வியாழன், 30 ஏப்ரல், 2009

வண்ணத்துப் பூச்சி – மாநி நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

வண்ணத்துப் பூச்சி – மாநி
அணிந்துரை


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

தமிழில் பரவலாகக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் அறியப்படும் இலக்கிய வகையே ஆய்வாளர்களால் சிறுவர் இலக்கியம் என்று குறிப்பிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியம் என்று இந்தவகை இலக்கியங்களை அழைப்பதுதான் பொருத்தமுடையது. பதினைந்து வயது வரையிலானவர்களை யாரும் குழந்தைகள் என்று குறிப்பிடமாட்டார்கள், அவர்கள் சிறுவர்களே. இத்தகுச் சிறுவர்களுக்காகப் பாடப்படும் இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள் தானே.
சிறுவர் இலக்கியம் சிறுவர்கள் பாடுவது, சிறுவர்களைப் பற்றிப் பாடுவது, சிறுவர்களுக்காகப் பாடுவது என மூன்று வகைப்படும். மேற்கூறிய மூன்று வகைகளில் சிறுவர்கள் பாடுவது என்றவகை இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் வருகையால் பெரிதும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் கிராமப்புறங்களில் சிறுவர்கள் பாடிவந்த நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், மொழிப் பயிற்சி எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் காணாமல் போய் மண்ணுக்கு அந்நியப்பட்ட நர்சரி ரைம்ஸ்களாக மாறிவிட்டன.

இரண்டாவது வகையாகிய சிறுவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழில் பாடப்படவே இல்லை என்று கூறலாம். இந்தவகை இலக்கியங்களை உருவாக்க அதிக உற்றுநோக்கலும் உளவியல் கல்வியும் அவசியம். எப்பொழுதும் நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களால் இது சாத்தியமில்லை.
மூன்றாவது வகையாகிய சிறுவர்களுக்காகப் பாடுவது என்ற வகையில் நிறைய சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஆனால் இவ்வகைச் சிறுவர் இலக்கியங்களில் அனைத்துவகை இலக்கிய வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் கவிதை இலக்கியம் படைப்பவர்களே அதிகம். சிறுவர்களுக்கான நாடகம், நாவல் கட்டுரை இலக்கியங்களைப் படைப்பவர்கள் தமிழில் அதிகமில்லை. சிறுவர் கவிதை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களில் தனித்தன்மை உடைய படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது. பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் நூல் எண்ணிக்கை, நூலக விற்பனை, பரிசு, விருது போன்ற வாய்ப்புகளுக்காக எழுதுவதுதான் அதிகம். தனித்தன்மை அற்ற இவ்வகைப் படைப்புகள் ஒன்றைப் பார்த்து ஒன்று எனப் போலச் செய்தலில் உருவாக்கப் பட்டவை.
தமிழில், இத்தகு சிறுவர் இலக்கியச் சூழலில் கவிஞர் மாநி (மார்க்ரெட் நிக்கோலஸ்) அவர்களின் வண்ணத்துப் பூச்சி சிறுவர்களுக்கான கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். மாநி அவர்களும் வாழையடி வாழையெனவரும் தமிழ்க் கவிஞர் கூட்டத்தில் ஒருவராகக் கலந்துகொண்டார். தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையில் மேலும் ஒரு பெண்கவிஞர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
சங்ககாலம் தொடங்கி காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எனத் தொடர்ச்சியான பெண்கவிதை மரபுத் தொடர்ச்சி தமிழில் உண்டு. நாட்டுப்புறங்களில் எண்ணிலடங்காத் தாலாட்டுப் பாடல்களைப் படைத்து மகிழும் பெண்கள் ஏட்டிலக்கியங்களில். சிறப்பாகச் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் அதிகப் பங்களிப்பைச் செய்யாதது வியப்பாகத்தான் உள்ளது. தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாநி தொடங்கி வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் சிறுவர் இலக்கியங்களின் பக்கம் தங்கள் படைப்புப் பார்வையைத் திருப்ப வேண்டுமென்பது நமது அவா!.

கவிஞர் மாநி அவர்களின் வண்ணத்துப் பூச்சி நூலைக் கவிதைத் தொகுப்பு என்று குறிப்பிடுவதை விட பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாய் இpருக்கும். ஏனெனில் வருக வருகவே! என்ற முதல் பாடல் தொடங்கி அறிவுரை கேளாய்! என்று முடியும் ஐம்பத்தொன்றாம் பாடல் வரையிலான அனைத்துமே இசையோடு பாடுவதற்கேற்ற வகையில் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சிறுவர் பாடல்களுக்கே உரிய மரபை ஒட்டி கவிஞர் மாநியும் சில அறிவுரைப் பாடல்கள், சில விலங்குப் பாடல்கள், தலைவர்கள் குறித்தப் பாடல்கள் சில என்ற மரபான தலைப்புகளிலேயே தம் நூலை அமைத்துச் செல்கிறார் என்றாலும் சில பாடல் தலைப்புகள் வண்ணத்துப் பூச்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்றன. குறிப்பாக வாழ்வுண்டு!, வாழ்வு காண்போம்!, வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!, வாழ்க்கை முறை அறிந்திடு! முதலான தலைப்புகளைக் குறிப்பிடலாம். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுவர்கள் சென்ற நூற்றாண்டுச் சிறுவர்களைப் போலில்லை. அவர்கள் இன்றைய ஊடகச் சூழலில் மிகவும் மாற்றம் பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுக்கு வெறும் பொழுது போக்குப் பாடல்கள் மட்டும் போதா, வாழ்க்கை குறித்த சரியான புரிதலும் அவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தே கவிஞர் மாநி அவர்கள் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை தொடர்பான பாடல்களை இணைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பகையை அறுக்கப் போரிடு
பாய்ந்து சென்று வென்றிடு
வகையாய் வாழ்வை வகுத்திடு
வாழும் வரையில் உயர்ந்திடு
(மாநி, அறிவுரை கேளாய்!)

மேலே இடம் பெற்றுள்ள பாடலைப்போல் அறிவுரைப் பாடல்கள் பலவற்றிலும் புதிய புதிய உள்ளடக்கங்களோடு கவிஞர் மாநி படைத்துள்ள பாடல்கள் பொதுநிலையில் பார்ப்பவர்களுக்கு இவை சிறுவர் பாடல்களின்; உள்ளடக்கங்கள் தாமா? என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இன்றைய சிறுவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி வாழ்க்கைச் சூழல் இவைகளோடு பொருத்திப் பார்த்தால் இவ்வகை உள்ளடக்கங்களின் பொருத்தப்பாடு புலப்படும்.

சமூகம் இரண்டு வகையான உழைப்பாளிகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. இரண்டு வகையான உழைப்புகளுமே சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஆனால் மக்கள் மூளை உழைப்புக்குத் தருகிற அங்கீகாரத்தையோ மதிப்பையோ உடல் உழைப்புக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் தருவதில்லை. உடலுழைப்பு, வியர்வை, அழுக்கு இவைகள் குறித்துச் சமூகத்தின் நடுத்தட்டு மக்கள் ஒருவகை அசூயையே கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே உடலுழைப்புக்கு எதிரான மனநிலையிலேயே வளர்க்கின்றனர். வியர்வை வராத அழுக்கடைய வாய்ப்பில்லாத பணிகளையே தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும், அதுவே சமூகத்தில் உயர்ந்த பணி என்று நினைக்கும் பெற்றோர் இதே மனநிலையைப் பிள்ளைகள் பெறும்படியாக மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் டாக்டராகவோ எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பதிலேயே அவர்கள் இலக்கு மையப்படுத்தப்படுகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆங்கில வழிக் கல்வி, ரேங்க் போன்ற சில குறுகிய வட்டங்களுக்குள்ளேயே நடுத்தட்டு மக்களின் சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. கவிஞர் மாநி இவ்வகை மாயைகளை எல்லாம் போட்டு நொறுக்குகின்றார்.

வாழ வேண்டும் புறப்படு!
வளர வேண்டும் புறப்படு!
வருவாய் கொள்ளப் புறப்படு!
வருந்தி உழைக்கப் புறப்படு!
வெற்றி கொண்டு புறப்படு!
வேர்வை சிந்தப் புறப்படு!
(மாநி, புறப்படு தம்பி)

விளையும் அறிவில் விருப்பங்கொள்!
வேர்வை சிந்த விருப்பங்கொள்!
(மாநி, விருப்பங்கொள்வாய்)

மூளை உழைப்புக்கு இணையாக, இல்லை ஒரு படி மேலாக உடலுழைப்பைப் போற்றுகின்றார் கவிஞர். உடலுழைப்பும் வியர்வையும் மாண்புடையனவாகக் கவிஞரால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் மனதில் இக்கருத்து விதைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

உழவு செய்யும் உழவன்!
ஊரைக் காக்கும் தலைவன் !
(மாநி, உழவனைப் போற்றிடு)

என்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாம் உழவனை ஊரைக் காக்கும் தலைவன் என வருணிக்கும் கவிஞரின் சமூகப் பார்வை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
வண்ணத்துப் பூச்சி என்ற இத்தொகுப்பில் நல்ல பாடல்கள் பல தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டு மனநிறைவளிக்கின்றன. விருப்பங்கொள்வாய்!, வாழ்வு காண்போம்!, இயற்கை!, ப+க்கள் தெரிந்திடு!, படிப்பே உலகம்! முதலான பாடல்களை அந்த வகையில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். படிக்கப் படிக்க இன்பம் தரும் பாடல்கள் அவை.

ஆடும் கடலும் அருவி நீரும்
கூடும் நதியும் உயிரைக் காக்கும்!
பாடும் குயிலும் ஆடும் மயிலும்
ஆடும் மலரும் அழகைச் சேர்க்கும்

சிட்டாய்ப் பறக்கும் குருவியும் புறாவும்
பட்டான், தட்டான் யாவும் இங்கே
பட்டுப் போன்ற இனிமை யாகும்
விட்டு விலகாக் காட்சி என்போம்!

கொட்டும் மழையும் குட்டை குளமும்
வட்டப் பாதையின் வளைவும் நெளிவும்
உயர்ந்த மலையும் உறையும் பனியும்
வயல்வெளி பசுமையும் வளமை ஆகும்
(மாநி, இயற்கை)

கவிஞர் மாநி தீட்டியுள்ள இயற்கை அழகோவியம் இது.
எளிய இனிய தமிழ்ச் சொற்கள், சந்த நயம், மரபுத் தொடர்ச்சி, புதிய உள்ளடக்கங்கள், சமுதாயச் சிந்தனைகள் என்று எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கும் வண்ணத்துப் ப+ச்சி என்ற இப்பாடல் தொகுப்பு நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு புதிய வரவு. கவிஞர் மாநி தொடர்ந்து பல நல்ல படைப்புளை உருவாக்கி தமிழுலகிற்கு அணி சேர்க்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்


என்பார் ஒளவையார். தொடர்ந்து பழகுவதால் எதுவும் சாத்தியமாகும், எளிமையாகும். கவிஞர் மாநி அவர்களும் தொடர்ந்து கவிதை எழுதிப் பழகப் பழக அவருக்கும் கவிதை சாத்தியமாகும் எளிமையாகும்.

வாழ்த்துக்களுடன்
நா.இளங்கோ
14-04-2009
அம்பேத்கர் பிறந்த நாள்

வெள்ளி, 27 மார்ச், 2009

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். மிகச் சாதாரண அரசுப் பணியில் தம் வாழ்க்கையைத் தொடங்கி தம் இடையறாத முயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் தமிழாசிரியர், கல்லூரிப் பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர் எனத் தம்மை உயர்த்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழின் உயர்வுக்கும் தளராது உழைத்தவர். உரைவேந்தர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தினரால் பாராட்டப்படும் தனிச்சிறப்பிற்கு உரியவர்.

ஒளவை சு.துரைசாமி வாழ்க்கைக் குறிப்பு:

ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் துரைசாமி. ஒளவையார் குப்பம் என்ற ஊர்ப்பெயரின் அடையாளமே சு.துரைசாமி பெயருக்கு முன்னொட்டாக அமைந்து ஒளவை சு. துரைசாமி என்று வழங்கலாயிற்று. உள்ளுரில் தொடக்கக் கல்வியைக் கற்ற ஒளவை, திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் கல்வியைத் தொடர இயலாமல் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணி அவருக்கு நிறைவளிக்காதலால் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார். ஒளவை சு.துரைசாமியின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடைய குடும்பம். எனவே உரைவேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் ஒளவைக்குத் தமிழறிவு ஊட்டினார். அவரிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படி மற்றும் ஏட்டுப்பிரதிகளை உரைவேந்தர் ஆராயும் திறன் பெற்றிருந்தார்.

தமிழ் ஆர்வம் கொண்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் ஒளவை துரைசாமியின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப் புலமை ஒளவைக்கு உரம் சேர்த்தது. 1925 முதல் 1928 வரை கரந்தையில் ஒளவை சு.துரைசாமி தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். ஒளவை சு.துரைசாமி அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) உலோகாம்பாள் ஆவார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து மிகச்சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம், காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி ஒளவை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதினார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா? என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் அம்மொழி இலக்கியங்கள், வரலாறு, தத்துவம் முதலான புதிய துறைகள் ஒளவைக்கு அறிமுகம் ஆயின.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் ஒளவை சு. துரைசாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். ஒளவை சு. துரைசாமி அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.

ஒளவை சு. துரைசாமி அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் எழுதிய சங்க இலக்கிய உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரைநூல்கள் வெளிவந்ததால் உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார்.

ஒளவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும்முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழா ஆண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலப்படப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தமிழ்ப்பணி, சமயப்பணி இரண்டையும் தம்மிரு கண்கள் எனப் போற்றிப் புரந்த நம் ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமது 79 ஆம் அகவையில், 03-04-1981 ஆம் நாளன்று மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப்புகழை என்றும் பேசுவனவாகும்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்:

ஒளவை அவர்கள் ஒப்புயர்வற்ற பேராசிரியராகவும் நாவண்மை மிக்க நாவலராகவும் திகழ்ந்தமை மட்டுமின்றி நுழைபுலமிக்க நூலாசிரியராகவும் திகழ்ந்தார். பி.வி.கிரி அவர்கள் தாம் தொகுத்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ என்னும் சிறு வெளியீட்டில் ஒளவையின் நூல்கள் முப்பத்து நான்கினைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்கள் அகரவரிசையில் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01. ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
02. ஐங்குறுநூறு உரை
03. ஒளவைத் தமிழ்
04. சிலப்பதிகார ஆராய்ச்சி
05. சிலப்பதிகாரச் சுருக்கம்
06. சிவஞானபோதச் செம்பொருள்
07. சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
08. சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
09. சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10. சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12. ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13. தமிழ்த் தாமரை
14. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
15. திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16. திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்)
17. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
18. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19. நந்தாவிளக்கு
20. நற்றிணை உரை
21. பதிற்றுப்பத்து உரை
22. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23. பரணர்
24. புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
25. புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)
26. பெருந்தகைப் பெண்டிர்
27. மணிமேகலை ஆராய்ச்சி
28. மணிமேகலைச் சுருக்கம்
29. மதுரைக்குமரனார்
30. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
31. மருள்நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை)
32. யசோதர காவியம் மூலமும் உரையும்
33. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34. Introduction to the Study of Thiruvalluvar

இந்தப் பட்டியலைப் பார்க்கும் பொழுது ஒளவை சு.துரைசாமி அவர்களின் எழுத்துப்பணிகள் பதிப்புப்பணி, உரைவிளக்கப்பணி என்பதாக மட்டுமின்றி கட்டுரைத் தொகுப்புகள், இலக்கிய வரலாற்று ஆய்வுகள், தமிழக வரலாற்று ஆய்வுகள், ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, சைவ சித்தாந்தத் தத்துவ நூல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள் எனப் பல்துறை சார்ந்த ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் நீண்டுள்ளமை உரைவேந்தரின் பல்துறைப் புலமைக்குத் தக்கதோர் சான்றாக விளங்குவதை உணர முடிகின்றது.

சங்க இலக்கியப் பதிப்புகள்:

1851 இல் திருமுருகாற்றுப்படையுடன் தொடங்கப் பெற்ற சங்க இலக்கிய முதற்பதிப்பு முயற்சி 1920 இல் வெளிவந்த அகநானூற்றுப் பதிப்புடன் நிறைவெய்துகிறது. திருமுருகாற்றுப்படை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலே சங்க இலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்ற நூல் என்ற செய்தியை ந.விசாலாட்சி, தம் பழந்தமிழ்ப் பதிப்புகள் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பெரும்பாலான பதிவுகளில் 1887 இல் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகையே முதல் சங்க இலக்கியப் பதிப்பு என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி, சௌரிப் பெருமாள் அரங்கன், ரா.இராகவய்யங்கார் ஆகிய அறுவர் ஆவர். இவர்களுள் உவே.சா. தவிர மற்ற ஐவரும் ஒவ்வொரு முதல்நூல் பதிப்புகளே பதிப்பிக்க, உ.வே.சா.அவர்களோ சங்க இலக்கியங்களில் முதல் பதிப்புகளாக ஐந்து இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு.

ஏட்டுச் சுவடியிலிருந்து முதன்முதலில் அச்சேறிய சங்க இலக்கியங்களின் முதல் பதிப்பினைப் பதிப்பித்தவர் பெயர், பதிப்பித்த ஆண்டு பற்றிய அட்டவணை கீழே இடம்பெற்றுள்ளது. இதே அட்டவணையில் ஒளவை அவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியப் பதிப்புகள், பதிப்பித்த ஆண்டு குறித்த தகவல்களும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

எண் நூல் பதிப்பாளர் ஆண்டு ஒளவைப் பதிப்பு
1 திருமுருகாற்றுப்படை- உரையுடன் ஆறுமுக நாவலர் 1851
2 கலித்தொகை- உரையுடன் சி.வை.தாமோதரம் பிள்ளை 1887
3 பத்துப்பாட்டு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1889
4 புறநானூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1894 1947, 1951
5 ஐங்குநுறூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1903 1938, 1957
6 பதிற்றுப் பத்து- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1904 1951
7 நற்றிணை- உரையுடன் பின்னத்தூர் நாராயணசாமி 1915 1966
8 குறுந்தொகை- உரையுடன் சௌரிப் பெருமாள் அரங்கன் 1915
9 பரிபாடல்- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1918
10 அகநானூறு ரா.இராகவய்யங்கார் 1920

சங்க இலக்கிய முதன்முதல் பதிப்புகள் பத்து என்றாலும் ஒரே நூலுக்குப் பல பதிப்பாசிரியர், ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளை உருவாக்குதல், அதாவது மூலம் மட்டும், மூலமும் உரையும், ஒரு பகுதி மட்டும் எனப் பல்வேறு பதிப்புகளைத் தருவதால் சங்க இலக்கிய முதல் பதிப்புகளின் எண்ணிக்கை 160க்கும் மேற்பட்டதாகிறது. சங்க இலக்கியப் பதிப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் 1996 வரை 65க்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது. (தி.மகாலட்சுமி, பதிப்பு வரலாறு, சங்க இலக்கியம், ப.448) சங்க இலக்கியப் பதிப்பாசிரியர் அறுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் என்றாலும் தனித்தன்மை வாய்ந்த பதிப்பாசிரியராகவும் தகுதிவாய்ந்த உரையாசிரியராகவும் தனியிடம் பெற்றவர் உரைவேந்தர் என்ற அடைமொழிக்குரிய ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களே. இவர் ஐங்குறுநூறு மூன்று தொகுதிகள், புறநானூறு இரண்டு தொகுதிகள், பதிற்றுப்பத்து ஒரு தொகுதி, நற்றிணை இரண்டு தொகுதிகள் என்று சங்க இலக்கிய எட்டுத்தொகையின் நான்கு நூல்களுக்கு எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பும் உரையும் செய்துள்ளார்.

ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள்:

ஐங்குறு நூறு

ஒளவை சு.துரைசாமி அவர்கள் முதன்முதலில் பதிப்பித்த சங்க இலக்கியம் ஐங்குறு நூறு- அதிலும் மருதத்திணை மட்டுமே. ஐங்குறு நூறு மருதம் மூலமும் விளக்கவுரையும் என்ற பெயரில் 1938 இல் இந்நூல் அச்சாகி வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர் ‘அவ்வைத் தமிழக மாணவர்’ திரு கா.கோவிந்தன் ஆவார். பின்னர் ஒளவையின் ஐங்குறு நூறு விளக்கவுரைப் பதிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக 1. ஐங்குறு நூறு குறிஞ்சி, பாலை (1957), 2. ஐங்குறு நூறு மருதம், நெய்தல் (1957), 3. ஐங்குறு நூறு முல்லை (1958) என்ற மூன்று தொகுதிகளாகத் தனித்தனியே பதிப்பிக்கப்பெற்றது. 1958 அக்டோபரில் மூன்று தொகுதிகளையும் இணைத்து ஒரே தொகுதியாக ஐங்குறு நூறு மூலமும் விளக்கவுரையும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

ஐங்குறு நூறு முழுமைக்குமான விளக்கவுரை எழுத நேர்ந்தமை குறித்து ஒளவை அவர்களே தம் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அக்காலை அருள்திரு தம்பிரான் சுவாமி அவர்கள் நூன்முழுதிற்கும் உரையெழுதுமாறு அருளினார்கள். அதன்பின் தொடக்கத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த சீர்காழி, உயர்திரு கோவிந்தசாமி ரெட்டியார் அவர்களின் ஏட்டுப்பிரதி யொன்று கிடைத்தது. அதன்கண் அச்சுப் பிரதியில் காணப்படாத திருத்தங்களும் சில பாடல்களுக்குரிய குறிப்புரைகளும் காணப்பட்டன. அவற்றை இப்பொழுது ஆங்காங்கே குறித்துக் காட்டியுள்ளேன்”.

புறநானூறு:

புறநானூறு முதன் முதலில் உ.வே.சா. அவர்களால் 1894 இல் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலின் 400 பாடல்களில் முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை கிடைத்துள்ளது. உ.வே.சா. பழைய உரை கிடைக்காத பாடல்களுக்குக் குறிப்புரை தந்துள்ளார்கள். ஒளவை துரைசாமி அவர்களின் உரை விளக்கத்துடன் கூடிய முதல் இருநூறு செய்யுள்கள் அடங்கிய முதல் தொகுதியை 1947 ஆம் ஆண்டிலும் அடுத்த இருநூறு செய்யுள்கள் கொண்ட இரண்டாம் தொகுதியை 1951 ஆம் ஆண்டிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர் ஒளவை அவர்கள் எழுதிய உரை தனிப்பெருஞ் சிறப்பு பெற்றதாகும்.

உ.வே.சா.வின் புறநானூறு அச்சுப் பிரதியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து செப்பம் செய்வதற்கு வாய்ப்பாக அரித்துவார மங்கலம் இராசாளியாரின் விருப்பத்திற்கிணங்க திரு. கிருட்டிணசாமி சேனைநாட்டார் படியெடுத்து வைத்திருந்த புறநானூற்று ஓலைச்சுவடி ஒன்றின் எழுத்துப்படிவம் ஒன்று ஒளவைக்குக் கிடைத்தது. அந்த புறநானூற்று எழுத்துப்படிவமே ஒளவையின் புறநானூற்றுப் பதிப்புக்கு அடிப்படையாய் அமைந்தது. உ.வே.சாவின் அச்சுப்படியையும் சேனைநாட்டாரின் எமுத்துப் படிவத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் முற்பகுதியில் வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை யென்றும் பின்னர் உள்ள 200 பாடல்களில் சில பாடல்களில் அச்சுப்பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப்பெற்றன என்றும் தம் பதிப்பின் செப்பம் குறித்துக் குறிப்பிடுகின்றார் ஒளவை அவர்கள்.

