செவ்வாய், 21 ஏப்ரல், 2020

விழிகள் தி.நடராசனின் முகமற்றவர்களின் முனகல்கள் - அணிந்துரை



முனைவர் நா.இளங்கோ




உலகக் கலைகளுக்கெல்லாம் தாயாய் இருக்கும் கலை இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக் கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இசையும் மொழியும் இணைந்த போதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டு நிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக் கொண்டான். தொடக்கத்தில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக் கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்து விட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். கவிதை, மனித இனத்தின் தனிப்பெரும் சொத்து. மனிதன் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டதைப் போலவே கவிதை படைக்கவும் கற்றுக்கொண்டான். மொழியோடு உடன்பிறந்த கலை கவிதைக்கலை. மொழியறிந்த ஆதிமனிதன் தொடங்கி இன்றுள்ள நவீன மனிதன்வரை கவிதை படைக்காத மனிதர்கள் இல்லை. மனித சமூகத்தின் வளர்ச்சி வரலாற்றில் கவிதைகள் அவனை இன்புறுத்தின, எழுச்சியூட்டின, போராடத்தூண்டின. சமூக மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிதைகள் உடனிருந்து உற்ற துணைபுரிந்து மனிதர்களை வளப்படுத்தியுள்ளன. சாதாரண பாமர உழைக்கும் மக்கள் தொடங்கிப் புலமையாளர்களுக்கும் மன்னர்களுக்கும் மதகுருமார்களுக்கும் தத்துவ வித்தகர்களுக்கும் கவிதைகளே அன்றைய ஊடகங்களாய் இருந்தன. மனிதகுல வரலாறு கவிதைகளோடு தொடங்கிக் கவிதைகளோடு பயணித்துக் கவிதைகளோடு வாழ்கின்றது. தமிழ்க் கவிதைகளும் இப்படித்தாம்.
தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள்வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகிவிட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன்போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப் பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள் அல்லது ஆக்கப் படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது செய்ந்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூவரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவற்றில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவசக்தி. உள்ளார்ந்த ஆற்றல்.
இனிய நண்பர் கவிஞர் விழிகள் தி.நடராசன், விழிகள் பதிப்பக உரிமையாளர். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையுடையவர். ஜென்துறவியைப் போல் எதைச் செய்கின்றோமே அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்தல் என்ற தத்துவப் பார்வையோடு செயல்படக் கூடியவர். பதிப்புத் துறையில் தனித்திறனாளர். மனிதர்களை நேசிப்பதைப் போலவே நூல்களையும் நேசிக்கத் தெரிந்தவர். அழகுணர்ச்சியோடு அவர் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கடல்கடந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் வசீகரிக்கக் கூடியன. உலக இயக்கத்தின் அச்சாணியே பணம்தான் என்று வாழும் இன்றைய சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் சகமனிதர்களைத் தோழமையோடு அன்பு பாராட்டிக் கொண்டாடும் பேருள்ளத்தர். தமிழின் தலைசிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பலரோடு நாளும் பழகும் நல்லதோர் வாய்ப்பினைப் பெற்றவர் என்பதனால் கவிஞர் தி.நடராசன் அவர்களுக்கு எழுத்தாற்றலும் கைகூடி வந்திருக்கின்றது. அவர் எழுத்தாற்றலின் ஒருமுகம் தான்வாழும் சமூகத்தைப் புறமிறித்துப் பார்க்கும் அவரின் கவிதைகள். முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு விழிகள் தி.நடராசனின் அண்மைப் படைப்பு.
