முனைவர் நா.இளங்கோ,
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே டாக்டர் பிஷ் கிறீன் போன்ற ஐரோப்பியர் களாலும் வெ.பா. சுப்பிரமணிய முதலியார் போன்ற தமிழர்களாலும் சரியான இலக்கில் பயணப்பட்ட அறிவியல் தமிழ் இருபதாம் நூற்றாண்டில் மேலும் பல மைல்கற்களைத் தாண்டி இலக்கினை நெருங்கிவந்துள்ளது.
சாமுவேல் எழுதிய மானுட மர்ம சாஸ்திரம்:
மானுட மர்ம சாஸ்திரம் நூல் 1908இல் எஸ்.சாமுவேல் என்பவரால் எழுதப்பட்டு பர்மாவிலிருந்து வெளியிடப்பட்டது. இந்நூல் பர்மாவிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு, சிசு உற்பத்தி சிந்தாமணி என்ற வேறொரு பெயரும் இடப்பட்டுள்ளது. இந்நூலில் மனித உடற்கூறு பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிறப்பு உறுப்புகளைப் பற்றிய மருத்துவமும் மகப்பேறு மருத்துவமும் இந்நூலில் 12 பாகங்களில் அறுநூறு பக்கங்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் எஸ். சாமுவேல் இரங்கூன் ஜென் ஜான்ஸ் கல்லூரியின் தலைமை ஆசிரியராவார். அவர் மேலும் மானஸ மர்ம சாஸ்திரம் என்ற தலைப்பில் மனோவசிய சாஸ்திர நூலொன்றை 272 பக்க அளவில் 1910 ஆம் ஆண்டிலும் மனோ தத்துவ அறிவியலான Hypopnotism பற்றி ஷிப்னாட்டிஸம் என்ற நூலை 1913 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் மட்டுமின்றி இரஞ்சிதபோதினி என்ற அறிவியல் இதழையும் நடத்தியுள்ளார் என்று தெரிகிறது. பர்மாவைச் சேர்ந்த எஸ். சாமுவேல் என்கிற இந்நூலாசிரியரைச் சிலர் சாமுவேல் பிஷ் கிறீன் எனத் தவறாகப் புரிந்துகொண்டு இருவரும் ஒருவரே என்ற நிலையில் குறிப்பிடுகின்றனர். இந்தச் சாமுவேல் பிஷ்கிறீனின் வேறுபட்ட ஒருவர் என்பதை இரா. பாவேந்தனின் கட்டுரையொன்று ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளது. (இரா.பாவேந்தன், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழாக்கம், 1997)
எஸ்.சாமுவேல் அவர்களின் மானுட மர்ம சாஸ்திரம் நூல் பொது மக்களுக்காகவும், மானஸ மர்ம சாஸ்திரம், ஷிப்னாட்டிஸம் என்ற இரண்டு நூல்களும் மருத்துவர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளன. மேற்சொன்ன மூன்று நூல்களும் வடமொழி கலந்த தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. புராண, இதிகாச, இலக்கிய, நாட்டுப்புற வழக்காறு முதலான சான்றுகளை முதலில் தெரிவித்துப் பின்னர் அறிவியலை எளிமையாக விளக்கும் பாணியிலேயே அவரின் அனைத்து நூல்களும் அமைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் தொடங்கிவைத்த அறிவியல் மொழிபெயர்ப்பு நூலாக்கப் பணிகள் இருபதாம் நூற்றாண்டில் வேகம் பெறத் தொடங்கின. 1901இல் சேடன் பாபு இராசகோபாலாச்சாரி என்பவர் Euclid என்ற கணிதவியல் அறிஞரின் நூலை யூகிலிட்டின் சேத்திர கணிதப் பாலபோதினி என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூல் Geometry பற்றியது. தொடர்ந்து பல்வேறு ஆங்கில அறிவியல் நூல்கள் பாடநூல்களாகவும் பொதுமக்களுக்கான நூல்களாகவும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.
