ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வீரயுக மனப்பதிவுகளும் மகட்பாற் காஞ்சியும்



முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

தொல்காப்பியர் தம் புறத்திணையியல் காஞ்சித்திணையின் இருபது துறைகளில் ஒன்றாக மகட்பாற் காஞ்சி என்னும் துறையை அமைத்துள்ளார். பழந்தமிழகத்தின் முதுகுடி மன்னர்களுக்கும் புதிதாக மேலெழுந்து வந்த பேரரசுகளின் வேந்தர்களுக்கும் இடையிலான போராட்ட முரணாக இத்துறை தொல்காப்பியரால் வரையறுக்கப்படுகிறது.
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் - தொல் பொருள். நூ.77. 14-15
முதுகுடித் தலைவன் மகளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற பெருவிருப்புடன் படையோடு வந்த வேந்தனுக்கு மகளைத் தரமறுத்தலே மகட்பாற் காஞ்சியாகும். ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற் காஞ்சிஎன்று இந்நூற்பாவிற்குப் பொருளுரைப்பார் இளம்பூரணர்.
புறநானூற்றில் 336 முதல் 355 வரையுள்ள இருபது பாடல்கள் மகட்பாற் காஞ்சி என்னும் துறைக் குறிப்புகளோடு கிடைக்கின்றன. இப்பாடல்களைப் பாடியவர்கள் பரணர் (336, 341, 343, 348, 352, 354), கபிலர் (337, 347), அண்டர் நடுங்கல்லினார் (344,345), குன்றூர்க் கிழார் மகனார் (338), அள்@ர் நன்முல்லையார் (340), அரிசில் கிழார் (342), அண்டர்மகன் குறுவழுதியார் (346), மதுரை மருதனிளநாகனார் (349), மதுரை மேலக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார் (350), மதுரைப் படைமங்க மன்னியார் (351), கடுமான் கிள்ளி (355), காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் (353), பெயர் தெரியாப் புலவர் (339) ஆகியோர் ஆவர். இப்பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் தொல்குடி மன்னர்களாய்ஃ தலைவர்களாய் உள்ளனர். (தொல்குடி மன்னன் மகளே! புறம். 353) இவ்வகைப் பாடல்களில் பாட்டுடைத் தலைவர்களின் பெயர்களோ மகள்கொடை வேண்டிய வேந்தர்களின் பெயர்களோ பாடல்களில் மட்டுமல்லாது பாடல்களின் கொளுக்களில் கூட இடம்பெறவில்லை. இத்தொல்குடி மன்னர்களின் ஊர் மூதூர் எனக் குறிப்பிடப்படுகிறது. இவர்களிடம் மகள்கொடை வேண்டியவர்கள் அனைவரும் வேந்தர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். வேட்ட வேந்தனும் (336), கொற்ற வேந்தர் வரினும் (338), வம்ப வேந்தர் (345), கடிய கூறும் வேந்தே (349), கடுமான் வேந்தர் (350) போன்று பன்னிரண்டு பாடல்களில் பெண்கேட்டவர்கள் வேந்தர்கள் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள மகட்பாற்காஞ்சி பாடல்களின் பொருண்மைக்குச் சான்றாக ஒரு பாடலினைக் காண்போம். இப்பாடல் இளம்பூரணரால் மகட்பாற் காஞ்சித் துறைக்குச் சான்றாகக் காட்டப்பட்ட சிறப்புடையது.
நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே.    (புறம். 349)
திணை: காஞ்சி, துறை: மகட்பாற் காஞ்சி 
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
தன் கைவேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழிகளைக் கூறிநின்றான்;. இவள் தந்தையும் நெடு மொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றான் இல்லை. இஃது இவர்கள் கொள்கை யாகும்;. இதனை ஆராயுங்கால்; கூரிய பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையும் உடைய அரிவையாவாள்; மரத்தைக் கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தை யழிப்பது போல, இவள் தான் பிறந்த ஊருக்கு அழிவைத் தருபவள் ஆயினாள்.
இப்பாடலில் பெண்கேட்கும் வேந்தனுக்கும் பெண்கொடுக்க மறுக்கும் தந்தைக்குமான மோதல் கோபத்துடன் கூடிய மொழிகளாக இருதரப்பிலிருந்தும் வெளிப்படுகின்றன. இம்மோதலும் முரணும் அடுத்தகட்டப் போருக்கான அடித்தளமாய் அமைந்துவிட இவர்களுக்கிடையே போர் உறுதியாவதோடு, போரில் வேந்தன் வெல்லப்போவதும் உறுதியாகிறது. வெற்றிபெற்ற வேந்தன் இவளின் ஊரை அழிப்பதும் கட்டாயம் நிகழும். எனவே அழகான இந்தப்பெண் தான் பிறந்த ஊரையே அழித்த பழிக்கு ஆளாவாள் என்னும் பொருளில்; மருதன் இளநாகனார் இப்பாடலை யாத்துள்ளார்.