பதிற்றுப்பத்து:

பதிற்றுப்பத்தினை முதன்முதலாக உ.வே.சா அவர்கள் 1904 இல் பழைய உரையுடன் பதிப்பித்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பதிற்றுப்பத்தினை ஒளவை அவர்கள் பாடஞ்சொல்லும் சமயத்தில் இதற்கொரு விளக்கவுரை இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணி நண்பர்கள் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்து ஏடுகள் இரண்டினைப் பெற்று உ.வே.சாவின் அச்சுப்படியினையும் தமக்குக் கிடைத்த இரண்டு பதிற்றுப்பத்து ஏட்டுப்பிரதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். ஒப்பிட்டு ஆராய்ந்ததில் சில பாடவேறுபாடுகளும் சில பாடங்களில் காணப்பட்ட ஐயங்களுக்குத் தெளிவும் கிடைத்தன என்பார் ஒளவை அவர்கள். ஒளவை உரை எழுதுவதை அறிந்த அவருடைய ஆசிரியர் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, பதிற்றுப்பத்துக்குத் தாம் எழுதி வைத்திருந்த உரையையும் ஒளவை துரைசாமிக்குத் தந்துதவினார்.

ஒளவை எழுதிய உரையை நேரில் கண்டு ஊக்கப்படுத்திய அவருடைய மற்றொரு ஆசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பதிற்றுப்பத்தின் பதிகங்கங்கள் ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டாமென்றும் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இடம்பெறும் ‘எரியன்ன நிறத்தன்’ என்னும் பாடலைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரையெழுதுமாறும் அறிவுறுத்தினார். ஒளவை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே தம் பதிற்றுப்பத்து விளக்கவுரை நூலைப் பதிப்பித்தார். ஒளவை சு.துரைசாமியின் இப் பதிற்றுப்பத்து பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. பதிகங்களுக்கு ஒளவை உரையெழுதாத காரணத்தால் கல்வெட்டு ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பெற்ற பதிற்றுப்பத்தும் பதிகங்களும் எனும் தலைப்பிலான ஆய்வுரை ஒன்று நூலில் இணைக்கப் பெற்றுள்ளது.

நற்றிணை:

நற்றிணையை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் அவர்கள். ஏட்டுச்சுவடியிலிருந்த இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சுக்குக் கொண்டு வந்தவர் அவரே. ஐங்குறு நூறு மருதத்திணைக்கு ஒளவை அவர்கள் எழுதிய விளக்கவுரையைக் கண்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஒளவையை நேரில் சந்தித்து அவரின் உரைநலத்தைப் பாராட்டியதோடு அமையாது தம்மிடமிருந்த நற்றிணை ஏட்டுப்பிரதியினை ஒளவைக்குக் காட்டி இந்நூலையும் நீங்கள் ஆராய்ந்து விளக்கவுரையுடன் பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நற்றிணை ஆராய்ச்சிக்குத் துணைசெய்த ஏடுகளாகப் பின்வரும் நான்கு ஏடுகளை ஒளவை தம் நற்றிணைப் பதிப்பு முன்னுரையில் குறித்துள்ளார்கள்.
1. அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏடு.
2. மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏடு.
3. டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு.
4. புதுப்பட்டி சிவ.மு. முத்தையா செட்டியார் ஏடு.
மேலும் நற்றிணைக்கு புதியதோர் விளக்கவுரைப் பதிப்பொன்றினைத் தாம் எழுதி வெளியிட நேர்ந்தமைக்கான காரணங்களாக ஒளவை அவர்கள் முன்னுரைப் பகுதியில் குறிப்பிடும் செய்திகள் இன்றியமையாதன.

“இவ்வேடுகளை உடன்வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பாடவேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களின் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன. சில ஆசிரியர்களின் பெயர்களும் திருத்தமடைந்தன. அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும் ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசியலார் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன. ஏடுகளை ஒப்பு நோக்கியபோது காணப்பட்ட பாடவேறுபாடுகளால் பாட்டுகட்கு உரையே வேறு எழுதவேண்டிய இன்றியமையாமை பிறந்தது. அதனால் எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்கவுரை பெற்று வெளிவருகிறது.” (ஒளவை, முன்னுரை, நற்றிணை, மு.தொ., ப.ஐஓ-ஓ)

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-2

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)
பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பதிப்பு நோக்கம்:

ஒளவை சு. துரைசாமி அவர்கள் சங்க இலக்கியங்களில் ஐங்குறு நூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நான்கு நூல்களுக்கே புதிய பதிப்பு முயற்சி மற்றும் விளக்கவுரை காணும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நுண்மாண் நுழைபுலமிக்க ஒளவை அவர்கள் சங்க இலக்கியங்கள் முழுவதற்கும் விளக்கவுரை கண்டிருப்பார்களேயானால் சங்க இலக்கியங்களுக்கு அவ்வுரைகள் மணிமகுடம் போல் விளங்கியிருக்கும் என்பதில் ஐயமொன்றுமில்லை.
ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்பு நூல்களின் முதன்மை நோக்கம் புதிய விளக்கவுரையோடு நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்பதே ஆகும். மேற்கூறிய நான்கு நூல்களின் முன்னுரையையும் ஒப்பிட்டுக் காண்பவர்களுக்கு இக்கருத்து எளிதில் விளக்கம்பெறும். உரைகாணும் முயற்சியில் ஈடுபட்ட ஒளவை அவர்களுக்கு இளமைக் காலம் முதலே ஏடுகளைப் படித்தல், படியெடுத்தல் முதலியவற்றில் பயிற்சி இருந்ததனால் ஒத்த ஏடுகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பாடபேதம், மூலத்தின் விடுபாடுகளைக் கண்டறிதல் முதலான பணிகள் எளிமையாயின. எனவே ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையைப் பெறுகின்றன.

ஒளவை சு.துரைசாமியின் சங்க இலக்கியப் பதிப்புகளின் தனித்தன்மைகள்:
உரைவேந்தர் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையோடு எளிய, இனிய, தனித்தமிழ்ப் பதிப்புகள் என்ற பெருமையினையும் பெற்றனவாகும். தமது பதிப்புகளில் ஒவ்வொரு செய்யுளுக்கும் முன்னுரை, உரை, உரை விளக்கம் என்னும் மூன்று பகுதிகளை அமைத்து ஒரே சீர்மைமிக்க கட்டமைப்போடு விளக்கவுரையினை அமைக்கின்றார் ஒளவை அவர்கள். புறநானூற்றுப் பதிப்பு இரண்டாம் பகுதி முன்னுரையில் ஒளவை தம் விளக்கவுரை பற்றிக் குறிப்பிடுவன பின்வருமாறு,
“முதற்பகுதி போல இவ்விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரை விளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாடவேறுபாடுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப் பாட்டின் உரை விளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப் பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.” (ஒளவை, புறம். இ.தொ., முன்னுரை, ப.எiii)
உரைவேந்தரின் இம்முன்னுரைப் பகுதி அவர் உரையின் கட்டமைப்பினைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாடலின் முன்னுரை: இப்பகுதியில் பாடிய புலவரின் வரலாறு, புலவர் பெயர் ஆராய்ச்சி, புலவரின் ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள், புலவர் பெயர் குறித்த பாடபேதங்கள் முதற் பகுதியாகவும், பாடப்பட்டோர் வரலாறு, பெயர் ஆராய்ச்சி, ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள் இரண்டாம் பகுதியாகவும், பாடல் செய்தி மற்றும் பாடல் தோன்றுவதற்குரிய சூழ்நிலை, பாடல் பொருளைத் துறைக் குறிப்புகளோடு பொருத்திக் காட்டுதல் முதலானவைகள் மூன்றாம் பகுதியாகவும் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் அமைத்துக்காட்டும் ஒளவையின் திறம் பாடல் கருத்தில் படிப்போர் உள்ளம் தோய்வதற்கு வழியமைத்துத் தந்துவிடும்.

“செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும் உள்ளத்து உணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் புனைந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை படிப்போருள்ளத்தில் பாடல் பொருளை நன்கு பதியும்படி செய்யும். மேலும் இவ்வாசிரியர் பாடற்பொருளைத் துறைக் குறிப்புடன் இயைத்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.” (அ.சிதம்பரநாத செட்டியார், அணிந்துரை, புறம். இ.தொ., ப.ஒiii).

புறநானூறு இரண்டாம் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களின் மேற்குறித்த கூற்று உரைவேந்தர் ஒளவையின் பாடல் முன்னுரையின் சிறப்பினைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும்.

உரை: பாடலுக்கு உரை காண்பதிலும் ஒளவை படிப்போர்க்கு சுமையேற்றாத எளிய இனிய உத்தியினைக் கையாளுகின்றார். கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைப்பது போலப் பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைக்கும் முறையினைப் பின்பற்றுகின்றார் ஒளவை. இவ்வுத்தி பழைய உரைகாரர்களில் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கையாண்ட உத்தியாகும். இவ்வுத்திக்குப் பாடலின் கண்ணழித்துப் பொருள் கூறுதல் என்று பெயர். பழைய உரையுள்ள பாடல்களுக்கு உரைகூறும் இடத்திலும் நீண்ட பழைய பொழிப்புரைகளை இம்முறைக்கேற்ப மாற்றி அமைக்கின்றார். அதாவது பாடலைத் தொடராகப் பிரித்து, அத்தொடருக்குரிய பழைய உரையைத் தக்க இடத்தில் பொருத்தி, பாடற் பொருள் எளிதாக விளங்கும் வகையில் உரை அமைக்கின்றார்.

உரை விளக்கம்: செய்யுள் உரைக்கு அடுத்து ஒளவை அவர்கள் அமைக்கும் பகுதி, உரை விளக்கம் என்பதாகும். இப்பகுதியில் பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினைமுடிபுகளைச் சுட்டி, பாடல்பொருளின் திட்ப நுட்பங்களை விளக்குவதோடு அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்பு படுத்துதல் முதலான விளக்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இவ்விளக்கவுரைப் பகுதியில் உரிய பாட வேறுபாட்டைத் தெரிவு செய்தல், பழைய உரையில் பொருந்தாததை மறுத்தல், கல்வெட்டுச் சான்றுகள் தந்து தம் கருத்தை நிறுவுதல், அறிவியல் கருத்துக்களை மேற்கோள் காட்டிப் புதிய விளக்கங்களைத் தருதல், அரிய செய்திகளைப் பதிவுசெய்தல், சொற்பொருள் விளக்கம் கூறல், இலக்கணச் சான்றுகள் தந்து விளக்கவுரை அமைத்தல் போன்ற பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு விளக்கவுரைப் பதிப்புக்கு அணி சேர்க்கின்றார் ஒளவை அவர்கள்.

ஒளவை அவர்களின் பதிப்புப் பணியில் விளக்கவுரையே முதன்மை பெற்றாலும் தமது ஒவ்வொரு பதிப்பையும் ஒன்றுக்கு மேற்பட்ட சுவடிகளுடன் ஒப்பிட்டு பாடவேறுகளை ஆராய்ந்து உரிய பாடத்தைத் தேர்வு செய்து பதிப்பிப்பதிலும், பெயர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கல்வெட்டு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதிலும் உரைவேந்தர் தீவிரக்கவனம் செலுத்துகின்றார். இவர் பதிப்பின் தனித்தன்மைகளில் இக்கூறே தலையாயது. பாடல் முதல்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல் முதலான அடைவுகளைத் தயாரித்து இணைப்பதில் உ.வே.சா. அவர்களின் பதிப்பை ஒத்தே ஒளவை செயல்படுகின்றார். ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகளை ஆராய்ந்ததில் அவர் கையாளும் பதிப்பு நெறிமுறைகளாகப் பின்வருவற்றைச் சுட்டலாம்.