மகாகவி பாரதி தொடங்கிவைத்த சமகாலக் கவிதைகளுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டில் உரமிட்டு நீர்பாய்ச்சி வளம் சேர்த்தவர்கள் மிகப்பலர். வாழும் சமூகத்தையும் சகமனிதர்களின் இன்ப துன்பங்களையும் பாடாமல் கற்பனையில் மனிதர்களைக் கடைத்தேற்றும் வெற்று வேதாந்தங்களைப் புறந்தள்ளி இருபது, இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதைகள் மனிதகுல முன்னேற்றத்திற்குப் புதுப்பாதை சமைத்தன. அந்த வகையில் மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ கவிதையாய் இருப்பது புத்துலகுக்கு விதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முகமற்றவர் களின் முனகல்களைப் பதிவு செய்கிறார் தி.நடராசன்.
முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இந்தக் கவிதைத் தொகுப்பின் தனிப்பட்ட குரலை நூலின் தலைப்பிலேயே நாம் இனங்கண்டு கொள்கிறோம். சமகாலப் பிரச்சனைகள் அனைத்தையுமே கவிஞரின் முனகல்களில் நாம் தெளிவாகக் கேட்க முடிகிறது. தனிமனிதச் சோகங்கள் தொடங்கிச் சமூகத்தின், மொழியின், இனத்தின், தேசத்தின் சோகங்கள் ஓர் உள்ளடங்கிய அவலம் தோய்ந்த தொனியில் தொகுப்பின் பக்கங்கள் தோறும் வெளிப்படுகின்றன.  ஆங்காங்கே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளும் தெரிவது கவிதைத் தொகுப்பின் கனத்தைக் கூட்டுகின்றது.
வாழ்க்கை குறித்த விசாரணைகளை ஓர் ஆழ்ந்த தத்துவத் தேடலோடு கவிஞர் வெளிப்படுத்துவது அவரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. நீரை இழந்த நதி, கடக்கும் காலம், யாருக்காக யார் அழுவது, சமூக வீதியில் ஓரங்க நாடகம், இறப்பு முதலான கவிதைகளை இவ்வகைக் கவிதைகளாக நாம் அடையாளம் காண முடியும்.
கவிஞர் தி.நடராசனின் பல கவிதைகள் படிமத் தன்மைகளோடு குறியீடுகளின் பிணைப்பில் சொற்களின் பொருட் புலப்பாட்டுக்கு மீறிய வீச்சோடு புனையப் பட்டுள்ளன. இவ்வகைக் கவிதைகளில் கவிஞரின் தீவிரமான இலக்கிய வாசிப்பும் பயிற்சியும் புலப்படுகின்றன.
 ‘சாக்குமூட்டை’என்ற தலைப்பிலான பின்வரும் கவிதையினை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
கனவு விழியில்
கால்வைத்துப் படுத்தான்
விழிக்கோள உருண்டை
அவன் கால்களை
நீட்ட முடியாமல்
தடுத்தது..
கண் விழித்தால்..
சாக்குமூட்டையில்
கட்டிப் போட்டிருந்தனர்
அவனையும்
அவன் கனவுகளையும்.
‘கனவுவிழி’, ‘விழிக்கோள உருண்டை’ முதலான சொற் சேர்க்கைகளில் ஓர் அதீதப் படிமம் கட்டமைக்கப் படுவதனை கற்போர் உணர்ந்து மகிழ முடியும்.
கவிஞருக்கு ஜென் தத்துவத்திலே ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பதனை இத்தொகுப்பின் சில கவிதைகள் அடையாளப் படுத்துகின்றன.
மலரில் தேன்எடுக்கும் போது
மலரும் வண்டும் பேசும்
காதல்மொழி உங்களுக்குக் கேட்கிறதா?
இல்லையெனில் -நீங்கள்
ஒரு வண்டாக மாறுங்கள்.
‘காதல்மொழி’என்ற தலைப்பிலான இக்கவிதையில் மலரும் வண்டும் பேசும் காதல் மொழியினை நாம் கேட்க வேண்டுமென்றால் நாம் வண்டாக மாறவேண்டும் என்று கவிஞர் பரிந்துரைக்கும் குரலில் ஒரு ஜென்துறவியின் குரலைக் கேட்க முடிகிறது.
