ஞாயிறு, 14 மார்ச், 2010

சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்

சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-6

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் நிலையாகத் தங்கியபோது 1873-ஆம் ஆண்டில் வேதநாயகர் மயிலாடுதுறை நகராட்சிக்கு நியமனத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய நகராட்சிப்பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, பெண்களுக்குக் கல்வி கற்பிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றை அவர் தொடங்கியதுதான். பெண்கல்வி குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் வாய்ப்பு கிடைத்தபோது அதனைச் செயல்படுத்தியும் காட்டிய பெருமை அவருக்கு உண்டு.

மரபுக் கவிதை, மொழிபெயர்ப்பு, உரைநடை, இசைத்தமிழ் என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துப் பெண்கல்வி, பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், தமிழ்ப்பணி என்று பல தளங்களிலும் அவரின் ஆக்கப்பணிகள் நடைபெற்றுள்ளன.

ஆங்கிலக் கல்வியால் முதல் இந்திய நீதிபதியாகப் பணியாற்றிப் பெருமைபெற்ற வேதநாயகருக்கு அவர் காலத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம் கவலை அளித்திருக்கிறது. ஆங்கிலம் தலையெடுக்க, ஏன் என்று கேட்பவர் இல்லாமல் தமிழ் என்னாகுமோ? என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான்,

வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே
தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே


என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார்வேதநாயகர்.

வேதநாயகரின் ஞானம்:

ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,

என்னநீ வருந்திக் கவிபாடினும்
எடுத்த கற்பனை முன்னோர்
சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத்
தொன்மை நூல் பலவாகும்
முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை
முற்றுணர்ந்தனை அல்லை
உன்னின் மிக்கவர் பலர் உளார்
கல்வியால் உள்ளமே செருக்கு என்னே! (
நீதி நூல்-313)

உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே! என்ற வேதநாயகரின் நீதிநூல் பாடலடி அவர் தம் நெஞ்சுக்குக் கூறியதாகப் பாடப்பட்டிருப்பினும், உலகோர் யாவர்க்குமான அறிவுரையாகவே அதனைக் கொள்ளல் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...