புதன், 17 அக்டோபர், 2007

தகவல் தொடர்பு சாதனங்களும் கதையாடலும்

தகவல் தொடர்பு சாதனங்களும் கதையாடலும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

தகவல் தொடர்பு சாதனங்கள்:

தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக்கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்ஃபோன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம். ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதையெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதை ஊடகங்களே முடிவுசெய்கின்றன. இந்தியாவில் பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் போது சராசரி இந்தியனும் இந்த விஷயங்களைப் புறக்கணித்து விடுகிறான். சிவகாசி ஜெயலட்சுமியும் கொலைக் குற்றவாளி காஞ்சி பெரியவாள்களும் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் வரும்போது ஊடகங்களால் தீர்மானிக்கப்படும் சராசரி இந்தியச் சிந்தனையில் இவை விவாதத்திற்குள்ளாகின்றன.

ஊடகங்கங்கள் உருவாக்கும் நிகழ்வுகள்:

ஊடகங்கள் நிகழ்வுகளை, நாம் பார்க்க வேண்டிய கோணங்களை மட்டும் தீர்மானிப்பதில்லை. மாறாக நிகழ்வுகளையே ஊடகங்கள் மாற்றிவிடுகின்றன. ஏனெனில் ஊடகங்கள் சித்தரிப்பவை எல்லாம் உண்மைகள் இல்லை. ஊடகங்கள் தகவல்களை யதார்த்தங்களில் இருந்து உருவாக்குகின்றன, தயாரிக்கின்றன, வெட்டி ஒட்டுகின்றன, கோர்க்கின்றன. அர்த்தங்களை உருவாக்குகின்றன. சான்றாக, சுனாமிப் பேரழிவு. இந்நிகழ்வு ஊடகங்களால் அதாவது வானொலி எழுத்துரைகளால் பத்திரிக்கைச் செய்திகளால் புகைப்படங்களால், தொலைக்காட்சிக் காமிராக்களால் எப்படி உண்மையிலிருந்து உருவாக்கப் படுகின்றன என்று பார்ப்போம். முதலில் தேர்ந்தெடுத்தல்: எந்தக் காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே ஊடகங்களின் பணி தொடங்கிவிடுகிறது. எந்த நிகழ்வைக் காட்சியாக்குவது எந்தக் கோணத்தில் காட்சியாக்குவது படங்களோடு இணைக்கப்பட வேண்டிய அல்லது விடப்பட வேண்டிய வார்த்தைகள் எவை எவை என்று தேர்ந்தெடுத்தலும் தொகுத்தலும் (நீக்குதல் இணைத்தல்) கொண்டு நிகழ்வுகள் உருவாக்கப்படுகின்றன. சாதனங்களில் எவையுமே எதேச்சையாகவோ இயற்கையாகவோ இணைந்துவிடுவதில்லை. எல்லாமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்துக் கோர்க்கப்படுகின்றன.இப்படித் தேர்ந்தெடுத்துக் கோர்ப்பதில்தான் அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன. சுனாமிப் பேரழிவைக் காட்டும்போது தூக்கி வீசப்பட்ட படகுகள், உருக்குலைந்த குடியிருப்புகள், சிதைந்த உடல்கள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் நிவாரணப் பணிகள் அரசின் உதவிகள் மருத்துவச் சேவைகள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் இரண்டுவிதமான காட்சிகளையும் இணைத்துக் காட்டும்போது வேறுவித அர்த்தமும் உருவாக்கப் படுகின்றன. இவை மட்டுமின்றி பின்னணி இசை, காட்சிகளுக்கான வருணனை, காமிரா கோணம் இவைகளும் அர்த்தங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்படிக் கோர்ப்பதும் அர்த்தங்களை உருவாக்குவதும் ஊடகங்களால் எந்த நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான வினா. ஊடகங்கள் எல்லாம் நேர்மையானவை என்றோ நடுவுநிலை வகிப்பன என்றோ சொல்லமுடியாது. ஏனெனில் எல்லா ஊடகங்களுக்கும் சார்புகள் உண்டு. பொதுவாக ஊடகங்கள் இந்தியச் சூழலில் உயர்வர்க்கச் சார்புடையதாகவும், உயர்வகுப்புச் சார்புடையதாகவும் இந்துத்துவச் சார்புடையதாகவும் ஆணாதிக்கச் சார்புடையதாகவும் இருக்கின்றமையை நாம் உணர முடியும். விதிவிலக்குகள் உண்டு. இந்தச் சார்புகளை ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைத்து வைத்தாலும் அவை ஒவ்வொரு ஊடக நிகழ்விலும் வெளிப்பட்டே தீரும்.

