ஞாயிறு, 9 ஜூன், 2013

முனைவர் நா.இளங்கோவின் படர்க்கை நூல் அணிந்துரை -முனைவர் வே.ச.திருமாவளவன்

அணிந்துரை

முனைவர் வே.ச.திருமாவளவன்
மேனாள் முதல்வர்,
பெருந்தலைவர் காமராசர் அரசு கலைக் கல்லூரி
புதுச்சேரி



முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பில் (1979-81) மாணவராகப் பயின்ற காலந்தொட்டு அவரை நான் அறிவேன். மயிலம் தமிழ்க் கல்லூரியில் பி.லிட். பட்டம் முடித்த பின்னர்த் தமிழ் முதுகலை படிக்க வந்த இளைஞர் நா.இளங்கோ நாட்டுப் புறவியலில் நாட்டம் கொண்டவர். நான் 1980 ஆகஸ்டுத் திங்களில் காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலிருந்து மாற்றல் பெற்று தாகூர் கலைக் கல்லூரியில் பணியில் சேர்ந்த போது அப்போது தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த ம.ரா.பூபதி நாட்டுப்புறவியல் பாடத்தை எனக்கு ஒதுக்கியிருந்தார். சற்றும் எதிர்பாராத நிலையில் எனக்கு நாட்டுப்புறவியல் ஒதுக்கப்பட்ட போது திகைப்பேற்பட்டது. வகுப்பறையில் இருந்த மாணவர்களுள் இந்த இளங்கோ மட்டுமே நாட்டுப்புறவியல் அறிந்தவராக இருந்தார். நுண்ணறிவுடைய அவர் கேட்கும் வினாக்களுக்கு விடை தேடுவதற்காகவே நான் நாட்டுப்புறவியலை ஆழ்ந்து கற்கும் சூழல் ஏற்பட்டது. அவரும் வளர்ந்தார், நானும் வளர்ந்தேன். திறமையான மாணவர்கள் இருந்தால் திறமையான ஆசிரியர்கள் உருவாவார்கள் என்ற கருத்து வலுப்பெற்றது.

அவர் தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற (30-06-2001) காலம் வரையிலும் அதன் பின்னரும் அவருடைய வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். பேச்சிலும் எழுத்திலும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்று வருவதுகண்டு “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்” தாயின் மனநிலை கொள்கிறேன். இத்தகைய திறமையும் ஆற்றலும் உடைய மாணாக்கர்களைப் பெற்றவர்கள் நற்பேறுடையவர்கள் ஆவர்.

தமிழ் முதுகலையோடு தம் கல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதற்கு மேலும் தம்மை வளர்த்துக் கொண்டவர் முனைவர் நா.இளங்கோ. பரந்து பட்ட பல்துறை அறிவு சான்றவர். நாட்டுப்புறவியல், மலையாளம், நாடகம், மக்கள் தொடர்பியல், கணிப்பொறி மற்றும் இணையஇயல் முதலானவற்றில் தக்க பயிற்சியும் பட்டறிவும் மிக்கவர். நுண்மாண் நுழைபுலமிக்க ஆய்வாளராகவும் கவிஞராகவும் பேசியதையே பேசாத கருத்துரையாளராகவும் பேச்சுக்கலையை வளர்ப்பவராகவும் பன்முகமுடைய நா.இளங்கோ எட்ட வேண்டிய சிகரம் அண்மையில் உள்ளது.

பேராசிரியர் நா.இளங்கோ ‘மலையருவி’ எனும் பெயரில் படைத்த ‘காலடியில் தலை’ என்னும் கவிதைப் படைப்பிற்குப் பின்னர் ‘மலடியும் மழலையும்’, ‘நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்’ என்னும் இரு நாட்டுப்புற ஆய்வு நூல்களும் ‘தமிழ்இணர்’ என்னும் இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பும் மாணாக்கர் பயனுறும் முறையில் தம் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயரோடு இணைநூல் ஆசிரியராக எழுதி வெளியிட்ட ‘மொழி பெயர்ப்பும் மொழிப் பயிற்சியும்’ என்ற நூலும் வெளியிட்டுத் தமிழுக்குச் சிறப்பு செய்துள்ளார். இப்போது ‘படர்க்கை’ –தமிழியல் கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளிவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக ஆரவாரமில்லாமல் தமிழ், தமிழர்நலம், சமுதாய முன்னேற்றம் ஆகிய இவற்றோடு இலக்கியப் பயணத்தையும் தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கும் முனைவர் நா.இளங்கோ நம் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் உரியவராவார்.

II
படர்க்கை என்ற பெயரில் தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் மரபுத் தமிழ், புதுவைத் தமிழ், ஊடகத் தமிழ் என்ற மூன்று பகுப்புகளில் பதினெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. வள்ளுவப் பேராசானின் முதற்குறள் ஆய்வு தொடங்கி இக்காலத்தில் மாந்த உள்ளத்தை மயக்கி வைத்திருக்கும் திரைப்படத்துறை முடிய பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
நூலின் முதல் பகுப்பான மரபுத்தமிழ் என்ற பகுதியில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரை முதற்குறள் பற்றிய ஆய்வுகள்: மதிப்பீடு என்ற கட்டுரையாகும். திருக்குறளின்; முதற்குறள் பற்றி உரையாசிரியர்கள் கூறிய உரைகள் ஒருபால் இருக்க, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சூளை சோமசுந்தர நாயக்கர் தொடங்கி வைக்க அவர்க்குப் பின்வந்தவர்கள் சமய நூல்களின் அடிப்படையில் விளக்கமளித்த தரவுகளை எல்லாம் ஒருங்கே தொகுத்துப் பகுத்து மதிப்பீடு செய்து திருக்குறள் கூறும் ஆதிபகவன் என்பது சமணத் தீர்த்தங்கரர்களின் முதல்வராகிய இடபதேவரே என்பதைத் தம் முதல் கட்டுரையில் தெளிவு படுத்துகிறார் நூலாசிரியர்.

படர்க்கை நூலின் அடுத்த இரு கட்டுரைகளும் ஆந்திர நாட்டு அகநானூறு என்னும் காதா சப்தசதியை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் படைக்கப்பட்ட காதா சப்தசதி என்னும் பழமரபு இலக்கியத்தைத் தமிழில் பன்மொழி அறிஞர்கள் இரா.மதிவாணன் என்பாரும் மு.கு.ஜகந்நாத ராஜாவும் மொழியாக்கம் செய்துள்ளனர். இந்நூல் தமிழ் அகப்பொருள் சாயலை ஒத்திருப்பதனால் முன்னவர் ‘ஆந்திர நாட்டு அகநானூறு’ என்னும் பெயரிலும் பின்னவர் ‘காதா சப்தசதி’ என்னும் பெயரிலும் வெளியிட்டனர். முதல்கட்டுரை காதா சப்தசதியில் மானுடவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ள பாங்கினை விளக்குகிறது. இரண்டாவது கட்டுரை சங்க அகப்பாடல்களோடு ஒத்துக் காதா சப்தசதிப் பாடல்கள் உள்ள பாங்கினை ஒப்பிட்டு நோக்கும் போக்கில் அமைந்துள்ளது.

நூலின் நான்காவது கட்டுரை வள்ளலாரின் முற்போக்குச் சிந்தனைகளைத் தொட்டுக்காட்டிச் சமதாய நலத்திற்கான கருத்துக்களை முன்வைக்கிறது. சாதி மதம் பேசி மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்னும் நச்சுவிதைகளை விதைத்து அறுவடை செய்த சனாதனிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலக்கட்டத்தில் வடலூர் இராமலிங்க சுவாமிகள் தோன்றினார் என்பது ஒரு வியக்கத்தக்க அற்புத நிகழ்வாகும். செல்வமும் செல்வாக்கும் தேடாத வெள்ளாடைத் துறவியாக வாழ்ந்த வள்ளலார் உயிர் இரக்கம் என்னும் உயரிய சிந்தனையையும் உயிர்களின் பசிபோக்கும் அறத்தொண்டினையும் தொடங்கி வைத்ததோடு தாய்மொழியில் பற்று மிக்கவராக மிளிர்ந்ததையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை.
வள்ளலாரின் காலத்தவராகவும் அவரோடு நட்புரிமை பூண்டவராகவும் இருந்த நீதியரசர் மாயூரம் வேதநாயகரின் சமுதாயச் சிந்தனைகளைத் தொகுத்துத் தருகிறது நூலின் ஐந்தாவது கட்டுரை.

திருவாவடுதுறை ஆதீனத் தலைவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வேதநாயகர் போலித்துறவிகளைத் தமிழ்ச் சாட்டையால் சாத்துவதையும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் வறுமையால் மக்கள் படும் வேதனையையும் பசியையும் போக்கக் கஞ்சித் தொட்டி அமைத்துப் பசி தீர்த்ததையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் நா.இளங்கோ இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன்முதலில் பாடியவர் மாய+ரம் வேதநாயகரே என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றார்.

நூலின் இரண்டாவது பகுப்பான புதுவைத்தமிழ் என்ற பகுதியில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுப்பின் முதல்கட்டுரை பாரதியின் பகவத்கீதையும் விநாயகர் நான்மணி மாலையும் என்ற தலைப்பிலானது. இந்திய விடுதலைப் போராட்டக் காலங்களில் பகவத் கீதை அரசியல் தலைவர்களுக்குக் கைவிளக்காக இருந்தது போல, பாரதிக்கும் பயன்பட்டிருக்கிறது என்பதையும் பாரதியின் பகவத் கீதை முன்னுரையில் அமைந்துள்ள மனித குலத்திற்குத் தேவையான சிந்தனைகள் பாரதியின் மற்றொரு நூலான விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றிருக்கும் சிறப்பினையும் புதிய தரிசனத்தோடு விவரிப்பதாக உள்ளது பாரதி குறித்த இக்கட்டுரை.

இரண்டாவது கட்டுரையில் பாவேந்தர் பாரதிதாசன் புதுவை முரசில் வெளியிட்ட சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பாரதி, மாதவய்யா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருக்குப் பின் தமிழ்ச் சிறுகதைத் துறையில் நாலாமவராகப் பாவேந்தர் விளங்குவதையும் அவருடைய சிறுகதைகள் மூடநம்பிக்கை எதிர்ப்பு,  விதவைத் துயர் போன்றவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டிருப்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

மூன்றாவது கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரலாக ஒலித்த தமிழ்ஒளியின் மாந்தநேயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் நா.இளங்கோ மேதினத்தைப் பற்றி முதன்முதலில் பாடியவர் தமிழ்ஒளிதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஏழைமக்களின் இருப்பிடத்தைக் ‘கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்’ என்று குறிப்பிடும் தமிழ்ஒளி அறிவியலை, அணுவாற்றலை வாழ்த்துவதையும் ‘உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்’ என்று முழங்குவதையும் சுட்டிக்காட்டுகிறார் நா.இளங்கோ.

நான்காவது கட்டுரையில் தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் மக்கள் தலைவர் சுப்பையா அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘சுதந்திரம்’ இதழே என்பதனைத் தக்க தரவுகளோடு நிறுவியுள்ளார் நா.இளங்கோ. தமிழ் இதழியல் வரலாற்றில் இச்செய்தி பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

சைவம் திருவெம்பாவையையும் வைணவம் திருப்பாவையையும் பெற்றிருப்பது போல இசுலாமுக்கும் ஒரு பாவை இலக்கியம் தேவை என்பதை உணர்ந்த காரை இறையடியான் திருவருட்பாவை என்ற தனித்தமிழ் நூலைப் படைத்தளித்தார். அதன் அமைப்பையும் இலக்கிய நயத்தையும் சுட்டிக்காட்டும் முறையில் காரை இறையடியானின் திருவருட்பாவை கட்டுரை ஐந்தாவதாக அமைந்துள்ளது.

காரை இறையடியானின் இளவலும் நூலாசிரியர் நா.இளங்கோவின் ஆசிரியருமான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயரின் சிறுகதைகளை ஆய்வு நோக்கில் அறிமுகம் செய்கிறது ஆறாவது கட்டுரை. சாயபு மரைக்காயரின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள பெண்பாத்திரங்களை ஆய்ந்து பொற்கொடி என்ற பாத்திரப் படைப்பைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் நூலாசிரியர். “இவளின் பாத்திரப் படைப்பில் யதார்த்தம் மிகுதி. ஆனால் கதையில் அழுத்தம் குறைவு. எனவே வாசகர் நெஞ்சில் பொற்கொடி பதியவில்லை” உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி, நழுவலின்றி பதிவு செய்யும் நூலாசிரியரின் பாங்கு பாராட்டத்தக்கது.

ஏழாவது கட்டுரையில் கவிஞர் கல்லாடனின் ‘தைமகள் வந்தாள்’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்துக் கூறும் ஆசிரியர் கவிஞர்களை மூன்று வகையாக்கி இதில் கவிஞர் கல்லாடன் மூன்றாம் வகையைச் சார்ந்த கவிஞர் என்றும் அதனால்தான் இவர் கவிதைகளில் ஆற்றாமை மட்டுமில்லாமல் சரியான தீர்வுகளும் சொல்லப்படுகின்றன என்று பதிவு செய்துள்ளார். மூன்றாம் வகைக் கவிஞர்கள் என்பது குறைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அமையாமல் அவற்றைக் களையும் வழிவகைகளையும் கூறும் கவிஞர்கள் என்று குறிப்பிடுகிறார்.

எட்டாவது கட்டுரையில் பிரஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஆலை அதிபர்களுக்கு எதிராக ஆலைத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததும் பிரஞ்சிந்திய அரசு ஆதிக்க வன்முறை வெறியாட்டம் ஆடிய போது தொழிலாளர் ஒன்றிணைந்து போராடியதுமான வீர வரலாற்றை நூலாசிரியர் குறிப்பிட்டு அந்த 1936 ஜூலை 30 புதுச்சேரி விடுதலைப் போரின் வித்து ஊன்றப்பட்ட நாள் என்ற வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கின்றார்.

