வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

பொறியின்மை யார்க்கும் பழியன்று -திருக்குறள் பேச்சுப் போட்டி

திருக்குறள் பேச்சுப் போட்டி


தலைப்பு: பொறியின்மை யார்க்கும் பழியன்று

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,

உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.
இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


இத்திருக்குறளின் சுருங்கிய பொருளாவது, ‘புத்திகூர்மை இல்லாதிருப்பது யார்க்கும் குற்றமன்று. ஆனால் புத்திகூர்மை இருந்தும் அறிய வேண்டியதை அறிந்தும் முயற்சி இல்லாதிருப்பது குற்றமாகும்’ என்பதே. அதாவது ஆள்வினையுடைமை என்ற அதிகாரமே முயற்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதுதான். “முயற்சி திருவினையாக்கும்”, “தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றெல்லாம் முயற்சியை வலியுறுத்தும் திருவள்ளுவர் இந்தக்குறளில் முயற்சி இன்மை என்பது பழிக்குரிய செயல் என்பதோடு நிறுத்தாமல், வேறு ஒரு புதிய செய்தி ஒன்றையும் பதிவு செய்கின்றார். அதுதான் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதாகும். நான் மேலே சொன்ன விளக்கம் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சொன்ன விளக்கமாகும்.

அதாவது பொறியின்மை என்றால் அறிவின்மை, பொறி என்பதற்கு அறிவு என்று அவர் பொருள் கொள்ளுகிறார்.
“நூலில் பரித்தஉரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி” என்ற என்ற புகழ்மொழியால் திருக்குறள் உரைகளிலேயே தலைசிறந்த உரை என்று போற்றப்படும் பரிமேலழகர் உரையில் பொறியின்மை என்பதற்குச் சொல்லப்படும் விளக்கத்தையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொறியின்மை என்றால் பயனைத் தருவதாய விதியில்லாமை. அதாவது பரிமேலழகரைப் பொறுத்தமட்டில் இக்குறளில் வரும் பொறி என்ற சொல்லுக்கு பயனைத் தருவதாய விதி, ஆகூழ் என்பதே பொருளாகும். ஆக இந்தக் குறளின் உண்மைப் பொருளை நாம் விளங்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருக்கும் சொல் பொறி என்பதாகும்.

பொறி என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழின் மிகப்புகழ்பெற்ற நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி தரும் விளக்கம் பொறி: அடையாளம், அறிவு, இயந்திரம், செல்வம், தீப்பொறி, புலப்பொறி, புள்ளி முதலானவைகளாகும்.

பொறி என்ற சொல்லுக்கு நிறைய பொருள் விளக்கங்கள் இருப்பதால் திருக்குறள் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப விளக்கம் கூறுகின்றார்கள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எக்காலத்துக்கும் எவ்விடத்தவர்க்கும் எச்சூழலுக்கும் பொருந்தும் விளக்கம் தந்து திருக்குறளை விளங்கிக் கொள்வதுதான் சரியான தாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரைகாரர்கள் பத்து பேரில் பரிதியார் என்று ஒரு உரையாசிரியர் இருந்தார். அவர் இந்தத் திருக்குறளில் இடம்பெறும் பொறியின்மை என்பதற்கு தரும் விளக்கம் மிகப்பொருத்தமாய் இருப்பது வியப்பிற்குரியது. பொறி என்ற சொல்லுக்குப் பரிதியார் புலன் என்று பொருள் கொள்ளுகிறார். திருவள்ளுவரே வேறு இடங்களில் பொறி என்ற சொல்லைப் புலன்கள் என்ற பொருளில் கையாளுகின்றார். பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள்:6) கோளில் பொறியில் குணமிலவே (குறள்:9) இந்த இரண்டு திருக்குறள்களிலும் பொறி என்ற சொல் ஐம்பொறிகள் என்ற பொருளிலேயே திருவள்ளுவரால் வழங்கப்படுகின்றன. ஆக பொறியின்மை யார்க்கும் பழியன்று என்றால் ஐம்புலன்களில் அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களில் ஏற்படும் குறை ஒருவருக்கு குற்றமாகாது என்பதாகும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


மேலே சொல்லப்பட்ட அந்த முழுக்குறளுக்குமான பொருத்தமான பொருள் எது? என்றால் “உறுப்புக் குறைபாடு ஒருவருக்கு குற்றமாகாது முயற்சி இல்லாமையே குற்றமாகும்” என்பதாகும்.