ஒளவை சு.துரைசாமி பதிப்பு முறைகள்:

1. பாட வேறுபாடுகளைக் குறிப்பிடுதல்.
2. பாடியோர் பெயர் வேறுபாடுகளைச் சுட்டல்
3. உரிய பாடவேறுபாடுகளைத் தெரிவு செய்தல்.
4. எளிய இனிய தனித்தமிழ்நடையில் உரை எழுதுதல்.
5. விடுபட்ட பாடலடிகளைப் புதிய ஏட்டுச்சுவடிகளின் துணையோடு சேர்த்தல்.
6. மயக்கம் தரும் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்தல்.
7. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் முன்னுரை கூறல்.
8. பாடலின் முன்னுரைப் பகுதியில் பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்செய்தி, பாடல் உருவான சூழல், பாடல் பொருளைத் துறைக் குறிப்புடன் பொருத்திக் காட்டுதல்.
9. பாடியோர், பாடப்பட்டவர் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி மற்றும் பெயர் ஆராய்ச்சி.
10. ஊர் பற்றிய குறிப்புகள் வரும்போது இப்போது அவ்வ+ர் எங்கே, எப்பெயரில் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடல்.
11. கல்வெட்டு, செப்பேடு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு முடிவுகூறல்.
12. பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் கூறும் முறை.
13. உரைக்குப் பின்னர் உரை விளக்கம் கூறும் முறை.
14. உரை விளக்கத்தில் பாடலின் வினைமுடிபுகளைச் சுட்டல், அருஞ்சொல் பொருள் கூறல், ஒப்புமை காட்டல், இலக்கண விளக்கம் தருதல், வரலாற்றுச் செய்திகள் மற்றும் அறிவியல் செய்திகளோடு பொருத்திக்காட்டுதல், பொருந்தாத உரைகளை மறுத்தல்.
15. நூலின் முன்னும் பின்னும் உரிய அடைவுகளை இணைத்தல்.
16. பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை, பாடினோர் வரலாறு, செய்யுள்களின் கூற்றுவகைப் பகுப்பு முதலான பகுதிகளை நூலின் முன்னே இணைத்தல்.
17. பாட்டு முதற்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல், மேற்கோள் விளக்க அகரநிரல் (சுருக்கக் குறியீட்டு விளக்கம்) முதலான அடைவுகளை நூலின் பின்னே இணைத்தல்.

ஒளவை சு.துரைசாமி சங்க இலக்கியப் பதிப்புகள் ஒரு சிறப்புப் பார்வை:

ஒளவை அவர்களின் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் அளவிட முடியாதது. சங்க இலக்கியங்கள் மீது அவர் மிகுந்த மதிப்பும் பற்றும் கொண்டிருந்தார்.
“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம். மக்கள் தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம். புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணிவளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும் செல்வரும் அம்மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து முத்தமிழ் வளர்த்த பெருமைக்காலம்” (மேற்கோள், சாம்பசிவனார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப.15)

என்று சங்ககாலம் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் கருத்துரைக்கும் ஒளவையின் மேற்கோளிலிருந்து அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் ஊகிக்க முடியும். இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த சிந்தனைகளையே ஒளவையின் கருத்து எதிரொலிப்பதாக நாம்கொள்ள முடியும். சங்க இலக்கியப் பதிப்புகள் முழுமையாக வெளிவந்த நிலையில் ஆரிய, வடமொழி மேலாதிக்கத்திற்கு எதிர்வினையாக தமிழர் பழம்பெருமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் முன்மொழியப்பட்டன. இக்குரலைத்தான் ஒளவையின் மேற்கோளில் நாம் கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியதிலிருந்து, தமிழர்க்குத் தம் தாய்மொழியாம் தமிழில் உணர்ச்சி பிறந்தது. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்பதில் ஆர்வம் எழுந்தது. தமிழில் கலைகளென்றால் புராண இதிகாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் மிகுதியாக நிலைப் பெற்றிருந்த இந்த நாட்டிலே, சங்க இலக்கியங்கள் வெளிவந்துலாவின. அவற்றின் கருத்தை மக்களிடம் வளர்க்கப் பலரும் வேலை செய்தனர். ஒளவை அவர்களும் 1938 இல் கட்டாய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுத்தபோது அப்போராட்டங்களுக்குத் துணைநின்ற காரணத்தால் அன்றைய ஆட்சியாளர்களால் பல ஊர்களுக்கும் பணிமாற்றல் ஒறுத்தல் என்ற அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். (கு.சிவமணி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள், ப.301)

சங்க இலக்கியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரிய முயற்சியைத் திராவிட இயக்கம் முன்னின்று நடத்தியது. தங்களின் சமூக அரசியல் நோக்கங்களுக்குச் சங்க இலக்கியங்கள் சுட்டும் வளமார்ந்த சமூகச் சித்திரங்கள் பெரிதும் பொருந்திவரும் என்பதை அவர்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டார்கள். சி.என். அண்ணாத்துரை இதனை ஒரு வேண்டுகோளாகவே தமிழ் அறிஞர்களுக்குப் பிறப்பித்தார்.

“நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் தடுப்புச் சுவரை எழுப்பி வைத்துக்கொண்டு உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி என்பது போலத் தொல்காப்பியத்தைப் பாரீர், அதன் தொன்மையைக் காணீர் என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாட விடவேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறு சிறு பிரதிகள் மூலம். இன்றைய புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும் எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால் சங்க காலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுதுதான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல, துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.” (சி.என். அண்ணாத்துரை, ஏ தாழ்ந்த தமிழகமே, பக்: 9)

இத்தகு அரசியல் பின்புலத்தில் ஒளவை அவர்களின் பதிப்பு முயற்சிகளை நாம் மதிப்பிட வேண்டும். இவரின் சங்க இலக்கியப் பதிப்புகளில் சிறப்பிடம் பெறும் பாடலுக்கான முன்னுரைப் பகுதி முழுக்க முழுக்கத் தமிழ்த் தேசிய அரசியல் பார்வையுடையது. அதனால்தான் அம்முன்னுரைப் பகுதியை ஒரு கதை போலப் புனைந்துரைத்து ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையோரும் சங்க இலக்கியப் பொருள் நலங்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி செய்கின்றார். இவ்வுத்தி பழைய பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் யாரும் செய்யாதது, செய்யத் துணியாதது.

ஒளவை அவர்களின் புறநூனூறு முதல் தொகுதிக்கு முன்னுரை வரைந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இத்தகு அரசியல் நிலைப்பாடு குறித்தும் அதற்கு ஒளவையாரின் உரைகள் பயன்படும் என்பது குறித்தும் வெளிப்படையாகவே கருத்துரைத்துள்ளார்கள்.

“இந்நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும். .. .. ஆந்திரரும் கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணை வேற்றுமை மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையால் தமிழராய் வாழ்வது இனிது விளங்கித் தோன்றி நிற்கிறது. இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது காண்டற்கண் இப்புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும் பயன்படுகின்றன. .. .. இனி, இவ்வேற்றுமை (ஆந்திரர், கன்னடர், கேரளர் என்ற வேற்றுமை) யொழிதற்கும், ஆந்திரர் முதலியோர் தமிழரென ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும் இவரனைவரும் கூடிய ஒருமையரசியல் வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வு பெறவேண்டும் எனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது. .. .. அரசியல் ஆக்க முயற்சிகளுள் கலந்து தமிழரசியலில் பணிபுரிய விரும்புவோர்க்கு இப்புறநானூறு முதலிய தொகை நூல்களின் அறிவு இன்றியமையாததாகும்”. (கழகத்தார், புறநானூறு, முன்னுரை பக். 4-5)

மேலே காட்டப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் முன்னுரையில் தனித் திராவிட நாடு அடையும் அரசியல் முயற்சி குறித்த நம்பிக்கையும் அதற்கு சங்க இலக்கியங்கள் குறிப்பாக, புறநூனூறு மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையும், அத்தேவைக்கு உரைவேந்தர் ஒளவையின் பதிப்பும் உரையும் பயன்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதை நாம் உணரமுடியும்.

ஒளவை சு.துரைசாமி அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகளின் எளிமையும் இனிமையும் அவரின் அரசியல் நிலைப்பாட்டின் ஓர் அங்கம். ஊர்ப்பெயர்கள் குறித்து ஒளவை காட்டும் தீவிர ஈடுபாடு சங்க இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாக்க முயலும் முயற்சியின் ஒரு பகுதியே. அவரின் பாடலுக்கான முன்னுரைப் பகுதி பண்டிதர்களுக்கானதன்று. தமிழ்கற்ற பொதுமக்களுக்கானது. இத்தகு குறிக்கோளோடு இயங்கும் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் உரிய இலக்கை அடைந்துள்ளன என்பது தமிழர்க்கு நிறைவளிக்கும் செய்தி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

பேரறிஞர் அண்ணா ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்லர், அவர் ஓர் அறிவுலக மேதை. உலக வரலாற்றில் தம் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளர்த்த பெருமைக்குரிய தலைவர் அவர். தலைவர்- தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்- தம்பி என்ற உறவுநிலையை நிலைநாட்டிய அரசியல் அறிஞர், அண்ணா அவர்கள். “தம்பி நான் உனக்குத் தலைவனில்லை. உனக்கு அண்ணன். உன் குடும்பத்தின் மூத்த மகன். ஒரு தாய் நம்மைச் சுமக்க முடியாத காரணத்தால் தனித்தனியாகப் பிறந்திருக்கிறோம்.” -அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் பன்முக ஆற்றலாகப் பரிணமித்து அவரைத் தனிப்பெருமை மிக்க சான்றாளர் ஆக்கியது. ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர், வலிமை மிக்க எழுத்தாளர், வளமிக்க நாடகாசிரியர், எளிமையான கவிஞர், கண்ணியம் மிக்க அரசியல் தலைவர், நேர்மையான நிர்வாகி, மனிதநேயப் பண்பாளர், மக்கள் சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் அண்ணாவிற்கு முன்பும் இருந்ததில்லை. பின்பும் இருப்பதரிது.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்:

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அண்ணா. அவருடைய பேச்சிலே எளிமை இருக்கும், இனிமை இருக்கும், கருத்துச் செறிவு இருக்கும். அண்ணாவின் பேச்சாற்றலுக்கு முன்னுதாரணமாக உலக வரலாற்றில் யாரையும் சொல்லமுடியாது. அண்ணாவின் பேச்சு நடையும் தனித்தன்மையானது. இலக்கியத் தமிழும் அடுக்கு நடையும் எதுகை, மோனை, இயைபு நயங்களும் அவர் பேச்சில் துள்ளி விளையாடும். அதே சமயம் வெறும் அலங்காரப் பேச்சாக ஒருபோதும் தம் சொற்பொழிவை அண்ணா அமைத்துக் கொண்டதில்லை. கருத்தாழமிக்க பொழிவாகவே அவருடைய ஒவ்வொரு பேச்சும் அமைந்து சிறக்கும்.
பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய பேரறிஞர் அண்ணா எழுத்தாற்றலிலும் தன்னிகரற்று விளங்கினார். அண்ணாவின் பேச்சாற்றல் நாற்றங்கால் என்றால் அவரின் எழுத்தாற்றல் விளைநிலத்திற்கு ஒப்பாகும். பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளியை அண்ணா பெரிதும் குறைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் எழுதுவது போலப் பேசினார். பேசுவது போல எழுதினார். அண்ணா எழுதிய தம்பிக்குக் கடிதங்கள் என்ற மடல் இலக்கியம் இதற்குத் தக்கதோர் சான்று. அண்ணாவின் எழுத்துப் படைப்புகளாகத் தற்போது கிடைப்பன,
சிறுகதைகள் 117
புதினங்கள் 6
குறும் புதினங்கள் 25
நாடகங்கள் 15
ஓரங்க நாடகங்கள் 75
கடிதங்கள் 219
கவிதைத் தொகுப்பு 1
இவற்றைத் தவிர அண்ணா ஆசிரியர் பொறுப்பில் இருந்த பொழுது நாளிதழ், வார இதழ் ஆகியவற்றில் எழுதிய தலையங்கங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் ஆயிரக் கணக்கானவையாகும்.

அண்ணாவின் கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா கவிதைகள் அதிகம் எழுதவில்லை. 1937 முதல் அவர் பல சூழல்களில் வடித்த இசைப்பாடல்கள், இதழ்வாழ்த்து, பொங்கல்வாழ்த்துப் பாக்கள், கதைப்பாடல்கள், அட்டைப்பட விளக்கக் கவிதைகள், அரசியல் அங்கதப் பாக்கள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் முதலானவற்றைத் தொகுத்து 1981 இல் பூம்புகார் பதிப்பகம் ‘அண்ணாவின் கவிதைகள்’ என்ற தலைப்பில் தனி நூலாகப் பதிப்பித்துள்ளது. இக் கவிதைத் தொகுப்பே இக்கட்டுரைக்கு முதன்மை ஆதாரம். இத்தொகுப்பில் மூன்றடிக் கவிதைகள் முதல் பலநூறு அடிகளைக் கொண்ட கவிதைகள் வரை உள்ளன. மொத்தக் கவிதைகள் எழுபத்தாறு. இவை 1.வாழ்த்துப் பாடல்கள் 2.இசைப் பாடல்கள் 3.கதைப் பாடல்கள் 4.அட்டைப்படப் பாடல்கள் 5.பல்சுவைப் பாடல்கள் என்ற ஐவகைப் பகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாவின் பேச்சு நடையே கவிதை நடைபோல் இருக்கும் அழகு பலராலும் பாராட்டப்பட்டது என்றாலும் அண்ணா தம் கவிதைகள் குறித்து எப்பொழுதுமே கொஞ்சம் குறைவான மதிப்பே கொண்டிருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் அண்ணாவே தம் கைப்பட ‘கவிதை அல்ல ஆக்கிக் கொள்ளலாம்’ என்ற குறிப்பினை எழுதியுள்ளார்கள். குறிப்பாக, ‘தேம்புகின்றேன்’ என்ற கதைப்பாடலின் இறுதியில்,
தெய்வ நெறியைத் தமிழகத்தில் பரப்பும் மெய்ஞ்ஞானி என்று நம்பி, ஓர் கபட வேடதாரியிடம் சீடனாகிக் காவி அணிந்து பணியாற்றிய இளைஞன், உண்மை கண்டு உள்ளம் வெதும்பி, காவி களைந்து விட்டு, இல்லறம் புகுந்து, நல்லறம் கற்றிடும் மாணவனான கதை. கவிதை அல்ல புலவர் துணைகொண்டு கவிதை யாக்கிக் கொள்க. (திராவிடநாடு, சூலை 18, 1954.)
என்று எழுதியுள்ளார். மேலும் தம் கவிதை குறித்து அவரே எழுதியுள்ள கவிதை ஒன்றில் ‘ஆசை பற்றி அறையலுற்றனன்’ என்று கம்பர் குறிப்பிடுவது போல் ஆசையால் கவிதைபோல் தருகிறேன் அதில் உள்ள செய்திகளே முக்கியம் என்பதனைக் குறிப்பிடுகின்றார்.

பாடுகின்றான் அண்ணன் ஓர்கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந் தாரே!
சீர் அறியேன், அணி அறியேன் சிந்தைஉந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே

(அண்ணாவின் கவிதைகள், ப.7)

இப்படியெல்லாம் அண்ணா தம் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் மதிப்பீடுகளைப் புலவர் மரபில் சொல்லப்படும் அவையடக்கமாக நாம் கொள்ளமுடியாது. உண்மையில் அண்ணா அவர்கள் கவிதைகள் மீது கொண்டிருந்த அளவற்ற மதிப்பே தம் கவிதைகளைக் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது எனலாம்.

கவிதையும் எழுத்துக்களும் யாருக்காக:

ஒரு படைப்பாளி தம் படைப்பை யாருக்காகப் படைக்க வேண்டும்? என்பது ஒரு முக்கியமான வினாவாகும். ஒரு கவிஞன் யாரைப் பாடுகின்றான், யாரைப் பாடுவதில்லை என்பதைக் கொண்டே அக்கவிஞனின் அரசியலை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இவரைப் பாடுவேன், இவரைப் பாடமாட்டேன் என்று கவிஞன் பிரகடனப் படுத்துவதற்கு என்ன பொருள் என்றால், கவிஞன் யார் பக்கம் நின்று தம் படைப்பைத் தருகின்றான் என்பதற்கான கொள்கை முழக்கமே அதுதான். உலகத்தில் இரண்டு வர்க்கங்கள் உண்டு. ஒன்று ஆளுகிற, சுரண்டுகிற வர்க்கம் அதாவது முதலாளி வர்க்கம் மற்றது ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கம் அதாவது தொழிலாளி வர்க்கம். இந்த இரண்டு வர்க்கங்களில் யார் பக்கம் நின்று பேரறிஞர் அண்ணா தம் படைப்பை, கவிதையைத் தருகின்றார் என்பதனை அவரே ஒரு கவிதையில் வெளிப்படையாக, மிகத் தெளிவாகக் கொள்கை முழக்கம் செய்கின்றார். ‘பொற்காலம் காண’ என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அந்தக் கவிதை ஒரு மொழி பெயர்ப்புக் கவிதையாகும். கவிஞர் ஜான் மேங்ஸல்டு என்பவரின் கவிதையை ஒட்டிப் புனையப்பட்ட அக்கவிதையில்,

எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு, உடல் பெருத்து
ஊழியர் புடை சூழ
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேர் ஏறும்
அரசகுமாரர் அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல.

பாடுவேன் இவரை
குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்
தாங்கொணாப் பாரந்தன்னைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக் கூடத்து உழல்வோன்
ஏரடிப்போன்
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும் கண் கொண்டோன்
குளிர் கொட்ட மழை வாட்ட
குமுறிக் கிடந்தோர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை
இஃதே என் காவியம் காண்
(காஞ்சி 1965)
அண்ணாவின் கவிதைகள், பப.137-138

பேரறிஞர் அண்ணாவின் குரல் அவரின் கவிதைகளில் உழைக்கும் மக்களுக்கான குரலாக ஒலித்தது என்பதுதான் அவர் கவிதைகளின் தனிப் பெரும் சிறப்பாகும்.

அண்ணாவின் இசைப்பாடல்கள்:

தமிழகத்தில் தமிழிசை எழுச்சி பெற்ற காலக்கட்டத்தில் அண்ணா, கவிதைகள் எழுதத் தொடங்கினார். குறிப்பாகக் கவிஞர் பலரும் இசையமைத்துப் பாடுவதற்குரிய பாடல்களைத் தமிழில் தொடர்ந்து எழுதி வந்த காலம் அது. பாவேந்தர்கூட இசையமுது தொகுதிகள் எழுதி வெளியிட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். அண்ணாவின் கவிதைத் தொகுப்பில் கூட இசைப்பாடல்கள் என்ற பகுப்பில் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் அண்ணா இப்பகுதியில் இடம்பெற்றுள்ள சில பாடல்களுக்கு மெட்டுக்களை அவரே குறிப்பிட்டுள்ளார். சில பாடல்களுக்கு ‘மெட்டு அமைந்திடுக’ என்ற குறிப்பினை வழங்கியுள்ளார். இந்த இசைப்பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று வடிவத்தால் சிறந்த இசைப்பாடல், மற்றது உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடல்.
‘வண்டு கண்டேன்’ என்ற தலைப்பில் அண்ணா வடித்த இசைப்பாடல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்பாடலை அண்ணா, அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து வடிவத்தை ஒட்டி அமைத்துள்ளார்.

மலரிடைக் குதித்துமே
மதுவினை ருசித்துமே
மொண்டு, நிரம்ப உண்டு,
களி கொண்டு, பண்டு
பாடிய பண்மறந்து
மலரைத் துறந்து
வேறிடம் பறந்து
பண்பாடும் வண்டு கண்டேன் -காதல்
பண்பாடும் வண்டு கண்டேன்
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.40

மேலே உள்ள அண்ணாவின் இசைப்பாடலைப் படித்த பிறகு பின்வரும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடலைப் படித்துப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.
மூசுவண்டு வாசமண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே –மைய
லாகவே பெடையுடனே கூடுமே.
(அ.ரெ.காவடிச் சிந்து, கழுகுமலை வளம் பா.2)

பேரறிஞர் அண்ணா போகிற போக்கில் ஏனோதானோ என்று கவிதைகளைப் படைக்காமல் தமிழில் உள்ள மரபுச் செல்வங்களை உள்வாங்கிக் கவிதைகளைப் படைத்துள்ளார் என்பதற்கு இதுவே தக்கதோர் சான்று.

அடுத்து உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடலைக் காண்போம். ‘கொலைகாரன் கோட்ஸே’ என்ற தலைப்பில் அண்ணா படைத்துள்ள இந்த இசைப்பாடல் 1956 இல் எழுதப்பட்டது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் இப்பாடல் பதிவு செய்யும் சமூக அவலங்களும், மதநல்லிணக்கத்திற்கு எதிரான இந்துத்துவ மதவெறியும் அதே கோட்ஸே கூட்டத்தால் வழிநடத்தப்படுவதைக் காணும்போது இப்பாடலின் உள்ளடக்கச் சிறப்பு நம்மை வியக்க வைக்கிறது. பாடலைப் பார்ப்போம்,

இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்
(திராவிடநாடு 1956)

அண்ணாவின் கவிதைகள், பப. 41-42

சாதாரணப் பாமரர்களின் மொழிநடையில் படைக்கப்பட்டுள்ள இவ்விசைப்பாடல் நம்முன் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தத் தலைமுறையிலாவது நாம் விடைகாண வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா அடிக்கடிக் குறிப்பிடும் அவரின் கொள்கை முழக்கம் இப்பாடலில் பாமரத் தமிழில் ‘குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு’ என்று பதிவாகியுள்ளமை சிறப்பாகக் கவனிக்கத் தக்கது.

அண்ணாவின் கதைப்பாடல்கள்:

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகளில் அளவால் பெரிய கவிதைகளைக் கொண்ட பகுதி அவரின் கதைப்பாடல்கள் பகுதியே. இப்பகுதியில் மொத்தம் எட்டுக் கதைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பல பாடல்கள் 100 அடிகளுக்கு மேல் 300 அடிகளையும் கடந்து பாடப்பட்டுள்ளன. அண்ணா கவிதைகளின் தனிச் சிறப்பை இக்கதைப்பாடல் பகுதியில்தான் நாம் காணமுடியும். நல்ல ஆற்றொழுக்கான கவிதை நடையும் துள்ளல் நடையும் கலந்து எதுகை மோனைத் தொடைநலங்கள் சிறக்க அண்ணா கவிதையில் கதை சொல்லும் பாங்கு அலாதியானது.
‘தேம்புகின்றேன்’ என்ற தலைப்பில் அமைந்த கதைப்பாடலில் கதைத் தலைவன், உண்மை ஞானி என்று நம்பி ஒரு கபடவேடச் சாமியாரிடம் சீடனாகச் சேர்கிறான். ஒருநாள் போலி சந்நியாசியின் காமக்கூத்து அரங்கேறும் காட்சியைக் காண நேரிட்ட போது இளைஞன் திடுக்கிடுகின்றான். இனி அண்ணாவின் கவிதைநடையில் காண்போம்,

பதறினேன்! பயந்தேன்! நைந்தேன்
அறம் இது தானோ ஐயா!
அருள் தரும் முறை இதானோ!
சீலமோ! சிவநெறியோ!

சிற்றின்பக் கூடமோ! இம்மாடம் தானும்!
காடுடைய சுடலைப் பொடி கொண்டு
கண்ணிலே தூவிடுதல் கற்றீர் நன்று
கா~hயம் கட்டியதும் கட்டிலறை காண்பதற்கோ
ஏன்தானோ இவ்வெளி வேஷம்!
அண்ணாவின் கவிதைகள், ப.45

அண்ணா மேடைப் பேச்சின் அலங்காரமும் லாவகமும் துள்ளலும் இக்கதைப்பாடல் அடிகளில் துள்ளி விளையாடுவதைக் காண்போர் அண்ணா கவிதைத் துறையிலும் சாதிக்கத் தவறவில்லை என்பதை உணர்வர்.

அண்ணாவின் புதுக்கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா மரபுக் கவிதை மற்றும் இசைப்பாடல்கள் எழுதியதோடு நிறைவடைந்து விடவில்லை. புதுக்கவிதைகளின் நடையிலேயும் சில கவிதைகளைப் படைத்துத் தந்துள்ளார். அண்ணாவின் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்சுவைப் பாடல்கள் பகுதியின் பெரும்பாலான கவிதைகள் அண்ணாவின் மொழி பெயர்ப்புக் கவிதைகளே. இம் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பெரிதும் புதுக்கவிதை பாணியிலேயே அண்ணா மொழி பெயர்த்துள்ளார்.

மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.135

‘மனிதன்’ என்ற தலைப்பில் அண்ணா மொழி பெயர்த்துள்ள இக்கவிதையின் மொழிநடை சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் எழுதப்பட்ட வானம்பாடிக் கவிதைகளுக்கு முன்னோடியாகப் புதுக்கவிதை பாணியில் வடிவம், உணர்த்துமுறை, உத்திகளால் சிறந்து அமைந்துள்ளமை கண்கூடு.

நிறைவாக:

அண்ணா எழுதியுள்ள இக்கவிதைகள் கவிதைகள்தாமா? அல்லது உரை வீச்சா? என்றெல்லாம் பண்டிதர்கள் கவலைப்படலாம். அந்த அச்சம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே இருந்துள்ளது அதனால்தான் தற்காப்பாக ‘கவிதை அல்ல ஆக்கிக்கொள்ளலாம்’ என்றார். கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதைப் போல் அண்ணா, கவிதைகளின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் அத்தகையது. சரி! கவிதைகளுக்கு என்னதான் அளவுகோல்? அண்ணாவின் கவிதைகளை அளந்து பார்த்துவிடலாம் என்று துணிந்தால், நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் கவிதைகளுக்குச் சொல்லும் இலக்கணம்தான் நம்முன் நிற்கிறது.

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
(நன்னூல் நூ. 268)

கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது!. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது.

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள் நன்னூலார் கூறும் கவிதை இலக்கணங்களுக்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது. அண்ணா உணர்வினின் வல்லோர் என்பதிலோ அவர் கவிதைகள் அணிபெறச் செய்யப்பட்டுள்ளன என்பதிலோ யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பொருட்கு இடனாக அதாவது உயர்ந்த கருத்து வளத்தோடு அண்ணா எழுதினார், பேசினார், கவிதைகளிலும் அதைத்தான் செய்தார் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. அண்ணா கவிதைகளின் வடிவம்தான் பண்டிதர்களுக்கு நிறைவளிக்காமல் போகலாம். அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. முடிபாக, கருத்தும் உணர்ச்சியும் அணிகளும் நிறைந்து அண்ணா கவிதைகள் கற்பவர் நெஞ்சைக் கவர்வன என்பதே நம் துணிபு.

புதன், 31 டிசம்பர், 2008

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் - அணிந்துரை

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் -
கு. தேன்மொழி

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதைகளை விட ஹைக்கூக் களுக்கே இவ்விதி முற்று முழுதாகப் பொருந்தும். கடந்த பத்தாண்டுகளில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் மிகுதியாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
‘அந்தாதி பார்த்து அந்தாதி கலம்பகம் பார்த்துக் கலம்பகம்’ என்பதைப்போல் ஹைக்கூ பார்த்து ஹைக்கூக்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு வேறு எந்தக் கவிதையும் எழுதத் தெரியாத பலர் ஹைக்கூ எழுதத் தொடங்கிவிட்டார்கள். மொத்தமாக நாலு பக்கம் எழுதினாலே போதும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம், இந்த வசதி ஹைக்கூ எழுதுவதில்தான் இருக்கிறது. இதற்காகவே ஹைக்கூ எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நான் மேலே சொன்னதெல்லாம் விதிவிலக்குகள். உண்மையிலேயே ஹைக்கூ வடிவத்தையும் வெளிப்பாட்டு உத்திகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இந்த உள்ளடக்கத்தை இந்த உருவத்தில் கொடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் எனத் தேர்ந்து ஹைக்கூ எழுதுகிற கவிஞர்கள் தமிழில் நிறையபேர் இருக்கிறார்கள். மரபுக் கவிதைகளுக்குப் பெயர்பெற்ற புதுச்சேரி ஹைக்கூ கவிதைகளிலும் தனிமுத்திரை பதித்து வருகிறது.

தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றுத் தொடக்கம் 16-10-1916 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில்தான் மகாகவி பாரதியார் ஜப்பானியக் கவிதை என்னும் தலைப்பில் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டவை. அன்று தொடங்கி புதுச்சேரிக்கும் ஹைக்கூவுக்குமான உறவகள் தொடர்கதை.

“துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும்” என்ற தலைப்பில் கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் புதுச்சேரி ஹைக்கூக்களைப் பற்றிய முதல் ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஹைக்கூ என்பதனைத் துளிப்பா என்றே கையாளுகின்றார். ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் துளிப்பா ஆகிறது. “இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற துளிப்பா நூல்களின் தொகுப்பே இந்த ஆய்வுக்கு அடிப்படை.

புதுச்சேரி ஹைக்கூ கவிஞர்கள் எ.மு.ராசன், புதுவை- தமிழ்நெஞ்சன், புதுவை- சீனு. தமிழ்மணி, செந்தமிழினியன், அரிமதி தென்னகன், இளவேனில், அரிமதி இளம்பரிதி, ஆலா ஆகிய எண்மரின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் விளக்கமுறையில் ஆய்வினை நடத்திச் செல்லும் கு.தேன்தொழி நூற்பொருளைப் பின்வரும் நான்கு இயல்களாகப் பகுத்து விளக்கியுள்ளார்.

1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் பதிவுசெய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் சமுதாய சிந்தனைகள்

தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் இயல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வரலாற்றை விளக்கிச் செல்வதோடு தமிழக, புதுவை ஹைக்கூ கவிதைகளுக்கான இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்கிறது. இரண்டு, மூன்று, நான்காம் இயல்கள் புதுச்சேரித் துளிப்பாக்களில் இடம்பெற்றுள்ள அழகியல், அரசியல், சமுதாயச் சிந்தனைகளைத் திரட்டி ஆய்வுசெய்கின்றன.

தமிழின் முதல் துளிப்பா தொகுப்பு அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இம்முதல் துளிப்பா தொகுதி வெளிவந்து இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கூட ஆகாதநிலையில் துளிப்பா குறித்த ஆய்வுகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் பல்கலைக் கழக இளமுனைவர் மற்றும் முனைவர்பட்ட ஆய்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு வெளியே துளிப்பா குறித்து வெளிவந்துள்ள நூல்கள் பெரிதும் துளிப்பாவை அறிமுகம் செய்யும் வகையிலேயே அமைந்தன. சான்றாக, 1990 ஆம் முனைவர் தி.லீலாவதி எழுதிய ‘இதுதான் ஹைக்கூ’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இளமுனைவர் பட்ட வகுப்புகளை அஞ்சல் வழியில் தொடங்கி காசு பார்க்கத் தொடங்கியதன் விளைவாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குச் சில தீமைகளும் சில நன்மைகளும் ஏற்பட்டன. தீமைகளில் முக்கியமானது, ஆய்வு என்ற பெயரில் நீர்த்துப் போன பல ஆய்வேடுகள் மலைபோல் குப்பைகளாகக் குவிந்தன. நன்மைகளில் முக்கியமானது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் அங்கீகாரம் பெறாமல் தனித்து, தவிக்க விடப்பட்ட பல புதிய வகை இலக்கியங்கள் ஆய்வுப் பொருள்களாயின. ஹைக்கூ இலக்கிய வகை ஆய்வுகள் இவ்வகையில் ஆய்வுலகின் அங்கீகாரம் பெற்று வெற்றிநடை போடுகின்றன. கவிஞர் கு.தேன்மொழியின் இந்த ஆய்வுநூல் ஓர் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஹைக்கூ இலக்கியங்களுக்கு தனித்த இலக்கிய வரலாறு இல்லாத குறையை இந்நூலின் முதல் இயல் தீர்த்து வைக்கின்றது. இவ்வியலில் நூலாசிரியர் ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலான இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்வதோடு அதன் தொடர்ச்சியாகத் தமிழில் எவ்வாறு ஹைக்கூ வடிவங்கள் கையாளப்பட்டன என்பதைச் சுருக்கமாக விளக்கிச் செல்கிறார். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமரிக்கூ வடிவங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிடுகின்றார். மேலும் தமிழ்த் துளிப்பாக்களின் வரலாறு, தமிழ்த் துளிப்பாக்களின் ஆராய்ச்சி வரலாறு இரண்டினையும் பட்டியலிட்டு வரும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் முதல் இயலை முழுமை செய்கின்றார். இந்நூலில் மிகுந்த பயனளிக்கும் பகுதியாக இம்முதல் இயலை அமைத்த நு}லாசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

இரண்டு, மூன்று, நான்காம் இயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். துளிப்பாக்கள் குறித்து நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு.”

இந்நூலாசிரியர் கு.தேன்மொழி புதுச்சேரி கவிஞர்கள் துளிப்பாக்களில் சொல்லிய, சொல்ல நினைத்த, சொல்லாமல் விட்ட பல உள்ளடக்கங்களை ஆய்வு என்ற நிலையில் விளக்கிக் காட்ட முற்படுகின்றார். துளிப்பா கவிதை வாசிப்பு அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இப்பகுதிகளில் நான் உணர்கிறேன். இது குறித்து அதிகம் எழுதுவது ஆய்வுரையாக விரிந்துசென்று நூலை வாசிக்கத் தடையாய் இருந்துவிடக் கூடும். எனவே வாசகர்களுக்கு இடம் விட்டுவிடுவதுதான் அணிந்துரையாளனின் பணி.

நூலின் மொழிநடையைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். பொதுவாக ஆய்வு நூல்கள் என்றாலே செயற்கையான கடுநடையில் அமைந்திருப்பதைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றோம். விதிவிலக்காக இந்நூல் எளிய இனிய மொழிநடையில் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றி கவிதை ஆர்வலர்களும் மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

இந்நூலின் பின்னிணைப்புகள் குறித்துத் தனியாகக் குறிப்பிடவேண்டும். முதல் இணைப்பு துளிப்பா கவிஞரும், தமிழின் முதல் துளிப்பா இதழ் கரந்தடியின் ஆசிரியருமான புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மிகப்பயனுள்ள நேர்காணல். இரண்டாம் இணைப்பு, ஆய்வுக்குப் பயன்பட்ட துளிப்பா கவிஞர்கள் எண்மரின் தேர்ந்தெடுத்த சுமார் 300 துளிப்பாக்கள். ஆய்வுநூலை வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகக் கவிதைகளை விரும்பி வாசிக்கும் ஆர்வலர்களுக்கும் பயன்படும் விதத்தில் தேர்ந்தெடுத்த 300 துளிப்பாக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நு}லுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

தமிழ் துளிப்பா நூல்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் துளிப்பா குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் ஆய்வு நோக்கிலும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் கு.தேன்மொழி தொடர்ந்து பல நல்ல ஆய்வு நூல்களை எழுதி தமிழாய்வை மேம்படுத்த முயலவேண்டும்

முனைவர் நா. இளங்கோ
புதுவை
17-12-2008

அறஇலக்கியச் சமுதாயம் - அணிந்துரை

அறஇலக்கியச் சமுதாயம் - சு.உஷா
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

சங்க காலத்திற்குப் பின்னரச்; சங்கம் மருவிய காலம் என்று பரவலாக அறியப்படும் காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரிதும் இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டனவே. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்கின்றார்.

சின்மென் மொழியால் தாய பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர்பின்றே (தொல்.செய்யுளியல். 235)
இந்நு}ற்பாவிற்கு உரை எழுதும்பொழுது பேராசிரியர் தாய பனுவல் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என உணர்க என்று விளக்கமளிப்பார். நச்சினார்க்கினியரின் உரை விளக்கமும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அம்மை என்னும் வனப்பமைந்த இலக்கியங்களே என்பதை உறுதி செய்கின்றது. தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்கள் இவைகளை ஏற்றுப் பிற்கால இலக்கண நூலார்,
அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும் (பன்னிரு பாட்டியல் 542)
என்று இலக்கணம் வகுத்தனர்.

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும் நாலடி நான்மணி நானாற்பது.. .. முதலான பதினெட்டு நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். சங்க கால வாழ்க்கையில் போற்றப்பட்ட விழுமியங்கள் பல கீழ்க்கணக்கு நூல்களில் கண்டிக்கப்படுகின்றன. கால வரிசையில் சங்க இலக்கியங்களுக்கு அடுத்ததாக, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் என்று அடையாளப் படுத்தப்படும் கீழ்க்கணக்கு நூல்கள் இடம்பெற்றிருந்தாலும் பாடுபொருள், வடிவம், உணர்த்துமுறை, உத்தி என்று பலநிலைகளிலும் அவை மாறுபடுகின்றன. இவ்வகை மாற்றங்கள் இயல்பான மாற்றங்களாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இத்தகு சமூக மாற்றம் ஒரு பெரிய அரசியல் மற்றும் அதிகார மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்க வேண்டும். அரசியல் / இலக்கிய வரலாறுகள் போகிற போக்கில் இருண்ட காலம் என்று வருணித்துவிட்டு நிறைவடைந்துவிடுகின்றன. அவை போதா! முழுமையான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த முழுமையான ஆய்வுகளை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னோடியாக இந்நு}ல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

II

சிங்கப்பூர் தமிழாசிரியை சு.உஷா எங்கள் புதுவை, தாகூர் கலைக்கல்லூரி மற்றும் புதுவைப் பல்கலைக் கழகங்களில் முதுகலை மற்றும் இளமுனைவர் பாடம் பயின்றவர். கற்றல், ஆய்வு இரண்டிலும் மிகச்சிறந்த ஈடுபாடு கொண்டவர். சிங்கப்பூர் மாணவர்களிடம் மிகச்சிறந்த ஆசிரியை என்ற நற்பெயர் பெற்றுள்ள இந்நூலாசிரியர், படிக்கும் காலங்களில் ஆசிரியப் பெருமக்களால் மிகச் சிறந்த மாணவர் என்ற பாராட்டுதலைப் பெற்றவர். நூலாசிரியர் சு.உஷா அரிதின் முயன்று ஆய்ந்து வெளியிட்டிருக்கும் அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் தமிழாய்வு உலகிற்குத் தக்கதோர் புதிய வரவு. விளக்கவியல் முறையில் நான்மணிக்கடிகை என்ற கீழ்க்கணக்கின் ஓர் அறநூலை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் அவர் இந்நூலைப் படைத்துள்ளார்.
“நான்மணிக் கடிகை காலச் சமுதாயம் இத்தகையது என்பதையும், சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த சூழலையும் வெளிக்கொணர வேண்டும் என்ற விருப்பம் இவ்வாய்வினை மேற்கொள்ளக் காரணமாக அமைந்தது.”
என்று இந்நூலை எழுதியதற்கான நோக்கத்தினைத் தெளிவாகப் பதிவுசெய்கின்றார் நு}லாசிரியர் சு.உஷா

அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி முன்னுரை, இரண்டாம் பகுதி அற இலக்கியம் காட்டும் சமுதாயம், மூன்றாம் பகுதி தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்பன அவை.

முதல்பகுதி, முன்னுரையில் நான்மணிக்கடிகை குறித்த விரிவான ஆய்வு அறிமுகம் இடம்பெறுகின்றது. இதில் நூலாசிரியர் விளம்பிநாகனார் அறிமுகம், அவரின் காலம், சமயம் குறித்த செய்திகளும் நான்மணிக்கடிகை நூலின் சிறப்புகளும் நு}லின் பதிப்பு வரலாறும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதி, அற இலக்கியம் காட்டும் சமுதாயம் என்ற இயலில் நான்மணிக் கடிகையில் இடம்பெற்றுள்ள சமுதாயம் குறித்த செய்திகள் விரிவாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக குடும்பம், சாதிப் பிரிவுகள், தொழில்கள், உணவுமுறை, வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதார நிலை, நட்பு, அறக்கருத்துக்கள், கல்வி, அரசியல் முதலான தலைப்புகளில் நு}லின் நு}ற்று ஆறு பாடல் தரும் செய்திகளும் முறையாக வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இவ்வியலை ஒருமுறை வாசிப்போரும் நான்மணிக் கடிகை நூல் செய்யுட்களை முழுதாக வாசித்த நிறைவை அடைவர்.

மூன்றாம் பகுதி, தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்ற இயல் நான்மணிக் கடிகை என்ற தமிழ் அற இலக்கியத்தினைச் சீன அற இலக்கியமான கன்பூசியசின் சிந்தனைகள் என்ற நு}லுடன் ஒப்பிட்டு ஆராயும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியலில் அறக்கருத்துக்கள், ஓழுக்கம், கீழ்மக்கள், ஆட்சிமுறை, நட்பு முதலான தலைப்புகளில் தமிழ்- சீன அறக்கருத்துக்கள் ஒப்பிடப்படுகின்றன.

தமிழ் ஆய்வாளர்களுக்குச் சங்க இலக்கியங்களின் மீதுள்ள ஈடுபாடும் ஈர்ப்பும் சங்கம் மருவியகால இலக்கியங்கள் மீது இருப்பதில்லை. இப்பொதுப் போக்கிலிருந்து மாறுபட்டு ஆய்வாளர் சு.உஷா அவர்கள் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நானமணிக்கடிகை குறித்த ஆய்வினை நிகழ்த்தியிருப்பதே சிறப்பிற்குரியதாகும். நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கதொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. நடையின் இந்த எளிமையும் இனிமையும் இந்நூல் பாடநூலாகப் பரிந்துரைக்கத் தகுதியானது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றது.

நூலின் பின்னிணைப்பாக நான்மணிக் கடிகை பொருளடைவு, சொற்பொருள் விளக்கம் இரண்டினையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். நூலில் மிகுபயன் விளைவிக்கும் பகுதியாக இப்பின்னிணைப்பினைக் குறிப்பிடலாம். நான்மணிக் கடிகையின் நு}ற்று ஆறு பாடல்களிலும் இடம்பெற்றுள்ள நூற்பொருளை அதாவது நூலின் உள்ளடக்கங்களை முறைப்படத் திரட்டி அகரவரிசைப் படுத்தித் தந்துள்ள நூலாசிரியரின் உழைப்பை எத்துணைப் பாராட்டினாலும் தகும். இப்பொருளடைவு நான்மணிக் கடிகையைக் கற்க விரும்புவார்க்கும் ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியது. அடுத்து இடம்பெற்றுள்ள சொற்பொருள் விளக்கம் நூலாசிரியரின் அகராதியியல் புலமையை அடையாளம் காட்டக்கூடியதாய் அமைந்து சிறக்கின்றது.

சுவடிநூல் பதிப்புக் காலங்களில் உ.வே.சா போன்ற தகுதி வாய்ந்த பதிப்பாசிரியர்களால் பின்பின்பற்றப்பட்ட இவ்வகை அடைவுகள் தயாரித்து நூலின் பின்னிணைப்பாக இணைக்கும் போக்கு அண்மைக் காலங்களில் பெரிதும் வழக்கொழிந்து விட்டது. ஆய்வாளர் சு.உஷா அவர்கள் இத்தகு பழைய மரபினை மீண்டும் நடைமுறைப்படுத்தி நூலினை ஆக்கியுள்ள முறை பெரிதும் பயனிளிக்கக் கூடியது. நூலாசிரியர் சு.உஷா அவர்கள் முதல்முயற்சி இந்நூல். அவர் மேலும் நல்ல ஆக்கங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்குத் தக்க பணியாற்ற வேண்டும் என்பதே என் விழைவு.

முனைவர் நா.இளங்கோ
புதுவை

செவ்வாய், 11 நவம்பர், 2008

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - மணிமேகலை குப்புசாமி

அணிந்துரை



ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்திவிட்டனவோ? என்று தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பலகிப் பெருகினர். தமிழகத்தில் புதிதாக நுழைந்த ஐரோப்பியக் கிருத்துவப் பாதிரிமார்களும் மதம் மாறிய தமிழ்க் கிருத்துவப் புலவர்களும் தம் மதத்தைப் பரப்பும் நோக்கில் அச்சியந்திரங்களின் துணைகொண்டு பல புதிய கிருத்துவச் சிற்றிலக்கியங்களைப் பாடினார்கள். இதன் உடன் விளைவாக இந்து மதக் கடவுளர்களைப்(?) போற்றும் சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன. இஸ்லாமியர்களும் பல மரபான, புதிய சிற்றிலக்கியங்களை உருவாக்கினார்கள். ஆக இருபதாம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிருத்துவச் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின.

இவ்வகை சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம்சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறைய பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நு}ற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி.. (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை.. (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவைகளைக் குறிப்பிடலாம். பாவேந்தர் பிள்ளைத்தமிழ் என்ற பெயரிலேயே புலவர் புலமைப்பித்தன் ஒரு சிற்றிலக்கியம் படைத்துள்ளார்.

பகுதி-2

“பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் ஐந்தாவது நூலாக வெளிவருகின்றது. கவிஞரின் சிட்டுக்குருவியின் சின்னக்கவலை என்ற முதல் நூலும் அழகியல் என்ற இரண்டாம் நூலும் உரைவீச்சால் அமைந்த கவிதைத் தொகுப்பு நூல்கள், தோப்பு என்ற மூன்றாம் நூலும் அன்னவயல் என்ற நான்காம் நு}லும் மரபுக் கவிதைகளால் ஆன தொகுப்பு நூல்கள். முந்தைய நான்கு நூல்களும் கவிதைத் தொகுப்பு நூல்களாயிருக்க இந்நூல் ஒரு சிற்றிலக்கிய நூலாக வெளிவருவது இதன் தனிச்சிறப்பு. அதிலும் பாவேந்தரின் பெயர்த்தி பாட்டன் பாவேந்தனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவது அழகான முரண். பாவேந்தரின் மடியில் தவழ்ந்து விளையாடிய பெயர்த்தி தன் 52ஆம் அகவையில் பாவேந்தரைக் குழந்தையாக்கி தன் மடியிலிட்டுத் தாலாட்டும் கவிதைச் சித்து விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.

சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்து பருவங்கள் அமைத்துப்பாடி மகிழ்வது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை – போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.
(வெண்பாப் பாட்டியல்-8)

இவ்வாறு பாடும் மரபு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பதைத் தொல்காப்பியர்,
குழுவி மருங்கினும் கிழவதாகும் (தொல். புறத். 24)

என்று பதிவு செய்திருப்பதிலிருந்து ஓர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் தம் அன்பை முற்ற முழுதாகக் கொட்டிக் காண்பிக்க வாய்ந்த இடம் குழந்தைகளைக் கொஞ்சும் இடமல்லவா? அதனால்தானே திருவள்ளுவரும், “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்: 65) என்றும், “அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” (குறள்: 64) என்றும் குழந்தைமை இன்பத்தைச் சிறப்பித்துப் பாடினார். பாண்டியன் அறிவுடை நம்பியும்,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே
(புறம்-188)

என்று மயக்குறு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து அன்பு மயமாகி நிற்றலின் பெருமையை மிகுத்துப் பேசுகின்றார். ஆக, அன்புணர்ச்சி, அழகுணர்ச்சிகளோடு கவித்துவமும் களிநடம் புரியும் சிற்றிலக்கியம் பிள்ளைத் தமிழே என்றால் அது மிகையன்று. எனவேதான் கவிஞர்கள் பாட்டுடைத் தலைவர்களை நாயக நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பாடுவதைக் காட்டிலும் பாட்டுடைத் தலைவர்களைக் குழந்தைகளாக்கி மகிழ்ந்து பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களை பெரிதும் விரும்புகின்றனர். இருபதாம் நு}ற்றாண்டுச் சிற்றிலக்கியங்களில் மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்ட இலக்கிய வகைகளில் பிள்ளைத் தமிழும் ஒன்று.

பகுதி-3

மணிமேகலை குப்புசாமியின் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் மரபு வழிவந்த ஒரு சிற்றிலக்கிய வகை என்றாலும் கவிஞர் மரபைப் போற்ற வேண்டிய இடங்களில் போற்றியும் புதுமையைப் புகுத்த வேண்டிய இடங்களில் புகுத்தியும் தனித்தன்மையோடு இந்நு}லைப் படைத்துள்ளார். பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் என்று மரபான ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற வேண்டிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலான பத்துப்பருவங்களை அமைத்து நூறு பாடல்களில் தம் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் நூலைப் படைத்துள்ளார் கவிஞர். இது அவர் மரபைப் பேணுதலுக்குச் சான்று. காப்புப் பருவத்தில் திருமால் முதலான தெய்வங்கள் பாட்டுடைத் தலைவனைக் காத்தல் வேண்டும் என்ற மரபை ஒதுக்கிவிட்டு காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று, தமிழ்மொழி, முன்னோர், தாய்மை, தாய்ப்பால், தமிழரினம் முதலானவை பாட்டுடைத் தலைவனாம் பாவேந்தனைக் காக்க வேண்டும் என்று கவிஞர் மணிமேகலை குப்புசாமி தம் பிள்ளைத்தமிழ் நூலை அமைத்தமை அவரின் புதுமை நாட்டத்திற்கு ஒரு சான்று.
மண்ணில் விதைத்துப் பயிர்செய்யும்
மாந்தர்க் குயிராய் இருப்பவளே
மாந்த நேயம் தழைத்திருக்கும்
மங்காப் புகழைக் கொண்டவளே
எண்ணில் வளமும் ஈந்தவளே
இனிய நீரைக் கொண்டவளே
இடராய் ஞெகிழிப் புகைபரவி
எங்கும் நோய்கள் பெருகிடுதே
விண்ணில் முகிலும் அமிலம்பார்
விடமாய் மாற்றுஞ் செயற்கையிலும்
விளங்கும் நிலத்தின் மூலிகையின்
வேர்கள் தழுவி வருபவளே
கண்ணில் மணியெம் பாவேந்தைக்
கல்வி வீரம் பிறநலனும்
கருத்தில் கொடுத்துப் பிணிவிலக்கிக்
காப்பாய் அருமைக் காவிரியே
(பாடல்: 1)

இப்பாடல் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தின் முதல்பாடல். காவிரியே! எம் பாவேந்தைக் காப்பாயாக! என்ற பொருளில் அமைந்த பாடல். கவிஞர் மணிமேகலை இயல்பாகவே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். அவரின் முதல் தொகுதி சிட்டுக் குருவியின் சின்னக் கவலை என்ற நூல் ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் காப்புப் பருவத்தில் காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான இயற்கைப் பொருள்கள் பாவேந்தரைக் காக்க வேண்டும் என்று பாடுகின்றார். அதே நேரத்தில் இயற்கையின் மாண்பையும் செயற்கைகளால் இயற்கைச் சீரழியும் அவல நிலைகளையும் கவிஞர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருள்களை எரிப்பதனால் எங்கும் நோய்கள் பெருகுவதையும் வளிமண்டலம் அமிலமயமாகி இருப்பதையும் செயற்கைகள் விடமாகிப் போகும் நிலைமையையும் சுட்டிக்காட்டி இத்தகு இக்கட்டான சூழ்நிலையிலும் காவிரி நதி இயற்கையைக் காப்பாற்றும் அருஞ்செயல் புரிவதனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார் கவிஞர் மணிமேகலை. மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான தலைப்புகளிலும் இவ்வாறே இயற்கையின் மேன்மைகளைச் சுட்டிக்காட்டும் கவிஞரின் பணி புவி சூடேற்றம் பற்றிக் கவலையடைந்து வரும் இந்தத் தருணத்தில் தக்ககொரு மருந்தாய்ப் பயன்படுகின்றது. தாய்மை, தாய்ப்பால் இரண்டும் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டும் என்று பாடுமிடத்தில் தான் ஒரு பெண்கவிஞர் என்ற முத்திரையைப் பதிக்கின்றார். தாய்ப்பாலின் பெருமை பேசும் பாடல் அனைவரும் கற்பதற்கு உகந்தது.

பாவேந்தர் பிள்ளைத்தமிழின் மற்றுமொரு தனிச்சிறப்பு நூலில் ஆங்காங்கே தக்க இடங்களில் கவிஞர் பெய்துள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். நு}லில் இடம்பெற்றுள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல் வரிசைகளோடு பின்இணைப்பில் இணைத்துள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதற்குரியது. வரலாற்றுணர்ச்சியோடு; படைத்த கவிஞரின் இப்படைப்பாக்க உத்தி, பிற பிள்ளைத்தமிழ் நூல்களின் அடிப்படைப் பண்பாய்த் திகழும் வருணனை, கற்பனை முதலான அணிநலன்கள் இந்நூலில் மிகுதியும் இடம்பெறாத குறையைக்கூட மறக்கச் செய்துவிடுகிறது.
மக்கள் நன்மை முன்னிருத்தி
மக்கள் தலைவர் சுப்பையா
மங்கா மக்கள் முன்னணியால்
மாநிலத் தேர்தல் எதிர்கொண்டார்
சிக்கல் இன்றி மக்களுமே
சீரார் காசுக் கடைதொகுதி
சிதறா வாக்கால் உன்றனையே
தேர்ந்த தலைவன் என்றிட்டார்
விக்கும் நிலையில் ஒருமனிதன்
வேறு கட்சி தாவியதால்
வென்ற நீங்கள் எதிர்க்கட்சி!
விரும்பும் தலைவர் சுப்பையா
பக்கம் அமர்ந்த துணைத்தலைவா!
பதவிச் சிறுதேர் உருட்டுகவே!
பழகு தோழன் பாவேந்தே
பண்பின் சிறுதேர் உருட்டுகவே!
(பாடல்: 94)

புதுச்சேரியில் 1955 இல் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் மக்கள் முன்னணி என்ற அணியை உருவாக்கி அத்தேர்தலைச் சந்தித்தார் மக்கள் தலைவர் வ.சுப்பையா. மக்கள் முன்னணி சார்பில் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பாவேந்தர். மக்கள் முன்னணி இருபது இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்அணியினர் பத்தொன்பது இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சியமைக்கும் நேரத்தில் மக்கள் முன்னணியின் கறுப்பாடு ஒன்று எதிரணிக்குத் தாவியது. எனவே சுப்பையாவின் மக்கள் முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாயிற்று. சுப்பையா எதிர்க்கட்சித் தலைவராகவும் பாவேந்தர் எதிர்க்கடசித் துணைத்தலைவராகவும் அந்த சட்டசபையில் பொறுப்பேற்றனர். பாவேந்தரின் இலக்கிய ஆளுமைகளை அறிந்தவர்கள் கூட அதிகம் அறிந்திராத பாவேந்தரின் நேரடித் தேர்தல் அரசியல் வரலாற்றையும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களோடு பாவேந்தருக்கு இருந்த நெருக்கத்தையும் கவிஞர் மணிமேகலை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த அதே அவையில்தான் மக்கள் தலைவர் வழிகாட்டுதலில் பாரதி பெயரால் புதுவைக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். அவை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது என்ற வரலாற்றையும் மற்றொரு பிள்ளைத்தமிழ் பாடலில் (பாடல் எண்;. 88) குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.

பாவேந்தர் பிள்ளைத்தமிழ் கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் முதல் சிற்றிலக்கிய முயற்சி. சிற்றிலக்கிய வகைகளில் எத்தனையோ எளிமையான இலக்கியங்கள் இருக்க பிள்ளைத்தமிழ் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது அவரின் துணிவைக் காட்டுகிறது. கவிஞர் அரிதின் முயன்று தம்பணியை நிறைவாகவே செய்துள்ளார். பாவேந்தர் வழிவந்த கவிமரபு அவருக்குத் துணைசெய்திருக்கின்றது.

பிள்ளைத்தமிழுக்கு அம்புலி-புலி என்பார்கள். அம்புலிப்பருவம் பாடுவது அத்துணை கடினமானது என்பது அதன்பொருள். இரவில் வானில் தோன்றும் அம்புலியைப் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தையுடன் விளையாட வருமாறு கவிஞராகிய தாய் அழைப்பாள். அவ்வாறு அழைக்கும்போது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தண்டம்) முதலான நிலைகளில் பாட்டுடைத் தலைவனோடு நிலவை ஒப்பிட்டுப் பாடவேண்டும். சிக்கலான இந்தப் பிள்ளைத்தமிழ் மரபை இந்நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் மணிமேகலை.
அலைகடல் உடலுறு புயலினை
அகழ்ந்திடும் தனிவலி உடையோனே!
அணிமயில் உடலுறு தனிஎழில்
அமர்ந்திடும் தனிநடை திருவாழ்வே!
கலைதவழ் ஒளிதரு முகஎழில்
களிறுறு தனிக்குலம் உடையோனே!
கனியுறு உயிரொளி தமிழெனுங்
களிதவழ் உணர்வுறு தருவேநீ!
(பாடல்: 31)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள பாடலைப் போன்று பிள்ளைத்தமிழின் பல பாடல்கள் நல்ல சந்த நயத்தோடு வடித்தெடுக்கப்பட்டுள்ளன. யாப்பு நூல் தேர்ச்சியும் தக்க சொற்களஞ்சியமும் கொண்டு கவிதைகளை யாத்துள்ள கவிஞர் மணிமேகலையின் புலமை பாராட்டுதற்குரியது. பாவேந்தர் வரலாறு, பாவேந்தர் நூல் பெயர்கள், நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், நூலின் மிகச்சிறந்த கவிதை வரிகள் எனப் பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பாடலிலும் ஒல்லும் வகையிலெல்லாம் பாவேந்தரைப் பதிவு செய்யும் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் தமிழுக்குப் புதிய வரவு, புதுமையான வரவு. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும். கவிஞர் மணிமேகலை குப்புசாமி தொடர்ந்து நல்ல பல இலக்கியங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...