வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆனந்தரங்கர் இலக்கியங்கள் - ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-௨

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்
ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

ஆனந்தரங்கர் மீதான கோவை ஒன்றா? இரண்டா?

ஆனந்தரங்கன் கோவை என்ற பெயரில் இரண்டு கோவை நூல்கள் உள்ளதாகவும் இவற்றில் ஒன்றை வைத்தியநாத தேசிகர் புதல்வர் சதாசிவ தேசிகர் இயற்றியதாகவும் மற்றொன்றைத் தியாகராயப் புலவர் இயற்றியதாகவும் ரா.தேசிகம் பிள்ளை தம் ஆனந்தரங்கப் பிள்ளை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.7
ஆனந்தரங்கன் கோவையைப் பதிப்பித்த ந.சுப்பிரமண்யன் இக்கருத்தை மறுத்து ஆனந்தரங்கர் மீது பாடப்பட்டது ஒரேஒரு கோவை நூல்தான் என்றும் இதன் ஆசிரியர் தியாகராய தேசிகர்தான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார். இந்நூலின் பிரதிகள் இரண்டு ஓலைச் சவடிகளாகக் கிடைத்துள்ளன என்றும் இரண்டு சுவடிகளிலுமே தியாகராய தேசிகர் இயற்றியது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சான்றுகளுடன் ந.சுப்பிரமண்யன் நிறுவியுள்ளார்.8
“திருவாரூரிலிருக்கும் இலக்கண விளக்கம் செய்த வைத்திய நாத தேசிகர் குமாரர் தியாகராய தேசிகர் சித்தார்த்தி வரு~ம் ஆவணி மாதம் 15ஆம் தேதி சுக்கிரவார தினம் பிரம்பூர் மகா- மகா-ஸ்ரீ பிள்ளையவர்கள் வஜாரத விஜயவாநந்த ரங்கப்பிள்ளை அவர்கள் மேல் கோவைப் பிரபந்தம் பாட ஆரம்பித்து யுவ வரு~ம் ஆவணி மாதம் 3ஆம் தேதி நிறைவேறி அரங்கேற்றும் படி செய்தது.”9 ஆனந்தரங்கன் கோவை பதிப்பிற்குப் பயன்பட்ட ஓலைச் சுவடியில் வாசகமே இது.

கோவை நூல் அரங்கேற்ற முயற்சி

தியாகராய தேசிகர் இக்கோவை நூலை 1739 ஆம் ஆண்டில் பாடத் தொடங்கி 1755 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகள் முயன்று படைத்துள்ளார் என்பது சுவடியின் வாயிலாகத் தெரிய வருகின்றது. இந்நூலை இயற்றி முடித்த பின்பும் ஆனந்தரங்கர், நூல் அரங்கேற்றத்திற்கு வேண்டுவன செய்து பரிசில் அளிக்க முன்வராமை கண்டு தியாகராய தேசிகர் ஆனந்தரங்கருக்கு மைத்துனரும் நெருங்கிய நண்பருமாயிருந்த முத்தையன் என்பாரை வேண்டிக்கொண்டு அவர் மூலம் ஆனந்தரங்கரின் நன்மதிப்பைப் பெற்று நூலை அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது. தியாகராய தேசிகர் அம்முத்தையனைப் புகழ்ந்து பாடிய தனிப்பாடலின் வழி இவ்வுண்மையை உணரமுடிகின்றது.
பத்தையன் என்றுதமிழ்ப் பாபுலவர் மெச்சவரு
முத்தையா கோவை மொழிவிளங்க- வித்தகநல்
ஆனந்த ரங்கைய னுக்குரிய அன்புவைத்துத்
தானந்த ரங்கமுறச் சாற்று
10
என்பது அப்பாடல்.

அரங்கேற்றத்திற்குத் தாமதம் ஏன்?

ஆனந்தரங்கர் கோவை நூலை அரங்கேற்றவும் பரிசளிக்கவும் தாமதம் செய்ததற்கு என்ன காரணம்? என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆனந்தரங்கர் கோவை முழுவதையும் படித்துப் பார்த்தால் பாட்டுடைத் தலைவர் புகழ்பாடும் அந்நூலின் எல்லாப் பாடல்களிலும் பிரம்பூர் ஆனந்தரங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்பூரின் பெருமையே எல்லாப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்தரங்கர் குடும்பத்தோடு புதுச்சேரிககு வந்து சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாடத் தொடங்கி பதினாறு ஆண்டுகள் பாடப்பட்ட இந்நூலின் எங்கேயும் புதுவையைப் பற்றிய செய்தியே இல்லை.
"புதுவையில் ஐந்தரு என்னும் முத்தியப்பன் மகிழ் மைத்துனன்”11 என்ற ஒரு பாடலில் மட்டுமே புதுவை குறிப்பிடப் படுகின்றது. இந்தப் பாடலும் முத்தியப்பன் புகழ்பாடும் பாடல் என்பதால் அரங்கேற்றத்திற்குத் தடை ஏற்பட்ட பின்னர் எழுதிச் சேர்க்கப்பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆனந்தரங்கரைப் பற்றிய எத்தகைய வரலாறும் நூலின் எங்கேயும் இடம்பெறவில்லை. பாட்டுடைத் தலைவனைப் பூவைநிலையில் திருமாலாக, கண்ணனாக, இராமனாகப் புகழ்ந்து பாடும் பாடல்களே நூல் முழுமையும் இடம் பெற்றுள்ளன. பிரஞ்சு அரசாங்கத்தில் ஆனந்தரங்கர் பெற்றிருந்த பதவியைப் பற்றியோ, பெருமையைப் பற்றியோ அவரின் அரசியல் அறிவைப் பற்றியோ, அன்றாட நடவடிக்கைகளைப் பற்றியோ எந்தக் குறிப்பும் நூலில் எங்கேயும் இல்லை. எனவே வரலாற்றுணர்வு மிக்க ஆனந்தரங்கருக்கு இந்நூல் முழு மனநிறைவைத் தந்திருக்க வாய்ப்பில்லை. செவிவழியாக ஆனந்தரங்கரின் ஊரையும் பெயரையும் மட்டுமே கேள்விப்பட்டு நூலை ஆக்கியுள்ள தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