1924இல் பிலிப் எல்.நெல்சன், புதிய ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் என்ற நூலை வெளியிட்டார். இந்திய நர்சுகளுக்கான பாடப்புத்தகம் ஒன்றை 1926இல் சிதம்பரநாத முதலியார் வெளியிட்டார். 1937இல் தமிழில் முடியுமா? என்ற தலைப்பில் டாக்டர் கிம்பாலி எழுதிய College Text Book of Physics என்ற நூலை மொழிபெயர்த்தார் இராசாசி. 1950 தொடக்கம் பலதுறை சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புற்றுநோய் (1957), சுகப்பிரசவம் (1958) என்ற இருநூல்களை எஸ்.இராமசாமி எழுதி வெளியிட்டார். பால் பிளாக்வுட் எழுதிய நூலொன்றை ஆற்றலோ ஆற்றல் (1961) என்ற பெயரில் தி. சு.கறுப்பண்ணன் மொழிபெயர்த்தார்.
அறிவியல் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் பெ.நா.அப்புசாமி ஆவார். அவர் இருபத்தைந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சில, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Lynn pools – Todays Science and You), அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)> ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellite)
நா.வானமாமலை 1960இல் Stephen Heynn என்பார் எழுதிய The Cosmic Age என்ற நூலை விண்யுகம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து உடலும் உள்ளமும், உயிரின் தோற்றம், உடலியல் மருத்துவ வரலாறு முதலான நூல்களை மொழிபெயர்த்துத் தமிழ் அறிவியல் வளர்ச்சிக்குப் பணியாற்றினார். புதின எழுத்தாளர் தி.ஜானகிராமன் பூமி என்னும் கிரகம் என்ற தலைப்பில் George Gamow எழுதிய A Planet called Earth என்ற நூலை மொழிபெயர்த்து 1966இல் வெளியிட்டார்.
மேலும் ரஷ்யாவிலுள்ள மீர், ராதுகா பதிப்பகங்கள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வழியாகப் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழுலகிற்கு 1970, 1980 களில் தொடர்ந்து தந்தன. அவற்றுள் சில வருமாறு,
1. மூளையை நம்பலாமா? அ.கதிரேசன், 1972
2. தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? வைத்தீஸ்வரன், 1972
3. சுற்றுப்பாதையில் விண்வெளிக் கப்பல், கி.பரமேஸ்வரன், 1980
4. விளையாட்டுக் கணிதம், ரா.கிருஷ்ணய்யா, 1981
5. அனைவருக்குமான இயற்பியல் -வெப்பம், பழனியாண்டி, 1984
6. குழந்தைகள் வாழ்க, இரா.பாஸ்கரன், 1987
7. மின்பாதுகாப்பின் அடிப்படைகள், எஸ்.சீனுவாசன், 1988
மேலே குறிப்பிட்ட நூல்கள் மட்டுமின்றி நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தொடர்ந்து பல அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தும், தமிழிலேயே உருவாக்கியும் பதிப்பித்து வருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அனைத்து அறிவியல் துறை நூல்களையும் தமிழில் வெளியிடும் நிறுவனம் என்ற பெருமை இப்பதிப்பகத்திற்கு உண்டு.
பயிற்சி மொழியான அறிவியல் தமிழ்:
அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில் 1930 ஆம் ஆண்டை ஒரு திருப்பு முனையாகவே கருதலாம். அதுவரை தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முயற்சியின் காரணமாக அறிவியல் தமிழ் நூல்கள் எழுதி வெளிவந்த நிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுநிலைப் பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழித் திட்டம் பள்ளி இறுதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது இந்த 1930ஆம் ஆண்டில்தான். முதலில் கலைப் பாடங்களையும் பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாயினர். இதனால், கலைப் பாடநூல்களும் அறிவியல் பாடநூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழில் பொதுவான அறிவியல் நூல்கள் வெளிவந்ததோடு பத்திரிக்கைகளில் அறிவியல் கட்டுரைகளும் அதிகளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவாகியது.