அடுத்துள்ள குறிப்பிடத் தக்க கட்டுரை புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கட்டுரை ‘பிஜீத் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும் உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்களும்’ என்பதாகும். பிஜீத் தீவில் வாழும் தமிழர்கள் நாம் தமிழர்கள் என்பதையும் தமிழ்மொழியையும் மறந்து பெயரளவில் மட்டும் தமிழராக இருக்கும் அவலம் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்படுகிறது. பிஜிக்குப் புலம் பெயர்ந்த முதல் தலைமுறைத் தமிழர்கள் தாய்மொழிக் கல்வியை வேண்டவும் அடுத்த தலைமுறை அதனைப் புறக்கணிக்கவுமான சூழ்நிலை அமைந்ததையும் தமிழர்கள் இந்தி கற்கத் தொடங்கி, இந்திய இனக் கலப்பும் மொழிக் கலப்பும் ஏற்பட்டு தமிழ்க் குடும்பங்கள் இந்திக் குடும்பங்களாக மாறியுள்ளதையும் உள வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர் நா.இளங்கோ. இந்நிலை மாற, தமிழர்கள் பிற இன மக்களோடு மணஉறவு கொள்ளும் போது மிகவும் விழிப்பாயிருந்து தம் துணையையும் வீட்டில் தமிழ் பேசுமாறு ஆற்றுப் படுத்துதல் நல்லது, இத்தகு நுட்பமான மொழி அரசியல் இன்றை அவசியத் தேவை என்பதை உலகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும் எனத் தெளிவுபடுத்தியிருப்பது இன்றைய காலத்தின் தேவை.

நூலின் மூன்றாவது பகுப்பான ஊடகத்தமிழ் என்ற பகுதியில் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரை தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் என்பதாகும். ஊடகங்கள் உருவாக்கும் நிகழ்வுகளில் ஊடகங்கள் பயன்படுத்தும் மொழி, செய்திகளைக் கதையாகப் புனைந்து கூறும் பாங்கு, அவ்வாறு செய்திகள் கதையாக்கப்படும் போது எழுப்பப்படும் முக்கிய கேள்விகள், ஐயங்கள் தீர்க்கப்படாமலே போகும் சூழ்நிலை முதலியன இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் வலைப்பதிவுகள் தொடர்பான கட்டுரைகளாகும். புதிய படைப்பாளர்களின் படைப்புகளின் மீது குழு, மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலானவை எவ்வளவு அதிகாரம் செலுத்துகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வலைப்பதிவுகள் குறித்தான கட்டுரை சிந்தனைக்குரியது. தமக்குத் தேவையான வலைப்பதிவுகளைத் தாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கணினி பற்றிய அறிவு சிறிதளவு இருந்தாலும் போதும் என்றும் நம்பிக்கை தரும் செய்திகள் பல இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. அடுத்த கட்டுரை வலைப்பதிவுகளின் அமைப்பை விளக்கிக் காட்டுகிறது.

நூலின் நிறைவுக் கட்டுரை திரைப்பட மொழி சார்ந்த கட்டுரையாகும். இக்கட்டுரையில் நூலாசிரியர் ஒரு திரைப்படத்தை எப்படி நோக்க வேண்டும் என்பதை மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப் படுவதே திரைப்படத்தின் மொழி என்ற புரிதலை வழங்கும் இக்கட்டுரை புத்துலக ஆக்கமான திரைப்படத்தோடு தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றையும் இணைத்துப் பேசும் நுட்பம் பாராட்டிற்குரியது.
‘படர்க்கை’ தமிழியல் கட்டுரைகளில் பேராசிரியர் நா.இளங்கோ மூன்றாம் மனிதனாக- தற்சார்பில்லாத ஓர் ஆய்வாளராகத் திருக்குறள் தொடங்கித் திரைப்படம் ஈறாகத் தாம் ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கட்டுரைகளாக ஆக்கித் தமிழுக்கும் தமிழர் சிந்தனைக்கும் புதிய விருந்தளித்துள்ளார். பேராசிரியர் நா.இளங்கோ அவர்தம் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

6-12-2008

1 கருத்து:

கவியாழி சொன்னது…

தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றையும் இணைத்துப் பேசும் நுட்பம் பாராட்டிற்குரியது.//அவர்தம் தமிழ்த் தொண்டுச் சிறக்க நானும் வாழ்த்துகிறேன்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...