திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-1

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு
(கொற்றவை வழிபாட்டை முன்வைத்து)


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பரிணாம வளர்ச்சியில் மரத்தைவிட்டுக் கீழிறங்கி இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கிய மனித இனத்தின் ஆறாவது அறிவுக்கு வாய்த்த முதல் அனுபவம் அச்சம்தான். இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும் விநோதங்களும் ஆபத்துக்களும் மனிதனுக்கு அச்ச மூட்டிக்கொண்டே இருந்தன. இயற்கையோடு இயைந்திருந்த விலங்குகளுக்கு இல்லாத அச்சம் இயற்கையோடு முரண்படுகிற, போராடுகிற, வெற்றிபெறக் கருதுகிற மனித இனத்துக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.

உலக உருண்டை உருவாகிப் பலகோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்பாராத விபத்துபோல் இப்புவியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய உலகின் கோடிக்கணக்கான உயிரினங்களுக்குத் தேவைப்படாத கடவுள் சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய பூமியின் கடைசி உயிரினமான மனிதர்களுக்குத் தேவைப்பட்டதன் ரகசியமே இந்த அச்சம்தான்.

இப்புவியின் ஆதி மனிதர்களுக்கு இயற்கையே அச்சம் தரத்தக்கதாய் இருந்த நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து இந்த இயற்கைக்குள் இருந்து இயங்கும் ஏதோ ஒன்று அச்சம் தரத்தக்கதாய் இருக்கிறது என்று தோன்றியது. ஆதி மனிதர்களின் கடவுள் தோற்றக் கதைகளின் தொடக்கம் இதுதான்.
தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுவன பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியமும் தொல்காப்பியமுமே. பழந்தமிழர் வழிபாட்டு வரலாற்றை எழுதுவதிலும் இந்நூல்களே தக்க ஆதாரங்களாயிருக்கின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் என்று நாம் குறிப்பிடும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஒரே காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களல்ல. சற்றேறக்குறைய ஐநூறு ஆண்டுக்கால (கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான) அகப்புற இலக்கியங்களின் தொகுப்புகள் அவை. சங்க இலக்கியங்கள் பதிவுசெய்யும் பழந்தமிழர் வாழ்க்கை மேற்குறிப்பிட்ட ஐநூறு ஆண்டுகாலத் தமிழர்களின் வாழ்க்கை மட்டுமன்று. பாடல்கள் உருவான சமூகத்திற்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுக்காலத் தமிழர் வாழ்க்கையின் பதிவுகள் இச்சங்க இலக்கியங்களிலே புதைவடிவங்களாகப் பதிவாகிக் கிடக்கின்றன.

ஆக, கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்காலப் பழந்தமிழர் வாழ்க்கைப் பதிவுகளின் ஆவணமாகக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பெறும் பழந்தமிழர் சமய வழிபாட்டுக் குறிப்புகள் யாருடையவை? அதாவது எத்தகு சமுதாயத்தின் பதிவுகள் என்ற வினா எழுவது இயல்பே. ஏனெனில் நம் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தமிழர்களின் தொல்குடிச் சமூகம், இனக்குழுச் சமூகம், சீறூர்ச் சமூகம், பேரரசுகளின் சமூகம் என பல படித்தான சமூக அமைப்புகளும் அச்சமூக வாழ்க்கைப் பதிவுகளும் பல அடுக்குகளாக இடம்பெற்றுள்ளன. வேறுவகையில் குறிப்பிட வேண்டுமென்றால் பழந்தமிழர்களின் வேட்டைச் சமூகம், ஆநிரை வளர்ப்புச் சமூகம், வன்புல உணவு உற்பத்திச் சமூகம், மென்புல உணவு உற்பத்திச் சமூகம், வணிகச் சமூகம் எனப்பல அடுக்குகளில் பழந்தமிழ்ச் சமூகம் குறித்த பதிவுகள் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. எனவே பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பழந்தமிழர் சமய வழிபாட்டுக் குறிப்புகளைத் திரட்டுவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது.

சூரும் அணங்கும்:
பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையியிலிருந்து கொஞ்சம் தெளிந்து தேறி இயற்கைப் பொருட்களான காடும், மலையும், மரங்களும், நீர்நிலைகளும் அச்சந் தரத்தக்கன அல்ல என்றும் இயங்கும், இயக்கும் அச்சந்தரத்தக்க ஏதோ ஒன்று அதில் உறைகின்றது அதுவே நாம் அஞ்சத்தக்கது என்றும் கருதினர். அச்சம் தரும் அந்த இயற்கை இகந்த ஆற்றலை, சூர் என்றும் அணங்கு என்றும் குறிப்பிட்டனர். அணங்கு, சூர் என்னும் இப்பெயர்கள் துன்பம், அச்சம் என்னும் பொருள் தருவன. அணங்கு என்றால் துன்பம் தருவது என்று பொருள்;. சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். ஆரணங்கு என்பது மிக்க துன்பத்தைத் தருபவள் என்று பொருள்படும். சூரர மகள் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும் தெய்வப் பெண் என்பது பொருளாகும். தொடக்கத்தில் சூரும் அணங்கும் உருவமற்றனவாகவே கற்பித்துக் கொள்ளப்பட்டன. பின்னர் அவை உருவுடையனவாகவும் அதே சமயத்தில் பால் பேதமற்றனவாகவும் பேசப்பட்டன. காலப் போக்கில் சூரும் அணங்கும் பெண்களாக பாவிக்கப்பட்டன. சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில்,

காடு, மலை, கடல், சுரம் முதலான பழைய கால நாகரிகப் பகுதிகளில் வாழ்ந்த குடிகளிடம் தாங்கள் வாழ்ந்த இயற்கைப் பகுதிகளான மரங்கள், மலைச்சாரல்கள், மலை உச்சிகள், காடுகள், மலைச்சுனைகள், நீரூற்றுகள், நீர்நிலைகள், கடல்துறைகள், காட்டுப்பூகள், பிலங்கள், ஆள் அரவமற்ற இடங்கள், இரவுக்காலம் .. ஆகியவற்றில் கடவுள், சூர், அணங்கு, சூலி, முருகு ஆகியவை தங்கின, நடமாடின என்ற நம்பிக்கை வெகு ஆழமாக வேர்விட்டிருந்ததைப் பாடல்களின் வழியாகக் காணலாம். மேற்கூறியவை மனித உருவம் உடையனவா என்பது தெளிவுறுவில்லை. (ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ப. 176)
என்று குறிப்பிடும் ராஜ் கொளதமனின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.

அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடை நனந்தலைச் சுனை, நிறை சுனை உறையும் சூர்மகள் முதலான சங்க இலக்கியச் சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை, நீர்நிலை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும் அணங்கும் குடிகொண்டிருந்தன என்ற சங்ககால மக்களின் நம்பிக்கைகளுக்கான அகச்சான்றுகளாகும்.

உருவம் இனங்காண இயலா நிலையில் சொல்லப்பட்ட சூரும் அணங்கும் காலப்போக்கில் பெண்தெய்வங்களாகக் கற்பிக்கப்பட்டன. சூர் என்பது சூர்மகள், சூரர மகளிர் என்றும் அணங்கு என்பது அர மகளிர், ஆரர மகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது.

நம்படப்பைச்
சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவில் அணங்குமார் வருமே .. ..
(அகநானூறு. 158)

என்ற அகநானூற்றின் பாடல்பகுதியில் அணங்கு தான் வேண்டிய உருவெடுத்து வரும் என்றும் இப்பொழுது மலைப்பூக்களைச் சூடிக்கொண்டு அணங்கு பெண்ணாக வந்திருக்கின்றாள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளமையை நோக்க அணங்கும் சூரும் விரும்பும் வடிவம் எடுத்து மக்களை அச்சுறுத்தும் என்ற அடுத்த காலக்கட்டத்து நம்பிக்கையை அறிந்துகொள்ள முடிகிறது.

சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள இத்தகு சூர், அணங்கு முதலான வருத்தம் மற்றும் அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களே பின்னர்ப் பல கிளைகளாகக் கிளைத்துப் பல்வகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. குறிப்பாகப் பழந்தமிழ் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலான இயற்கை இகந்த ஆற்றல்களிலிருந்தே நாம் இனங்காண முடியும்.

சூரும் அணங்கும் கொற்றவையாதல்:

தொல்குடிச் சமூகத்தில் தோற்றம் பெற்ற இத்தகு இயற்கை ஆற்றல்கள் குறித்த அச்சமே சமூகத்தில் ஒவ்வொரு அடுத்த கட்ட வளர்ச்சியிலும் புதுப் புது தெய்வங்களைப் படைத்துக்கொள்ள உந்தித் தள்ளியது. தொல்குடிச் சமூகத்தின் அடுத்த கட்டம் வேட்டைச் சமூகம், இது குறிஞ்சி நில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் வாழ்க்கையும் தொடர்ந்த வன்புல பயிர்த்தொழில் வாழ்க்கையும் இது முல்லைநில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் மென்புலப் பயிர்த்தொழில் வாழ்க்கை இது மருதநில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் வணிகவாழ்க்கை அது மருதம் மற்றும் நெய்தல் நில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. இத்தகு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளும் சமூக வளர்ச்சிப் போக்குகளும் பதிவாகியுள்ள நம் சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் வழிபாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்த படிநிலைகளையும் நாம் இனங்காண முடியும்.

அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு என்றெல்லாம் மலை, மலையுச்சி, மலைச்சாரல்களில் வசிப்பதாகப் பேசப்பட்ட அணங்கும் சூரும் குறிஞ்சியிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் இடம் பெயர்ந்தபோது கானமர் செல்வி (அகநானூறு. 345) என்றும் காடுறை கடவுள் (காடுறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை- பொருநர். வரி.42) என்றும் அழைக்கப்பட்டுப் பின்னர், பெருங்காட்டுக் கொற்றி (கலித். 89-8) ஆகிப் பின்னர் கொற்றவை (பரி.11) ஆகவும் மாற்றம் பெற்றது.

குறிஞ்சி (வேட்டைச் சமூகம்)

-சூர், அணங்கு
பழையோள்

முல்லை (வன்புல பயிர்த்தொழில்)

கானமர் செல்வி
காடுறை கடவுள்
காடுகிழாள்
பெருங்காட்டுக் கொற்றி
கொற்றவை

குறிஞ்சிநில வேட்டைச் சமூக வாழ்க்கையிலிருந்து கால்நடை வளர்ப்பு, வன்புலப் பயிர்த்தொழில் வாழ்க்கையாகிய முல்லைநில வாழ்க்கைக்குப் பழந்தமிழ்ச் சமூகம் மாற்றம்பெற்ற தருணத்தில்தான் தாய்வழிச் சமூகம் உருவாயிற்று. இத்தகு தாய்த் தலைமைச் சமூகத்தில்தான் தாய்த்தெய்வ வணக்கம் தோன்றி நிலைபெற்றிருக்க வேண்டும். அக்காலக் கட்டத்துத் தாய்த்தெய்வம்தான் பெருங்காட்டுக் கொற்றி என்றழைக்கப்பட்ட கொற்றவை. நா.வானமாமலை அவர்களின் பின்வரும் எடுத்துக் காட்டு மேற்சொன்ன கருத்துக்கு வலிமை சேர்க்கும்.

குறிஞ்சிநிலமக்கள் வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர்செய்யத் தொடங்கிய காலத்தில் காடுகிழாளும் தோன்றினாள் (நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் ப. 76)

2 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
அருமையாக நம் வாழ்வியல் வரலாறை ஆவண‌ப் படுத்தும் முயற்சிக்கு பாராட்டுகள்
நன்றி

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
அருமையாக நம் வாழ்வியல் வரலாறை ஆவண‌ப் படுத்தும் முயற்சிக்கு பாராட்டுகள்
நன்றி

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...