இன்றைய சூழலில் இத்திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஊனமுற்றோர் நலம் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்துக்கு ஏற்ற சிந்தனையைத் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுள்ள திறத்தைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்கமுடியாது. பிறப்பிலேயோ அல்லது விபத்து முதலான செயற்கையிலேயோ ஒருவருக்கு ஊனம் அமைந்து விடுவதென்பது ஒரு பெரிய பழியன்று. முயற்சி இல்லாமல் இருப்பதுதான் பழி என்று சொல்லும் இக்குறள் ஊனமுற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டக்கூடியதாயிருப்பது வெளிப்படை. பொருத்தம் நோக்கி ஒரு திரைப்படப் பாடலை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகின்றேன்.

ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனம் யாருங்கோ
உடம்பிலுள்ள குறைகளெல்லாம் ஊனமில்லிங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்ல
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே


முன்னே நாம் குறிப்பிட்ட திருக்குறளுக்கு முழுதுமாக ஒத்துப் போகக்கூடிய இத்திரைப்படப் பாடலுக்கு ஆதாரமே ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று’ என்ற திருக்குறள்தான்.

ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக அண்மைக் காலமாக ஒரு புதிய சொல் வழங்கி வருகின்றது. அது என்ன சொல் தெரியுமா? “மாற்றுத் திறனுடையோர்” என்பதுதான் அந்தச் சொல். மாற்றுத் திறனுடையோர் என்ற இப்புதிய சொல்லின் பொருளைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலன் செயலற்ற நிலையிலும் மற்றவர்கள் போல் வாழ, வாழ்ந்து காட்ட, வாழ்ந்து சாதித்துக் காட்ட அவர்களுக்குச் செயலற்ற புலன்களுக்கு மாற்றாகப் பிற புலன்கள் மிகுந்த திறனுடையதாயிருக்கும். இன்னும் இதனை எளிமையாக ஒரு சான்று வழியாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பார்வைப் புலன் இழந்த ஒருவருக்கு கேட்கும் புலனும் நுகரும் புலனும், தொடு புலனும் மிகவும் கூர்மையானதாயிருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். அவர்கள் மாற்றுத் திறன் உடையோர்கள் தானே!

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


என்ற திருக்குறளும் இதே செய்தியைத்தான் குறிப்பிடுகின்றது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று: ஒரு புலனில் ஏற்பட்டுள்ள குறையினால் ஒன்றும் குற்றமில்லை.

அறிவறிந்து: ஒரு புலனில் ஏற்பட்ட குறையை சமன் செய்ய இயற்கை பிற புலன்களுக்குக் கூடுதல் திறனைத் தந்துள்ளது, எனவே அத்தகைய கூடுதல் அறிவால் அறிய வேண்டியதை அறிந்தும்

ஆள்வினை இன்மை பழி: முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனையோ மாற்றுத் திறனுடைய (ஊனமுற்ற) மனிதர்களைச் சந்திக்கின்றோம். அவர்களில் பலர் பொறியின்மையை ஒரு குறையாகக் கருதாமல் அறிவறிந்து முயற்சியால் நாளும் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சான்றுகள் பல உண்டு என்றாலும் காலத்தின் அருமை கருதி ஒருவரைக் குறிப்பிடுகின்றேன். சுதாசந்திரன், ஒரு விபத்தில் காலை இழந்தவர். சாதிக்க வேண்டும் என்ற மனத்திட்பத்தோடு தொடர்ந்த முயற்சியின் விளைவாக செயற்கைக் கால்களோடு நடனம் ஆடினார். மயூரி என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டியப் பேரொளியாகத் தோன்றி தன் மிகச்சிறந்த நடனத் திறமையால் அன்று முழு இந்தியாவின் ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்தவர். இன்றும் தமிழ், இந்தி முதலான பல மொழி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து சாதனை செய்து கொண்டிருக்கின்றார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற தலைப்பில் பேச எனக்கு வாய்ப்பளித்ததன் காரணமாக நானும் என்னைப் போன்றவர்களும் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வு பெறுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன். வணக்கம்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...