கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்
முனைவர்
நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி
வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. வரலாறு கடந்த காலங்களோடு உறைந்து
விடுவதில்லை அது நிகழ்காலத்திலும் தொடர்ந்து எதிர்காலத்டும் நீட்சிபெற்று விளங்குகிறது.
பொதுவாக நாம்காணும் வரலாறுகள் பலவும் கடந்தகாலத்தோடு உறைந்துவிட்ட தரவுகளிலிருந்தே
கட்டமைக்கப் படுகின்றன.பேரரசுகளின், பேரரசர்களின் போர், வெற்றி, வீரம் இவற்றோடு மட்டுமே
வரலாறுகள் முழுமை பெறுவதில்லை. அது மக்களைச் சார்ந்து எழுதப்படவேண்டும். மக்களின் வாழ்க்கையும்
அதற்கான போராட்டங்களும் வரலாற்றின் பக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. உயிரோட்டமுள்ள
மக்கள் வாழ்க்கைப் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பும்பொழுதுதான் வரலாறு முழுமை
பெறுகிறது. புதைபொருட் சின்னங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நாணயங்கள் இலக்கியங்கள்
முதலான தரவுகளிலிருந்தே வரலாறுகள் எழுதப்பட்டாலும் வரலாற்று ஆசிரியனின் வர்க்க. மொழி,
இனச் சார்புகளின் அடிப்படையிலேயே வரலாறுகள் கட்டமைக்கப் படுகின்றன. இதுகாறும் வரலாறென அறியப்பட்ட தெல்லாம் ஆள்பவர்களால்
தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே ஆகும். அது தேசிய
வரலாறானாலும் மாநிலங்களின் வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்து விடுகிறது.
அரசியல் வரலாறுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ அதைவிட முக்கியத்துவம் உடையன
சமூக வரலாறுகள். மக்கள் சமூகத்தின் வரலாறுகள் உள்ளூர், வட்டார வரலாறுகளிலிருந்து தொடங்க
வேண்டும்.
இருபத்தொராம் நூற்றாண்டின்
கடந்த பதினைந்தாண்டுகளில் இந்திய வரலாறு எழுதுதலில் இரண்டு எதிரெதிரான புதிய போக்குகள்
வேகங்கொள்ளத் தொடங்கியுள்ளன.
ஒன்று: வலதுசாரித்
தன்மையுள்ள பௌராணிக நம்பிக்கைகளில் இருந்து கட்டமைக்கப்படும் வரலாறுகள். அது வரலாற்று
உண்மைதானா என்று ஆராய்வது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்கள் கட்டமைத்திருக்கும் நினைவுகளே வரலாறு
என்பதாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் புதிய வரலாற்றைப் புனைவதே முக்கியமானதாகும்.
நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகு வரலாற்றை அவர்களே ஒருகட்டத்தில் நம்பத்
தொடங்கி விடுவார்கள். கட்டமைக்கப்படும்
இவ்வகை வரலாற்றின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியல் இயங்கும்.
இரண்டாவது: ஓரளவு இடதுசாரித் தன்மையுள்ள வர்க்கங்களின்
முரணிலிருந்து வெளிப்படும் வரலாற்றைப் பதிவுசெய்வது. அரசு, அதிகார வர்க்கத்தின் வரலாறாக
இதுவரை வெளிவந்துள்ள வரலாறுகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எழுதுவது.
மையத்திலிருந்து வரலாற்றைப் பார்க்காமல் விளிம்புகளிலிருந்து வரலாற்றை உருவாக்குவது.
விளிம்புநிலை மக்களிடமிருந்து தொடங்கும். இத்தகு ஆய்வுகளில் ஒருவித வட்டாரத் தன்மை
மேலோங்கியிருக்கும். இவ்வகை உள்ளூர்,
வட்டார வரலாறுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையோடு அணுக்கமாகப் பயணம் செய்வதோடு அவர்களின்
தொழில், உணவு, புழங்கு பொருட் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்,
வழிபாடு, கலைகள் முதலான உயிரோட்டமுள்ள வாழ்வியலைப் பதிவுசெய்யும். அண்மைக் காலத்தின்தான்
உள்ளூர் வரலாறுகள் மற்றும் இதுவரைப் பதிவுபெறாத வட்டார ஆளுமைகள் குறித்த வரலாறுகள்
தமிழகச் சூழலில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் கோட்டக்குப்பம், ஜாமிஆ
மஸ்ஜித் 150 –வது ஆண்டு பாரம்பரிய விழா வெளியீடாக வெளிவருகின்றது. இந்நூலாசிரியர் கோட்டை கலீம்அவர்கள் தொண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுசுரத்துல்
இசுலாம் நூலகத்தின் பொறுப்பாளர் ஆவார். இசுலாமிய மார்க்கச் சிந்தனைத் தளத்திலும் அரசியல்
சமூகச் செயற்பாட்டுத் தளத்திலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். மத நல்லிணக்கப்
பணிகளில் எப்பொழுதும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தோழர் கோட்டை கலீம்ஒரு முற்போக்குச் சிந்தனையாளரும்
கூட. சரியான வரலாற்றைப் பதிவு செய்வதிலும் புதிய வரலாற்றை உருவாக்குவதிலும் அவர் முனைப்போடு
செயல்படுவார். மதநல்லிணக்கத் தோழர்களை இணைத்துக் கொண்டு செயலாற்றுவதில் அவரின் தலைமைப்பண்பு
தெற்றெனப் புலப்படும். அண்மைக் காலமாகத் தொடர்ந்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய
மதவாதச் சக்திகளுக்கு எதிராக அவர் நடத்திவரும் கருத்துப் போராட்டம் பலரின் கவனத்தை
வெகுவாக ஈர்த்துவருகிறது. கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் பெருமைகளை உலகறியச் செய்யும்
நோக்கோடு அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுதற்குரியன.
கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் தோழர் கோட்டை கலீமின் அரிய முயற்சியாலும் கடின உழைப்பாலும்
இன்று நூலாக்கம் பெற்று கோட்டக்குப்பம் சிற்றூர் இசுலாமிய மக்களின் வரலாற்றை, வாழ்வியலை
மிக அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கோட்டக்குப்பத்தின்
வரலாறு, கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் என்ற இரண்டு பொருண்மைகளின் கீழ் நாம் பகுக்க
முடியும்.
கோட்டக்குப்பத்தின் வரலாறு: 1. கோட்டைக் கதவு 2. வேர்கள் 3. ஊரும் நிர்வாகமும் 4. உள்ளாட்சி நிர்வாகம் 5. அரசியல் 6. தொழிலும் பிழைப்பும்என்ற ஆறு தலைப்புகளிலும்கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல்: 1. பசியும்
உணவும் 2. ஆடைக் கலாச்சாரம் 3. கடிதங்கள் 4. பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் 5. வட்டார
வழக்குகள் 6. அளவையும் அறவையும் 7. கல்யாண வைபோகமே 8. திண்ணை தர்பார் 9. கிணற்றடியும்
குளத்தங்கரையும் 10. பாதையும் பயணமும் 11. சேவைத் தலங்கள் என்ற பதினொரு தலைப்புகளிலும்
இந்நூலில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நூலாசிரியர்
அரசியல், வரலாறு, பண்பாட்டு மானிடவியல், புழங்குபொருள் பண்பாடு, சமூகவியல், மொழியியல்,
இடப்பெயராய்வு, நாட்டுப்புறவியல் முதலான பல அறிவுத்துறைகளின் துணையோடு எழுதியுள்ளமை
பாராட்டுதற்குரியது. ஒவ்வாரு கட்டுரையும் நிறைவான தகவல்களோடு நூலாசிரியரின் கடும் உழைப்புக்கும்
முயற்சிக்கும் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
கோட்டக்குப்பத்தின் வரலாறு பேசும் பகுதியில்
இடம்பெற்றுள்ள அரசியல் என்ற தலைப்பிலான
கட்டுரையும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும்
என்ற தலைப்பிலான இரண்டு கட்டுரைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகளாகும். அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரை பிரஞ்சிந்திய
விடுதலைப் போரின் தளபதி மக்கள் தலைவர் சுப்பையாவின் பெருமைகளைப் பேசுவதோடு பிரஞ்சிந்திய
விடுதலைக்குக் கோட்டக்குப்பம் மக்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளையும் மிக நேர்த்தியாகப்
பதிவுசெய்கின்றது. திண்ணை தர்பார், கிணற்றடியும்
குளத்தங்கரையும் என்ற இரண்டு கட்டுரைகளும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியலை மிக
அழகாகப் பதிவுசெய்வதோடு திண்ணையை ஆண்களோடும் கிணற்றடியைப் பெண்களோடு இணைத்துப்பார்த்து
“கிணற்றடி பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாக இருந்தது எனில், திண்ணை ஒருவகையில் ஆணாதிக்கத்தின்
குறியீடு” என்று குறிப்பிடும் நூலாசிரியரின் வைர வரிகளோடுமிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்யாண வைபோகமே என்ற கட்டுரை கோட்டக்குப்பம்
திருமண விருந்து, திருமணச் சடங்குகள், நிகழ்த்துமுறை, திருமணப் பதிவு முதலான உட்தலைப்புகளில்
இசுலாமிய மக்களின் திருமண முறைமை குறித்த முழுமையான தகவல் களஞ்சியமாக அமைந்து சிறக்கின்றது
மேலும் பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் என்ற
தலைப்பிலான கட்டுரை ஊர்ப்பெயர், இடப்பெயர், குடும்பப்பெயர், மககட்பெயர் ஆய்வுகளைத்
தம்மகத்தே அடக்கியுள்ள அரியதோர் கட்டுரையாக அமைந்துள்ளது.
கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது
இந்நூலின் மொழிநடை. நூலாசிரியர் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் எழுதிவருவதன் எதிரொலியாக
இந்நூற் கட்டுரைகளின் பல இடங்களில் நையாண்டியும் பகடியும் களிநடம் புரிவதனைக் காண முடிகின்றது.
பின்வரும் நூலின்
பகுதியை மேற்சொன்ன நூலாசிரியரின் மொழிநடைக்குச் சான்றாகக் காட்டலாம்,
“இதே மாதிரி
பிரெஞ்சு இந்தியாவை ஒட்டிய எல்லையோரக் கிராமம் என்பதால் பேச்சில் பிரெஞ்சு ஆதிக்கமும்
உண்டு. முகத்தில் பூசிக்கொள்ளும் மாவை (talcum powder)பூதரமாவு என்பார்கள். பூசிக்கொண்டால் பூதம் மாதிரி
தெரிவதால் இந்தப் பெயர் என்று விபரமில்லாக் காலத்தில் விபரமாக நினைத்துக் கொண்டிருந்தோம்.
பின்னர்தான் ஆசிரியர்கள் புண்ணியத்தில் பிரெஞ்சு என்ற ஒரு மொழி உலகத்தில் பேசுறாய்ங்க.
அப்படி பிரெஞ்சு கூறும் நல்லுலகைச் சேர்ந்தவங்க இங்க பாண்டிச்சேரியில் கொஞ்ச காலம்
குப்பை கொட்டாம இருந்திருக்காங்க. அவங்க மொழியில் இந்த மாவுக்கு (talcum
powder)பூதர் (poudre)என்று நாமகரணம் சூட்டியிருக்காங்க எனத் தெரிந்து தெளிவாயிட்டோம்.
அதன் காரணமாகவே இந்த மாவு பூதர மாவு என்று வழங்கப்பட்டது ஷாப் கடை என்பதைப்போல்”
நூலின் பெரும்பாலான
பகுதிகளின் சற்றேறக்குறைய மேற்காட்டிய மொழிநடையை ஒட்டியதோர் நடையிலேயே நூலினை ஆக்கியுள்ளார்
நூலாசிரியர். ஓட்டம் மிகுந்த இயல்பான பேச்சுநடை விரவிய மொழிநடையின் இடையிடையே இலக்கிய
மேற்கோள்களையும் நாட்டுப்புறச் சொலவடை, பழமொழி முதலான வழக்குச் சொற்களையும் இணைத்து
ஒருவகைக் கலப்பு நடையிலேயே நூல் அமைந்துள்ளமை வாசிப்பை இலகுவாக்குகின்றது.
நூலாக்கம் என்பது
கடந்த காலங்களைப் போல் இன்றைக்கு கடினமாயில்லை. பார்வை நூல்களைத் தேடித் தேடி அலைந்து
திரிய வேண்டிய தேவையில்லாமல் இணையத்திலேயே இன்றைக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தகவல்களைத் திரட்டிப் பகுத்துப்பார்த்து உண்மைகளைத் தேடி நூல் எழுதிவிடலாம். ஆனால்
இந்த நூல் அப்படிப்பட்டதல்ல. முழுமையான களப்பணியும் சரியான உற்றுநோக்கலும் இல்லாமல்
இத்தகு நூல்களை உருவாக்க முடியாது. நூலாசிரியர் அரிதின் முயன்று ஆவணங்களைக் குடைந்து
தேடியதோடு மட்டுமல்லாமல் களப்பணிகளின் மூலமாகவும் இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார்.
கோட்டக்குப்பத்தைப்
போன்றே ஒவ்வாரு கிராமத்திலும் பதிவுசெய்வதற்கு ஏராளமான சமூக அரசியல் அரசியல் பண்பாட்டுச்
செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பயன்கருதாது உழைக்கும் நல்லவர்கள் ஒருசிலராவது இந்நூலின்
தந்த ஊக்கத்தால் உழைப்பார்களானால் அதுவே இந்நூலுக்கு வெற்றி!
அரிதின் முயன்று
நூலை உருவாக்கிய கோட்டை கலீமுக்குப் பாராட்டும் வாழ்த்தும்! இந்நூல் முயற்சிக்கு ஒத்துழைத்த அனைத்து
நல் உள்ளங்களுக்கும் நன்றி!
கோட்டை கலீம் (லியாகத் அலி) |