ஊடகங்களின் மொழி:

ஒவ்வொரு ஊடகமும் தத்தமது பிரதியைப் பார்ப்பவர்கள்/ கேட்பவர்கள்/ வாசிப்பவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வடிவமைக்கின்றது. ஆனால் ஊடகங்களின் பிரதியைப் பார்க்கும்போதோ/ கேட்கும்போதோ/ வாசிக்கும்போதோ அதன் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்வது நாம்தான். அர்த்தம் ஊடகங்களின் பிரதியில் இல்லை. இதை எவ்வளவு தூரம் நாம் விழிப்புடன் புரிந்து வைத்துள்ளோம் என்பது கேள்விக்குறி. ஊடகங்கள் தமது பிரதியில் பொதிந்து வைத்திருக்கும் அர்த்தத்திலேயே நாம் அதைப் புரிந்துகொள்ள ஒருவகையான திட்டமிட்ட ஊடகமொழியைக் கையாள்கின்றன. இந்த ஊடகமொழி அதன் தலைப்பு, பத்தி அமைப்பு, இடத்தேர்வு, காட்சி அமைப்பு, குரலின் ஏற்றஇறக்கம், பின்னணி இசை, கதையாடல், வெளியீட்டு உத்தி முதலானவற்றால் வடிவமைக்கப் படுகிறது. ஊடகமொழியின் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே விவரிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உரியன. ஊடகங்களின் வெளியீட்டு உத்திகளில் சிறப்பிடம் பெறுவது கதையாடல் என்ற உத்தி. செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் விளம்பரங்களிலும் இவ்வகைக் கதையாடல் உத்தியை நாம் கவனிக்க முடியும்.

ஊடகங்களும் கதையாடலும்:

கதையானது மனித வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே தோன்றிவிட்டது என்பதனைத் தமிழ்க் கலைக்களஞ்சியம் ‘வேட்டையாடச் சென்று திரும்பிய மனிதன் தனது அனுபவத்தைப் பிறருக்குக் கூற முற்பட்ட அன்றே கதை தோன்றிவிட்டது’ எனக் குறிப்பிடுகிறது. மனித வாழ்வின் தொடக்கம் முதலே இப்படிக் கதை கேட்டுப் பழக்கப்பட்ட மனிதன் அண்மைக்காலம் வரை தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டுக் கேட்டு கதைகளுக்கு அடிமையாகிப் போனான். இந்த இயல்பு மனித மனத்தின் ஆழத்தில் வேரோடி இருப்பதால்தான் கதை சொல்வதை ரசித்த காலம் போய் இப்போதெல்லாம் கதை விடுகிறவர்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம்;.இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் கதை சொல்வதும் கேட்பதும் இயலாததாகி இருக்கிறது. ஆனால் மனித மனத்தின் ஆசை? விடுபட்ட அந்த இடத்தை நிரப்புவதற்காக ஊடகங்கள் இப்பொழுது கதை சொல்ல ஆரம்பித்து விட்டன.ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. கதை என்கிறபோது பொய் என்ற பொருள் கொள்ளத் தேவையில்லை. நிகழ்வுகளின் ஃ தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டு தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. தற்போது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் கதையாடலில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.

ஊடகக் கதைகள் சில:

அண்மைக் காலத்து உதாரணங்கள் சிலவற்றின் மூலம் ஊடகங்களின் கதையாடலை விளங்கிக் கொள்ளலாம். கும்பகோணம் பள்ளித் தீவிபத்து, சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு, கஞ்சா இளம்பெண் ஷெரீனா பானு வழக்கு, செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம், சரவணபவன் அண்ணாச்சி வழக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஊடகங்களால் கதையாக்கப் படுகின்றன. இத்தகு கதையாடல்களில் செக்ஸ் டாக்டர், கஞ்சா பெண், போலி சாமியார் போன்ற பெயரிடல்கள் கதை அம்சத்திற்குப் பெரிதும் உதவியாய் அமைகின்றன. செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிரடித் தகவல்கள், பகீர் ரிப்போர்ட், திடுக் திருப்பங்கள் போன்றவற்றால் மர்மக் கதைகளைப் போலவும் ஆக்ஷன் கதைகளைப் போலவும் வளர்த்து சொல்லப்படுகின்றன.ஊடகங்களைப் பொறுத்தமட்டில் இவை செய்திகள் மட்டுமல்ல, ஊடகச் செய்திகளைப் பரபரப்புக்கு உள்ளாக்கும் வணிக விஷயம். இது வியாபாரம் சம்பந்தப்பட்டது. இவற்றை வெறும் செய்திகளாக்குவதில் வருவாய் குறைவு. கதையாக்குவது வாசகர்களைஃ பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வியாபார உத்தி. தினம் தினம் புதிய புதிய தலைப்புகளில் இந்தக் கதைகள் சொல்லப்படும். கதையாடலின் முக்கிய நோக்கமே வாசகர்களுக்குச் சுவாரஸ்யத்தை உண்டாக்குவது என்பதுதான்.

கதையாடலின் விளைவுகள்:

இத்தகு கதையாடல்களால் செய்திகள் குறித்த வாசகர்களின் நியாயமான கேள்விகள் பொசுக்கப் படுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீவிபத்து செய்தி என்ற நிலையிலிருந்து கதையாக்கப்பட்டதால் இந்தத் தீவிபத்து பற்றிய இயல்பாகக் கேட்கப் பட்டிருக்க வேண்டிய கேள்விகள் அந்தரத்தில் தனித்து நிற்கின்றன. உரிய விதிமுறைகளின்படி அமையாத இந்தப் பள்ளிக்கு அனுமதி எப்படி கிடைத்தது? பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு மீறல்களோடு பள்ளிக்கூடம் இதுநாள்வரை நடந்து வந்தது எப்படி? அரசும் கல்வித்துறையும் அதிகாரிகளும் அல்லவா விபத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும், இந்தச் சம்பவம் குறித்து இயல்பாயெழும் கோபத்தை யார்மேல் காட்டுவது? போன்ற நம் கேள்விகளைக் கதையாடலால் ஊடகங்கங்கள் மழுங்கடித்து விட்டன. கதையென்றால் ஒரு வில்லன் வேண்டுமே அப்பொழுதுதானே கதைக்கு விறுவிறுப்பு கூடும். இந்தத் தீ விபத்துக் கதையின் வில்லன் கூரைக் கொட்டகை என்று ஊடகங்கள் தீர்மானித்து நம் கோபத்தைக் கூரைக் கொட்கையின் மீது திருப்பியதால் ஊழல் அரசும் அதிகாரிகளும் அப்பாவிகள் ஆக்கப்பட்டார்கள். தொடர்ந்த கதையாடல்களால் மக்களின் கோபம் சிதைக்கப்பட்டு அனுதாபமும் இரக்கமும் கொண்ட சோகநாடகமாகச் செய்தி மாற்றப்படுகிறது. இப்படி ஒவ்வொரு கதையாடலிலும் செய்தியின் பாதிப்புகள் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது.கதையாடல் என்னும் ஊடகமொழியின் மூலமே ஊடகங்கங்கள் நம்மிடம் பேசுகின்றன என்பதை நாம் உணர்வதில்லை. மாறாக ஊடகங்களின் வழி சொல்லப்படும் அனைத்துமே இயல்பான யதார்த்தமான ஒன்றுபோல் தோற்றமளிக்கின்றன. நிகழ்வுகளின் இடைவெளிகள் ஊடகங்களால் நிரப்பப்பட்டதையோ, ஊடகங்களின் சார்புக்கு இடைய+றாக இருந்தவை நீக்கப்பட்டன என்பதையோ அவை சொல்வதில்லை.தொலைக்காட்சிகளும் இத்தகு கதையாடல் மொழியைப் பயன்படுத்தியே செய்திகளைப் பார்வையாளருக்குத் தருகின்றன. தொலைக்காட்சிகளின் கதையாடலுக்கு செய்தி வாசிப்பவரின் குரலும் குரலின் ஏற்ற இறக்கங்களும் மிகுதியாகப் பயன்படும். காமிராவின் கோணங்களும் காமிரா வெளிப்படுத்தும் பிம்பக் குறியீடுகளும் செய்தியைக் கதையாய்க் காட்சிப்படுத்தும். இங்கும் இடைவெளிகள் நிரப்பப்படுவதும், குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்படுவதும் உண்டு. சான்றாக ஜெயேந்திரர் கொலை வழக்கு பற்றிய தொலைக்காட்சி செய்திகளில் இவ்வகைக் கதையாடல்களை கவனித்திருக்க முடியும். இதில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தத்தமது சார்புகளுக்கு ஏற்ப அல்லது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்பக் கதையாடலை நிகழ்த்தும். ஊடகங்களின் வேறுபட்ட கதையாடல்களில் கதாநாயகர்களும் வில்லன்களும் இடம்மாறுவதுண்டு. சில நேரங்களில் நகைச்சுவைக் காட்சிகளும் சேர்ந்துவிடும்.

விளம்பரங்களில் கதையாடல்:

இன்றைய தகவல் தொடர்புச் சாதனஉலகில் விளம்பரங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. விளம்பரங்கள் இல்லையென்றால் ஊடகங்கள் இயங்கவே முடியாது என்று கூறும் அளவிற்குப் பொருளாதார ரீதியில் ஊடகங்கள் விளம்பரங்களையே நம்பியுள்ளன. விளம்பரங்களிலும் கதையாடலை நாம் கவனிக்க முடியும். அச்சு விளம்பரங்களில் கதையாடலின் ஒரு உறைந்த கணம் காணப்படும். தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில் கதையாடலின் இயக்கத்தைக் காணமுடியும். பெரும்பாலான விளம்பரங்கள் கதைதான் சொல்லுகின்றன. விளம்பரங்களின் வடிவமும் கால அளவும் குறுகியதாக இருந்தாலும் அதற்குள் அவை ஒரு கதையைச் சொல்லிவிடுவதில்தான் அவற்றின் வெற்றியே உள்ளது.கோல்கேட் விளம்பரத்தில் வரும், எங்க பள்ளிக்கூடத்துக்கு ஒரு பல்வைத்தியர் வந்தாரு என்றும் மிண்டோ ஃபிரஷ் விளம்பரத்தில் வரும், சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போலொரு பொண்டாட்டி, வந்தான் ஹீரோ பாட்டோட, வடுகப்பட்டி ரோட்டோட என்றும் நேரடியாகக் கதைகூறும் விளம்பரங்களும் உண்டு. மீரா ஹெர்பல் சோப் விளம்பரத்தில் குளிக்காதே! மீரா சோப் இல்லையென்றால் எத்தனை நாளானாலும் குளிக்காதே! என்று அறிவுரை கூறும் தாயின் கதைபோல் வெளிப்படையாக இல்லாத கதைகளும் விளம்பரங்களில் நிறையவே உண்டு. இத்தகு விளம்பரக் கதையாடல்களிலும் இடைவெளிகளும் நிரப்பப்பட்டவைகளும் உண்டு.

முடிப்பாக:

ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மை, நடுநிலையானவை என்ற தோற்றம் திட்டமிட்டு அவற்றால் உருவாக்கப்படுபவை. ஊடகமொழியைச் சரியாக விளங்கிக் கொள்பவர்களால் மட்டுமே ஊடகங்களின் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். ஊடகங்களின் பிரதியை ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் நாம் வாசிக்க நம்மைப் பழக்கப்படுத்தும் பணியைத்தான் ஊடகமொழி செய்கிறது.ஊடகங்களின் இந்தக் கதையாடல் உத்தியைச் சரியாகப் புரிந்துகொள்ளும் போது கதையாடலில் விடுபட்டவை எவை? இட்டு நிரப்பப் பட்டவை எவை? என்பதை விளங்கிக் கொள்ளவும் ஊடகங்கள் இந்தியச் சூழலில் உயர்வர்க்கச் சார்புடையதாகவும், உயர் வகுப்புச் சார்புடையதாகவும் இந்துத்துவச் சார்புடையதாகவும் ஆணாதிக்கச் சார்புடையதாகவும் இருக்கின்றமையை நாம் உணரவும் முடியும்.

கருத்துகள் இல்லை:

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்

முனைவர் நா.இளங்கோ தமிழ்ப் பேராசிரியர் புதுச்சேரி-8 நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவை...