புதன், 11 ஆகஸ்ட், 2010

முதல் ஆற்றுப்படையின் நாயகன் சோழன் கரிகாலன்

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சோழன் கரிகால் பெருவளத்தான்

ஆற்றுப்படை இலக்கியங்களில் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவனே பத்துப்பாட்டினுள் ஒன்பதாவதாகத் திகழும் பட்டினப் பாலைக்கும் தலைவனாவான். அந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் என்னும் பெயர்களை உடைய கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இளஞ்சேட்சென்னி என்பானின் மகன். இவன்தாய் அழுந்தூர் வேண்மாள் ஆவாள். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாகக் கால்கள் கருகிட இவனுக்கு இப்பெயர் வழங்கலாயிற்று என்றும் பகைவரால் தீயிட்டுக் கொல்லக் கருதிய போது கால் கரிந்த தீக்காயத்துடன் தப்பி உயிர்பிழைத்துக் கரிகாலன் ஆனான் என்றும் சிலர் கரிகாலன் என்ற சொல்லுக்கு விளக்கம் காண்பர்.

கரி -யானை காலன் -யமன், அழிப்பவன் என்று பொருள் கொண்டு யானைகளுக்கு எமன் என்றும் யானைகளைக் கொல்பவன் அதாவது யானைப் போரில் வல்லவன் என்றும் சிலர் விளக்கம் கூறுவர். கரிகாலன் என்றால் யானைப் போரில் சிறந்தவன் என்ற பொருளே பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

ஆயினும் பொருநராற்றுப்படை ஏட்டுச் சுவடிகளில் இடம்பெற்றுள்ள மிகைப் பாடல் வெண்பா ஒன்று,
அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர்நாடன்
கரிகாலன் கால்நெருப்பு உற்று.


என்று கரிகாலன் கால் நெருப்புற்ற செய்தியைக் குறிப்பிடுகின்றது. எனவே நெடுங்காலத்திற்கு முன்பே கரிகாலன் என்பதற்குக் கரிந்த காலன் என்ற புனைவு வழக்கிற்கு வந்துவிட்டமை தெளிவாகிறது.

பொருநராற்றுப்படையில் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் குறித்த வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை முடத்தாமக் கண்ணியார் பதிவு செய்துள்ளார்.

வெல்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
(பொருநர்: 129-132)

இரும்பனம் போந்தைத் தோடும் கரும்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇரும் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணி கரிகால் வளவன்
(பொருநர்: 143-148)

இம்மன்னன் இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய மகன் என்பதனை ‘உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்’ எனவரும் அடி உறுதிசெய்கின்றது. இவன் தன்தாய் வயிற்றில் கருவாயிருந்த போதே இவன் தந்தை இறந்தான் என்பதனையும் தாய் வயிற்றிலிருந்த போதே அரசுரிமை பெற்றுப் பின்னர் பிறந்தான் என்பதனையும் பொருநராற்றுப்படை ‘தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி’ என்னும் அடியினால் பதிவுசெய்கின்றது.

தாய் வயிற்றிலிருந்தபோதே அரசுரிமை பெற்றதனால் கரிகாலன் இளைஞனாயிருந்த போதே இவனுடைய அரசுரிமையைக் கைப்பற்றுதற்கு இவனுடைய உறவினரும் பிறரும் முயன்றனர் என்று அறிகிறோம். ஆனால் இளமையிலேயே முடிசூடிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தம் நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து அதன் பெருமையைப் பாரறியச் செய்தான் என்பதனை முடத்தாமக் கண்ணியார் கவிவழக்காகப் பின்வருமாறு புனைந்து கூறுகின்றார்.

பவ்வம் மீமிசைப் பகல்கதிர் பரப்பி
வௌ;வெம் செல்வன் விசும்பு படர்ந்துஆங்கு
பிறந்துதவழ் கற்றதன் தொட்டுச் சிறந்தநல்
நாடுசெகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
(பொருநர்: 135-138)

“கடலில் தோன்றும்போதே தன் சுடர்களைப் பரப்பி எழுந்து எல்லோராலும் விரும்பப்படும் வெம்மையுடைய ஞாயிறு பின்னர் ஆகாயத்தில் மெல்லச் சென்றது போன்று பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி ஏனையோர் நாட்டில் சிறந்த நல்ல நாடுகளைத் தன் வெற்றியாலே தன் தோள்களில் சுமந்தவன். அப்படித் தோளிலே சுமக்கும் நாடுகளை நாள்தோறும் வளர்த்தெடுக்கும் ஆற்றலும் அவனுக்குண்டு.” என்பது கவிஞர் கூற்று.

அடுத்து, கரிகால் பெருவளத்தானின் வெண்ணிப் போர் குறித்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்கின்றார் முடத்தாமக் கண்ணியார்.