இதேபோல் 1960 களின் தொடக்கத்தில் கல்லூரிகளில் தமிழ்வழிப் பயிற்றல் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது தமிழ் அறிவியல் பாடநூல்களின் தேவை காலத்தின் தேவையாக மாற்றம் பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல தமிழ் அறிவியல் பாடநூல்களைத் தக்கவர்களைக் கொண்டு எழுதி வெளியிடலாயிற்று. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் முதலான அறிவியல் நூல்களோடு மருத்துவப் பாட நூல்களும் பொறியியல் சார்ந்த தொழில்நுட்ப நூல்களும் வெளிவரலாயின. இந்த வரிசையில் தமிழில் உருவாகிய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்ற இரண்டு வகையான நூல்களும் இடம்பெற்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன நூல்களின் மொழிநடையில் வடமொழிச் செல்வாக்கு குறைந்தும் நல்ல தமிழ் சொல்லாக்கங்கள் மிகுந்தும் காணப்பட்டன. பிரகிருதி சாஸ்திரம் இயற்பியலாகவும், இரசாயனம் வேதியலாகவும், விஞ்ஞானம் அறிவியலாகவும் மாற்றம் பெற்றன. அன்றைய தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களின் செல்வாக்கால் இந்த மாற்றங்கள் இயல்பாக நடைபெற்றன. பாடநூல்களைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது அறிவியல் மற்றும் பாட அறிவியல் நூல்கள் மிகுந்த அளவில் உருவாகி வெளிவரத் தொடங்கின. கடந்த இருபதாம் நூற்றாண்டில் மட்டும் தமிழில் வெளியான அறிவியல் நூல்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் மேலதிகமாயிருக்கும் என்று மதிப்பிடுவார் இராம.சுந்தரம் (தமிழ்வளர்க்கும் அறிவியல், ப.37) தொடர்ச்சியாக, அறிவியலுக்கென்றே தனிஇதழ்களும், அறிவியல் பகுதிகள் அடங்கிய பொது இதழ்களும் வெளிவரலாயின. இம்மாற்றங்களின் விளைவாகத் தமிழில் பொருத்தமான நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பல உருவாகி அறிவியல் தமிழை வளப்படுத்தின.
தமிழில் கலைச்சொற்கள்
1935 வரை தமிழில் எழுதப்பட்ட நூல்களாயினும் கட்டுரைகளாயினும் அவை தரமான நல்ல தமிழிலே அமைந்தவை எனக் கூறுவதற்கில்லை. கிரந்த எழுத்துக்களோடு கூடிய சமஸ்கிருதச் சொற்களும் ஆங்கிலச் கலைச்சொற்களின் ஒலிபெயர்ப்பும் அதிகளவில் கலந்து வெளிவந்தன. 1935 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நல்ல தமிழை, தனித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் எனும் வேட்கை அழுத்தமாக எழுந்தது. புதிய கலைச்சொற்களைத் தனித் தமிழில் உருவாக்கும் முயற்சிகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. தமிழில் அறிவியலைக் கூற முற்பட்ட அதே சமயத்தில், அறிவியல் கலைச்சொற்களைப் பற்றிய சிந்தனையும், இம்முயற்சியில் ஈடுபட்டோரிடையே இருந்து வந்தது.
தமிழ்க் கலைச்சொல்லாக்க முயற்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வு 1932 இல் நடைபெற்றது. இவ்வாண்டில் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழுவொன்றை அமைத்து அக்குழுவின் சார்பில் கலைச்சொல் பட்டியல் ஒன்றனை வெளியிட்டது. உடலியல், நலவழி, வேதியியல், வாணிபவியல், நிலவியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்கை விஞ்ஞானம், இயற்பியல் பாடங்களுக்கான சுமார் 7400 சொற்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதமாகவும், ஆங்கிலமாகவும் இருந்தன. சில மிகவும் நீண்ட தொடர்வடிவிலான சொல்லாக்கமாயிருந்தன. சான்றாக: Analytical Chemistry –விபேதன ரஸாயன நூல், Census Report –குலஸ்திரீ புருஷபாலவிருத்த ஆயவ்ய பரிமாண பத்திரிக்கை. இதே கலைச்சொற்கள் 1968 இல் வெளியான மற்றொரு பட்டியலில் பகுப்பாய்வு வேதியல் என்றும் மக்கள்தொகை அறிக்கை என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திரவப் பதார்த்தம், திடப்பொருள், வாயு, ஆகர்ஷண சக்தி, பூகம்பம், அஸ்தி, வியாதி, வைத்திய சாஸ்திரம், நிவோஷம், கஷம்ணநாடி, பூகோளம், கிரகம் என்று வழங்கப்பட்ட கலைச்சொற்கள் அதே நூற்றாண்டின் பிற்பாதியில் முறையே நீர்மம், திண்மம், வளிமம், ஈர்ப்புச்சக்தி, நிலநடுக்கம், எலும்பு, நோய், மருத்துவ அறிவியல், மிகை வளர்ச்சி, தண்டுவடம், புவியியல், கோள் என வழங்கப்படலாயின. தமிழில் அறிவியல் துறை மிகவேகமான வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக இயல்பான தமிழ்க் கலைச்சொல்லாக்கங்கள் உருவாகி நிலைபெற்று வருகின்றன என்பதற்கு மேலே காட்டிய பட்டியல் ஒரு சான்றாகும்.
இருபதாம் நூற்றாண்டு அறிவியல் இதழ்கள்:
இருபதாம் நூற்றாண்டின் அறிவியில் வளர்ச்சி என்பது அறிவியல் நூல்களை மட்டும் சார்ந்தில்லாமல் அறிவியல் இதழ்களைச் சார்ந்தும் இருந்தமை கண்கூடு. இந்நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான அறிவியல் இதழ்கள் அறிவியலின் துறைகள் தோறும் தோற்றம் பெற்றன. சில தளர்நடையிட்டன, சில வீறுநடை போட்டன. வீறுநடை போட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவியல் இதழ்கள் சிலவற்றைக் காண்போம்.
கலைக்கதிர்:
புத்தம் புதிய அறிவியல் செய்திகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்னும் உயரிய நோக்கில் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் 1948 ஆம் ஆண்டில் கலைக்கதிர் என்ற திங்களிதழைத் தொடங்கினார். தொடக்கம் முதல் 1984 ஆம் ஆண்டுவரை அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் பல்சுவை இதழாகவே வெளிவந்தது இவ்வேடு. அதன்பின் மாற்றம் பல பெற்று அறிவியல் செய்திகளை மட்டும் தாங்கிவரும் முழுமையான அறிவியல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தக்க விளக்கப் படங்களுடனும் தனித் தமிழிலும் பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்வ+ட்டும் முறையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கலைக்கதிர் அறிவியல் வளர்ச்சி மலர், அணுமலர் எனச் சிறப்பு மலர்களையும் வெளியிட்டு அறிவியல் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளது.
பல்லாயிரம் அறிவியல் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிய பெருமைக்குரியது கலைக்கதிர் இதழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலைக்கதிர் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உயிரியல், பயிரியல், விண்ணியல், உளவியல், வேளாண்மை, மானிடவியல் முதலான பல்வேறு அறிவியல் கட்டுரைகளை அத்துறை வல்லுநர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு வருகிறது. அது கலைச் சொல்லாக்கத்தை முன்முயற்சி செய்து வெளியிட்டுத் தமிழ்ச் சொல்வளத்தைப் பெருக்கியது. 1966-ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கலைக்கதிர் இதழில் வந்த கட்டுரைகள் சில வருமாறு: பால்பாதையும் சூரியமண்டலமும், நீரிழிவின் வரலாறு, மண்ணில்லா வேளாண்மை, நமது உடல், விஞ்ஞானப் புதுமைகள், திரைப்படத்தில் ஒலியின் பங்கு, கடல் நீரிலிருந்து யுரேனியம் போன்ற கட்டுரைகள் தெளிவாக விளக்கப்படங்களுடனும் வண்ணப் படங்களுடனும் வெளியிடப்பட்டன. கட்டுரைகள் நல்ல தமிழ்நடையில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் இருந்தன.
இவ்விதழின் மற்றொரு சிறப்பம்சம் பல்வேறு அறிவியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்களை, அறிவியல் எழுத்தாளர்களாக மாற்றிய பெருமையாகும். இதற்காக மறைந்த டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் மெற்கொண்டிருந்த இடைவிடா முயற்சியும் இத்துறையில் கொண்டிருந்த ஆர்வப் பெருக்கமும் என்றும் போற்றத்தக்கன. கலைக்கதிர் இதழ் அறிவியல் தமிழாக்கம், தழுவல், மூலமாக எழுதுதல் ஆகிய மூவகையிலும் அறிவியல் எழுத்தாளர்கட்கு ஆக்கமான பயிற்சிக் களமாகவே கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக விளங்குகிறதெனலாம்.
யுனஸ்கோ கூரியர்:
தமிழக அளவில் மட்டுமல்லாது, சர்வசே அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும், பொருட் செறிவோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தி, நிலைநாட்டிய பெருமை யுனெஸ்கோ கூரியர் எனும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். இவ்விதழ் 34 உலக மொழிகளில் வெளிவருகிறது. இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டும் வெளிவரும் இவ்விதழ் 1967 ஜுலை முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இது கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு இதழாக அமைந்திருந்தபோதிலும், மிக அதிக அளவில் இதில் இடம்பெறுவன அறிவியல் கட்டுரைகளேயாகும். இவ்விதழில் இடம்பெறும் அறிவியல் கட்டுரைகள் தற்கால அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் அவ்வத் துறை சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவைகள் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேனாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இத்தகு அரிய வாய்ப்பைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் இதுவேயாகும். இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரையின் அளவிலேயே தமிழ் மொழிப்பெயர்ப்புக் கட்டுரையும் அமைய வேண்டுவது தவிர்க்க முடியாததாயினும் மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்கட்கு ஏற்படா வண்ணம், மூலமாகத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை போன்று தர வேண்டியுள்ளதால் புதிய உத்திகளைக் கையாண்டு அறிவியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வாறு புதிய புதிய மொழிபெயர்ப்பு உத்திகளைக் கண்டறிந்து செயல்படுத்த ஏற்ற களமாகத் தமிழில் இவ்விதழ் அமைந்துள்ளதெனலாம்.
