செவ்வாய், 2 நவம்பர், 2021

கவிஞர் இராதேவின் அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் - நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ


தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை உயிரோட்டத்தோடு நின்று நிலைபெற்று வாழும் இலக்கிய வகைமையாகத் தமிழின் சிற்றிலக்கியங்களைக் குறிப்பிடலாம். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூற்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து ஆற்றுப்படை நூல்களும் சிற்றிலக்கியங்களே. பின்னர் பக்தி இலக்கிய முன்னோடி காரைக்கால் அம்மையார் பாடிய பதிகம், அந்தாதி, இரட்டை மணிமாலை மூன்றும் சிற்றிலக்கியங்களே. தொடர்ச்சியாக உலா, பரணி, தூது, கோவை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், எனக் காலந்தோறும் பாடப்பட்டுவரும் சிற்றிலக்கியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படிக் கிட்டத்தட்ட ஈராயிர ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்றொரு பொய்யான தோற்றத்தைப் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பல்கிப் பெருகினர்.

சமயம் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம் சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறையப் பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி  (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழ் அறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

 அன்னை தெரெசா பிள்ளைத் தமிழ்எனும் இந்நூல் கவிஞர் இராதே என்றறியப்படும் பொறிஞர் இரா.தேவராசுவின் முதல் படைப்பு. கவிஞரின் முதல் படைப்பே ஒரு சிற்றிலக்கிய நூலாக வெளிவருவது சிறப்பு.

கவிஞர் இராதே புதுச்சேரியின் ஆற்றல் வாய்ந்த இளைஞர். கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலைக் கழகம் முதலான கலை இலக்கிய அமைப்புகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஆற்றலோடு செயல்பட்டு வருபவர். புதுச்சேரி காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துத் தொடர்ந்து சமூகசேவைகளை ஆற்றி வருபவர். மக்களிடையே கண்தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இடையறாது செயலாற்றி வருபவர். இலக்கிய விழாக்களை நடத்துவது, கவியரங்குகளில் கவிதை வாசிப்பது, சிற்றிதழ்களில் படைப்புகளை வெளியிடுவது முதலான இலக்கியப் பணிகளோடு நின்றுவிடாமல் தமிழ் உணர்வாளராக மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணிகளில் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு களத்தில் இறங்கிப் போராடவும் கூடிய செயற்பாட்டாளர் என்பதுதான் கவிஞர் இராதேவின் தனிச்சிறப்பு. இலக்கியத்துறை சாராதவர் எனினும் மரபார்ந்த கவிதைப் படைப்புகளில் ஆர்வத்தோடும் ஆற்றலோடும் செயல்படுவதோடு சந்தக் கவிதைகளைப் படைப்பதில் முழுமுனைப்பு காட்டி வருபவர். இவர் பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கியத்தைப் படைக்கத் துணிந்ததற்குக் கூட சந்தக் கவிதைகளின் பால் இவருக்குள்ள ஈடுபாடே காரணமாக இருக்கலாம்.

சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்துப் பருவங்கள் அமைத்துப் பாடி மகிழ்வது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

சாற்றரிய காப்புதால் செங்கீரை சப்பாணி

மாற்றரிய முத்தமே வாரானை போற்றரிய

அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே

பம்புசிறு தேரோடும் பத்து. (வெண்பாப் பாட்டியல்-8)

இவ்வாறு பாடும் மரபு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பதைத் தொல்காப்பியர், குழுவி மருங்கினும் கிழவதாகும் (தொல்.புறத்.24) என்று பதிவு செய்வார். ஒவ்வொரு மனிதனும் தன் அன்பை முற்றமுழுதாகக் கொட்டிக் காண்பிக்க வாய்ந்த இடம் குழந்தைகளைக் கொஞ்சும் இடமல்லவா? அதனால்தானே திருவள்ளுவரும், மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் ஃமற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள்: 65) என்றும், அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (குறள்: 64) என்றும் குழந்தைமை இன்பத்தைச் சிறப்பித்துப் பாடினார்.

அன்புணர்ச்சி, அழகுணர்ச்சிகளோடு கவித்துவமும் களிநடம் புரியும் சிற்றிலக்கியம் பிள்ளைத் தமிழே என்றால் அது மிகையன்று. எனவேதான் கவிஞர்கள் பாட்டுடைத் தலைவர்களை நாயக நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பாடுவதைக் காட்டிலும் பாட்டுடைத் தலைவர்களைக் குழந்தைகளாக்கி மகிழ்ந்து பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் விரும்புகின்றனர். இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்களில் மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்ட இலக்கிய வகைகளில் பிள்ளைத் தமிழும் ஒன்று.

கவிஞர் இராதேவின், ‘அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ்மரபு வழிவந்த ஒரு சிற்றிலக்கிய வகை என்றாலும் மரபும் புதுமையும் இணைந்ததொரு புத்திலக்கியப் படைப்பாகவே இந்நூலினைக் கவிஞர் படைத்துள்ளார். மரபான பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற வேண்டிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், பொன்னூசல் முதலான பத்துப்பருவங்களை அமைத்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஐந்து பாடல்கள் என அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ் நூலைப் படைத்துள்ளார் கவிஞர். நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள தமிழ் வணக்கம், அவையடக்கம், நூற்பயன் என்ற மூன்று பாடல்களோடு காப்புப் பருவத்தில் ஆறு பாடல்கள் என ஒரு பாடல் மிகுத்ததால் நூலில் மொத்தம் ஐம்பத்து நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் அமைப்பு மரபோடு இயைந்தாலும் பாடல் எண்ணிக்கை அமைப்பு அவரின் புதுமை நாட்டத்திற்குச் சான்று பகர்கின்றன. மேலும், காப்புப் பருவத்தில் திருமால் முதலான தெய்வங்கள் பாட்டுடைத் தலைவரைக் காத்தல் வேண்டும் என்ற மரபை ஒதுக்கிவிட்டு இமயம், கங்கை, ஊக்ளி, வங்கக்கடல், இந்தியா முதலானவை பாட்டுடைத் தலைவியாம் அன்னை தெரெசாவைக் காக்க வேண்டும் என்று கவிஞர் இராதே தம் பிள்ளைத்தமிழ் நூலை அமைத்தமை அவரின் புதுமை நாட்டத்திற்கு ஒரு கூடுதல் சான்று.

பரிதி விரிகதி ரொளிர மலையுறு

படல உறைபனி யொள்ளொளி விட்டெழும்

பரவி உருகிட நழுவு நனிபனி

பருவ நடையினை யிட்டெழ மெட்டிடும்

அரிது மலைவிழு மருவி தருமொரு

அரிய இசையெழ மத்தள மிட்டிடும்

அரவு வளைவென ஒடிய நடமிட

அலையும் வழிகளும் கிட்டிடும் கிட்டிடும்

                பெடையின் துணையொடு பரவும் சிறகினம்

                                பிணைவு மகிழுற முத்திடும் கத்திடும்

                                பிளிறு களிறுடன் பிடியும் முலவிடும்

                                பெருமை இமமலை நல்லழ கெட்டிடும்    (பாடல் 1)

என்று தொடங்கும் அன்னை தெரெசா பிள்ளைத் தமிழின் ஒவ்வொரு பாடலுமே துள்ளும் சந்த நயத்துடனும் அள்ளும் பொருள் நலத்துடனும் அமைந்து சிறக்கின்றன.

அன்னை தெரெசா (1910-1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். பின்னாளில் இவர் இந்தியக் குடியுரிமை பெற்றார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்கத் துறவறச் சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவற்ற அனாதைகளுக்கும் இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் அன்னை தெரெசா. இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரெசாவின், பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின்போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். அன்பு மற்றும் தொண்டின் உருவமாக நடமாடி உலக மக்களின் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர் அன்னை தெரெசா.

கவிஞர் இராதே, அன்னையின் தொண்டு வாழ்க்கையினை அம்மானைப் பருவப் பாடல் ஒன்றில் மிக அழகாகப் பதிவுசெய்கின்றார்:

ஓலம் கேட்கும் சேரியினில்

ஒழுகும் ஓலைக் குடிசையினில்

ஒல்கல் ஏழைத் துயரத்தில்

உழன்றே மடியும் வெறுமையினில்

காலம் நசுக்கும் தொழுநோயில்

கவலை யளிக்கும் பசிவயிற்றில்

கருகும் மகளிர் வாழ்வதனில்

கல்வி கற்றல் இன்மையினில்

கூலம் குப்பைத் தெருவதனில்

குவியும் பிணத்தின் மேடுகளில்

குழவிக் கொலையின் கொடுமைதனில்

குறிக்கோள் தொண்டின் முகங்கொண்டே

ஆலம் போல உறுதியுடன்

அல்லல் ஒழித்தாய் ஒடுங்கினவே

அரும்பே தெரெசா கோன்சாவே!

ஆடுக ஆடுக அம்மானை!           (பாடல் 38)

ஏழைகளின் இருப்பிடங்களில் அவர் குடிசைகளில் அவர்களது ஏழ்மைத் துயரத்தில் நிலைகலங்கிச் சாகும் இல்லாமையில் தக்க துணையெனத் துயர்துடைக்கும் அருமருந்தாய் ஓடிவந்து உதவுபவள் அன்னை கோன்சா! நெருங்கவே பிறர் அஞ்சும் தொழுநோயாளி களிடத்தும் கவலையோடு பசித்திருக்கும் ஏழை எளிய மக்களிடத்தும் ஆதரவற்றுக் கருகி மடியும் பெண்களிடத்தும் கல்வி கற்க வாய்ப்பின்றித் துயரத்தில் உழன்று கலங்கும் சிறார்களிடத்தும் அன்பு பாராட்டி ஆதரவளிப்பவள் அன்னை தெரெசா! குப்பைக் கூலங்கள் மண்டிக் கிடக்கும் ஒதுக்குப்புற வாழிடங்களில் மரணத்தின் வாயிலில் போராடிக் கிடக்கும் ஆதரவற்ற முதியோர் நோயாளிகளிடத்தும் சிசுக்கொலை என்ற கொடுஞ்செயல் அரங்கேறும் இடங்களில் என எங்கெங்கெல்லாம் தமது அன்பும் ஆதரவும் தேவைப் படுகின்றனவோ அங்கெல்லாம் தமது தொண்டினைச் செயற்படுத்தத் தவறாதவர் அன்னை ஆக்னஸ்! என இப்பாடலில் கவிஞர் இராதே அடுக்கிக் கூறும் அன்னையின் தொண்டு வாழ்க்கையினைப் படிப்பவர்கள் மலைக்காமல் இருக்க முடியாது.

கவிதையின் பொருண்மை சிறந்து நிற்பதைப்போல் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள நுட்பமான சொல்தேர்வும் இயல்பான சந்த ஓட்டமும் கவிதைக்கு மேலும் மேலும் அழகைச் சேர்கின்றன. பிள்ளைத் தமிழ் என்றாலே இன்றைய நடைமுறை வழக்கில் அதிகம் பழகாத செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டு கடுநடையில் எழுதினால் சிறப்பு என்று கருதாமல் அழகான பழகு தமிழ்ச் சொற்களால் நூலைப் படைத்துள்ள கவிஞரின் சொல்லாட்சி பாராட்டத்தக்கது.

