வியாழன், 27 பிப்ரவரி, 2020

கலக்கல் காங்கேயனின் திருப்புகழ் காட்டும் சமுதாய நெறிகள் நூல் அணிந்துரை




முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி-605008

தம்முடைய பாட்டுமன்றம் என்ற மேடை வடிவத்தின் மூலம் உலக நாடுகளை யெல்லாம் சுற்றிவந்து நாளும் தமிழ்வளர்க்கும் இனிய நண்பர் செந்தமிழ் அருவி கலக்கல் காங்கேயனின் இரண்டாவது படைப்பு இந்த திருப்புகழ் காட்டும் சமுதாய நெறிகள் என்ற இலக்கிய ஆன்மீகக் கட்டுரை நூல். மேடைத் தமிழில் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால் எழுத்துலகில் வெற்றி பெறுவதென்பது மற்றுமோர் அரிய கலை. இரண்டிலும் வெற்றி பெறுபவர்கள் வெகுசிலரே. அந்த வரிசையில் பேச்சுத் தமிழில் மட்டுமல்லாது எழுத்துத் தமிழிலும் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் இந்த நூலைப் படைத்துள்ளார் காங்கேயன்.


புதுச்சேரி அரசுத்துறையில் ஓர் உயர்ந்த பதவியில் இறுக்கமான சூழலில் பணியாற்றிவரும் காங்கேயனின் இலக்கியத் தாகமும் ஆற்றலும் அளவிட முடியாதது. இவரின் பாட்டுமன்றம் கேட்டார் பிணிக்கும் தகையவாய் அமைந்து சிறப்பதனை நான் பலமுறை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். தமது பாட்டுத் திறத்தாலும் இலக்கியச் செறிவாலும் சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகளாலும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வல்லமை காங்கேயனுக்கு உண்டு. பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு இலக்கியமாக வாழ்ந்து வருபவர் இவர். செந்தமிழருவி கலக்கல் காங்கேயன் என்னுடைய அன்பிற்கு உகந்த மாணவர் என்பதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு பெருமை உண்டு. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்றாரே குறளாசான் அதுபோல் இவரின் இலக்கிய ஈடுபாட்டையும் நாளும் தேடித் தேடிக் கற்கும் அவரின் ஆர்வத்தையும் கண்டு நான் உண்மையில் பெருமகிழ்வு எய்துகிறேன்.
கவிதை இரசனையும் அனுபவமும் படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு. என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த இரசனையும் தோன்றிவிட்டது. படைப்பவன் இரசனையும் படிப்பவன் இரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை இரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். ஆன்மீகக் கவிதைகள் மாறுபட்ட அனுபவங்களைத் தரவல்லன. ஆன்மீகக் கவிதைகளை இரசிப்பதில் பல படிநிலைகள் உண்டு. சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விட்டதாகக் கூட, சுவைஞன் கருத வாய்ப்புண்டு என்றாலும் படைப்பாளியின் அனுபவம் எல்லாச் சுவைஞர்களுக்கும் கடத்தப் படுவதில்லை. சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலம். தமிழுக்கு நீண்ட ஆன்மீகக் கவிதை மரபு உண்டு. காரைக்கால் அம்மையார் தொடங்கி நேற்றைய பக்திப் பாடல்கள் வரை பல நூறு, ஆயிரம் பக்தி இலக்கியங்களை வாசித்த பயிற்சி அவனுக்கு இருக்கலாம். ஆனால் ஆன்மீக அனுபவங்கள் இதனினும் வேறுபட்டவை. அவை வார்த்தைகளில் சிக்குவதில்லை.
தொல்காப்பியச் செய்யுளியல், கவிதைப் படைப்பு பற்றிமட்டும் பேசவில்லை. கவிதை நுகர்வு குறித்தும் விரிவாகப் பேசுகின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு என்னும் செய்யுள் உறுப்பு, இன்றைய இலக்கிய இரசனை, இலக்கிய மதிப்பீடு, இலக்கியத் திறனாய்வு முதலான இலக்கிய நுகர்ச்சியோடு தொடர்புடைய கவிதையியல் கோட்பாடு ஆகும். இலக்கிய இரசனை என்பது ஒருவகையில் இலக்கியக் கல்வியோடு தொடர்புடையது ஆயினும் அடிப்படையில் இரண்டும் வேறு வேறு தளங்களில் இயங்கவல்லன. இன்றைக்கு இலக்கியக் கல்வி என்பது பாடத்திட்டம் சார்ந்ததோர் செயற்பாடாகக் குறுகிவிட்டது. கல்விப் புலத்திற்கு வெளியேதான் உண்மையில இலக்கிய இரசனை முருகியல் சார்ந்த அனுபவங்களைத் தரவல்ல நுகர்வாகி முழுமை பெறுகின்றது. கலக்கல் காங்கேயனின் திருப்புகழ் காட்டும் சமுதாய நெறிகள் என்ற இந்தக் இக்கட்டுரைத் தொகுப்பு சமயம், ஆன்மீகம், தத்துவம் சார்ந்த பொருளடக்கங் களோடு இலக்கியக் கல்வி மற்றும் இலக்கிய இரசனை என்ற இருவேறு தளங்களிலும் இணைந்தே இயங்குகின்றது.
