முனைவர் நா.இளங்கோ
உலகக் கலைகளுக்கெல்லாம் தாயாய் இருக்கும் கலை இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்
கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இசையும் மொழியும் இணைந்த போதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டு நிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக் கொண்டான். தொடக்கத்தில்
கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக் கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்து விட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். கவிதை, மனித இனத்தின் தனிப்பெரும் சொத்து. மனிதன் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டதைப் போலவே கவிதை படைக்கவும் கற்றுக்கொண்டான். மொழியோடு உடன்பிறந்த கலை கவிதைக்கலை. மொழியறிந்த ஆதிமனிதன் தொடங்கி இன்றுள்ள நவீன மனிதன்வரை கவிதை படைக்காத மனிதர்கள் இல்லை. மனித சமூகத்தின் வளர்ச்சி வரலாற்றில் கவிதைகள் அவனை இன்புறுத்தின, எழுச்சியூட்டின, போராடத்தூண்டின. சமூக மாற்றங்களின்
ஒவ்வொரு கட்டத்திலும் கவிதைகள் உடனிருந்து உற்ற துணைபுரிந்து மனிதர்களை வளப்படுத்தியுள்ளன. சாதாரண பாமர உழைக்கும் மக்கள் தொடங்கிப் புலமையாளர்களுக்கும் மன்னர்களுக்கும் மதகுருமார்களுக்கும் தத்துவ வித்தகர்களுக்கும் கவிதைகளே அன்றைய ஊடகங்களாய் இருந்தன. மனிதகுல வரலாறு கவிதைகளோடு தொடங்கிக் கவிதைகளோடு பயணித்துக் கவிதைகளோடு வாழ்கின்றது. தமிழ்க் கவிதைகளும் இப்படித்தாம்.
தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள்வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகிவிட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை.
கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன்போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப் பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப்
பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள் அல்லது ஆக்கப் படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது செய்ந்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூவரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவற்றில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவசக்தி. உள்ளார்ந்த ஆற்றல்.
இனிய நண்பர் கவிஞர் விழிகள் தி.நடராசன், விழிகள் பதிப்பக உரிமையாளர். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையுடையவர். ஜென்துறவியைப்
போல் எதைச் செய்கின்றோமே
அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்தல் என்ற தத்துவப் பார்வையோடு செயல்படக் கூடியவர். பதிப்புத் துறையில் தனித்திறனாளர். மனிதர்களை நேசிப்பதைப் போலவே நூல்களையும் நேசிக்கத் தெரிந்தவர். அழகுணர்ச்சியோடு அவர் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கடல்கடந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் வசீகரிக்கக் கூடியன. உலக இயக்கத்தின் அச்சாணியே பணம்தான் என்று வாழும் இன்றைய சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் சகமனிதர்களைத்
தோழமையோடு அன்பு பாராட்டிக் கொண்டாடும் பேருள்ளத்தர். தமிழின் தலைசிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பலரோடு நாளும் பழகும் நல்லதோர் வாய்ப்பினைப் பெற்றவர் என்பதனால் கவிஞர் தி.நடராசன் அவர்களுக்கு எழுத்தாற்றலும் கைகூடி வந்திருக்கின்றது. அவர் எழுத்தாற்றலின் ஒருமுகம் தான்வாழும் சமூகத்தைப் புறமிறித்துப் பார்க்கும் அவரின் கவிதைகள். முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு விழிகள் தி.நடராசனின் அண்மைப் படைப்பு.
மகாகவி பாரதி தொடங்கிவைத்த சமகாலக் கவிதைகளுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டில்
உரமிட்டு நீர்பாய்ச்சி வளம் சேர்த்தவர்கள் மிகப்பலர். வாழும் சமூகத்தையும் சகமனிதர்களின் இன்ப துன்பங்களையும் பாடாமல் கற்பனையில் மனிதர்களைக் கடைத்தேற்றும் வெற்று வேதாந்தங்களைப் புறந்தள்ளி இருபது, இருபத்தோராம்
நூற்றாண்டுக் கவிதைகள் மனிதகுல முன்னேற்றத்திற்குப் புதுப்பாதை சமைத்தன. அந்த வகையில் மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ கவிதையாய் இருப்பது புத்துலகுக்கு விதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முகமற்றவர் களின் முனகல்களைப் பதிவு செய்கிறார் தி.நடராசன்.
முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இந்தக்
கவிதைத் தொகுப்பின் தனிப்பட்ட குரலை நூலின் தலைப்பிலேயே நாம் இனங்கண்டு கொள்கிறோம். சமகாலப் பிரச்சனைகள் அனைத்தையுமே கவிஞரின் முனகல்களில் நாம் தெளிவாகக் கேட்க முடிகிறது. தனிமனிதச் சோகங்கள் தொடங்கிச்
சமூகத்தின், மொழியின், இனத்தின், தேசத்தின் சோகங்கள் ஓர் உள்ளடங்கிய அவலம் தோய்ந்த தொனியில் தொகுப்பின் பக்கங்கள் தோறும் வெளிப்படுகின்றன. ஆங்காங்கே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளும் தெரிவது கவிதைத் தொகுப்பின் கனத்தைக் கூட்டுகின்றது.
வாழ்க்கை குறித்த விசாரணைகளை ஓர் ஆழ்ந்த தத்துவத் தேடலோடு கவிஞர் வெளிப்படுத்துவது அவரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. நீரை இழந்த நதி, கடக்கும் காலம், யாருக்காக யார் அழுவது, சமூக வீதியில் ஓரங்க நாடகம், இறப்பு முதலான கவிதைகளை இவ்வகைக் கவிதைகளாக நாம் அடையாளம் காண முடியும்.
கவிஞர் தி.நடராசனின் பல கவிதைகள் படிமத் தன்மைகளோடு குறியீடுகளின்
பிணைப்பில் சொற்களின் பொருட் புலப்பாட்டுக்கு மீறிய வீச்சோடு புனையப் பட்டுள்ளன. இவ்வகைக் கவிதைகளில் கவிஞரின் தீவிரமான இலக்கிய வாசிப்பும் பயிற்சியும் புலப்படுகின்றன.
‘சாக்குமூட்டை’என்ற தலைப்பிலான பின்வரும் கவிதையினை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
கனவு விழியில்
கால்வைத்துப் படுத்தான்
விழிக்கோள உருண்டை
அவன் கால்களை
நீட்ட முடியாமல்
தடுத்தது..
கண் விழித்தால்..
சாக்குமூட்டையில்
கட்டிப் போட்டிருந்தனர்
அவனையும்
அவன் கனவுகளையும்.
‘கனவுவிழி’, ‘விழிக்கோள உருண்டை’ முதலான சொற் சேர்க்கைகளில் ஓர் அதீதப் படிமம் கட்டமைக்கப் படுவதனை கற்போர் உணர்ந்து மகிழ முடியும்.
கவிஞருக்கு ஜென் தத்துவத்திலே ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பதனை இத்தொகுப்பின் சில கவிதைகள் அடையாளப் படுத்துகின்றன.
மலரில் தேன்எடுக்கும் போது
மலரும் வண்டும் பேசும்
காதல்மொழி உங்களுக்குக் கேட்கிறதா?
இல்லையெனில் -நீங்கள்
ஒரு வண்டாக மாறுங்கள்.
‘காதல்மொழி’என்ற தலைப்பிலான இக்கவிதையில் மலரும் வண்டும் பேசும் காதல் மொழியினை நாம் கேட்க வேண்டுமென்றால் நாம் வண்டாக மாறவேண்டும் என்று கவிஞர் பரிந்துரைக்கும் குரலில் ஒரு ஜென்துறவியின் குரலைக் கேட்க முடிகிறது.
நிறைவாக, ‘பிடிக்கலாமா?’ என்ற தலைப்பிலான கவிஞர் தி.நடராசன் அவர்களின் கவிதையோடு அணிந்துரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்
கவிதையைப் பிடிக்கமுடியா தென்பவனுக்கும்
காற்றைப் பிடிக்க முடியா தென்பவனுக்கும்
ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
இரண்டும் உள்மூச்சில்
அடைபட்டுக் கிடப்பதைஉன்
அறிவுஒளி கொண்டுபார்
தெரியும்.
கவிதை ஒவ்வொரு மனிதனின் உள்மூச்சிலும்
அடைபட்டுக் கிடக்கிறது. அதனை உணர்பவன் படைப்பாளி யாகிறான் என்ற கவிஞரின் கூற்று ஆழ்ந்த பொருள் பொதிந்தது. நான் வேறுஒரு கவிதை நூலுக்கு எழுதிய வரிகளை அதன் பொருள் பொருத்தம் நோக்கி இங்கே தருகிறேன்.
கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளைவிட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம்.
கவிஞர் தி.நடராசனின், முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சிலகவிதைகள் கேள்விகளோடு விடைகளையும் சொல்கின்றன. சிலகவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. கவிஞரின் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் அவரின் அனுபவத் தோய்வும் தேடலின் தொய்வும் தென்படுகின்றன. கவிஞர் மட்டும்தான் தேடவேண்டுமா? நாமும் தேடுவோம். தேடலுக்கு வழிகாட்டும் இத்தொகுப்பு தமிழுக்குத் தேவையானதோர் நல்வரவு. நல்ல நூல்களை வரவேற்று மகிழும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்றுப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
-முனைவர்நா.இளங்கோ
nagailango@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக