வியாழன், 31 ஜனவரி, 2008

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு -பகுதி-ஒன்று

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு பகுதி-ஒன்று

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து. திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது. தொல்காப்பியத்துள்ளும் (இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை -தொல், களவியல்.1) சங்க இலக்கியத்தும் (அறனும் பொருளும் இன்பமும் ஆற்றும் பெரும நின் செல்வம் -புறம்,28) சிறப்பித்துச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்ற தமிழர் தம் தனிப்பெரும் உறுதிப்பொருள் கோட்பாட்டினைச் சிறப்பித்து முப்பாலாய் நூல் செய்த திருவள்ளுவரின் பெருமை அளவிடற்கரியது. எனவேதான் திருக்குறள் முப்பால் என்ற பெயராலேயே சிறப்பித்து வழங்கப்படுகிறது.

திருக்குறளும் உரைகளும்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்களே அல்லாமல் இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற புலவர் பெருமக்கள் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறள் பகுதிகளை எடுத்தாண்டு, விளக்கமும் கூறியுள்ளனர். அப்பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அச்சான்றோர்கள் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரைவிளக்கம் கூறி இருப்பது வெளிப்படும். பிற்காலத்தில் நீதி நூல்களை இயற்றிய சான்றோர்களும், திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரை இயற்றியுள்ளனர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.337)

திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சிலர் தத்தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள் சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் தம் உரைகளில் வாய்ப்பு நேர்ந்தபோது திருக்குறள் சிலவற்றிற்கு உரை கண்டுள்ளனர். அவ்வுரைகள் புதிய கருத்துக்களுடன் திருக்குறளுக்கு அணி செய்கின்றன.திருக்குறளின் பழைய உரையாசிரியர் பெயர்களைக் குறிப்பிடும் பழம்பாடல்,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் -திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்

என்று பத்து உரையாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. இப்பத்து உரைகளில் இன்று பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பத்து உரைகளே அன்றி இயற்றியவர் பெயர் தெரியாத மேலும் இரண்டு பழைய உரைகளும் திருக்குறளுக்கு உண்டு. பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன? திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் வேறு வேறு பதிய பொருள்களைக் காண முயன்றதும் கண்டதும்தான். குறளுக்கு வரையப்பட்ட இந்த உரை வேறுபாடுகள்தாம் புதிய புதிய உரைகள் தோன்றுவதற்குக் காரணமாயின. குறளின் உரை வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன?,திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்து வெளியிட்ட இரா.சாரங்கபாணி உரை வேற்றுமைகளுக்கான காரணத்தைப் பின்வருமாறு உரைக்கின்றார்,

ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும், சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரீகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.340)

மேற்கூறிய காரணங்கள் மட்டுமில்லாமல் திருக்குறளின் அமைப்பே அதற்குப் பல உரைகள் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே காலமாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன.

உரையாசிரியர் கலைஞர்:

அரசியல் அரங்கில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தமிழவேள் டாக்டர் கலைஞர் என்று சிறப்பிக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள் இலக்கிய உலகிலும் தன்னேரில்லாத படைப்புகள் பலவற்றைப் படைத்துத் தமிழிலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.கலைஞர் தம் பன்னிரண்டாம் வயதில் எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்குவித்த இலக்கியங்கள் எத்தனையோ. நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடக நூல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்களையும் உருவாக்கியுள்ள கலைஞர் ஒரு பன்முகப் படைப்பாளி. கலைஞரின் இலக்கியப் படைப்புக்களை எட்டு வகையாகப் பாகுபடுத்தலாம்.

1. கவிதைகள்
அ. கவியரங்கக் கவிதைகள், ஆ. திரைப்படப் பாடல்கள், இ. தனிப்பாடல்கள்

2. கதைகள்
அ. சிறுகதைகள், ஆ. குறும் புதினங்கள், இ. புதினங்கள்

3. நாடகங்கள்
அ. ஓரங்க நாடகங்கள், ஆ. முழு நாடகங்கள்

4. காப்பியங்கள்

5. மடல்கள்

6. சொற்பொழிவுகள்

7. இலக்கிய விளக்கங்கள்

8. இலக்கிய இலக்கண உரைகள்

என்பன கலைஞரின் இலக்கியப் படைப்பின் வகைப்பாடுகளாகும். இலக்கண இலக்கிய உரைகள் என்ற எட்டாம் வகைப்பாட்டில் அடங்கும் நூலே கலைஞரின் திருக்குறள் உரை ஆகும். தமிழன் நாளேட்டில்தான் கலைஞரின் திருக்குறள் உரை முதன் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் முரசொலி நாளேட்டில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெளிவந்து முழுமைபெற்றது. திருக்குறள் கலைஞர் உரை என்ற பெயரில் நூலாக வெளிவந்த ஆண்டு 1996.

திருக்குறள் கலைஞர் உரை:

கலைஞர் குறளோவியம் என்ற பெயரில் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களுக்கு விரிந்த அளவில் சொல்லோவியமாய்த் தீட்டிய குறள் உரை இலக்கியம் தமிழுக்குக் கிடைத்த ஓர் புத்திலக்கியம் எனும் பாராட்டையும் பெற்றது. குறளோவியத்தின் வெற்றி திருக்குறள் முழுமைக்கும் உரையெழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பை எனக்குள் ஏற்படுத்தியது என்று உரையாசிரியர் கலைஞரே உரையெழுதியதற்கான காரணத்தைத் தம் நூல் முன்னுரையில் குறிப்பிடுவார்.தம்முடைய உரையின் நோக்கத்தையும் அமைப்பையும் உரையெழுதுகையில் கையாண்ட நெறிமுறைகளையும் முன்னுரையில் உரையாசிரியரே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள பொருளன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மைநிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டிய வரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன் (உரை எழுதியுள்ளேன்).

இந்த முன்னுரைப் பகுதியில் உரையாசிரிர் கலைஞர் உரை எழுதுவதற்கான நெறிமுறைகள் சிலவற்றை வகுத்துத் தருகின்றார்.

1. உரையெழுதப் போகும் நூலின், நூலாசிரியனின் காலத்து நம்பிக்கைள், பண்பாடுகள், அவைகள் குறித்த நூலாசிரியன் பார்வை என்ன என்பதையெல்லாம் உரையாசிரியர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

2. நூலாசிரியன் கருத்துக்கு மாறாக வலிந்து உரையாசிரியர் தம் கருத்துக்களை உரையில் திணித்தல் கூடாது.

3. உரையாசிரியர் எண்ணுவதை விட நூலாசிரியன் எண்ணியதற்கே முதன்மை அளித்தல் வேண்டும்.

4. உரையாசிரியர் தம் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி உரை வரைதல் வேண்டும்.

மேற்கூறிய நெறிமுறைகள் கலைஞரால் வகுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே இவர் தமது உரையை எழுதிச் செல்கின்றார் என்பதும், எந்த இடத்திலும் தாம் வகுத்துக்கொண்ட நெறிமுறைகளுக்கு மாறாக அவர் உரை எழுதவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடவுள் வாழ்த்தா? வழிபாடா?

திருக்குறளின் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் முதலான நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகின்றது. எனவே இன்று நாம் காணும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்ற கருத்து அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் பலரும் பல இயல் பகுப்புகளில் மாற்றம் செய்தும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரப் பெயராக இருந்துவந்த கடவுள் வாழ்த்து என்ற பெயரைக் கலைஞர் வழிபாடு என்று பெயர்மாற்றம் செய்கின்றார். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத் தலைப்பை வழிபாடு எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. வழிபாடு எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.என்று உரையாசிரியர் முன்னுரையில் குறிப்பிடும் பகுதி இது. கடவுள் கோட்பாட்டை மறுக்கவோ மறைக்கவோ நான் அதிகாரத் தலைப்பை மாற்றவில்லை என்று எழுதும் கலைஞர், வழிபாடு எனப் பெயர் மாற்றம் செய்ததற்கான காரணத்தைத் தம் முதலதிகார உரையில் வெளிப்படுத்துகின்றார். பத்து குறட்பாக்களில் எங்கும் கடவுள் சொல்லோ வாழ்த்தோ இடம் பெறவில்லை. மாறாக வணக்கத்திற்குரிய பெருந்தகையாளரை வழிபடுதல் பற்றிய செய்திகளே காணக் கிடைக்கின்றன. அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கெல்லாம் அடியொற்றி நடத்தல் என்றே உரை கூறுகின்றார் கலைஞர். தன் உரையின் வழி வழிபாடு என்ற பெயரே முதலதிகாரத்திற்குப் பொருந்தும் என நிறுவுகிறார் அவர்.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள்:

கலைஞரின் திருக்குறள் உரை நூலுக்குப் பதிப்புரை எழுதிய பேராசிரியர் மா.நன்னன் அப்பதிப்புரையை ஓர் ஆய்வுரையாகவும் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்னன் கலைஞர் உரையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடும் போது,இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப் பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.என்று கலைஞர் உரையின் தனித்தன்மையை, அதன் புரிதலை, அதன் எளிமையை உத்தியாக எடுத்துக் காட்டுகின்றார். புலவரேறு அரிமதி தென்னகன் திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை என்ற நூலில் கலைஞர் உரையின் தனித்தன்மையைப் பின்வருமாறு விளக்கியுரைக்கின்றார்.

அது பதவுரையா? இல்லை! தோலுரித்த பழம் போன்ற பொழிப்புரையா? இல்லை! பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிய சுளைகளைப் போன்ற சுருக்கமான கருத்துரையா? இல்லை! கனியைப் பிழிந்திட்ட சாறு என்பார்களே அத்தகைய கனியுரையே கலைஞர் உரை! ஆம் குறளின் பிழிவே கலைஞர் உரை என்பதே உண்மை. .. அதுதான் எளிமை! அதுவே இனிமை! அதுதான் தெளிவு! அதுதான் தேவை!.. (அரிமதி தென்னகன், திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை, ப.129)

கனியைப் பிழிந்திட்ட சாறு போல் எளிமையின் வடிவாகவே கலைஞர் உரை அமைந்துள்ளது எனக்குறிப்பிடும் புலவரேறு, கலைஞர் உரையின் சிறப்பியல்புகளாக மேலும் சில செய்திகளைக் குறிக்கின்றார். அவை,

1.குறளிலிருந்து பெறும் பொருளைவிடக் குறளால் உணரப்படும் செய்தியே எளிமையானதாக அமையும் என்பதில் கலைஞர் உறுதியாக நின்றுள்ளார்.

2.அறிவால் பெறப்படும் செய்தியைவிட நெஞ்சால் உணரப்படும் செய்தியை உரையாகத் தருவதே, சேர வேண்டிய இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லும் என்னும் நோக்கமே கலைஞர் உரையாகப் பொலிவு பெற்றுள்ளது.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கருத்துரை கூறுவதில் புதிய உத்திகள்:

பதவுரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரை கூற வேண்டும். பொழிப்புரை என்றால் எல்லாச் சொற்களுக்குமான உரையைத் தொடர்ச்சியாகத் தருதல் வேண்டும். கருத்துரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரைகூற வேண்டுமென்ற தேவையில்லை, பொழிப்புரையைச் சுருக்கித் தந்தால் போதுமானது. கலைஞரின் உரை பதவுரையும் இல்லை. பொழிப்புரையும் இல்லை. ஒருவகையில் கருத்துரை என்று சொல்லத்தக்க அளவில் தம் உரையை வரைந்துள்ளார். கருத்துரையிலேயும் எளிதில் புரிதல் என்னும் புதிய நடைமுறை ஒன்றை உத்தியாக வகுத்துக்கொண்டு உரை வரைகின்றார் கலைஞர்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
குறள்: 49

கலைஞர் உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்லாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.மேலே குறிப்பிட்ட குறளில், சுருக்கத்திற்கே பெயர் பெற்ற திருக்குறளுக்கு உரை விளக்கம் அதைவிடச் சுருக்கமான வடிவில் கலைஞரால் வடிக்கப்பட்டுள்ளது. ஏழு சீரால் அமைந்த குறளுக்கு ஆறு சீரால் உரை. குறளின் எந்தச் சொல்லையும் உரையாசிரியர் புறக்கணிக்கவில்லை. குறம் கூறும் செய்தியின் ஆழமும் அழுத்தமும் உரையிலேயும் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறளுக்கும் உரைக்கும் என்ன வேறுபாடு என்றால், எளிமை, இனிமை, சுருக்கம், புரிதல் நான்கும் உரையில் மேலோங்கியுள்ளது. மேலே குறிப்பிட்ட குறளுரையின் சீர்மையையும் பெருமையையும் முற்ற முழுதாக உணரவேண்டுமென்றால் இக்குறளின் பிற உரைகளோடு கலைஞர் உரையை ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். கலைஞர் உரையின் பெரும்பகுதி இவ்வகையில் அமைந்த சுருக்க உரையாகவே அமைந்திருப்பது இவ்வுரை நூலின் சிறப்பு. கருத்துரையில் இடைப் பிற வரல் எனும் புதிய உத்தியைக் கையாண்டு உரையின் எளிமைக்கு பலம் சேர்க்க்கின்றார் கலைஞர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
குறள்: 128

கலைஞர் உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் மேற்கூறிய குறளுக்குப் பரிமேலழகரின் உரைக்கு மாறுபட்டு எளிய, புதிய உரை கூறவந்த உரையாசிரியர் கலைஞர் உரைப் பொருள் எளிமையாக விளங்குதல் பொருட்டு ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் என்ற நடைமுறையில் உள்ள பொருத்தமான உவமை ஒன்றை எடுத்துக்காட்டி உரை வகுக்கின்றார். பரிமேலழகர் நன்றாகாதாகி விடும் என்ற குறள் பகுதிக்கு, பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய்விடும் என்று சொன்ன உரையை விட, பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் என்று கலைஞர் உரைக்கும் உரையே அனுபவ உரையாக பொருத்தமான உரையாக அமைந்து சிறக்கின்றமை உரையில் இடைப்பிறவரலாக அவர் அமைத்த பழமொழியின் உதவியால் எளிதில் விளங்குகிறது. பழமொழியை இடைப்பிறவரலாக இணைத்துத் தம் கருத்துரையில் புதுமை சேர்த்தது போலவே மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை வருவித்து உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள்: 339

கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார். மேலும் திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு என்று சொன்ன குறட்பகுதிக்கு விளக்கம் சொல்லும் போது மீளா உறக்கம் கொள்வதே இறப்பு என, மீளா என்ற புதிய சொல்லை இணைத்து உரை காண்கின்றார். உறக்கமே இறப்பு என்பதற்கும் மீளா உறக்கமே இறப்பு என்பதற்கும் ஆழமான பொருள் வேறுபாடு உண்டு. மீளா உறக்கம் என்பதில் பிறப்பு இறப்புச் சுழற்சி இல்லை. மறுபிறப்பு இல்லை. பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இவை முதலான ஆன்மா தொடர்பான கருத்தியல்கள் ஏதும் இல்லை. பிறப்பு இறப்பு என்ற இரண்டுக்கு மட்டுமே இடம் உண்டு. கலைஞர் உரையின் நுட்பமும் ஆழமும் இதுபோன்ற உரை உத்திகளில்தாம் சிறப்புற வெளிப்படுகின்றன. கருத்துரைகளில்தான் எத்துணை புதுமை செய்கின்றார் உரையாசிரியர் கலைஞர். சொல்லுக்குச் சொல் என்று சுருக்கி உரை சொல்ல வந்த கலைஞர் சில குறட்பா உரைகளில் சொல்லுக்குச் சொல் அடைகொடுத்துச் சிறப்பிக்கும் உத்தியைக் கையாண்டு பல குறட்பாக்களின் நுட்ப விளக்கங்களை யெல்லாம் ஒரே குறட்பாவில் விளங்கிக் கொள்ள வைக்கின்றார்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
குறள்: 381

கலைஞர் உரை: ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண்சிங்கம் போன்ற அரசாகும்.இக்குறளுக்குப் பரிமேலழகர் படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான் என்று இயல்பாக அடுக்கி உரை சொல்ல, கலைஞரோ அடைமொழிகளை யெல்லாம் இணைத்து அரிய உரையொன்றை இக்குறளுக்கு வழங்குகின்றார். ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் என்ற பகுதியில் மோனைகளால் சிறந்து விளங்கும் கவிதை நடையைக் கண்டு இன்புற முடியும். இயல்பாகவே பேச்சிலும் கவிதைநடை மிளிரும் ஆற்றல் மிக்க கலைஞர் குறள் உரையிலும் கவிதை நடையைக் கையாண்டு அழகு சேர்த்துள்ளமையை ஒரு புதிய உத்தி என்றே கொள்ள வேண்டும். இந்த அடைமொழிகள் அழகுக்காகக் கோர்க்கப்பட்ட அணிகலன்களாக இல்லாமல் அரசனின் ஆறு அங்கங்களையும் விளக்கிக் கூறும் ஆற்றல் வாய்ந்த விளக்கங்களாக அமைந்துள்ளமை கண்கூடு. வரும் குறட்பாக்களில் பொருட்பாலில் விவரித்துச் சொல்லப்போகும் ஆறு அங்கங்களின் விளக்கங்களையும் ஒரே குறள் உரையில் பெய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

கருத்துரையில் ஒரு புதுமை: (சொல்லியதும் சொல்லாததும்)
கலைஞர் உரையில் எளிமை மட்டுமல்ல ஏராளமான புதுமைகளும் உண்டு. திருக்குறள் பல சமயங்களில் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல் வேறொன்றைச் சொல்லி, சொல்ல வந்ததைக் குறிப்பால் உணர்த்திவிடும். பீலி பெய் சாகாடும்.., நுனிக்கொம்பர் ஏறினார்.., கடலோடா கால்வல் நெடுந்தேர்.., போன்ற குறட்பாக்களை இவ்வுத்திக்குச் சான்றாகக் காட்டலாம். அணி நூலார் இதனை ஒட்டணி என்றுரைப்பர். கலைஞரோ தம் திருக்குறள் உரையில், திருவள்ளுவர் நேரடியாகச் சொன்ன ஒரு குறள் செய்தியை விளக்கும் போது அதனோடு தொடர்புடைய பிறிதொரு அறத்தையும் நினைவு படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல திருக்குறள் சொல்லியதையும் சொல்கிறார் சொல்லாததையும் சொல்கிறார்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
குறள்: 17