                திருப்புகழ் காட்டும் சமுதாய நெறிகள் என்ற இந்நூல் ஓர் இலக்கியத் திறனாய்வு நூல் என்ற வகைப்பாட்டில் அடங்கக் கூடியது என்றாலும் நூலாசிரியர் காங்கேயன் இந்நூலைத் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக மட்டும் அமைக்காமல் ஆன்மீக அனுபவமும் இலக்கிய இரசனையும் கலந்ததோர் புத்திலக்கியமாக எழுதிச் செல்லுகின்றார். பக்தி இலக்கியக் கட்டுரைகளுக்கே உரிய செந்தரமும் பொதுமக்கள் வாசிப்புக்கான இலகுமொழி ஆளுகையுமாக நூலின் மொழிநடை தனித்து உருவாக்கப் பட்டுள்ளது. அருணகிரியார் படைப்புகளில் வெளிப்படும் ஆன்மீக வாழ்வியல் அனுபவங்களைத் தமிழிலக்கிய நெடும்பரப்பின் முன்பின்னாகப் பயணித்து சங்க இலக்கியங்கள் தொடங்கித் தற்காலப் புதுக் கவிதைகள், திரைப்படப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்து இலக்கியப் படைப்புகளோடும் பொருத்திக் காட்டுகிறார் நூலாசிரியர்.
      நூலாசிரியர் காங்கேயன் பின்வரும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலினைப் படைத்துள்ளார்.
1.       ஆசுகவிக் கோமன் அருணகிரிநாதர்
2.       சமய நல்லிணக்கமும் தமிழ் உணர்வும்
3.       தமிழ் உணர்வும் பக்திச் சுவையும்
4.       வெவ்வேறு தலங்களில் பாடிய பக்தித் தமிழ்
5.       சமுதாய மறுமலர்ச்சி
6.       நோய்க்கு மருந்தாகும் திருப்புகழ்
7.       பக்தியில் சமத்துவம் கண்ட புரட்சி நெறியாளர்
அருணகிரியாரின் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி முதலான இலக்கிய ஆன்மீகப் பனுவல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்திய தமிழ் உணர்வும் சமய நல்லிணக்கமும் நூலாசிரியரால் பெரிதும் விதந்து பேசப்படுவது இந்நூலின் சிறப்பு.
15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவரான பிரபுடதேவ மகாராஜனை அதல சேதனா ராடஎன்ற திருப்புகழில் அருணகிரி நாதர் உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே என்று பாடியிருக்கும் அகச்சான்றின் வழி அருணகிரியார் காலம் 15ம் நூற்றாண்டு என கணிக்க முடிகிறது அருணகிரியார் வாழ்ந்த காலம் தமிழக வரலாற்றில் ஒரு சிக்கலான காலப்பகுதியாகும். சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, முதலான மொழிகள் ஆட்சியாளர்களின் செல்வாக்கு பெற்று உயர்நிலையிலும் தமிழ்மொழியாம் நம் தாய்மொழி செல்வாக்கிழந்து தாழ்வுற்றும் இருந்த சிக்கலான நேரத்தில்தான் அருணகிரியார் தோன்றினார். அதுமட்டுமன்றி தமிழகத்தின் தலைசிறந்த சமயங்களான சைவமும் வைணவமும் தம்முள் மாறுபட்டும் முரண்பட்டும் ஒன்றையொன்று தாக்கி அழிக்கத் துடித்துக் கொண்டிருந்த காலமாகவும் அருணகிரியார் வாழ்ந்த காலம் இருந்தது.