கூரியர் இதழ் வாயிலாகத் தமிழுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் ஆக்கம் புதிய புதிய கலைச்சொற்களின் தோற்றமாகும். பெரும்பாலும் ஒலிபெயர்ப்போ அன்றி சமஸ்கிருதச் சொற்களோ அல்லாது, தனித் தமிழில் கலைச்சொல்லாக்கம் இதழ்தோறும் செய்யப்படுகின்றன. இவ்வகையில் கடந்த இருபதாண்டுகளில் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் கூரியர் இதழுக்கென உருவாக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தமிழின் தனித்திறனை உலகுக்குணர்த்துவதாக உள்ளது.
துளிர் அறிவியல் சிறுவர் இதழ்:
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுவர்களுக்கென்றே சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே அறிவியல் மாத இதழ் துளிர் ஆகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று முதல் துளிர் இதழை வெளியிட்டன. சிறுவர்களின் உள்ளத்தில் அறிவியல் உணர்வை ஊட்ட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அறிவியல் செய்திகளைத் தொகுத்துத் தருவதோடு யுரேகா, அறிவியல் கேள்வி பதில் போன்ற பகுதிகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை படித்து இன்புறும் வண்ணம் வெளியிட்டு வருகின்றது.
அறிவியல் மாத இதழ் என்றால் வெறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவஇயல், வானவியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளியிடுவது என்றில்லாமல் புவியியல், சுற்றுச்சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன. பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கியப் பணி. அறிவியலுக்குப் புறம்பான வி~யங்கள், மூடநம்பிக்கைகள் இவற்றைச் சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது. பாடப்புத்தகத் தன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிகக் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலைத் தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்துப் புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. கதை, கட்டுரை, படக்கதை, துணுக்கு, கேள்வி பதில், பேட்டி, புதிர், படங்கள், பயிற்சி, விளக்கப்படம், பரிசோதனைகள் ஆகிய வடிவங்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதழ்கள் மட்டுமன்றி நூற்றுக்கான தமிழ் இதழ்கள் அறிவியல் வளர்ச்சிக்குத் தம் பங்குப் பணியை ஆற்றிவருகின்றன. அவற்றுள், அறிவியல் கட்டுரைகளை அவ்வவ்போது வெளியிடும் இதழாகத் தினமணி இதழ் விளங்குகிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகளை, மொழிபெயர்ப்பாகவும் மூலமாகவும் எழுதி வெளியிடுவதோடு, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளை அவ்வத்துறை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாகவும் அவ்விதழ் அமைந்து வருகிறது. மற்றும் குன்றக்குடி அடிகளாரின் முயற்சியினால் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக அறிவியல் இதழும் இளம் விஞ்ஞானி இதழும் அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான செந்தமிழ்ச் செல்வி, இலக்கிய இதழ்தான் ஆயினும் இவ்விதழில் அவ்வப்போது அறிவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கரின் அறிவியல் பூர்வமான ஆங்கிலக் கட்டுரைகள், க. ப.சந்தோஷம் என்பவரால் தொடர்ந்து சீராக மொழி பெயர்க்கப்பட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தன. ஆனந்தவிகடன் இதழ் பொதுமக்களுக்குரிய பொழுதுபோக்கு இதழ்தான் என்றாலும் மருத்துவம் தொடர்பான ஆறிலிருந்து அறுபது வரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை என நம் உடற்கூறு தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இளைய தலைமுறையினர் அறிவியற் கருத்துகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இன்று வாய்ப்புகள் பெருகிவிட்டன. இன்று அறிவியலின் தேவை மிகுந்துவிட்டது. அதற்கு ஏற்ப அறிவியல் செய்திகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு இதழ்களுக்கு நிறையவே உண்டு. எனவே அறிவியல் செய்திகள் அடங்கிய சில பக்கங்களையேனும் இப்போது நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் தினத்தந்தி, தினமலர், தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது அறிவியல் தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன. நம் இந்திய நாட்டின் விண்வெளிக் கூடங்கள் விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோள்கள் பற்றியும், வேளாண்மை வளர்ச்சி குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும், நீர்மேலாண்மை, எய்ட்ஸ் நோய், உடல் நலம், மகப்பேறு ஆகியன பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு அறிவியல் பார்வையை மக்களிடம் வளர்த்து வருகின்றமை போற்றத்தக்கதாகும்.
அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மின்னணுச் சாதனங்கள் பற்றியும், காற்றாலைகள் குறித்தும் வெளிவரும் அறிவியல் கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன. தினமலர் ஞாயிறு இதழில் மதுரை அப்பொல்லோ மருத்துவமனையின் சார்பில் சர்க்கரை நோய், இதயக் கோளாறு, எலும்பு முறிவு போன்ற நோய்களின் தன்மைகளை எடுத்துக்கூறி அவற்றைத் தடுப்பது பற்றியும் அவற்றிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தினமணி நாளிதழில் மூட்டுவலி தொடர்பான மருத்துவம் குறித்த கட்டுரை முழுப்பக்க அளவில் வந்தமை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு உரியது. தினமணியின் தலையங்கப் பக்கத்தில் அவ்வப்போது அறிவியல் வல்லுநர்கள் எழுதும் அறிவியல் சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்கள்
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1938 ஆம் ஆண்டிலேயே தொடக்க முயற்சிகளை மேற்கொண்டது. கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் போதிக்கும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரு தொகுதிகளைத் தமிழில் தயாரித்து வெளியிட்டது. அவ்வாறே 1941 ஆம் ஆண்டில் இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளையும், 1942 ஆம் ஆண்டில் உயிரியில் (Biology) நூலையும் தமிழில் வெளியிட்டது. இவை ஐந்தும் நல்ல தமிழில் வெளிவந்த தரமான வெளியீடுகளாகும்.
சென்னைப் பல்கலைக்கழகம் அறிவியல் நூலை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 1938இல் அப்போதைய சென்னை இராஜதானிக்கான பரிசுத் திட்டத்தை அறிவித்து, தமிழ் மொழியில் மட்டுமல்லாது தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் வெளியிடும் சிறந்த அறிவியல் நூல்களுக்குப் பரிசளித்து ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இதனால் அறிவியலைத் தமிழில் தரவிழையும் எழுத்தாளர்களுக்குப் புதிய உற்சாகம் ஏற்பட வழியேற்பட்டது. ஈ.த. ராஜேஸ்வரி போன்ற அறிவியல் எழுத்தாளர்கள் அறிவியல் நூல்களை எழுதிப் பரிசு பெற இயன்றது.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பல்வேறு வழிகளில் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. ஒரு புறத்திலே கலைச்சொற்களின் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறது. மறுபுறத்திலே அக்கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் நூல்களை எழுதுமாறு அவ்வத்துறை வல்லுநர்களைத் தேர்வு செய்து, அப்பணியை ஒப்படைக்கிறது. இதனால், அறிவியல் தமிழ் நூல்கள் பெருமளவில் வெளிப்பட வாய்ப்பேற்படுகிறது. இந்நூல்கள் கல்லூரி மட்டத்தில் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்ட மாணவர்கட்குப் பயன்படுவதைக் காட்டிலும் அவ்வத்துறை அறிஞர்கட்குத் தக்க ஆதார நூல்களாக (Source Books) இவை அமைகின்றன எனலாம். இன்றைய நிலையில் அறிவியலைப் பொறுத்தவரையில் தமிழில் ஒவ்வொரு துறைக்கும் நிறைய ஆதார நூல்கள் தேவைப்படுகின்றன. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அறிவியல் நூற்பணி அமைந்து வருகிறது. அறிவியல் கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் தமிழ்ப் பல்கலைக் கழகம் பெருவெற்றி பெற்றுள்ளது. அத்துடன், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு சிக்கல்களை அறிவியல் தமிழ் அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்ட கருத்தரங்குகள் மூலமாக அடிக்கடி விவாதித்து ஆக்கப+ர்வமான முடிவுகளைப் பெறவும் வழியமைத்து வருகிறது.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்க வழிகளைக் காணுவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் களஞ்சியம் முத்திங்கள் இதழ், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான சிக்கல்களை, துறைவல்லுநர்களைக் கொண்டும் தமிழறிஞர்களைக் கொண்டும் விவாதித்துத் தீர்வு காணும் வழியாயமைந்து வருகிறது. நல்ல தமிழில் அறிவியல் -தொழில்நுட்பக் கட்டுரைகளை எவ்வாறு எழுதலாம் என்பதற்கு முன்னோடியாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகளை இதழ்தோறும் படைத்து வெளியிட்டு வருகிறது. (மணவை முஸ்தபா, காலம் தேடும் தமிழ், பக். 52-53)
இப்பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றித் தமிழகத்தில் பல்வேறு அறிவியல் அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகப் பின்வரும் அமைப்புகளைக் குறிப்பிடலாம்.
1. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (சென்னை, புதுச்சேரி)
2. சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)
3. மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை)
4. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் (தஞ்சாவூர்)
5. தமிழக அறிவியல் பேரவை (காரைக்குடி)
6. வளர்தமிழ் மன்றம் (அண்ணா பல்கலைக் கழகம்)
மேற்சொன்ன அறிவியல் இயக்கங்கள் ஒவ்வொன்றும் அறிவியல் தமிழ்வளர்ச்சிக்கு அவ்வப்போது கருத்தரங்குகள், மாநாடுகள் முதலானவற்றை நடத்தி அதில் வாசித்து விவாதிக்கப்படும் கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இயக்கம் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகமாகும்.
1987இல் தொடங்கப்பட்ட இக்கழகம் இதுவரை பதினாறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. கருத்தரங்கின் மையப் பொருளாகப் பொதுஅறிவியல், பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், வேளாண்மை, கலைச்சொல்லாக்கம் முதலானவை அமையும். கருத்தரங்கில் வாசிக்கப்படும் அனைத்துக் கட்டுரைகளையும் நூலாக்கி வளர் தமிழில் அறிவியல் என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டு வருகிறது இக்கழகம். இதுவரை இருபத்து மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவற்றுள் 1500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்று அறிவியல் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன. பண்டைய தொழில்நுட்ப அறிவியல் முதல் இன்றைய தொழில்நுட்ப அறிவியல் வரையிலான ஒரு தொடர்ச்சியான வரலாற்று அறிவை இக்கருத்தரங்குகள் வழங்குகின்றன. நுட்பமான அறிவியல் செய்திகளைக் கூடத் தமிழில் எளிமையாகக் கூறமுடியும் என்பதற்கு இக்கருத்தரங்குகள் சான்றாக அமைகின்றன. சில கட்டுரைகள் அறிவியல் தமிழின் அமைப்பு பற்றியும் கலைச்சொற்கள் பற்றியும் மொழியியல் பார்வையில் வெளிப்படுத்தின. அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் பணி அளப்பரியது.
தமிழ் அறிவியல் வளர்ச்சியில் பதிப்பகங்களின் பங்கு:
1954-இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமன்றி, தமிழாக்கமாகவும் பல அறிவியல் நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சராசரிக் கல்வி கற்றவரும் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எளிய நடையில் விளக்கப் படங்களுடன் வெளியான மொழிபெயர்ப்பு நூல்கள் தரமானவையாக உள்ளன. பற்றவைப்பு முதல் மருந்தியல் ஈறாக அனைத்து அறிவியல் துறை நூல்களையும் வெளியிட்ட பெருமை இந்நிறுவனத்திற்குண்டு. இந்திய அரசாங்கத்தின் தேசியப் புத்தக நிறுவனம் பல அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவியர் தமிழின் வழியாக உயர்கல்வி பயிலுவதற்காக, தமிழ்நாடு அரசினால் 1962-இல் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முப்பத்தைந்து அறிவியல் நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு, பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 450 அறிவியல் நூல்களில், பல தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் விளங்கின.
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், மீரா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார் பிரசுரம், வானதி பதிப்பகம், கலைமகள் பதிப்பகம் போன்றவை தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த முக்கியமான பதிப்பகங்கள் ஆகும்.
தமிழில் கணிப்பொறி அறிவியல்:
தமிழில் கணிப்பொறி அறிவியலைத் எழுதும் முயற்சி சென்ற நூற்றாண்டின் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். மணவை முஸ்தபா, சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கணிப்பொறி விந்தைகளைக் கதைகளில் எழுதியது மட்டுமின்றிக் கணிப்பொறி அறிவியல் குறித்துப் பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளனர். சுஜாதா கணித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சியாக ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். பத்திரிக்கைகளிலும் பொதுவான கணிப்பொறிச் செய்திகளை அவ்வப்போது எழுதிவந்தார். யுனெஸ்கோவின் கூரியர் தமிழ்ப் பதிப்பில் அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் தொடக்கக் காலந்தொட்டே கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
1993-ஆம் ஆண்டில் தினமலர் செய்தித்தாளின் வியாழன் இணைப்பான வேலைவாய்ப்புக் கல்வி மலரில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகளை வெளியிட்டனர். கணிப்பொறித் துறையில் பயனாளருக்கு உதவும் பாட விளக்கமாக முதன்முதலில் தமிழில் எடுக்கப்பட்ட முயற்சி அத்தொடர் எனலாம். கணிப்பொறி அறிவியலைக் கற்கும் ஆர்வலர்களிடையே குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே அத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து குமுதம் வார இதழ் படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி என்னும் தொடரை வெளியிட்டது. கணிப்பொறி அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுக் காடடுவதாய் அத்தொடர் அமைந்தது.
பல்வேறு வார மாத இதழ்களும் அவ்வப்போது கணிப்பொறி பற்றிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. 1994 நவம்பரில் வளர்தமிழ் பதிப்பகம், தமிழ் கம்ப்யூட்டர் என்னும் கணிப்பொறி இதழைத் தமிழில் வெளியிட்டது. கணிப்பொறித் துறைக்கென்றே தமிழில் வெளியான முதல் இதழ் என்பது மட்டுமன்று, இந்திய மொழிகளிலேயே கணிப்பொறிக்கெனத் தனித்த இதழ் வெளியிட்ட முதல்மொழி தமிழ் என்ற பெருமையும் அவ்விதழ் மூலம் கிடைத்தது எனலாம். கணிப்பொறி அறிவியல் பற்றிய பொதுவான கட்டுரைகள், குறிப்பிட்ட கணிப்பொறி இயக்க முறைமைகள் (Operating Systems), கணிப்பொறி மொழிகள் (Computer Languages), பயன்பாட்டுத் தொகுப்புகள் (Application Packages) பற்றிய கட்டுரைத் தொடர்களும் வெளியிடப் படுகின்றன. கணிப்பொறியில் பணியாற்றுவோர்க்கு ஏற்படும் சிக்கல்கள், ஐயங்கள், கேள்வி-பதில் பகுதியில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
’தமிழ் கம்ப்யூட்டர்’ இதழைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் நேரம் என்னும் இதழ் வெளியிடப்பட்டது. 1998 நவம்பர் முதல் கம்ப்யூட்டர் உலகம் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. 1999 அக்டோபர் முதல் இணையத்திற்கென்றே ஒரு தனி இதழ் இன்டர்நெட் உலகம் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. எத்தனையோ இந்திய மொழிகளில் கணிப்பொறி அறிவியலுக்கெனத் தனித்த இதழ்களே இல்லாத சூழலில் இணையத்திற்கெனத் தனித்த இதழ் தமிழில் வெளிவருவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பிப்ரவரி 2000 முதல் கணிமொழி என்னும் ஒரு மாத இதழ் வெளிவருகிறது. கணிப்பொறி, இணையம், மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை ஜனரஞ்சக நடையில் தருகின்றனர். ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இதழை ஒரு தொழில் நுட்பப் பத்திரிக்கையாக இல்லாமல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடிய வெகுஜனப் பத்திரிகையாக வழங்கி வருகின்றனர்.
கணிப்பொறி அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் மேற்கண்ட இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாகக் கணிப்பொறியின் செயல்பாடு தொடங்கி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மீத்திறன் கணிப்பொறித் தொழில்நுட்பம் (Super Computer Technology) வரையிலான அதிநவீன கணிப்பொறி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து இதழ்களுமே கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுரைகளைக் கவனமாகத் தொகுத்து வெளியிடவில்லை என்ற போதிலும், மறைமுகமாகவேனும் கணித்தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு அவை பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
-முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-8
1 கருத்து:
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், அறிவியல் இயக்கங்கள் - இவைகளின் சேவைகள் மகத்தானது... பல தகவல்களுக்கு நன்றி ஐயா...
கருத்துரையிடுக