சனி, 25 டிசம்பர், 2010

தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை

வி.அமலோற்பவமேரியின்
தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு
-அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது.

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!
நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?


என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.

1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.

நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார்.

குறுங்காவியங்கள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966


மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.

II
இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.
2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.
3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.

முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.

நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்.

“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"


கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...