புறநானூற்று மகட்பாற் காஞ்சி பாடல்களில் இடம்பெறும் செய்திகளை,
1.     முதுகுடி மன்னர் வேளாண் குடியினர்.
2.     மகட்கொடை வேண்டியோர் வேந்தர்கள்.
3.     தந்தை, தமையர் மகட்கொடை தர மறுத்தல்.
4.     மூவேந்தர் போர் தொடுத்தல்.
5.     முதுகுடி மன்னர்களுக்குக் குறிப்பிட்ட சமுதாயத்தோடு
 இருந்த திருமண உறவு.
6.     ஊரது அழிவு.
7.     தாயையும் மகளையும் ஓர் அழிவுக்குக் காரணமாய்க் காட்டுதல்.
8.     மகட்கொடை வேண்டிப் பொருள் தரல்.
9.     பொருளை முதுகுடி மன்னர் மறுத்தல்.
10.   முதுகுடி மன்னர் பெயர்கள் குறிப்பிடப் பெறாமை.
என்ற பத்துவகைப் பொருட் பாகுபாட்டுக்குள் அடக்கி வகைப்படுத்தியுள்ளார் பெ.மாதையன். (சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பக். 63-64)
                மேலே காட்டப்பட்டுள்ள மகட்பாற் காஞ்சி பொருட் பாகுபாட்டினை ஊன்றி நோக்கிச் சில உண்மைகளை நாம் உய்த்துணர வேண்டியுள்ளது. பெண்கேட்ட வேந்தர்கள், பெண்கொடுக்க மறுத்த மன்னர்கள் என்ற இவர்களைப் பற்றிய எந்தவகை வரலாற்றுக் குறிப்பும் இல்லாமல் ஒருவகைப் புனைவுத் தன்மையோடு படைத்து மொழியப்பட்டுள்ள இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய நாடக வழக்கு உலகியல் வழக்குகளின் இணைவில் தோன்றும் புலனெறி வழக்குப் பாடல்களாகக் கொள்வதே பொருத்தமாயிருக்கும். எல்லா மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் போர் ஏற்படக்கூடும், ஊர் அழியக்கூடும் என்று பேசுகின்றனவே அல்லாமல் போர் நடந்ததாகவோ அழிவு ஏற்பட்டதாகவோ ஒரு பாடலிலும் சித்திரிக்கவில்லை. சில பாடல்கள் போருக்கான ஆயத்தங்களை அவலச்சுவை தோன்ற விவரிக்கின்றன. வேறு துறைகளில் அமைந்த புறநானூற்றின் பல பாடல்கள் (புறம். 6, 7, 16, 57) பகைமன்னர்களின் ஊர், நீர்நிலை, விளைநில அழிப்புகளை மிக விரிவாகப் பாடியுள்ள சூழலில் மகட்கொடை மறுத்த தொல்குடி மன்னர்களின் ஊரை வேந்தர்கள் அழித்தார்கள் எனப் புலவர்கள் பாடாமைக்குக் காரணம் சிந்திக்கத்தக்கது. போர் மூண்டால் போரிடும் வேந்தர் - தொல்குடி மன்னர் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புண்டு. ஆனால் புலவர்கள் ஒரு திட்டமிட்ட ஒரு வாய்பாட்டுத் தன்மையில் வேந்தனால் தொல்குடி ஊர் அழிக்கப்படும் என்ற தொனியிலேயே பாடல்களை யாத்தமையும் இங்கே கூர்ந்து நோக்கத்தக்கது.