“சிங்கத்தின் குட்டியானது தன் வலிமை குறித்து மிகுந்த செருக்கு கொண்டு, தன்தாயிடம் முலைப்பால் குடித்தலைக் கைவிடாத இளம் பருவத்திலேயே முதன்முதலில் இரையைக் கொல்லும் தன் கன்னி வேட்டையிலேயே விரைந்து செயல்பட்டு ஆண்யானையைக் கொன்று வெற்றிகரமாக முடித்ததைப் போன்று கரிய பனந்தோட்டு மாலையும், வேப்பமாலையும் முறையே சூடிய இருபெரு வேந்தர்களாம் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர வெண்ணி என்னும் ஊரிலே போரிட்டுக் கொன்ற அச்சந்தரும் வலிய வீரத்தையும் முயற்சியையும் உடையவன் சோழன் கரிகாலன். அவன் கண்ணுக்கு இனிய ஆத்தி மாலையைத் தலைக் கண்ணியாக அணிந்தவன்.” (பொருநர்: 139-148 அடிகளின் உரை)

சிங்கத்தின் கன்னிவேட்டையை, கரிகாலனின் வெண்ணிப் போருக்கு உவமையாக ஆசிரியர் கையாண்டுள்ளமையால் வெண்ணிப் போரும் கரிகாலனின் இளம்வயதில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று துணிய இடமுண்டு. ‘இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய’ என்றதனால் கரிகாலனுடனான வெண்ணிப் போரில் சேரனும் பாண்டியனும் களத்திலேயே கொல்லப்பட்டனர் அல்லது இறந்தனர் எனத் தெரிகிறது.

கரிகால் பெருவளத்தானைப் பாடும் பட்டினப்பாலை, அவனது இளம் பருவத்திலேயே அவன் பகைவர்களால் சிறையிடப்பட்டான் என்றும் தன் சொந்த வலிமையினால் சிறையிலிருந்து மீண்டான் என்றும் குறிப்பிடுகின்றது.

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்த்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரைக் கவியக் குத்தி குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
(பட்டின. 221-224)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் இடையறாது சிந்தித்துத் திட்டமிட்டு சிறையிலிருந்து தப்பி அரசுரிமையை மீண்டும் பெற்றுப் பகைவர்களை அடக்கினான் என்று அறிகிறோம்.

“சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கரிகாலனை இருவராகக் கொள்வார் மா.இராசமாணிக்கனார். முதல் கரிகாலன் கி.மு. 120 முதல் கி.மு. 90 வரை அழுந்தூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டான் எனவும் இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன் எனவும் கூறுவர். இரண்டாவது கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவர் கூறுகின்றார்.

மா.இராசமாணிக்கனார் போலவே சிவராசப் பிள்ளையும் கரிகாலனை இருவராகக் கொண்டு விளக்கினார். கரிகாலன் வெற்றிபெற்ற வெண்ணிப் பறந்தலைப் போர் இருமுறை நடைபெற்றதாக இவர்கள் கருதுவர். வெண்ணிப் போரில் கரிகாலனிடம் தோற்றுப் புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தது முதல் வெண்ணிப்போர் ஆகும். இப்போர் முதல் கரிகாலன் காலத்தில் நிகழ்ந்துள்ளது. இப்போரில் வேந்தர் இருவரையும் வேளிர் பதினொருவரையும் கரிகாலன் வென்றுள்ளான். இப்போரினைக் கழாத்தலையாரும் வெண்ணிக் குயத்தியாரும் பாடி உள்ளனர். இதேபோல் வேறொரு வெண்ணிப்போர் பொருநர் ஆற்றுப் படையுள் கூறப்பட்டுள்ளது என்றும் மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.” (சிலம்பு நா.செல்வராசு, எழுத்துரை, ப.2-3)

சோழ மன்னன் கரிகாலன் குறித்த செய்திகளில் தொன்மங்களும் வரலாற்று உண்மைகளுமாக விரவிக் கிடக்கின்றன. கரிகாலன் என்ற பெயரிலேயே ஒவ்வொரு காலத்திலும் சோழ மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். கரிகாலன் என்ற பெயரில் மன்னர் நால்வர் இருந்ததாக அபிதான சிந்தாமணி கூறுகிறது. பலர் தங்கள் மன்னர் பரம்பரையைக் கரிகாலன் பரம்பரை என்று பெருமையோடு புனைந்து பேசுகின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இன்றும் உலகோர் வியந்து பாராட்டும்படியான கல்லணையைக் கட்டியவன் சோழன் கரிகாலனே. பொருநராற்றுப்படை இந்தச் செய்தியைப் பதிவு செய்யவில்லை. எனவே கல்லணையைக் கட்டிய கரிகாலன் வேறு, பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் வேறு என்று அறிய முடிகிறது.

இளமையில் நரை முடித்து அறங்கூறு அவையத்தில் நல்ல தீர்ப்பு வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவன் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலனாயிருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதுபற்றி ஆற்றுப்படையில் எந்த அகச்சான்றுமில்லை. சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகளே என்றும் ஒரு குறிப்பு உண்டு.

எவ்வாறாயினும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான் தன்னைநாடி வரும் கலைஞர்களைப் பேணிப் புரந்து விருந்து உபசரித்து பரிசில்கள் வழங்கி உரிய மரியாதைகளோடு வழியனுப்பி வைப்பதில் மிகச் சிறந்த பண்பாளன் என்பதை முடத்தாமக் கண்ணியார் மிகச்சிறப்பாகத் தம் ஆற்றுப்படையில் பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...