நிறைவாக, ‘பிடிக்கலாமா?’ என்ற தலைப்பிலான கவிஞர் தி.நடராசன் அவர்களின் கவிதையோடு அணிந்துரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்
கவிதையைப் பிடிக்கமுடியா தென்பவனுக்கும்
காற்றைப் பிடிக்க முடியா தென்பவனுக்கும்
ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
இரண்டும் உள்மூச்சில்
அடைபட்டுக் கிடப்பதைஉன்
அறிவுஒளி கொண்டுபார்
தெரியும்.
கவிதை ஒவ்வொரு மனிதனின் உள்மூச்சிலும் அடைபட்டுக் கிடக்கிறது. அதனை உணர்பவன் படைப்பாளி யாகிறான் என்ற கவிஞரின் கூற்று ஆழ்ந்த பொருள் பொதிந்தது. நான் வேறுஒரு கவிதை நூலுக்கு எழுதிய வரிகளை அதன் பொருள் பொருத்தம் நோக்கி இங்கே தருகிறேன்.
கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளைவிட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம்.
கவிஞர் தி.நடராசனின்,  முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சிலகவிதைகள் கேள்விகளோடு விடைகளையும் சொல்கின்றன. சிலகவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. கவிஞரின் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் அவரின் அனுபவத் தோய்வும் தேடலின் தொய்வும் தென்படுகின்றன. கவிஞர் மட்டும்தான் தேடவேண்டுமா? நாமும் தேடுவோம். தேடலுக்கு வழிகாட்டும் இத்தொகுப்பு தமிழுக்குத் தேவையானதோர் நல்வரவு. நல்ல நூல்களை வரவேற்று மகிழும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்றுப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

-முனைவர்நா.இளங்கோ
nagailango@gmail.com

சிலம்பார் அறுபது - அணிந்துரை


சிலம்பார் 60 நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் கலைக் கல்லூரி
புதுச்சேரி-8

தமிழிலக்கிய நெடும்பரப்பு, பெரிதும் செய்யுள் மற்றும் கவிதை இலக்கியங்களால் நிரம்பிக் கிடப்பதுவே என்றாலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள உரைநடை இலக்கியங்களின் வேகமான வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாய் உள்ளது. ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்தி விட்டனவோ? என்று எண்ணத் தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிக அளவில் சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.
பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பலகிப் பெருகினர். தமிழகத்தில் புதிதாக நுழைந்த ஐரோப்பியக் கிறித்துவப் பாதிரிமார்களும் மதம் மாறிய தமிழ்க் கிறித்துவப் புலவர்களும் தம் மதத்தைப் பரப்பும் நோக்கில் அச்சியந்திரங்களின் துணைகொண்டு பல புதிய கிறித்துவச் சிற்றிலக்கியங்களைப் பாடினார்கள். இதன் உடன் விளைவாக இந்து மதக் கடவுளர்களைப் போற்றும்(?) சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன. இஸ்லாமியர்களும் பல மரபான, புதிய சிற்றிலக்கியங்களை உருவாக்கினார்கள். ஆக இருபதாம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிறித்துவச் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின.
இவ்வகை சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம்சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறையப் பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நூற்றுக் கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி..  (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை.. (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம். தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
இம்மரபின் தொடர்ச்சியாக, தமிழறிஞர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களைப் பாராட்டி, புகழ்ந்து எழுதப்படும் தனிக்கவிதைகளின் வரிசையில் அதே மனநிலையில் எழுதப்படும் தொடர் கவிதைகளால் அமைந்த சிற்றிலக்கிய நூல்கள் வெளிவரத் தொடங்கின. அச்சு இயந்திரத்தின் வருகையால் இலக்கிய வடிவங்கள் ஜனநாயகப் படுத்தப்பட்டது போல் இன்றைய நவீன கணினி சார்ந்த D.T.P. தொழில்நுட்பம், நூலாக்கம் மற்றும் பதிப்புச் செயற்பாடுகளை எளிமைப் படுத்தியது. ஒருவகையில் சங்க இலக்கியப் பாடாண் பாட்டுகள் காலந்தோறும் புத்தாக்கம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. புதுவை யுகபாரதியின் சிலம்பார் 60 என்ற இந்நூலும் ஒருவகைப் பாடாண் பாட்டே. சிற்றிலக்கிய வகைகளில் இந்நூலை வகைப்படுத்த வேண்டுமெனில் ‘மாலை’ என்ற சிற்றிலக்கிய வகையாக வகைப்படுத்தலாம். ஒருபொருள் குறித்த பல பாடல்களின் தொடுப்பு, மாலை என்ற இலக்கியமாகும் என்ற மரபின்படி சிலம்பார் 60 ஒரு ‘மாலை’ சிற்றிலக்கியம்.
இந்நூலாசிரியர் புதுவை யுகபாரதி புதுச்சேரியின் சிறந்த இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆய்வு முதலான பல துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்து வருபவர், ‘நண்பர்கள் தோட்டம்’ என்ற இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர், தமிழ் மொழி, இன உணர்வாளர், தொடர்ந்து செயலூக்கத்தோடு சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டி வருபவர் என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான அன்பும் தோழமையும் கொண்டு உறவையும் நட்பையும் பேணி வருபவர். அவரின் தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகளின் ஓர் அங்கமே இந்த இலக்கியப் படைப்பு.
இந்நூலின் பாட்டுடைத் தலைவரான சிலம்பு நா. செல்வராசு தமிழ் ஆய்வுலகில் ஓர் அரிய குறிஞ்சி மலர். விளம்பரங்களை விரும்பாத வித்தகர். எப்பொழுதும் நண்பர்களின், மாணவர்களின் நலன் நாடும் நற்பண்பாளர். ஆய்வுச் செயற்பாடுகளில் கறாரானவர் மாந்தச் செயற்பாடுகளில் நேர்எதிரான நெகிழ்ச்சியாளர். சங்க இலக்கிய ஆய்வுகளிலும், சிலப்பதிகார ஆய்வுகளிலும் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய ஆய்வுச் செம்மல். மரபான இலக்கண இலக்கியப் பயிற்சியும் நவீன இலக்கியக் கோட்பாட்டு அணுகுமுறையும் கொண்ட சிலம்பு நா.செல்வராசு போன்ற ஆய்வாளர்களைக் காண்பது தமிழாய்வுலகில் அரிதினும் அரிது. தொடர்ச்சியாகப் பல தேசியக் கருத்தரங்குகளை நடத்திய அனுபவமும் பல ஆய்வுக் கோவைகளைப் பதிப்பித்த பயிற்சியும் ஒருங்கே கொண்டவர். தமிழகப் பல்கலைக் கழகங்கள் தகும் சிறப்பளித்துக் கொண்டாடியிருக்க வேண்டிய தகுதிப்பாடுடைய இப்பேராசிரியர் கல்விப் புலத்திலும்... புரையோடிப் போய்விட்ட அரசியல் சதுரங்கத்தால் உரிய கவனம் பெறாமல் போனார். இதனால் பல்கலைக் கழகங்களுக்கான இழப்பே மிகுதி என நான் துணிந்து சொல்வேன். இத்தகு தகுதிப்பாடுடைய ஒரு தமிழறிஞரைப் போற்றிப் புகழும் இந்நூல் உண்மையில் ஓர் அரிய முயற்சி, ஆக்கபூர்வமான முயற்சி. இந்த காரணங்களுக்காகவே நூலாசிரியர் புதுவை யுகபாரதி பாராட்டப்பட வேண்டியவர், இந்நூல் வரவேற்கப்படவேண்டியது.
சிலம்பார் 60 என்ற இப்பாடாண் பாட்டு நூல் 101 அறுசீர் விருத்தங்களால் ஆனது. ஆத்திசூடி அமைப்பில் ஒவ்வொரு பாடலும் தமிழ் நெடுங்கணக்கு வரிசை எழுத்துக்களை முதலெழுத்தாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. புதிதாகவும் புதுமை யானதாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த வரிசைமுறை இந்த நூலுக்கு மேலும் சிறப்பினைச் சேர்க்கின்றது. தமிழ், கதிரவன், நிலவு, காவிரி, காற்று, பூக்கள், மழை முதலான இயற்கைப் பொருட்களே! எம் பாட்டுடைத் தலைவராகிய சிலம்பாரை வாழ்த்துங்கள்! என்று நூலாசிரியர் வேண்டுவதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. பாட்டுடைத் தலைவரின் முன்னோர் வாழ்க்கைத் தொடங்கி சிலம்பாரின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, ஆய்வு மற்றும் நூலாக்கப் பணிகள் என பாட்டுடைத் தலைவரின் வாழ்க்கைச் சுவடுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ள நூலாசிரியர் புதுவை யுகபாரதியின் திறம் பாராட்டத் தக்கது.
சிலம்பார் 60 நூலில் இயல்பான ஓட்டமும் தளர்நடைப் பயில்வுமாகக் கவிதைகள் அடுக்கப்பட்டுள்ள அழகு கற்போர் நெஞ்சைக் கவரும் என்பதில் ஐயமில்லை. சான்றாகப் பின்வரும் பாடலைக் காண்போம்,
குற்றம் கடிதல் குறையில்லை
குற்றம் காணல் குறையென்பார்
முற்றும் துறத்தல் முறையில்லை
முழுதாய் வாழ்தல் முறையென்பார்
அற்றம் காக்கும் அறிவென்பார்
அழிவைத் தடுக்கும் அறிவென்பார்
முற்றும் பிறர்க்காய் முகிழ்க்கின்ற
முல்லைச் சிரிப்புச் சிலம்பாரே!
கவிதைகளின் இனிமை, எளிமை, பொருட்செறிவுக்குக் கட்டியம் கூறும் மேற்காட்டிய பாடலைப் போன்ற பல பாடல்களை இந்நூலினுள் யாத்துத் தந்துள்ளார் புதுவை யுகபாரதி. இன்னும் பாரீர்,
தைபோல் நல்ல தைக்கொடுக்கும்
தாமிர பரணித் தமிழாறே
வைகை, பெண்ணை, பாலாறே
வற்றாப் பொன்னி வளஆறே
தைத்தை என்றா டிவந்திடுவீர்
தளரா துழைக்கும் சிலம்பாரை
ஐபோல் வெல்வெல் என்றூக்கி
ஆர்ப்ப ரித்து வாழ்த்திடுவீர்!
இப்பாடலில் தமிழகத்து வற்றாத ஜீவநதிகளெல்லாம் பாட்டுடைத் தலைவராம் சிலம்பாரை வாழ்த்த வேண்டும் என்ற வேணவாவை வெளிப்படுத்தும் நூலாசிரியர் நதிகளின் ஆர்ப்பரித்து ஓடும் ஓட்டத்தையும் துள்ளலையும் தம் கவிதை நடையில் கொண்டுவந்து படிக்கும் நம்மையும் இப்பொருளின் பால் ஈர்க்கின்றார். ‘தைத்தை என்றா டிவந்திடுவீர்’ என்ற அடியில் நதிகளை அழைக்கும் கவிஞரின் அழைப்போடு நம்மையும் ஈர்க்கும் சந்தநயம் அமைந்து சிறப்பது இக்கவிதைக்குத் தனியழகு. இப்படி நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றின் சிறப்பையும் சொல்லிக் கொண்டே போகலாம், அது விரிப்பின் பெருகும். விருந்துக்கு முன்னால் நின்று விருந்தின் சிறப்பை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தால் வயிறு நிiறுயுமா? நூலின் உள்ளே நுழைந்து மனதார உண்ணுங்கள். பாட்டுடைத் தலைவருக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க!!

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...