                மகட்பால் துறையில் பாடப்பட்டுள்ள புறுநானூற்றுப் பாடல்களில் மகள்கொடை மறுத்துப் போருக்கு ஆயத்தமாகும் தந்தையர்கள் பெரிதும் மென்புல வேளாண் குடியினத் தலைவனாகவும் மதில்கள் சூழ்ந்த மருதநிலத் தலைவனாகவும் தண்பணைக் கிழவன் தந்தை (342), “பன்னல் வேலிப் பணை நல்லூரே (345), “ஓரெயில் மன்னன் ஒரு மடமகளே (338), “இஞ்சிக் கதுவாய் மூதூர் (350) என்று சித்திரிக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
                மகட்பாற் காஞ்சிப் பாடல்களைப் பாடிய புலவர்களின் காலப்பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள பெ.மாதையன் அவர்கள், மகட்பாற் காஞ்சி பாடிய புலவர்கள் பெரும்பாலும் வேந்தர் சமுதாயம் சார்ந்த புலவர்களாகவே உள்ளனர் என்றும் முதுகுடி மன்னரிடம் மகட்கொடை வேண்டிய வேந்தரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்ற பாடல்களில் உறந்தையைத் தித்தனும் கூடலை அகுதையும் ஆண்டதாய்க் காட்டப் பட்டிருப்பதும் இவர்களின் ஊர்வளம் முதுகுடி மன்னர்களின் மகள்களுக்கு உவமையாய்க் காட்டப்பட்டிருப்பதும் இந்த அரசர்கள் அந்தக் காலத்தில் வேந்தர்களைக் காட்டிலும் செல்வாக்குடைய அரசர்களாய் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் ஆகின்றன என்றும் ஒருபுறம் செல்வாக்குடன் முதுகுடி மன்னர்கள் வாழ்ந்த காலத்திலேயே மறுபுறம் வேந்தர்கள் தமது பேரரசை நிறுவத் தொடங்கியிருந்தார்கள், அவர்கள் நிலஎல்லைப் பெருக்க நோக்கில் முதுகுடி மன்னர்களின் வேளாண் ஊர்களைக் கவர முயன்றதன் அடையாளங்களைத்தான் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். (சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பக். 79-85)
                மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் புனைந்துரைக்கும் வேளாண் தொல்குடி மன்னர் X வேந்தர் என்ற முரண் சித்திரிப்பின் பின்னுள்ள புலமை அரசியலை இனிக் காண்போம்.
                மகள் கொடை மறுப்பு, மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் பின்புலம் குறித்து க.கைலாசபதி அவர்கள் சுட்டியுள்ள சில செய்திகள் வருமாறு; கிறித்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக் குழுக்கள் சிதறிக்கிடந்தன. காலப்போக்கில் இக்குலங்களிலிருந்து மூன்று அரசுகள் உருவாயின. முடியுடை வேந்தர் தலைதூக்கினர். பழைய குலங்கள் பன்னெடுங்காலமாக மரபு முறைப்படி வாழ்ந்து வந்தவை. அவற்றிற்குக் குலப்பெருமை இருந்தது. புதிய வேந்தர்கள் போர், கொள்ளை, கொலை முதலியவற்றால் முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் வம்பவேந்தர் (புறம்: 345). பெண்கேட்டு நிற்பவர்கள் செல்வம் நிறைந்த வேந்தர்களாயிருந்தும் பழைய குலப்பெருமை, ஆண்மை முதலியவற்றால் ஒவ்வாதார் ஆதலின் அவருக்குப் பெண்கொடுக்க மறுக்கின்றனர். இவ்வாறு பழைய மரபில் வந்த சில கிளைச் சமுதாயத்தினர் புதிய வேந்தருக்குப் பெண் கொடுக்கவும் மறுக்கும் சமுதாய மாற்ற நிலையில் புதிய வேந்தருக்குப் பக்கபலமாகப் பிரசாரம் செய்தனர் புலவர். (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், பக். 20-23)
                கைலாசபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் வம்ப வேந்தர் புகழ்பாடும் புலமை மரபினரின் ஒருவகைப் பிரச்சார உத்தியே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள். பாணர் மரபு அழிந்து புலமை மரபு மேலோங்கிய வேந்தர் காலத்துப் புதிய படைப்பாக்கங்களே இவ்வகைப் பாடல்களெனக் கொள்ளலாம்.
                இனி, புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்களில் பதிவாகியுள்ள பாணர் மரபின் வீரயுக மனப்பதிவுகளையும் புலமை மரபின் பேரரசுக் கட்டமைப்புக்கான புலமைத் தொழிற்பாட்டையும் வேறுபடுத்திப் பார்ப்போம்.
                புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் மகட்கொடை மறுக்கும் தந்தை தனயர்களின் சித்தரிப்பு பழைய வீரயுக மதிப்பீடுகளின் பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. உலக வீரயுகப் பாடல்களை ஆராய்ந்து வீரயுகப் படைப்புகளின் பொதுவான அம்சங்கள் என்று சி.எம்.பௌரா அவர்கள் குறிப்பிட்டுள்ளவற்றுள் முக்கியமானதோர் அம்சம் பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிரும் கொடுக்கும் அவனது ஆண்மையும் புகழுமே பாடலின் விழுமிய பொருளாய் இருத்தல்(ஒப்பியல் இலக்கியம், ப.81). மகட்கொடை மறுக்கும் தந்தை மற்றும் தனயன்மார்கள் கொற்ற வேந்தன் வரினும் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன் (338), “தந்தையும் நெடிய வல்லது பணிந்து மொழியலனே (349), “வேந்து குறையுறவுங் கொடாஅன் (341), “பணிந்து வந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையலள் இவளென (343), “செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி (345) என்றெல்லாம் பேசும் வீரமொழிகள் தொல்குடி சமூகத்தின் வீரயுக மனப்பதிவுகளாக இவ்வகைப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளமை கண்கூடு.
மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உண்மையில் யாரைப் புகழ்கின்றன?. ஊரை அழிக்கக் காத்திருக்கும் வேந்தர்களையா? அல்லது பெண்கொடுக்க மறுத்து அதனால் தானும் ஊரும் அழிந்தாலும் கவலையில்லை என்று பழைய குடிமரபுகளைக் காப்பாற்றத் துடிக்கும் தொல்குடித் தலைவர்களையா? புலவர்கள் திறம்படத் தம் புலமைத் தொழிற்பாட்டை இவ்வகைப் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒருபக்கம் வீரயுக மதிப்பீடுகளைச் சுமந்து வாழும் தொல்குடிச் சமூகத்தின் மாண்புகளைப் பாணர்களாக நின்று புகழ்ந்து பாடும் தொனியும் இன்னுமொரு பக்கம் வேந்தர்களின் பேரழிவுப் போர்களுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் நீங்கள் அழியப்போவது உறுதி எனவே, நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று புலவர்களின் செவியறிவுறூஉவாகப் பாடும் தொனியும் என்ற இரண்டு தொனிகளும் இணைந்து ஒலிப்பதுதான் இவ்வகைப் பாடல்களின் தனிச்சிறப்பு.
மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் இந்த இரண்டு அடுக்குகளுக்கு மேலாக மற்றுமோர் அடுக்கும் இவ்வகைப் பாடல்களில் உண்டு. அந்த அடுக்குதான் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டதுபோல் இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய நாடக வழக்கு உலகியல் வழக்குகளின் இணைவில் தோன்றும் புலனெறி வழக்குப் பாடல்களாகக் கொள்ளலாம்  என்ற புலனெறிப் பாங்கிலான படைப்பாக்க உத்தி. தொல்குடித் தலைவர்கள் ஓ வேந்தர்கள் இடையிலான முரணுக்கு நடுவே இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய ஒருவகை புனைவுப் பாங்கிலும் புலவர்கள் உருவாக்கியுள்ளனர். மகட்கொடைக்குரிய பெண்ணின் அழகைப் புனைந்து சிறப்பிப்பதை எல்லாப் பாடல்களும் ஒரு வாய்பாடு போலத் தொடர்ந்து செய்கின்றன. திருநயத்தக்க பண்பின் இவள் நலனே (342), அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை (349), நேரிழை உருத்த பல்சுணங் கணிந்த மருப்பிள வளமுலை ஞெமுக்குவோரே (337) முதலான வருணனைகள் பாடல்தோறும் அப்பெண்ணின் உருவ எழிலை விதந்து பேசுகின்றன. மகட்கொடை வேண்டிநின்ற ஒரு வேந்தன் வழியிடையே அப்பெண்ணைக் கண்டு அவள் அழகில் மயங்கி
கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று            (புறம்: 34)
இவள் யாரோ என்று வியந்ததாக, நாடக பாணியில் ஒரு பாடல் பெண்ணின் அழகினைச் சிறப்பிக்கின்றது. இத்தகு சித்திரிப்புகள் இவ்வகைப் பாடல்களின் அகப்பொருட் சாயலுக்குப் பொருத்தமான சான்றுகளாக அமைகின்றன.
நிறைவாக: புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் முழுமையான பொருள் விளக்கத்திற்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியனவாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இப்பாடல்கள்,
1. பாணர்மரபினைப் பின்பற்றி வீரயுக மனப்பதிவுகளையும் தொல்குடி   மதிப்பீடுகளையும் சித்திரிக்கின்றன.
2. புலவர் மரபில் நின்று வம்ப வேந்தர்களின் அரச கட்டமைப்புக்குத் துணைபுரியும் பாங்கில் பிரச்சாரம் செய்கின்றன.
3. அகப்பொருள் பாடல்களுக்கே உரிய புலனெறிப் பாங்கிலான உத்திகளுடன் புலமைமரபு மேலோங்கப் படைக்கப்பட்டுள்ளன.
இம்மூன்று பொருண்மை அடுக்குகளையும் தனித்தனியே இனங்கண்டு வாசிப்பதில்தான் மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் வெற்றி அமைந்துள்ளது.  

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...