இத்தகு சிக்கலான சூழலில் தோன்றிய ஆன்மீகக் கவியாகிய அருணகிரியார் தம் பாடல்களின் வழியே சைவ வைணவ மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமய நல்லிணக்கம் காண தமது திருப்புகழ் பாடல்களைக் கருவியாக்கினார். பெரும்பாலான திருப்புகழ் பாடல்களில் முருகனைப் புகழ்ந்து பாடும் சூழல்களில் திருமாலின் பெருமைகளையே விதந்துபாடி இத்தகு பெருமைக்குரிய திருமாலின் மருகோனே! என்று முருகனைப் புகழ்ந்துரைப்பதனை ஓர் உத்தியாகவே அருணகிரியார் கையாள்கிறார். அவர் காலச்சூழலில் தொடர்ந்து நடைபெற்று வந்த சைவ வைணவப் பூசல்களின் பின்னணியில் இந்தப் பாடல்களை வாசிக்கும் பொழுதுதான் அருணகிரியாரின் சமய நல்லிணக்க முயற்சி நமக்கு விளங்கும். மேலும் வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் தமிழ்மொழியின் பெருமையைப் பலபடப் புகழ்ந்துரைத்து தமது தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்துவதிலும் அவர் உறுதியாய் இருந்தார் என்பதனை நூலின் பல பக்கங்களிலும் அகச் சான்றுகளோடு நிறுவுகின்றார் நூலாசிரியர்.
செந்தமிழ் அருவி காங்கேயன் திருப்புகழில் நன்கு ஆழங்கால் பட்ட வாசிப்புப் பயிற்சி உடையவர் என்பதனை நூலின் பக்கங்கள் தோறும் நம்மால் உணர முடிகிறது. அருணகிரியாரின் திருப்புகழுக்கு எத்துணை பெரிய சிறப்புகள் இருப்பினும் அப்பாடல்களை ஒருவர் எளிதில் வாசித்துப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்ளுதல் இயலாது. அதற்குக் காரணம் திருப்புகழின் மொழிநடை. திருப்புகழ் பெரிதும் சமஸ்கிருதச் சொற்களைப் பிசைந்து உருவாக்கப்பட்ட சந்தப் பாடல்களாகும். பாடலின் பதப்பிரிப்பு மிகுந்த சிக்கலானது. தத்தகார ஓசையோடு கூடிய சந்தப் பயிற்சியால் ஓரளவு திருப்புகழைப் படித்துவிட முடிந்தவர்களால் கூடத் திருப்புகழின் முழுப்பொருளை உணர்ந்து கொள்ளுதல் அரிது. நண்பர் கலக்கல் காங்கேயன் தமது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் பயிற்சியின் வாயிலாக திருப்புகழ்ப் பாடல்களின் பொருளை உணர்ந்ததோடு மட்டுமன்றி அதிலுள்ள பக்திச் சுவையினையும் சமூக, சமய சீர்திருத்தக் கருத்துக்களையும் தமிழ்மொழியின் மேன்மைகளையும் சிறப்பாக யாவரும் எளிதல் புரிந்துகொள்ளும் வகையில் மிக இனிமையாக எடுத்துரைக்கின்றார்.
தமிழ் உணர்வும் பகதிச் சுவையும் என்ற தலைப்பிலான இந்நூலின் மூன்றாம் கட்டுரையை இத்தொகுப்பின் மைய அச்சு என்று கூறலாம். அக்கட்டுரையின் தொடக்கத்தில் முருகப் பொருமான் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப் பணித்தார் என்று நம்பப்படும் திருப்புகழின் முதல்பாடல் முத்தைத்தரு பத்தித் திருநகை என்ற பாடலை முழுமையாகக் கொடுத்து அதற்குப் பொருள் விளக்கத்தினையும் மிக எளிமையாகத் தருகின்றார். திருப்புகழ் பாடல்களைப் பொருள் உணர்ந்து படிப்பது குறித்த பயிற்சிக்கு உதவும் வகையில் இந்தப் பகுதியை அவர் அமைத்துள்ளார் எனக் கருதமுடிகிறது. மேலும் இக்கட்டுரையில் அருணகிரியாரின் பக்திப் பாடல்கள் எவ்வாறு மக்கள் வழக்கிலும் நாட்டுப்புறத் தெருக்கூத்துக் கலைவடிவங்களிலும் காலந்தோறும் பழகி வருகின்றன என்பதனைச் சான்றுகளோடு எடுத்துரைக்கின்றார்.
சமுதாய மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான இந்நூலின் ஐந்தாம் கட்டுரையில் சமய நோக்கில் தமது ஆன்மீக அனுபவங்களைப் பதிவு செய்யும் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்கள் பக்தி அனுபவம், ஆன்மீகம் என்ற பொருண்மைகளைக் கடந்து மனித சமுதாயம் முழுமைக்குமான சீர்திருத்தச் சிந்தனைகளை எவ்வாறு தம்மகத்தே பொதிந்து வைத்துள்ளன என்பதனைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவுகிறார்.
