள் பற்றியும், காற்றாலைகள் குறித்தும் வெளிவரும் அறிவியல் கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன. தினமலர் ஞாயிறு இதழில் மதுரை அப்பொல்லோ மருத்துவமனையின் சார்பில் சர்க்கரை நோய், இதயக் கோளாறு, எலும்பு முறிவு போன்ற நோய்களின் தன்மைகளை எடுத்துக்கூறி அவற்றைத் தடுப்பது பற்றியும் அவற்றிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தினமணி நாளிதழில் மூட்டுவலி தொடர்பான மருத்துவம் குறித்த கட்டுரை முழுப்பக்க அளவில் வந்தமை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு உரியது. தினமணியின் தலையங்கப் பக்கத்தில் அவ்வப்போது அறிவியல் வல்லுநர்கள் எழுதும் அறிவியல் சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்கள்
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1938 ஆம் ஆண்டிலேயே தொடக்க முயற்சிகளை மேற்கொண்டது. கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் போதிக்கும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரு தொகுதிகளைத் தமிழில் தயாரித்து வெளியிட்டது. அவ்வாறே 1941 ஆம் ஆண்டில் இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளையும், 1942 ஆம் ஆண்டில் உயிரியில் (Biology) நூலையும் தமிழில் வெளியிட்டது. இவை ஐந்தும் நல்ல தமிழில் வெளிவந்த தரமான வெளியீடுகளாகும்.
சென்னைப் பல்கலைக்கழகம் அறிவியல் நூலை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 1938இல் அப்போதைய சென்னை இராஜதானிக்கான பரிசுத் திட்டத்தை அறிவித்து, தமிழ் மொழியில் மட்டுமல்லாது தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் வெளியிடும் சிறந்த அறிவியல் நூல்களுக்குப் பரிசளித்து ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இதனால் அறிவியலைத் தமிழில் தரவிழையும் எழுத்தாளர்களுக்குப் புதிய உற்சாகம் ஏற்பட வழியேற்பட்டது. ஈ.த. ராஜேஸ்வரி போன்ற அறிவியல் எழுத்தாளர்கள் அறிவியல் நூல்களை எழுதிப் பரிசு பெற இயன்றது.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பல்வேறு வழிகளில் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. ஒரு புறத்திலே கலைச்சொற்களின் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறது. மறுபுறத்திலே அக்கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் நூல்களை எழுதுமாறு அவ்வத்துறை வல்லுநர்களைத் தேர்வு செய்து, அப்பணியை ஒப்படைக்கிறது. இதனால், அறிவியல் தமிழ் நூல்கள் பெருமளவில் வெளிப்பட வாய்ப்பேற்படுகிறது. இந்நூல்கள் கல்லூரி மட்டத்தில் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்ட மாணவர்கட்குப் பயன்படுவதைக் காட்டிலும் அவ்வத்துறை அறிஞர்கட்குத் தக்க ஆதார நூல்களாக (Source Books) இவை அமைகின்றன எனலாம். இன்றைய நிலையில் அறிவியலைப் பொறுத்தவரையில் தமிழில் ஒவ்வொரு துறைக்கும் நிறைய ஆதார நூல்கள் தேவைப்படுகின்றன. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அறிவியல் நூற்பணி அமைந்து வருகிறது. அறிவியல் கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் தமிழ்ப் பல்கலைக் கழகம் பெருவெற்றி பெற்றுள்ளது. அத்துடன், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு சிக்கல்களை அறிவியல் தமிழ் அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்ட கருத்தரங்குகள் மூலமாக அடிக்கடி விவாதித்து ஆக்கப+ர்வமான முடிவுகளைப் பெறவும் வழியமைத்து வருகிறது.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்க வழிகளைக் காணுவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் களஞ்சியம் முத்திங்கள் இதழ், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான சிக்கல்களை, துறைவல்லுநர்களைக் கொண்டும் தமிழறிஞர்களைக் கொண்டும் விவாதித்துத் தீர்வு காணும் வழியாயமைந்து வருகிறது. நல்ல தமிழில் அறிவியல் -தொழில்நுட்பக் கட்டுரைகளை எவ்வாறு எழுதலாம் என்பதற்கு முன்னோடியாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகளை இதழ்தோறும் படைத்து வெளியிட்டு வருகிறது. (மணவை முஸ்தபா, காலம் தேடும் தமிழ், பக். 52-53)
இப்பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றித் தமிழகத்தில் பல்வேறு அறிவியல் அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகப் பின்வரும் அமைப்புகளைக் குறிப்பிடலாம்.
1. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (சென்னை, புதுச்சேரி)
2. சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)
3. மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை)
4. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் (தஞ்சாவூர்)
5. தமிழக அறிவியல் பேரவை (காரைக்குடி)
6. வளர்தமிழ் மன்றம் (அண்ணா பல்கலைக் கழகம்)
மேற்சொன்ன அறிவியல் இயக்கங்கள் ஒவ்வொன்றும் அறிவியல் தமிழ்வளர்ச்சிக்கு அவ்வப்போது கருத்தரங்குகள், மாநாடுகள் முதலானவற்றை நடத்தி அதில் வாசித்து விவாதிக்கப்படும் கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இயக்கம் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகமாகும்.
1987இல் தொடங்கப்பட்ட இக்கழகம் இதுவரை பதினாறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. கருத்தரங்கின் மையப் பொருளாகப் பொதுஅறிவியல், பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், வேளாண்மை, கலைச்சொல்லாக்கம் முதலானவை அமையும். கருத்தரங்கில் வாசிக்கப்படும் அனைத்துக் கட்டுரைகளையும் நூலாக்கி வளர் தமிழில் அறிவியல் என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டு வருகிறது இக்கழகம். இதுவரை இருபத்து மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவற்றுள் 1500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்று அறிவியல் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன. பண்டைய தொழில்நுட்ப அறிவியல் முதல் இன்றைய தொழில்நுட்ப அறிவியல் வரையிலான ஒரு தொடர்ச்சியான வரலாற்று அறிவை இக்கருத்தரங்குகள் வழங்குகின்றன. நுட்பமான அறிவியல் செய்திகளைக் கூடத் தமிழில் எளிமையாகக் கூறமுடியும் என்பதற்கு இக்கருத்தரங்குகள் சான்றாக அமைகின்றன. சில கட்டுரைகள் அறிவியல் தமிழின் அமைப்பு பற்றியும் கலைச்சொற்கள் பற்றியும் மொழியியல் பார்வையில் வெளிப்படுத்தின. அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் பணி அளப்பரியது.
தமிழ் அறிவியல் வளர்ச்சியில் பதிப்பகங்களின் பங்கு:
1954-இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமன்றி, தமிழாக்கமாகவும் பல அறிவியல் நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சராசரிக் கல்வி கற்றவரும் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எளிய நடையில் விளக்கப் படங்களுடன் வெளியான மொழிபெயர்ப்பு நூல்கள் தரமானவையாக உள்ளன. பற்றவைப்பு முதல் மருந்தியல் ஈறாக அனைத்து அறிவியல் துறை நூல்களையும் வெளியிட்ட பெருமை இந்நிறுவனத்திற்குண்டு. இந்திய அரசாங்கத்தின் தேசியப் புத்தக நிறுவனம் பல அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவியர் தமிழின் வழியாக உயர்கல்வி பயிலுவதற்காக, தமிழ்நாடு அரசினால் 1962-இல் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முப்பத்தைந்து அறிவியல் நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு, பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 450 அறிவியல் நூல்களில், பல தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் விளங்கின.
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், மீரா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார் பிரசுரம், வானதி பதிப்பகம், கலைமகள் பதிப்பகம் போன்றவை தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த முக்கியமான பதிப்பகங்கள் ஆகும்.
தமிழில் கணிப்பொறி அறிவியல்:
தமிழில் கணிப்பொறி அறிவியலைத் எழுதும் முயற்சி சென்ற நூற்றாண்டின் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். மணவை முஸ்தபா, சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கணிப்பொறி விந்தைகளைக் கதைகளில் எழுதியது மட்டுமின்றிக் கணிப்பொறி அறிவியல் குறித்துப் பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளனர். சுஜாதா கணித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சியாக ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். பத்திரிக்கைகளிலும் பொதுவான கணிப்பொறிச் செய்திகளை அவ்வப்போது எழுதிவந்தார். யுனெஸ்கோவின் கூரியர் தமிழ்ப் பதிப்பில் அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் தொடக்கக் காலந்தொட்டே கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
1993-ஆம் ஆண்டில் தினமலர் செய்தித்தாளின் வியாழன் இணைப்பான வேலைவாய்ப்புக் கல்வி மலரில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகளை வெளியிட்டனர். கணிப்பொறித் துறையில் பயனாளருக்கு உதவும் பாட விளக்கமாக முதன்முதலில் தமிழில் எடுக்கப்பட்ட முயற்சி அத்தொடர் எனலாம். கணிப்பொறி அறிவியலைக் கற்கும் ஆர்வலர்களிடையே குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே அத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து குமுதம் வார இதழ் படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி என்னும் தொடரை வெளியிட்டது. கணிப்பொறி அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுக் காடடுவதாய் அத்தொடர் அமைந்தது.
பல்வேறு வார மாத இதழ்களும் அவ்வப்போது கணிப்பொறி பற்றிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. 1994 நவம்பரில் வளர்தமிழ் பதிப்பகம், தமிழ் கம்ப்யூட்டர் என்னும் கணிப்பொறி இதழைத் தமிழில் வெளியிட்டது. கணிப்பொறித் துறைக்கென்றே தமிழில் வெளியான முதல் இதழ் என்பது மட்டுமன்று, இந்திய மொழிகளிலேயே கணிப்பொறிக்கெனத் தனித்த இதழ் வெளியிட்ட முதல்மொழி தமிழ் என்ற பெருமையும் அவ்விதழ் மூலம் கிடைத்தது எனலாம். கணிப்பொறி அறிவியல் பற்றிய பொதுவான கட்டுரைகள், குறிப்பிட்ட கணிப்பொறி இயக்க முறைமைகள் (Operating Systems), கணிப்பொறி மொழிகள் (Computer Languages), பயன்பாட்டுத் தொகுப்புகள் (Application Packages) பற்றிய கட்டுரைத் தொடர்களும் வெளியிடப் படுகின்றன. கணிப்பொறியில் பணியாற்றுவோர்க்கு ஏற்படும் சிக்கல்கள், ஐயங்கள், கேள்வி-பதில் பகுதியில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
’தமிழ் கம்ப்யூட்டர்’ இதழைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் நேரம் என்னும் இதழ் வெளியிடப்பட்டது. 1998 நவம்பர் முதல் கம்ப்யூட்டர் உலகம் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. 1999 அக்டோபர் முதல் இணையத்திற்கென்றே ஒரு தனி இதழ் இன்டர்நெட் உலகம் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. எத்தனையோ இந்திய மொழிகளில் கணிப்பொறி அறிவியலுக்கெனத் தனித்த இதழ்களே இல்லாத சூழலில் இணையத்திற்கெனத் தனித்த இதழ் தமிழில் வெளிவருவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பிப்ரவரி 2000 முதல் கணிமொழி என்னும் ஒரு மாத இதழ் வெளிவருகிறது. கணிப்பொறி, இணையம், மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை ஜனரஞ்சக நடையில் தருகின்றனர். ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இதழை ஒரு தொழில் நுட்பப் பத்திரிக்கையாக இல்லாமல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடிய வெகுஜனப் பத்திரிகையாக வழங்கி வருகின்றனர்.
கணிப்பொறி அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் மேற்கண்ட இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாகக் கணிப்பொறியின் செயல்பாடு தொடங்கி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மீத்திறன் கணிப்பொறித் தொழில்நுட்பம் (Super Computer Technology) வரையிலான அதிநவீன கணிப்பொறி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து இதழ்களுமே கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுரைகளைக் கவனமாகத் தொகுத்து வெளியிடவில்லை என்ற போதிலும், மறைமுகமாகவேனும் கணித்தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு அவை பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
-முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-8

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...