முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
குறுந்தொகையும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள், குறிப்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே படம் பிடிக்கின்றன. எந்தவொரு பாடலும் இயற்கையை விட்டு விலகி நிற்பதேயில்லை. குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெறும் நாடக பாணியிலான பாத்திரங்களின் தனிக்கூற்று இயங்குவதற்கான களமாகவும் மேடையாகவும் பின்னணியாகவும் இயற்கை படைக்கப்பட்டுள்ளது.
பாத்திரக் கூற்று அகப்பாடல்களின் மைய உட்கரு. இதுவே உரிப்பொருள். காலம், இடம் இவற்றின் பின்னணியாய் முதற்பொருள், நிலமும் பொழுதும். பின்னணியில் இடம்பெறும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகொடிகள், தொழில், இசை முதலான பொருள்கள் அனைத்தும் கருப்பொருள்கள். நாடகபாணித் தனியுரைகளின் கால, இடச் சூழ்நிலைகளை விளங்கிக் கொள்வதற்கும் பின்னணியைப் படம் பிடிப்பதற்கும் உதவும் இயற்கை அகப்பாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்விய ஆகுமதி
யார்அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (குறுந். 18)
கபிலரின் இக்குறிஞ்சிப் பாடலில், தோழி தலைவனைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது உரிப்பொருள். சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்குவதைப் போல் தலைவியின் சிறிய உயிர் தலைவன் மீது வைத்த பெரிய காமத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பழம் பெருக்கப் பெருக்கக் கொம்புக்கு ஆபத்து எதிர்நோக்கியிருப்பதைப் போல், தலைவன் மீது வைத்த எல்லையற்ற அன்பினால் தலைவி உயிருக்கு ஆபத்து நேரலாம். தலைவன் ஊரிலுள்ள பலாமரங்களோ வேலியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது, அதேசமயம் அந்தப் பலா மரங்கள் கொம்புக்கு ஆபத்தில்லாத வேர்ப்பலாக்கள். பாதுகாப்பான வேர்ப்பலாக்கள் நிறைந்த சாரலைச் சேர்ந்த தலைவனுக்குக் கொம்புப் பலாவால் கொம்புக்கு ஆபத்து என்பது தெரியுமோ? எனவே தான் செவ்வியை ஆகுமதி என்கிறாள் தோழி.
இந்தக் குறுந்தொகைப் பாடலில் கருப்பொருளால் அமைந்த இயற்கை வருணனையானது கதையின் உட்பொருளை நமக்கு வெளிப்படுத்துவதற்குக் கவிஞன் தனது மனக்காட்சியில் கண்டதற்கு இணையான ஒரு குறியீடாக நிற்கிறது. அதுமட்டுமின்றி மறைகுறிப்பான பிறிது மொழிதலுக்கும் இடமளிக்கிறது. குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இயற்கையின் பங்கு அளப்பரியது.
1 கருத்து:
வணக்கம் சார்,
உங்களுடைய கட்டுரையைப் படித்தேன். புதுமைப்பித்தன் பற்றிய சுருக்கமான செய்திகளை அறிய வேண்டுமெனால், உங்களுடைய இந்த கட்டுரையே வழிவகுக்கும் என்று நான் கருதுகின்றேன். தொடர்ந்து எழுதுங்கள்.. எங்களைப்போல் ஆய்வாளர்களுக்கு இன்னும் தெம்பு ஊட்டக் கூடியதாக இருக்கும்.
அன்புடன்
உங்கள் மாணவன்
ஏ .பிரேம் ஆனந்த்.
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி.
கருத்துரையிடுக