பிள்ளைத்தமிழ் நூலுக்கு அழகே, அழகழகான வருணனைகளும் அற்புதக் கற்பனைகளும்தான் என்ற மரபை மறவாமல் கவிஞர் இராதேவும் தக்க இடங்களில் கையாண்டு நூலுக்கு மெருகேற்றியுள்ளார். நூலின் பல பாடல்களில் இத்தகு அழகு மிளிர்கின்றது என்றாலும் சான்றுக்கு ஒரு பாடலைப் பார்க்கலாம்:

புல்லின் நுனியில் பனிசிரிக்கும்

பூவி னிதழில் தேன்சிரிக்கும்

புரளும் அலையில் நுரைசிரிக்கும்

புதுநீர் வரவில் மீன்சிரிக்கும்

நெல்லின் விளைவில் நிலஞ்சிரிக்கும்

நீரின் மிகையால் நதிசிரிக்கும்

நீளும் இரவில் இருள்சிரிக்கும்

நிலவின் உலாவில் ஒளிசிரிக்கும்

வெள்ளு டையம்மை குமிழ்சிரிப்பின்

விளைவில் வறியோர் வாழ்வுயரும்

வெற்றிச் செல்வி சிரிப்பழகி

வியனு லகாளும் கோமகளே!              (பாடல் 14)

இயற்கையின் சிரிப்பு எங்கெல்லாம் வெளிப்படுகின்றது என்பதனை மேற்காட்டிய கவிதையில் மிகச் சிறப்பாக வருணித்துப் பாடியுள்ளார் கவிஞர். புல் நுனியில் பனி சிரிப்பதும் பூவின் இதழில் தேன்சிரிப்பதும் இயல்புதான் என்றாலும் கவிஞரின் கற்பனையில் பல புதிய சிரிப்பலைகளை இக்கவிதையில் காணமுடிகிறது. புதுநீர் வரவில் மீன் சிரிப்பதும், நெல்லின் விளைச்சலில் நிலம் சிரிப்பதும் நீளும் இரவினில் இருள் சிரிப்பதும் நிலவின் உலாவில் ஒளிசிரிப்பதும் கவிஞரின் தனித்தன்மையை அடையாளம் காட்டும் பதிவுகள்.

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி-புலி என்பார்கள். அம்புலிப்பருவம் பாடுவது அத்துணை கடினமானது என்பது அதன்பொருள். இரவில் வானில் தோன்றும் அம்புலியைப் பாட்டுடைத் தலைவியாகிய குழந்தையுடன் விளையாட வருமாறு கவிஞராகிய தாய் அழைப்பாள். அவ்வாறு அழைக்கும்போது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தண்டம்) முதலான நிலைகளில் பாட்டுடைத் தலைவியோடு நிலவை ஒப்பிட்டுப் பாடவேண்டும். சிக்கலான இந்தப் பிள்ளைத்தமிழ் மரபையும் இந்நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் இராதே.

அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ் கவிஞர் இராதேவின் முதல் இலக்கிய முயற்சி. அதிலும் சிற்றிலக்கிய முயற்சி. சிற்றிலக்கிய வகைகளில் எத்தனையோ எளிமையான இலக்கியங்கள் இருக்க, பிள்ளைத்தமிழ் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது அவரின் துணிவைக் காட்டுகிறது. கவிஞர் அரிதின் முயன்று தம்பணியை நிறைவாகவே செய்துள்ளார். சீரும் தளையும் கற்று எளிதில் கவிபாடிவிடலாம், ஆனால் சந்தங்களோடு பழகுவதென்பது அத்துணை எளிய செயலன்று, பழகப் பழகவே கைகூடும். கவிஞர் இராதே சந்தங்களோடு நன்கு பழகிவிட்டார் என்பதனை இந்நூல் அடையாளப்படுத்துகின்றது. இனி அவர் துணிந்து எத்தகு யாப்பிலும் இலக்கியம் படைக்கலாம். நல்ல நூற்களை ஏற்றுப் போற்றிப் பாராட்டும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்றுப் போற்றும். கவிஞரின் எடுப்பான தொடக்கம் அவரைப் பீடுநடை போடவைக்கும் என்ற நம்பிக்கையோடு படைப்பாளரை வாழ்த்துவோம்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கவிஞர் இராதேவின் அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் - நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை உயிரோட்டத்தோடு நின்று நிலைபெற்று வாழும் இலக்கிய வகைமையாகத் தமிழ...