செஞ்சி விஜயாபுரம் டெல்லி மட்டுஞ் செங்கோல் செலுத்தும்
வெஞ்சிலை ஆனந்தரங்கன் 12
வங்கம் கலிங்கம் தெலுங்கம் புறமிட வாளெடுத்த துங்கன் 13


என்ற இரண்டு இடங்களில் மட்டும் ஆனந்தரங்கரின் அரசியல் செல்வாக்கை, கவிவழக்காக மன்னர் சாதனைபோல் புகழ்ந்து பாடும் பாடலைக் காணமுடிகிறது. வேறு சில இடங்களிலும் ஆனந்தரங்கரைமன்னராகவே புகழ்ந்து பாடும் பாடல்;களைக் காணமுடிகிறது. பின்வரும் பாடலை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

தென்னவன் செம்பியன் சேரலனாமெனுஞ் சீர்த்திபெற்ற
மன்னவன் ஆனந்தரங்கன் 14


என்ற இப்பாடலில் மூவேந்தர்களுக்கு இணையான புகழ்பெற்ற மன்னவன் ஆனந்தரங்கன் என்று சிறப்பிக்கப்பட்டுமையைக் காண்க.

கோவை பாடிப் புலவர் பெற்ற பரிசில்

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஆனந்தரங்கன் கோவையைப் புலவர், ஆனந்தரங்கர் சபையில் அரங்கேற்றினார். நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் தியாகராய தேசிகரின் புலமை நலத்தை மெச்சிய ஆனந்தரங்கர் தமிழ் வள்ளல்களின் மரபையொட்டி புலவர்க்கு ஏற்றவாறு பரிசளித்துப் பெருமைப்படுத்தினார் என்பதை,
அண்டர்வரோ தயன்பிரம்பூர்த் திருவேங்க
டேந்த்ரநிதி யளித்த பாலன்
மண்டலங்கொண் டாடவரும் ஆனந்த
ரங்கதுரை மான ரத்ன
குண்டலமுஞ் சரப்பணியும் பதக்கமொடு
சாலுவையுங் கொடுத்தே நாளுந்
தண்டமிழா ரூர்வசிக்கப் பொன்முடிப்பும்
பூமிகளுந் தந்திட் டானே 15


என்ற தனிப்பாடல் வழியாகப் புலவர் பெற்ற பரிசில்களை அறிந்துகொள்ள முடிகின்றது.

கோவை குறிப்பிடும் ஆனந்தரங்கர் பண்பு நலன்கள்

பாட்டுடைத் தலைவரான ஆனந்தரங்கர் பற்றிய பல செய்திகள் பொதுவாக எல்லா வள்ளல்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையில் கோவையின் பல பாடல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் சில செய்திகள் ஆனந்தரங்கர் இயல்பை உணர்ந்து, அவரின் சிறப்பியல்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. ஆனந்தரங்கர் குறிப்பறிந்து பிறர் வாய்திறந்து சொல்லுவதற்கு முன்பே அவர்கள் மனத்தில் நினைத்த கருத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்பதை,
எண்ணுக்கு முன் சொல்லும் ஆனந்தரங்கா16 என்று குறிப்பிடுவதன் வழியாகவும், சொன்ன சொல் தவறாதவர், வெற்றுச் சொல் பேசாதவர் என்பதை,
வசனம் தப்பாத ரங்கேந்திரன்17 என்றும் சொல்லொக்கும் செய்கைப் பிரம்பை ரங்கேந்திரன்18என்றும் தேசிகர் குறிப்பிடுவதன் வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. பல பாடல்களில் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றி வளர்க்கும் செய்தியும் இசை நாடக வாணர்களுக்கு ஆதரவளித்த செய்தியும் பேசப்படுகின்றன.