கலைஞர் உரை: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். மேற்காட்டிய குறள் உரையில் திருவள்ளுவர் சொன்னது, ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் என்ற செய்தி. திருவள்ளுவர் சொல்லாதது, மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்ற செய்தி. கடலிலிருந்து நீரை முகக்கிற மேகம் மீண்டும் அந்தக் கடலுக்கு மழையாகப் பொழிந்து நீரை வழங்க வேண்டியது அதன் கடமை. மேகம் அப்படிச் செய்யவில்லை யென்றால் அளப்பரிய அந்தக் கடல்கூட வற்றிவிடும். அதே போல் மனித சமுதாயத்தில் பலப்பல நன்மைகளைப் பெற்று உயர்ந்து புகழ் பெற்றவர்களும் மீண்டும் அந்தச் சமூகத்திற்குத் தொண்டு செய்து பயன்பட வேண்டும் அது அவர்களின் கடமை. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் சமூகமும் அழிவை எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை இடமறிந்து பொருள் பொருத்தமறிந்து சொன்ன உரையாசிரியர் கலைஞரை வியக்காமலிருக்க முடியாது. உடன் ஒன்று சேர்த்துச் சொல்லல் என்ற இந்த உத்தி கலைஞர் கையாளும் தனித்துவம் வாய்ந்த உத்தி என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உரை மரபை மீறும் உத்தி:
மூல நூலாசிரியன் சொல்லுகிற கருத்தை வலியுறுத்திக் கூறுவதும் விளக்கமளிப்பதும் மட்டுமே உரையாசிரியன் பணி என்பது மரபார்ந்த உரைநூல்களின் இலக்கணம். ஆனால் கலைஞர் உரை இந்த உரை மரபிலிருந்து மாறுபடுகின்றது. உரை மரபுகளை மீறுதல் என்பதையே ஒரு உத்தியாகக் கையாண்டு பல குறட்பாக்களுக்கு விளக்கமளித்துள்ளார் உரையாசிரியர் கலைஞர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
குறள்: 319

கலைஞர் உரை: பிறர்க்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் இக்குறட்பாவிற்குக் கலைஞர் கூறும் உரையை நுணுகிப் பார்த்தால் இரண்டு புதிய செய்திகளை அவர் பதிந்துள்ளது தெரியவரும். ஒன்று, இன்னா செய்யின் என்று மட்டுமே மூல நூலாசிரியன் சொல்லியிருக்க உரையாளரோ தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே என, தீங்கு செய்தவரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஒருவர் மனமறிந்து அல்லது வேண்டுமென்றே தீங்கு செய்தால் அதாவது பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடிய நெஞ்சினராக இருந்தால் அவர் செய்த தீமை அவருக்கே வந்து மூளும் என்று புதிய விளக்கம் தருகிறார். அறியாமல் பிறர்க்கு தீங்கு விளைவித்து விட்டவர்களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது உரையாசிரியரின் மற்றுமொரு உட்கருத்து.இரண்டாவது, பிறருக்கு நாம் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே நமக்குத் தீங்கு வந்து சேரும் என்று திருவள்ளுவர் தம் குறளில் சொல்லியிருக்க உரையாசிரியரோ, ஒருவர் பிறர்க்குத் தீங்கு செய்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதேபோன்ற தீங்கு அவரைத் தாக்கும் என்று உரை செய்துள்ளார். முற்பகல் பிற்பகல் என்று கால வேறுபாட்டை மூல நூலாசிரியன் சொல்லியிருக்க, கலைஞரோ கால இடையீடின்றி உடனே தீங்கு செய்தவனைத் தாக்கும் என்கிறார். இந்த உரை வேறுபாட்டினைக் கூர்ந்து கவனித்தால் அறத்தை வலியுறுத்துவதில் மூல நூலாசிரியனை விட உரையாசிரியர் வேகம் காட்டுகிறார் என்பது புலனாகும். இப்போக்கு உரை மரபுக்கு மாறானது என்றாலும் கூட இதனையே ஓர் உத்தியாகக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார் உரையாசிரியர் கலைஞர் என்பதை உணரமுடியும்.

புதிய விளக்கங்களை இணைக்கும் உத்தி:
உரையாசிரியர்கள் மூல நூலுக்கு உரை எழுதும் போது, தாம் எழுதும் இவ்வுரைக்கு முன் தோன்றிய உரைகள் அனைத்தையும் படித்து உள்வாங்கி எழுதுவது வழக்கம். அப்படி உரை வகுக்கும்போது பிறர் உரைகளை ஏற்று எழுதுவதும், மறுத்து அல்லது மாறுபட்டு எழுதுவதும் வழக்கமான நடைமுறைகளாகும். உரையாசிரியர்கள் சிலர் பழைய உரைகளோடு ஒத்துப் போகும் இடங்களில் கூடச் சில சொற்களுக்குப் புதிய விளக்கங்களை இணைத்துத் தமது உரைக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடுவதுண்டு. உரையாசிரியர் கலைஞர் குறளுரையின் பல இடங்களில் இத்தகு உத்தியைக் கையாண்டுதம் உரைக்குப் புதுமை சேர்க்கின்றார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.
குறள்: 43

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியனவாம்.இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பரிமேலழகர் பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்று உரை எழுதுகின்றார். ஆனால் கலைஞரோ இக்குறள் உரையில் மூன்று புதிய விளக்கங்களை இணைத்துப் புத்துரை படைக்கின்றார்.

1. தெய்வம் என்று குறள் குறிப்பிடும் சொல்லுக்கு தேவர் என்று பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். கலைஞரோ தெய்வம் எனடபதற்கு வாழ்வாங்கு வாழ்வோர் என்று பொருள் காணுகின்றார்.

2. ஐவருக்கும் செய்யும் அறங்கள் என்று பொதுப்பட பரிமேலழகர் உரை சொல்லியிருக்க, கலைஞரோ ஒவ்வொரு அறத்தையும் நினைவு கூர்தல், போற்றுதல், ஓம்புதல், பேணுதல், நிலைப்படுத்திக் கொள்ளல் என்று விளக்கி விரிவுரை செய்கின்றார்.

3. இல்வாழ்வான் அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டிய இடங்கள் ஐந்தினைக் குறிப்பிடும்போது, தான் என்று இல்வாழ்வானையும் இணைத்துக் கொள்கின்றார். இல்வாழ்வான் தனக்கே அறநெறி வழுவாமல் எப்படி? என்ன? செய்துகொள்ள முடியும் என்ற மயக்கம் இவ்வுரையில் தோன்றுகிறது. உரையாசிரியர் கலைஞரோ இத்தகு குழப்பத்திற்கு இடமில்லாமல் உரை எழுதுகின்றார். எப்படியெனில், வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய நான்கு கடமைகளையும் நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் என்று ஐந்தாவதாக இடம்பெறும் தான் என்பதற்கு விளக்கம் கூறிக் குறளுரையை முழுமை செய்கின்றார்.

புதிய விளக்கங்களை இணைக்கும் இவ்வுத்தி கலைஞரின் உரை உத்திகளில் தனிச்சிறப்பானதாகும்.காமத்துப்பாலில் இடம்பெறும்,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
குறள்: 1311

மேற்கூறிய புலவி நுணுக்கம் அதிகாரப் பாடலில் பரத்த நின் மார்பு என்பதற்குப் பரத்தமை ஒழுக்கம் உடையவனே என்று எல்லா உரையாசிரியர்களும் உரை கூற, கலைஞரோ பரத்த என்பதை வலித்தல் விகாரமாகக் கொண்டு பரந்த நின் மார்பு என்று புதிய விளக்கம் தருகின்றார். இப்புதிய விளக்கம் பரத்தமை செய்திகளை முற்றிலுமாக விலக்கி நூல் சமைத்த திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் உரையாக அமைந்து சிறக்கின்றது.

முடிப்புரை: கலைஞரின் திருக்குறள் உரை வழக்கமான திருக்குறள் உரைகளிலிருந்து மாறுபட்டுப் பல இடங்களில் புத்தம் புத்துரையை வழங்குகின்ற உரையாகத் திகழ்கின்றது. கலைஞரின் புத்துரைகள் தனித்தலைப்பில் ஆராயப்பட வேண்டிய தனித்தன்மை வாய்ந்தவை. கலைஞரின் உரையிலியே அளவில் பெரிய உரை அறத்தாறு இதுவென வேண்டா.. என்ற குறளுக்குக் கலைஞர் வரைந்துள்ள உரையே. நுட்பம் வாய்ந்த இக்குறள் தனியே விரித்துரைக்கத் தக்கது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரையெழுதுவதும் ஒன்றுதான் என்று உரையாசிரியர் கலைஞர் தம் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது குறள் உரையில் அவர் காட்டும் சிரத்தைக்கு ஓர் அடையாளம். அவையடக்கமாக இச்செய்தியைக் கலைஞர் குறிப்பிட்டாலும் இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் பெரிய முயற்சியில் அவர் வெற்றிபெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. திருக்குறளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எளிதில் குறட்கருத்துக்கள் புரிதல் வேண்டும் என்ற கொள்கையோடு உரை வரையத் தலைப்பட்ட கலைஞர் தம் எளிமையான நடையாலும் தாம் கையாண்டு வெற்றி பெற்றுள்ள பல்வகைப் புதிய உத்திகளாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலைஞர் உரையை வாசிக்கும்தோறும் நம் நினைவுக்கு வருகிற திருக்குறள்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
குறள்: 517.

தமிழில் மீண்டும் ஒரு காஞ்சி இலக்கியம்

தமிழில் மீண்டும் ஒரு காஞ்சி இலக்கியம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை… தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு வி~யம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன் போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது செய்நேர்த்தி. ஷசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், ஷஉள்ளத்து உள்ளது கவிதை என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவைகளில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ? ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவ சக்தி. உள்ளார்ந்த ஆற்றல். இந்த ஜீவ சக்தியற்ற படைப்புகள் குறைப் பிரசவங்கள், சவங்கள்.
***
புதிய வேதாந்தம் என்ற தமது முந்தைய படைப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கிற்கு அறிமுகமான வழக்குரைஞர் இரா. சந்திரசேகரன் அவர்களின் நான்காவது படைப்பு, ஷகற்பனை மனிதர்கள் என்ற தலைப்பிலான இந்தக் கவிதை நூல். மேற்கத்திய கவிமரபை ஒட்டி நெடுந்தொடர்க் கவிதையால் இந்த நூலைப் படைத்துள்ளார் இரா. சந்திரசேகரன். ஒரு தத்துவ ஞானியைப்போல், சித்தனைப்போல், பக்தனைப்போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கவிஞர் இவர். வாழ்க்கை குறித்த தீவிர விசாரணைகளோடு வெளிவந்துள்ள இந்தப் படைப்பு தமிழ்க் கவிதை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பெறத்தக்கது. பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை உள்வாங்கி உருவான இக்கவிதைகளில் அமைந்துள்ள படிமங்களும் குறியீடுகளும் மிகப்பல. இயற்கையை முன்னிலைப்படுத்தி மனித இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் சந்திரசேகரனின் கவிதைகளில் ஒலிக்கும் குரல்கள் வித்தியாசமானவை. தமிழில் எங்கோ? எப்போதோ? கேட்ட தொல்காப்பியர் காலத்துக் காஞ்சித்திணையின் குரலை மீண்டும் கற்பனை மனிதர்களில் உரக்கக் கேட்கிறோம்.

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல். புறத். 23)

தொல்காப்பியர் தம் புறத்திணையியலில் வரையறுக்கும் காஞ்சித்திணை என்பது நிலையாமை குறித்த விழிப்புணர்ச்சி. மன்னா உலகத்தில் மன்னுதல் குறித்த விசாரணை. இளமை, யாக்கை, செல்வம் இவைகளின் நிலையாமைகளை உணர்ந்து மனிதன் தம் வாழ்வை தகவமைத்துக் கொள்ளும் முயற்சி.ஷஷமனிதர்களும் மாமேதைகளும் ஞானிகளும் சித்தர்களும் அறிஞர்களும் கவிஞர்களும் ஆன்மீகவாதிகளும் மன்னர்களும் மந்திரவாதிகளும் ஆற்றின் மணற்பரப்பும் ஆனந்த நீரோடைகளும் ஆறும் கடலும் பாலைவனத்தில் ப+க்கும் அரிய ப+க்களும் உயிராய் உறவாடிய உறவுகளும் ஆடித் தேடிய அருளும் ஆன்மீகமும் தேடிக் கொணர்ந்த பொருளும் எங்கே? என்று கவிஞர் எழுப்பும் கேள்விக்கணை, மதுரைக்காஞ்சியில்

திரையிடு மணலினும் பலரே
உரை செல மலர்தலை உலகம்
ஆண்டு கழிந்தோரே (ம.காஞ்சி- 236-237)

என்று காஞ்சித்திணைப் பொருளுணர்த்திய மாங்குடி மருதனாரின் சாகா வரிகளை நினைவூட்டுகின்றது. தமிழிலக்கிய நெடும்பரப்பில் மதுரைக்காஞ்சிக்குப் பிறகு நிலையாமை குறித்த நெடுங்கவிதை இரா.சந்திரசேகரனின் கற்பனை மனிதர்கள்தான் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

• நேற்று நிலைத்த கோபுரம்
இன்று மண்ணாய்
அரண்மனையும் அந்தப்புரமும்
தெருமுனையில் சிறுகுடியாய்
இயற்கையின் இயல்பு..
வந்தவை செல்லத்தான்
முடிவு நோக்கிய முன்னுரை

• விதியோடும் மதியோடும் திரிந்தாலும்
புவிமடியில் ஓர்நாள்
மணமற்ற மலராய் உயிரற்ற உடலாய்
உடைந்த நீர்க்குழியாய்

• எல்லாம் இறுதியான பின்பு
நீயம் நானும் மக்களும் நாடும்
மனம் புரிந்து மாண்டு
இறுதியில் வெறுமையாக
மண்ணோடு மண்ணாய்..

• மரணமும் ஜனனமும்
புவி கொடுக்கும் அதிசயங்கள்
எல்லோரும் செல்ல
வழிகாலம் முடிந்தபின் ஆன்மா பிரியுமுன்
நன்றிசொல் பூமிக்கு
இயற்கை அன்னைக்கு

• எத்தனைக் காலங்கள்
எத்தனை மனிதர்கள்,
சாத்திரங்கள் சந்ததிகள்
காலத்தால் கரைந்தவர்கள்
நேற்றுப் பூத்து
இன்று அறுவடையான காளான்கள்

இப்படி, கற்பனை மனிதர்களில் தொட்ட இடமெல்லாம் மனிதர்களின் பிறப்பு, இருப்பு, இறப்பு குறித்த விசாரணைகளைப் பதிவு செய்கிறார் கவிஞர் இரா.சந்திரசேகரன்.

கற்பனை மனிதர்களின் மற்றுமொரு தனிச்சிறப்பு மனித வாழ்க்கை குறித்த மகத்தான நம்பிக்கை. நிலையாமை குறித்த பதிவுகளால் வாழ்க்கையை எதிர்மறையாய்ப் புரிந்துகொள்ளும் நம்பிக்கை வறட்சியாளர் அல்ல கவிஞர் இரா.சந்திரசேகரன். மானுடத்தின் மேன்மையை, மானுடம் வெல்லும் என்ற உறுதிப்பாட்டை நூலின் பல இடங்களிலும் பதிவுசெய்து கவிஞனுக்குரிய சமூக அக்கறையை வெளிப்படுத்துவதிலும் தனித்தன்மையோடு திகழ்கிறார் கவிஞர்.

• மாந்தன் எழவேண்டும்
ஏழ்மை களைய ஏடு பிடிக்க
அன்பு சிறந்து அமைதி தேட
அப்புறம் ஆள

• புவி படைத்தாய்ப் புதுமையாய்
புதுத் தென்றல் தேடு!
புயலாய் மாறு!
நிலவைப் பிடி! விண்மீன் தேடு

• அழுது புலம்பலால்ஆறு நிறைவதில்லை
மாரி பொழிதல் வேண்டும்
நாம் நினைத்தால் வாழ்வோம்

• இன்று பூத்துநாளை உதிராதே
இறந்து மடியுமுன்
உன் முகவரியை விட்டுச்செல்

கவிஞரின் பெருவிருப்புகளை நூலின் எல்லாப் பக்கங்களிலும் அடையாளம் காணமுடிகிறது. உலகில் அன்பு சிறக்க வேண்டும், அமைதி நிலைக்க வேண்டும், ஏழ்மை களையப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மாந்தன் எழவேண்டும். மாந்த இனத்தின் எழுச்சியால் தொடமுடியாத சிகரங்களையும் நாம் தொட்டுவிட முடியும் என்ற கவிஞரின் நம்பிக்கை நமக்குத் தெம்பூட்டுகிறது. வாழ்க்கை நிலையில்லாததுதான் இன்று பூத்து நாளை உதிர்ந்து விடுவதுதான் என்றாலும் நிலையில்லாத இந்த வாழ்க்கையின் முடிவில் உன் அடையாளத்தை இந்த உலகத்தில் பதிவுசெய்து விடு என்று கவிஞர் சந்திரசேகரன் எழுதிச்செல்லும் வரிகள்

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

என்ற தமிழர் மரபை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.

கற்பனை மனிதர்கள் நூலின் மற்றுமொரு சிறப்பு கவிதையில் விரவிக் கிடக்கும் மனிதநேயப் பதிவுகள்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,

என்ற வள்ளலாரின் வழியில்

காக்கைக் குருவி எங்கள் சாதி

என்ற மகாகவி பாரதியின் அடிச்சுவட்டில் சந்திரசேகரனும் உயிர் இரக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டு கவிதை படைக்கின்றார்.

கிளிக்குஞ்சும் மணிப்புறாவும்
பொன்வண்டும் மரங்கொத்தியும்
பசியால் ஆரவாரம் செய்தபோது
மனம் வலித்தது.

பறவைகளின் பசிக்குரல் கேட்டு மனம் நோகும் கவிஞரின் உயிர் இரக்கம் நம் உயிரையும் உருக்குகின்றது.

***

கவிஞர்களில் நமக்கு அதிகம் பரிச்சயமானவர்கள் இரண்டு வகை. ஒருவகையினர் தம் படிப்பறிவால் கவிதை படைப்பவர்கள். மற்றொரு வகையினர் தம் பட்டறிவால் கவிதை படைப்பவர்கள். நமக்கு அதிக பரிச்சயமில்லாத மூன்றாவது வகைக் கவிஞர்களும் உண்டு. அவர்கள் படிப்பறிவு, பட்டறிவோடு உள்ளுணர்வாலும் கவிதை படைப்பவர்கள். கவிஞர் இரா.சந்திரசேகரன் இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த கவிஞர். இவர் உள்ளுணர்வால் கவிதை படைப்பவர். இவரின் உள்ளுணர்வு பல சமயங்களில் கவிதையின் சொற்களில் சிக்குவதில்லை. அந்தத் தருணங்களில் அவரின் உள்ளுணர்வோடு நாம் ஒத்துப்போக முடிவதில்லை. விளைவு? கவிதை நமக்குக் கண்ணாம்பூச்சி காட்டுகிறது. நான் இந்தக் கற்பனை மனிதர்களோடு கண்ணாம்பூச்சி ஆடிய நேரங்கள் அதிகம். கண்ணாம்பூச்சி ஆடிக் களைத்து சோர்ந்து போன நேரங்களில், கவிதை என் காதோரம் வந்து சொன்ன இரகசியங்களைத்தான் உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அன்பான உலகம், சமத்துவம் நிலைக்கட்டும்
அன்பு குறையும்போது அறம் குறையும்
நீதி மாண்டுவிடும்
உலகு வாழவேண்டும்

அன்பு, சமத்துவம் இரண்டால் உலகு வாழும். வாழ வேண்டும் என்று விரும்புகிற கவிஞர் இரா.சந்திரசேகரனின் கவிதைப் பயணம் தொடரவேண்டும். அவரின் கவிதையால் மண் பயனுற வேண்டும். வாழ்த்துக்கள்!.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...