குறிப்பாக, திருச்செந்தூர் திருப்புகழில் இடம்பெறும் பின்வரும் பாடல் பகுதியினை எடுத்துக் காட்டி நூலாசிரியர் நுட்பஉரை கூறும் பகுதி வியந்து பாராட்டத்தக்கது.
செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற
கந்தனை அறிந்து அறிந்து அறிவினில்
சென்று செருகுந் தடந் தெளிதர தணியாத
சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரையொழித்து
என்செயல் அழிந்தழிந்து அழிய மெய்ச்
சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ
நூலாசிரியர் காங்கேயன் தரும் நுட்பஉரை:
சுவாமிகள் செந்திலை உணர்ந்து என்று பாடியிருக்கலாம், மீண்டும் மீண்டும் உணர்ந்து உணர்ந்து உணர்வுற என்று சொல்வதன் நோக்கம், உணர்ந்தே ஆக வேண்டும் எனும் கட்டாய நிலையை உணர்த்துகிறார். பிறகு அறிந்து அறிந்து எனும்போது முழுவதுமாக ஒரு பொருளை அறிதல் அவசியம் என்பது பொருளாகிறது. இங்கு முருகனின் கருணையையும் கீர்த்தியையும் அறிந்து அறிந்து எனக் கூறுகிறார். பிறகு என்செயல் அழிந்து அழிந்து எனுமிடத்தில் அவர் செயல் தவறெனவும், அச்செயல் முழுவதுமாக அழிய வேண்டுமெனவும் கருதுவது புலனாகிறது. இறைவா! உன்னை உணர்ந்து நீ யாரென அறிந்து என் தவறான செயல்கள் அழிந்து, இறுதியில் நான் யாரென மெய்ச்சிந்தை வரப்பெற்று உன் தரிசனம் காணும் நாள் எந்நாளோ? என வினவுகிறார்.
இங்கே அறிந்து அறிந்து என அவர் பாடுவது பக்தி மார்க்கத்தை மட்டுமே குறிப்பதன்று. பொதுவாகவே அனைவருக்கும் பொருந்துகிற செய்தியாகும். அறிதல் என்பது தெரிதல், தெளிதல், புரிதல், உணர்தல் என்கிற பொருள்களையும் உணர்த்துவதாகும். ஒன்றைப் பற்றி முழுவதுமாக அறிந்த பின்பே அது பற்றிய கருத்தை நன்கு தெளிவாக உணர்ந்து பின்பு எடுத்துச் சொல்வதே சிறந்த அறிவின் பயனாகும். ஆசிரியர்களும் அவ்வாறே ஒரு பாடத்தை மாணவர்களுக்கு நடத்தும் முன்பாகவே அப்பாடத்தின் பொருளை முழுவதும் தெளிவாக உணர்ந்து, தெளிந்து அறிந்த பின்பே மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுதான் சிறந்த கல்வி முறையாகும்.
இவ்வாறு நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் எடுத்துக் கொண்ட பொருண்மைக்கு ஏற்ப திருப்புகழ் முதலான அருணகிரியாரின் பாடல்களை மேற்கோள் காட்டுவதும் நுட்பமான பொருளுரை வழங்குவதும் பொருத்தமான இலக்கியப் பகுதிகளைப் பொருத்திக் காட்டலும் என நூல் முழுவதிலும் தமது இலக்கிய, சமய, சமூக, தத்துவப் பயிற்சியை வெளிப்படுத்துகின்றார் நூலாசிரியர் காங்கேயன்.
தமிழ் பக்தி இலக்கிய வாசகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் முன்னிறுத்திப் பொதுவாசிப்பு என்ற நிலையிலேயே நூலாசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார் என்றாலும் நூலின் பல கட்டுரைகள் ஆழ்ந்த சமய இலக்கிய, ஆன்மீகத் திறனாய்வுக் கட்டுரைகளாக அமைந்து சிறக்கின்றன. மொத்தத்தில் நூலின் ஒவ்வொரு கட்டுரையும் கற்போர் நெஞ்சைக் கவரும் வகையில் தகவல் செறிவுகளோடும் உயிரோட்டமுடைய எளிய இனிய மொழிநடையோடும் கட்டுரைக்கப் பட்டுள்ளன. தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலினைப் போற்றிப் பாராட்டி வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. செந்தமிழ் அருவி காங்கேயன் தொடர்ந்து எழுத வேண்டும். இடையறா உழைப்புக்கும் முயற்சிக்கும் எடுத்துக் காட்டாய் விளங்கும் நூலாசிரியர் தமது இலக்கியப் பணியையும் ஆன்மீகப் பணியையும் தொய்வின்றி தொடர்வார் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகின்றேன்.
முனைவர் நா.இளங்கோ

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...