ஆனந்தரங்கர் கோவையில் அகப்பொருள் மரபுகள்

பிற்காலச் சிற்றிலக்கியங்களில் கோவை ஓர் ஒப்பற்ற இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச்செய்யுள், சிறு காப்பியம் என்பார் தண்டி உரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளைக் குறித்து நீள நினைத்துப் பாடும் வாய்ப்பு இவ்விலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கியங்களின் அகப்பொருள் மரபுத் தொடர்ச்சியைக் கோவை நூல்களில்தான் முழுதுமாகக் காணமுடியும். ஆனாலும் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடிய முதற்பொருள் கருப் பொருள்களைக் கோவை இலக்கியங்களில் இழந்துவிட்டோம். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு என்ற தொப்புள்கொடி அறுபட்டுப் போய்விட்டது. கோவை நூல்களில் அந்த இடங்களைக் கடவுளர் கதைகளும் புராணங்களும் பிடித்துக் கொண்டன. பாடலில் இடம்பெறும் கிளவித் தலைமக்களின் நுட்பமான காதல் உணர்வுகள் பலியாக்கப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்களின் வீர தீரப் பிரதாபங்களில் அவை மூழ்கடிக்கப்பட்டன.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்
(தொல்.அகத்.நூ.54)

என்ற அகப்பொருளின் உயிர்க்கோட்பாடு கோவை நூல்களில் கிளவித் தலைமக்களின் பெயர்சுட்டா மரபாகப் போற்றிப் பாதுகாக்கப் பட்டது.

ஆனந்தரங்கன் கோவையின் சிறப்பியல்புகள்

1. ஆனந்தரங்கன் கோவை தனக்கு முந்தைய கோவை நூல்களில் ஒன்றான அம்பிகாபதிக் கோவையைப் பெரிதும் அடியொற்றி அமைந்தது எனலாம். பல பாடல்கள் அப்படியே அம்பிகாபதிக் கோவைப் பாடல்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
சான்றாக: பா. 104, 289, 346, 370.
2. ஆனந்தரங்கன் கோவையின் பல பாடல்கள் சங்கத் தொகை அகப்பாடல்கள் பலவற்றின் புதிய வடிவாக அமைந்து சிறக்கின்றன.
3. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழைச் சிறப்பித்துக் கூறுதலும் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றிப் புரப்பவர் என்று கூறுதலும்.
4. திருக்குறள் நாலடியார் போன்ற இலக்கியங்களையும் தக்க இடத்தில் கையாண்டு சிறப்பித்தல். பா.42, 234.
5. இருபதுக்கும் மேற்பட்ட அணிவகைகளைச் சிறப்புறக் கையாண்டு நூலின் சுவையைக் கூட்டுதல்.
சான்றாக: பா. 20, 21, 46, 109, 218, 277.

முடிவுரை

1. ஆனந்தரங்கர் மீது பாடப்பட்ட நூல்களிலேயே அளவால் பெரியதும் சிறப்பிற் குரியதும் இக்கோவை நூலே.
2. ஆனந்தரங்கர் மீது இரண்டு கோவை நூல்கள் பாடப்பட்டன என்ற கருத்து தவறானது. தியாகராய தேசிகரின் கோவை மட்டுமே பாடப்பட்டுள்ளது.
3. தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரை முழுமையாக அறிந்து வரலாற்றுணர்வோடு இந்நூலைப் பாடாதது ஒரு பெருங்குறை. இக்காரணத்தாலேயே நூல் அரங்கேற்றம் தடைப்பட்டிருக்கலாம்.
4. வள்ளல்களின் மரபையொட்டி ஆனந்தரங்கர் தேசிகருக்குச் சிறந்த பரிசுகளை அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
5. தமிழ் இலக்கண வளங்களை முற்றாக உள்வாங்கிப் படைக்கப்பட்ட ஆனந்தரங்கன் கோவை இவ்வகைச் சிற்றிலக்கியங்களில் ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை.
குறிப்புகள்
1. பன்னிரு பாட்டியல், செய்யுளியல் 220
2. வ.சுப.மாணிக்கம், தலைமையுரை, சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்,
நான்காவது மாநாடு, ப.32.
3. கி.இராசா, ஒப்பிலக்கிய நோக்கு, ப.68
4. இரா.ஆலாலசுந்தரம், ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.1.
5. இரா.ஆலாலசுந்தரம். ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.207.
6. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப்பிள்ளை, ப.25.
7. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப் பிள்ளை,ப.25
8. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
9. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
10. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
11. ஆனந்தரங்கன் கோவை, ப.391.
12. ஆனந்தரங்கன் கோவை, ப.8.
13. ஆனந்தரங்கன் கோவை, ப.46.
14. ஆனந்தரங்கன் கோவை, ப.86.
15. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
16. ஆனந்தரங்கன் கோவை, ப.170.
17. ஆனந்தரங்கன் கோவை, ப.214.
18. ஆனந்த்ரங்கன் கோவை, ப.100.

(புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம், சாகித்ய அகாதமி இணைந்து 18-7-2009 புதுவை சோலைநகர் இளைஞர் விடுதியில் நடத்திய ஆனந்தரங்கர் 300 ஆம் பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பெற்றது.)

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...